Sunday 13 February 2022

BIOGRAPHY OF S.VARALAKSHMI

 


BIOGRAPHY OF S.VARALAKSHMI

நினைவுகளின் சிறகுகள்:
தாய்மையின் குரல்! - எஸ். வரலட்சுமி
‘ஐந்தாவதாகப் பெண் பிறந்தால் அதிர்ஷ்டம்!’ என்றார்கள் மூத்த குடிகள். வரலட்சுமியின் பெற்றோர் தங்களின் கடைசி, ஐந்தாவது மகளைத் தத்துக்கொடுத்துவிட்டார்கள். குழந்தையில்லாத கர்நூல் பெரியம்மாவின் சுவீகாரப் புத்திரி வரலட்சுமியை, பெரியப்பா - ரங்கப்ப நாயுடு கானக் குயிலாக வளர்த்தார்.
“பெரியப்பா எல்லாத்துலயும் எனக்குச் செல்லம் கொடுப்பாரு. ஆனா சங்கீதப் பயிற்சியில கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார். காலையில நாலு மணிக்கு எழுந்து பாட்டு பாடலைன்னா காதைப் பிடிச்சித் திருகிடுவாரு. காது மடல் செவந்து கன்னிப்போயிரும். ஒரு பானையில் தண்ணி கொட்டி அதுல ஐஸ் கட்டிகளை மிதக்க விடுவார். குடத்தை அணைச்சபடி நான் பாடணும்.
பானையோட ஜிலுஜிலுப்பு என் நெஞ்சுல பட்டதும் ஒரு உதறல் வரும். பாடும்போது குரலே புதுசாகிப் பல சங்கதிகள் உருவாகும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பயிற்சி பண்ணியிருக்கேன்” என்று எஸ். வரலட்சுமி சொல்லியிருக்கிறார்.
இரண்டு பாடல்கள்
கே. சுப்ரமணியத்தின் ‘சேவா சதனம்’ டாக்கியில் பத்து வயதில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் பாடி நடிக்கத் தொடங்கியவர் வரலட்சுமி. நிறைவாக கமல் ஹாஸனின் ‘குணா’வில் மாறுபட்ட அம்மாவாகத் தோன்றி, ‘உன்னை நானறிவேன்... என்னை அன்றி யார் அறிவார்...’ என்று அவர் பாடியது இளையராஜாவின் இசையில் தாய்மையின் குரலாக ஒலித்தது.
வரலட்சுமி திரையில் பாடி நடித்த இரு தாலாட்டுகள் சென்ற நூற்றாண்டுத் தமிழச்சிகளின் தாய் வீட்டு சீதனங்கள்!
1.சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே... ( படம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கு. மா.பாலசுப்ரமணியம் பாடல் - இசை ஜி.ராமநாதன்)
2. ‘இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் நான் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ (படம் - நீதிக்குத் தலை வணங்கு; புலமைப்பித்தன் பாடல்; இசை எம்.எஸ். விஸ்வநாதன்) .
கட்டபொம்மனின் போட்டிப் படம் கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’. பரபரப்பான சூழலில் இரண்டிலும் ஒரே சமயத்தில் வரலட்சுமி பாடி நாயகியாக நடித்திருக்கிறார். ‘தென்றல் வந்து வீசாதோ... தெம்மாங்கு பாடாதோ...’ என்று ‘சிவகங்கைச் சீமை’யில் வரலட்சுமி பாடிக் கண்ணீரைச் சிந்திய தாலாட்டில், கவிஞரின் மண்ணின் மணமும் நாட்டுப்பற்றும் வேர் பிடித்து நின்றன. கனிவும் கம்பீரமும் தண்டவாளங்களாகத் தாங்கி நிற்க, வரலட்சுமியின் குரலில், நம் செவிகளில் வந்து சேர்ந்த சுக ராக ரயில்கள் ஏராளம்!
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பாடகி- நடிகைகளில் கணீர் கணீரென்று அட்சர சுத்தமாகத் தமிழை உச்சரித்தவர் எஸ். வரலட்சுமி மட்டுமே!
திரையிசைக்குத் தேசிய விருது
‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி சினிமாவுக்காகப் பாடியது சீக்கிரத்திலேயே பலித்தது. வரலட்சுமியின் நட்சத்திரப் பரமபதத்தில் அவர் ஏறிய ஏணிகளை விட, அவரது சங்கீதம் சாகடிக்கப்பட்ட தருணங்களே அதிகம். பாடல் பறிபோனதற்காக எஸ். வரலட்சுமியோடு சேர்ந்து கலைவாணரே வருந்திய நிகழ்வும் உண்டு.
