Tuesday 4 September 2018

WAR OF THE SPANISH SUCCESSION 1701-1714



WAR OF THE SPANISH SUCCESSION 1701-1714




எசுப்பானிய மரபுரிமைப் போர் (War of the Spanish Succession) 1701 முதல் 1714வரை ஐரோப்பாவில் நடைபெற்ற போராகும். எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் சார்லசு வாரிசின்றி இறந்தபிறகு யார் அரியணை ஏறுவது என்பதைக் குறித்து இந்தப் போர் நடந்தது. பிரான்சு அரசரின் உறவினராகிய பிலிப்பு அரியணை ஏறவேண்டும் என விரும்பியது. இதனை பெரிய பிரித்தானியா, இடச்சுக் குடியரசு மற்றும் பிற நாடுகள் எதிர்த்தன.

இந்தப் போர் பெரும்பாலும் ஐரோப்பாவில் நிகழ்ந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் சண்டைகள் நடந்தன. வட அமெரிக்காவில் இது பெரிய பிரித்தானியாவின் அரசியாக ஆன் இருந்ததால் ஆன் அரசி போர் எனப்பட்டது. இப்போரின் முடிவில் பிலிப்பு எசுப்பானியாவின் அரியணையில் ஏறினார்; பிரித்தானியாவும் நேசநாடுகளும் அவர் தாம் பிரான்சின் அரசராக வரக்கூடிய உரிமையை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்ததால் அவரை ஏற்றுக்கொண்டன. ஆஸ்திரியாவிற்கு எசுப்பானிய இத்தாலி கிடைத்தது. பிரித்தானியாவிற்கு எசுப்பானியாவின் மயோர்க்காவும் ஜிப்ரால்ட்டரும் கிடைத்தன.

பின்னணி

எசுப்பானிய மரபுரிமைப் போரின் துவக்கத்தில் ஐரோப்பா.
1690களின் பிந்தைய ஆண்டுகளில் எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசின் மோசமான உடல்நிலை ஐரோப்பிய அரசியலில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. குழந்தைகள் இல்லாத அவரது மறைவிற்குப் பிறகு அடுத்த எசுப்பானிய அரசராக யார் முடி சூடுவார் என்பது விவாதப் பொருளாக இருந்து வந்தது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் எசுப்பானியாவின் ஆதிக்கம் குறைந்திருந்தபோதும், உலகளாவிய கூட்டமைப்பான எசுப்பானியப் பேரரசு உயிர்ப்புடன் இருந்தது.[2]
எசுப்பானியாவைத் தவிர, ஐரோப்பாவில் பலேரிக் தீவுகள், எசுப்பானிய நெதர்லாந்து, மிலன் பிரபுத்துவம், சிசிலி, நேப்பிள்சு இராச்சியம், சார்தீனியா, பினாலே கோமானாட்சி, டஸ்கன் கடலோர பிரெசைடி நாடுகளிலும் கடல்கடந்த பகுதிகளான பிலிப்பீன்சு, எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகள், புளோரிடா, மற்றும் வட, தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள், வட ஆபிரிக்காவின் பல நகரங்களில் இரண்டாம் சார்லசின் ஆட்சி இருந்தது. பேரரசு வீழ்ச்சிப்பாதையில் இருந்தபோதும் ஐரோப்பாவின் மிகப்பெரிய கடல்கடந்த குடியேற்றங்களைக் கொண்டிருந்தது.[3]

