Monday, 1 August 2016

ஜாலியன்வாலாபாக்
படுகொலை 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13


படைத் தளபதி டயர் அமிர்தசரஸ் நகர் முழுக்க பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கும் நோக்கில், சிப்பாய்களை வைத்து அணிவகுப்பு நடத்தினான். மாலை நான்கு மணிக்கு ரவுலட் சட்டத்தைக் கண்டித்து, ஜாலியன் வாலாபாக் பூங்கா மைதானத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். 


சத்தியாக்கிரகிகள் அமைதியான முறையில் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். கொடியவன் டயர் திடீரென்று ஐம்பது படைவீரர்களை வரிசையாக நிறுத்தி, எவ்வித முன்னறிவிப்புமின்றி “சுடுங்கள்” என்று உரத்த குரலில் உத்தரவிட்டான். கூட்டம் சிதறி ஓடியது.


 ரத்தம்... ரத்தம்... எங்கும் ரத்தம்.



சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் கை, கால்களை இழந்தனர். பிணங்களை எடுத்துச் செல்லக்கூட யாரும் வர இயலாத அளவுக்கு 
பயம்... பீதி... பதற்றம். இத்தனை செயல்களுக்கும் சூத்திரதாரி பஞ்சாப் மாநில கவர்னர் மைக்கேல் ஓட்வியர். முழுமூச்சுடன் செயல்படுத்தியவன் படைத்தளபதி டயர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது.


உத்தம் சிங்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் சிங் என்ற இளைஞனுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரும்மனஅதிர்வை உண்டாக்கியது. உத்தம் சிங் பஞ்சாப் மாநிலம் சுனம் நகரில் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26இல் பிறந்தான்.

 ஏழு வயதிற்குள் தன் தாய் தந்தையாரை இழந்தான். 

பின்னர் ஒரே சகோதரனும் எதிர்பாராமல் மரணமடைந்தான். 

உத்தம் சிங் ஓர் அநாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டான்.
மெட்ரிக் தேர்ச்சி பெற்ற இவன், 1918இல் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். அதன் பின்னர் பல இடங்களில் அலைந்து திரிந்த உத்தம் சிங்கிற்கு 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி பேரதிர்ச்சியூட்டியது.



ஜாலியன் வாலாபாக் 

ஜாலியன்வாலாபாக் நிகழ்ச்சிக்கு முழுமுதற் காரணமாகவிருந்த கவர்னர்மைக்கெல் ஓட்வியர்மீதும்,ஈவிரக்கமின்றி தேசபக்தர்களை சுட்டுக்கொன்றடயரின் மீதும் உத்தம் சிங்கிற்கு அடக்கிக் கொள்ள முடியாத கோபம் இருந்து கொண்டே இருந்தது. 
ஷர் சிங், 
உத்தம் சிங், 
உதன் சிங், 
உதே சிங், 
உதய் சிங், 
பிராங் பிரேசில்,
ராம் முகம்மது சிங் ஆசாத் போன்ற பல பெயர்களில் உலகெங்கும் உலவினான் உத்தம் சிங்.

1920ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா சென்றான்.
1924இல் இந்தியா திரும்பி, பின்னர் அதே ஆண்டில் அமெரிக்கா சென்றான். அமெரிக்காவில் ‘சுதார் கட்சி’ என்ற புரட்சிகரக் கட்சியில் சங்கமித்தான்.
இந்த இயக்கம் இந்தியாவை விட்டு வெளியே வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்து இந்திய விடுதலைப் போர்க்களத்தில் இறக்கும் அமைப்பாகும். நல்ல பயிற்சியும் தொடர்பும் அமெரிக்காவில் உத்தம் சிங்கிற்குக் கிடைத்தது.

1927இல் இந்தியா வந்தான். சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் காரணம் காட்டி, காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் முழுக்க சிறைக் கொடுமையை அனுபவித்தான். மாவீரன் பகத்சிங்கின் அர்த்தமுள்ள வாழ்க்கை இவன் நெஞ்சில் ஆழப் பதிந்திருந்தது.


1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி உத்தம் சிங் விடுதலை செய்யப்பட்டான். இங்கிருந்து ஜெர்மனி சென்ற பிறகு, 1934இல் லண்டன் சென்றான். உத்தம் சிங்கிற்கு ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியும், தேசபக்தர்கள் கதறக் கதறக் கொல்லப்பட்டதும், கவர்னர் ஓட்வியரின் கொலை வெறிக்கட்டளையும் நெஞ்சிலிட்ட நெருப்பாகக் கனன்று கொண்டே இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மாலை 3 மணியளவில் லண்டனில் உள்ள காங்டன் அரங்கில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்தில் ஓட்வியரும் மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவன். 