நடிகர் திலகத்துடன் எஸ். வரலட்சுமி பாடி நடித்தவை, அவரை இருட்டடிப்பு செய்யாமல் பேரும் புகழும் பெற்றுத்தந்தன. 1959ல் தமிழின் முதல் சரித்திரப் படமான ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னின் ‘பட்டமகிஷி ஜக்கம்மா’வாக நடித்து அவர் பாடிய ‘மனம் கனிந்தருள் வேல் முருகா’ பார்ப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்கியது.
1967-ல் தமிழ்த் திரை இசைக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த ’கந்தன் கருணை’யில் இந்திராணியாக, கே.வி. மகாதேவனின் இசையில் (‘வெள்ளி மலை மன்னவா’), சிம்மக்குரலோன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஒரே வண்ணப் படம் 1969-ன் ‘தங்கச் சுரங்கம்’. அதில் தாயாக (‘பெற்ற மனம் சிறையிலே’) , 1973-ல் முதல் சினிமாஸ்கோப் வண்ணச் சித்திரமான ‘ராஜராஜ சோழ’னில் - பெரிய குந்தவையாக (ஏடு தந்தானடி தில்லையிலே, தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!), 1974ல் சிவாஜி நடித்த கடைசி கருப்பு-வெள்ளை சினிமா ‘தாய்.’
அதில் நாயகனின் அம்மாவாக (’மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி’) ஆகிய பாடல்கள் அவரது குரலில் ஆன்மிக இனிமையின் உச்சமாக நேற்றைய வெள்ளிக் கிழமைகளில் விவித பாரதியில் தவறாது ஒலித்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
1979-ல் சிவாஜி கணேசனின் 201-வது படம் கவரிமான். அதில் நாயகனின் அன்னையாக - பிரபலமான கர்நாடக இசைப் பாடகியாக எஸ். வரலட்சுமி! இளையராஜாவின் இசையில், மகாகவி பாரதியின் ‘சொல்ல வல்லாயோ கிளியே’ கவிதையைப் பாடினார்.
‘மீனாட்சி’ என்கிற ஆணவமிக்க சீமாட்டியாக, வரலட்சுமியின் அட்டகாச நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது கே.எஸ். ஜியின் ‘பணமா பாசமா.’
வரலட்சுமியின் நடிப்பாற்றலை முதலீடாகக் கொண்டு உடனடியாக, 1969-ல் கே.பாலசந்தரும் ‘பூவா தலையா’ 100 நாள் படம் கண்டார். கே.பி.யின் ‘காவியத்தலைவி’ போன்ற வெள்ளி விழா சினிமாக்களிலும் வரலட்சுமியின் பங்களிப்பு உண்டு. முதல் சுற்றைக் காட்டிலும் இரண்டாம் இன்னிங்ஸில் வரலட்சுமி நன்கு பிரகாசித்தார். ‘பணமா பாசமா’வில் வரலட்சுமியை இரும்பு மனுஷியாகக் காட்டியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
தனது மிக பிரம்மாண்ட புராணச் சித்திரமான ‘ஆதிபராசக்தி’யில், தயையும் கருணையும் ததும்பும் லோக மாதாவாக வரலட்சுமியைக் கூடு விட்டுக் கூடு பாய வைத்தார். வரலட்சுமியை ‘அம்பாளாக’ ஏற்றுக்கொண்டனர் மக்கள். 1971-ன் தீபாவளி வெளியீடான ‘ஆதிபராசக்தி’ அமோக வசூலோடு வெள்ளிவிழா கொண்டாடியது.
எம்.கே. தியாகராஜபாகவதர் (சியாமளா), பி.யூ. சின்னப்பா (வனசுந்தரி), டி.ஆர். மகாலிங்கம் (மச்ச ரேகை) ஆகிய முன்னாள் மூன்று சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்து உடன் பாடிடும் வாய்ப்பையும் பெற்றவர் வரலட்சுமி.
‘ஜெமினி’ வெளியீடான ‘சதி முரளி’ டாக்கியில் நடித்தபோது அரும்பியது டி.ஆர். மகாலிங்கம் - வரலட்சுமியின் தோழமை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வாழ்விலும் இணைந்தார்கள். மகாலிங்கம் மறைந்த பின்னர் கண்ணதாசனின் அண்ணன் - பட அதிபர் ஏ.எல். ஸ்ரீநிவாசனுடன் வாழ்வில் இணைந்தார் வரலட்சுமி. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். தமது 82 வயதில் சென்னையில் மறைந்த வரலட்சுமியின் குரலும் நடிப்பும் மறையவே மறையாது.
69
5 Comments
10 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment