அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
-எம்ஜியார்
கிட்டத் தட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் வசனம் எழுதியவர்.
ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் வெளியேற முடியாத அற்புத உணர்ச்சிக் காவியங்களை தமிழில் படைத்தவர்.
எம்.ஜி.ஆர் இவரை ஆசிரியர் என்று அழைப்பார்.
சிவாஜி உரிமையுடன் பழகக் கூடியவர்.
அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரு சேர வசனம் எழுதியவர்.
பாசமலர், தாய் சொல்லை தட்டாதே,விதி, அவரின் வசனத்தில் ஒரு துளி.
ஆரூர் தாஸ் என்கிற யேசு தாஸ்.
துளியும் கோபம் வராத மனிதர்.
சமீபத்தில் சதாபிசேகம் கொண்டாடிய அவரின் நெகிழ வைக்கும் திரை அனுபவம் இது.
தங்கத்துக்கும் ஒரு குறை உண்டு போல :
ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர்தாஸ்) சொன்னார்:
“பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’
நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.
“அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க. இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.
சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு. அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி. என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?
எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!
என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.
அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
நடிப்பிற்கு அப்பாற்பட்டு எம்ஜியார் கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!
No comments:
Post a Comment