அமர முடியாமல் நின்று கொண்டிருந்த பார்வையாளர்களில் உத்தம் சிங்கும் ஒருவன். கூட்டம் முடிகிற சமயத்தில் பலர் வெளியில் செல்ல எத்தனித்துக் கொண்டிருந்தபோது ஓட்வியரைக் குறிபார்த்துச் சுட்டான் உத்தம் சிங். இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் ஓட்வியர் மரணமடைந்தான்.

உத்தம் சிங் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். நீதிமன்றம் தூக்குத் தண்டணை அளித்தது. மேல்முறையீட்டிலும் இத்தீர்ப்பு 1940 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. ஜூலை 31ஆம்தேதி உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டான்.


“என்னைத் தூக்கிலிட்ட பின்னர் என்னுடைய சடலத்தை இந்தியாவிற்கு அனுப்புங்கள். என் தாய் மண்ணில்தான் நான் புதைக்கப்படவேண்டும்” என்று நீதிமன்றத்தில் கூறினான். எதைப் பற்றியும் கவலைப் படாத ஆங்கிலேய அரசு, உத்தம் சிங்கின் சடலத்தை சிறை வளாகத்திற்குள் காலி இடம் ஒன்றில் புதைத்தது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங், “உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜமரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.



ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்?