இரண்டாம் சார்லசு 1665இல் எசுப்பானியாவின் நான்காம் பிலிப் மன்னரின் மறைவிற்குப் பிறகு அரியணை ஏறினார். உடல்வலிமை குன்றியும் குழந்தைப் பெறும் திறன் இல்லாமலும் இருந்தார். இவரே ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய ஆண்மகனாவார். மற்றவர்கள் எதிர்பார்த்திருந்ததை விட கூடிய நாட்கள் வாழ்ந்திருந்தார். இவருக்கு அடுத்து முடிசூட பூர்பூன் அரசர் பிரான்சின் பதினான்காம் லூயி, ஆத்திரியன் ஆப்சுபர்கு புனித உரோமைப் பேரரசர் லியோபோல்டு உரிமை நாட்ட விரும்பினர்; இருவருமே எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப்பு மன்னரின் பேரர்கள் மற்றும் நான்காம் பிலிப்பின் மாப்பிள்ளைகள் ஆவர். இருப்பினும், இவர்களது வாரிசுகள் எசுப்பானியாவின் மன்னரானால் பிரான்சோ ஆத்திரியாவோ பெரும் ஆதிக்கநிலை பெறும் வாய்ப்பிருந்தது. எனவே மற்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் அதிகார சமநிலை பாதிக்கப்படுவதை விரும்பவில்லை.[4]

எனவே அதிகார சமநிலையை பாதிக்காதவாறு தகுதியுடைய வாரிசுகளிடையே எசுப்பானிய இராச்சியத்தை பிரிக்க முயற்சிகள் நடைபெற்றன. பிரான்சு, ஆத்திரியா, பவேரியாவிடையே இப்பிரிவினை உரையாடல்கள் நடைபெற்றன. இது தோல்வியடையவே இரண்டாம் சார்லசு தனது மரணப்படுக்கையில் பிரான்சின் பதினான்காம் லூயியின் இரண்டாம் மூத்தப் பேரனும் ஆன்ஷூவின் பிரபுவுமான பிலிப்பை முழுமையான எசுப்பானியாவின் அரச வாரிசாக அறிவித்தார். பிலிப் எசுப்பானியாவை ஆண்டால், பதினான்காம் லூயிக்கு பெரும் பயன்கள் கிடைப்பதாகவிருந்தது; பிற நாடுகள் வலுவான பூர்பூன் அரசமரபு ஐரோப்பிய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக எண்ணினர்.

போர் மேலோட்டம்

லூயி XIV தனது பேரன் எசுப்பானிய அரியணையில் ஏறுவதை விரும்பினாலும் சில சர்ச்சைக்குரிய சில செயல்களைச் செய்தார்: எசுப்பானிய நெதர்லாந்திற்கு தனது துருப்புக்களை அனுப்பினார் (இது பிரான்சிற்கும் டச்சுக் குடியரசிற்கும் இடையே நடுநிலை பகுதியாக இருந்து வந்தது); எசுப்பானிய அமெரிக்க வணிகத்தில் ஆங்கிலேய, டச்சு வணிகர்களை விட ஆதிக்கம் செலுத்தலானார்; பிலிப்பின் பிரான்சு வாரிசுரிமையை நீக்க மறுத்தார் - இதனால் பின்னாளில் பிரான்சும் எசுப்பானியாவும் ஒரே மன்னராட்சியில் வலிமையான பேரரசாக விளங்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். பதினான்காம் லூயியின் வளரும் ஓங்குபண்பை தடுக்க இங்கிலாந்து,[5] இடச்சுக் குடியரசு, ஆத்திரியா – இவர்களுடன் புனித உரோமைப் பேரரசும் – இணைந்து பெரும் கூட்டணியை (1701) நிறுவின. இக்கூட்டணி புனித உரோமைப் பேரரசின் அரசர் லியோபோல்டின் கோரிக்கையை ஏற்று அவரது இரண்டாம் மகன், பெரும் கோமகன் சார்லசை முழுமையான எசுப்பானியாவின் அரசராக்க ஆதரவளித்தது. ஆப்சுபர்கு வாரிசை ஆதரிப்பதன் மூலம் பிரான்சின் அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் தங்கள் ஆட்பகுதி, அரசவம்ச பாதுகாப்பை உறுதி செய்யவும் இரண்டாம் சார்லசு காலத்தில் தங்கள் பெற்ற வணிக வாய்ப்புகளை மீட்கவும் வளர்க்கவும் எண்ணினர். ஆத்திரியக் கூட்டணிக்கு உதவியிருக்கக்கூடிய உருசியர்கள் சுவீடனுடன் மற்றொரு பெரும் போரில் ஈடுபட்டிருந்தனர்.