ஜாலியன்வாலாபாக்படத்தின் காப்புரிமைAFP
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள், பிரிட்டன் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கோர வேண்டுமா என்று அந்நாட்டின் பிரபுக்கள் சபை விவாதிக்க தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், புனைவுகளில் இருந்து உண்மையை பிரித்தெடுக்கிறார் வரலாற்றாசிரியர் கிம் வேக்னர்.
1919 ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாகில் நடந்த கொடுமையான சம்பவத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதை சர்ஜென்ட் டபிள்யூ.ஜே.ஆண்டர்ஸன் நேரில் பார்த்தார்.
"துப்பாக்கிச்சூடு தொடங்கியதும், அங்கிருந்த பொதுமக்கள் கூட்டம் தரையோடு குனிந்து கொண்டது. பலரும் பிரதான நுழைவுவாயில் நோக்கி ஓடத் தொடங்கினர். மேலும் சிலர் உயரமான சுவரில் ஏறி தப்பிக்க முயன்றனர்" என்று நினைவு கூர்கிறார் ஆண்டர்ஸன்.
இவர் பிரிகேடியர் ஜெனரல் ஆர்எச் டயரின் பாதுகாவலராக இருந்தார். அமிர்தசரஸ் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பாகதான் டயர், அங்கு வந்திருந்தார்.
ஜெனரல் டயர்படத்தின் காப்புரிமைAFP
Image captionஜெனரல் டயர்
ஜாலியன்வாலாபாகில் அன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எல்லாம் இருக்கவில்லை. அவர்கள் அப்பகுதியில் குடியிருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள மற்ற கிராமங்களில் இருந்து அரசியல் உரைகளை கேட்கவோ அல்லது பூங்காவில் சில மணி நேரங்கள் செலவிடவோ வந்தவர்கள்.
அன்றைய தினம், சீக்கியர்களின் புத்தாண்டான பைசாகி விழா என்பதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் அங்கிருந்தார்கள்.
அக்கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர். பெரும்பாலும், ஆண்களும், இளைஞர்களும், சில குழந்தைகளும் இருந்தார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே இருந்தனர்.
ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடை நிறுத்த உத்தரவிட்டபோது, ஜாலியன்வாலாபாக் மைதானம், இறந்த உடல்களால் நிறைந்திருந்த போர்களம் போல காட்சியளித்தது. 500 - 600 பேர் வரை கொல்லப்பட்டனர். இதைவிட மூன்று மடங்கு அதிகமான மக்கள் காயமடைந்திருந்தனர். உண்மையாக அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது, ஆனால் சில மாதங்களுக்கு பிறகு 379 பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பிரிட்டன் முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று சில ஆண்டுகளாக குரல் எழுந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் உள்ளிட்ட சிலர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
1997ஆம் ஆண்டு இரண்டாம் ராணி எலிசபெத்தும், 2013ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டேவிட் கேமரூனும் ஜாலியன்வாலாபாக்கை பார்வையிட்டு மரியாதை செலுத்த வருகை தந்திருந்தனர். எனினும், அவர்கள் மன்னிப்பு கேட்பதை கவனமாக தவிர்த்து விட்டனர்.
2017 டிசம்பர் மாதம், லண்டன் மேயர் சாதிக் கான், அமிர்தசரஸ் வந்திருந்தபோது, பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
2013ஆம் ஆண்டு அமிர்தசரஸை பார்வையிட வந்த டேவிட் கேமரூன்படத்தின் காப்புரிமைAFP
Image caption2013ஆம் ஆண்டு அமிர்தசரஸை பார்வையிட வந்த டேவிட் கேமரூன்
"சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் கடக்கவிருக்கும் நிலையில், பிரிட்டன் அரசாங்கம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். முறையான மன்னிப்பு கேட்பதன் மூலம், இங்கு நடந்தவற்றை ஒப்புக் கொள்வதோடு, அமிர்தசரஸ் மற்றும் இந்திய மக்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு முடிவை கொடுக்க முடியும்" என்று சாதிக் கான் தெரிவித்திருந்தார்.
எப்படியிருந்தாலும், அன்றைய தினம் ஜாலியன்வாலாபாக்கில் சரியாக என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் அப்படுகொலை நடந்த சூழல் குறித்த கதைகளும், தவறான புரிதலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
மைதானத்தில் இருந்த மக்கள் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் வேறு வழியில்லாமல் ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் இன்றும் சில தவறான உண்மைகள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள தியாகிகள் கிணறில் 120 உடல்கள் எடுக்கப்பட்டதாக எழுதியிருக்கும். துப்பாக்கிக் குண்டுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் கிணற்றினுள் குதித்ததாக நம்பப்படுகிறது.
ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜாலியன்வாலாபாக் சம்பவத்தின் காட்சி சித்தரிப்புகளில் கூட, அவர்கள் மெஷின் துப்பாக்கி வைத்திருந்தது போலவே காண்பிக்கப்பட்டது. அன்று 50 கூர்கா மற்றும் பலூச்சி துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
சுவரில் உள்ள துப்பாக்கிச்சூட்டின் தடங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜெனரல் டயர் திட்டமிட்டு இந்த படுகொலையை நிகழ்த்தவில்லை என்றும் வேண்டும் என்றே மக்கள் கூட்டத்தை அங்கு அடைக்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்தியாவின் அரசியல் கொந்தளிப்பு குறித்து பிரிட்டன் சரியாக புரிந்து கொள்ளத் தவறியதே, இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
முதலாம் உலகப்போரின் முடிவில் அரசியல் சீர்திருத்தம் செய்யவும், அதிக சுயநிர்ணய உரிமைகள் தரவும் பிரிட்டன் முன்வரும் என்று இந்திய தேசியவாதிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஏப்ரல் 10ஆம் தேதி அமிர்தசரஸில் கலவரம் வெடித்தபோது, ஐந்து ஐரோப்பியர்கள் மற்றும் டஜன் கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உடனடியாகவும், கண்மூடித்தனமாகவும் பிரிட்டன் அதிகாரிகள் பதிலடி கொடுத்தனர்.
மூன்று நாட்களுக்கு பிறகு, போர் நடக்கும் பகுதி என நினைத்து ஜெனரல் டயர் தவறான இடத்தில் நுழைந்தார்.
அங்கு கூடியிருந்த கூட்டம் அமைதியாக ஓர் அரசியல் சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்ததாகவே பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், அடுத்த சில நாட்களில் அமிர்தசரஸ் நகரில் வன்முறையை உண்டாக்க வாய்ப்புள்ள, சட்டத்தை மதிக்காத கொலைவெறியுள்ள கும்பலாக ஜெனரல் டயர் அதைப் பார்த்தார்.
சுவரில் உள்ள துப்பாக்கிச்சூட்டின் தடங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசுவரில் உள்ள துப்பாக்கிச்சூட்டின் தடங்கள்
மோசமாக செய்யப்பட்ட மதிப்பீடுகளால் தூண்டப்பட்ட அச்சத்தால் அவர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
எனினும் இவை எதுவும் அந்தக் கொலைகளின் கொடூரத்தை குறைத்துவிடாது. அந்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நியாயப்படுத்த முடியாது.
ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை விவரிக்க மிகைச் சொற்கள் எதுவும் தேவையில்லை. அரசியல் நோக்கங்களுடன் கூறப்படும் கட்டுக்கதைகளை விட, கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மைகளே முக்கியம்.
எனினும், பிரெக்ஸிட் வலிகளில் உள்ள பிரிட்டன் அரசாங்கம் மன்னிப்பு கேட்பது சாத்தியமாகத் தோன்றவில்லை.
கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், கேட்கப்படும் மன்னிப்பு, பலரும் எதிர்பார்க்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு முடிவைத் தருமா என்பதும் கேள்விக்குறியே.

No comments:

Post a Comment