ஆங்கிலேயர்களும் டச்சு,ஆத்திரேயர்களும் மே 1702 அன்று முறையாக போர் அறிவிப்பை வெளியிட்டனர். 1708இல் மார்ல்பரோ பிரபுவும் சவாய் இளவரசரும் எசுப்பானிய நெதர்லாந்திலும் இத்தாலியிலும் வெற்றி கண்டனர். பதினான்காம் லூயியின் ஆதரவாளர் பவேரியா தோல்வியடைந்தது. பிரான்சு கைப்பற்றப்பட்டு தோல்வியுறும் தறுவாயில் கூட்டணி ஒற்றுமை முறிந்தது. எசுப்பானியாவில் பெரும் கூட்டணி தனது தோல்வியை தழுவியது. போர் இழப்புகள் கூடிவர, இலக்குகளில் ஒத்திசைவில்லாத நிலையில் 1710இல் பெரிய பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்த டோரிகள் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்களித்திருந்தனர். பிரான்சிய, பிரித்தானியா அமைச்சர்கள் அமைதிக்கான உரையாடல்களை துவங்கினர்; 1712இல் பிரித்தானியா போரை நிறுத்தியது. டச்சு, ஆத்திரியா, செருமன் நாடுகள் தங்கள் நிலைகளை வலுவாக்க முயன்றபோதும் மார்ஷல் வில்லர்சால் தோற்கடிக்கப்பட்டதால் ஆங்கில-பிரான்சிய பேரத்தை ஏற்க வேண்டியதாயிற்று. உத்ரெக்ட் உடன்பாடு (1713) மற்றும் இராசுடாடு உடன்பாடுகளின்படி (1714) எசுப்பானியப் பேரரசு பெரிய, சிறிய நாடுகளிடையே பிரிக்கப்பட்டது. ஆத்திரியாவிற்கு எசுப்பானியாவின் முன்னாள் ஆட்புலங்களில் பெரும்பான்மையானவை கிடைத்தது; ஆனால் ஆன்ஷூ பிரபு எசுப்பானிய மூவலந்தீவையும் எசுப்பானிய அமெரிக்காவையும் தக்க வைத்துக் கொண்டார்; தனது பிரான்சு முடியரிமையைத் துறந்தார். எசுப்பானியாவின் ஐந்தாம் சார்லசாக முடி சூட்டிக் கொண்டார். ஐரோப்பிய அதிகாரநிலை உறுதி செய்யப்பட்டது





ஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய நீரோட்டம் தொடர்ச்சியாக உள்ளது. நீரிணையில் காணப்படும் கற்படுகைகள், அட்லாண்டிக்கின் குளிர்ந்த, உவர்ப்புக் குறைந்த நீரும், மத்தியதரைக் கடலின் சூடான, கூடிய உவர்ப்புத்தன்மை கொண்ட நீரும் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன. மத்தியதரைக் கடல் நீரின் உவர்த்தன்மை காரணமாக, இந்த நீர் எப்பொழுதும் உள்ளே வந்துகொண்டிருக்கும் அட்லாண்டிக் நீரின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. இது நீரிணையின் அடியில் மிகவும்
உவர்த்தன்மை கொண்ட நீர்ப்படையாக உருவாகி உள்ளது. இந்த இருவேறு அடர்த்தி கொண்ட நீர்ப்படைகள் சந்திக்கும் தளம் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. இது அட்லாண்டிக் கடலடியிலுள்ள கண்டச் சரிவின் வழியாகச் சென்று, உவர்த்தன்மை குறைந்து, சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் அட்லாண்டிக் நீருடன் கலக்கின்றது. இது மத்தியதரைக்கடல் வெளிநீரோட்டம் (Mediterranean Outflow) எனப்படுகின்றது. இந்த வெளிநீரோட்ட நீரை, அட்லாண்டிக் கடலினுள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு அடையாளம் காணமுடியும்..

No comments:

Post a Comment