Wednesday 5 September 2018

TEACHERS DAY SEPTEMBER 5






TEACHERS DAY SEPTEMBER 5


டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் புகழ் மிக்கவர்களாகத் திகழ்ந்த மூன்று பேரில் ஒருவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். தேசப்பிதா மகாத்மா காந்தி, நோபல் பரிசு வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, புகழின் ஏணிப்படிகளில் ஏறியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். உலகம் சுற்றியவர். ஆனால் உல்லாசத்தை அவர் அனுபவிக்காதவர். ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியராகவும், அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களின் அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமானவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

ஆசிரியர் பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்து, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதை முதல்முறையாகப் பெற்று புகழ் சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். திருத்தணியில் ஆரம்பக் கல்வியையும், திருப்பதியில் பட்டப்படிப்பும் பயின்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இளம் வயதிலேயே புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் திறமை கொண்டவர். படித்ததைப் பற்றி சிந்திப்பதும் அவருக்குக் கல்வியில் பலமான அடித்தளம் அமைக்க உதவின. பாட நூல்களைத் தவிர வேதாந்தம், அரசியல் விடுதலை சம்பந்தப்பட்ட நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்,. ஆதி சங்கரரின் அத்வைத கொள்கையைப் படித்துப் பரவசமானார். பைபிள், ஐரோப்பிய சிந்தனைகள், ஆங்கில இலக்கியங்களில் ஊறித் திளைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். வேதாந்தக் கருத்துகளை தனி அணுகுமுறையுடன் ராதாகிருஷ்ணன் விளக்கிக் கூறுவார்.

இவரைப்பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் இப்பர்ட் ஜோன்ஸ் கூறுகையில், "டாக்டர் ராதாகிருஷ்ணனின் பார்வையில் மாயாஜாலம் உள்ளது. அவரின் சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது. முகத்தில் ஒளி வீசுகிறது" என்று புகழ்ந்துரைத்தார்.

"தெளிவான தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தானாக வரும் தரமான சொற்கள், அழகான மொழிநடை கொண்டவர்" என்று அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ, "தத்துவ ஞானிகள் அரசர்களாக இருக்க வேண்டும். அல்லது அரசர்கள், சிற்றரசர்கள் தத்துவக் கருத்துகளைப் பயின்றிருக்க வேண்டும். இல்லைபென்றால், மக்கள் தங்களைப் பீடித்துள்ள கெடுதல்களில் இருந்து மீளமுடியாது. அரசியலில் உயர்ந்த எண்ணங்களும், தத்துவ ஞானமும் ஒருசேர இணைந்த மனிதனால் மட்டுமே நாட்டிற்கு நல்ல ஒளி காட்ட முடியும்" என்று குறிப்பிட்டார்.

பிளேட்டோவின் இந்தப் பிரகடனம், இந்தியாவில் 1962-ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டது. அதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற அரசியல் வித்தகர், தத்துவமேதை குடியரசு துணைத் தலைவராக இந்த ஆண்டில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தாண்டுகள் கழித்து, அவரே குடியரசுத் தலைவரானார்.

ஒருமுறை பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த விருந்தில் கலந்துகொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது கையால் உணவைச் சாப்பிட்டார். இதைக்கண்ட சர்ச்சில், "கைகளால் சாப்பிடுவதைவிட ஸ்பூனால் சாப்பிடுவதே ஆரோக்கியமானது" என்று கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், "ஸ்பூன் வைத்து சாப்பிடுவது சுத்தம் என்றால், கைகளால சாப்பிடுவது அதைவிட சுத்தமானது. காரணம், நம் ஸ்பூனை வைத்து மற்றவர் சாப்பிட்டு எச்சில் படுத்தலாம். ஆனால், நம் கையை வைத்து மற்றவர் சாப்பிட முடியாது" என்று வாதிட்டார். ராதாகிருஷ்ணனின் வாதத் திறமையைக் கண்டு சர்ச்சிலும், மற்றவர்களும் வியந்து பாராட்டினர்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பேராசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். தத்துவக் கருத்துகளை எழுதியவர், 'லீலாவின் குற்றம்' என்ற நாவலையும் எழுதிப் புகழ் பெற்றார். அதில் ஒரு பாத்திரத்தில் தன் சுயசரிதையை ராதாகிருஷ்ணன் கோடிட்டுக் காட்டியிருப்பார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஜார்ஜ் தத்துவப் பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் கொல்கத்தா புறப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு விழாவின் போது, ரயில் நிலையம் வரை குதிரை வண்டியில் செல்வதாக ஏற்பாடு.
ஆனால், மாணவர்கள் குதிரைகளை அவிழ்த்து விட்டு, தங்களுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் ராதா கிருஷ்ணனை தாங்களே வண்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையம் வரை சென்று அனுப்பி வைத்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் வியந்தனர். மாணவர்கள் அளித்த பிரிவுபசார விழாவைக் கண்டு ராதாகிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தார். 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதை உணர்த்துவதாக அந்த நிகழ்வு அமைந்தது.

"இந்து மதம் என்று குறிப்பிடுவதை விட இந்தியத் தத்துவம் என்றே கூற வேண்டும்" என்னும் அளவுக்கு இந்து மதத்தின் கருத்துகளை ஆழமாக உணர்ந்து வைத்திருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் மாநாட்டிற்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பாக ராதாகிருஷ்ணன் சென்றார். கேம்பிரிட்ஜ், லண்டனில் உரை நிகழ்த்தினார். ஹார்வர்டு பகுதியில் அனைத்துலக தத்துவ மாநாட்டில் எவ்விதக் குறிப்பும் இல்லாமல் மடைதிறந்த வெள்ளம்போல் அவர் ஆற்றிய உரையை அங்குக் கூடியிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டு ரசித்தனர்.

'சாதி உணர்வு கூடாது; தீண்டாமை இந்து சமயத்துக்குத் தேவையில்லாதது' என்பதில் உறுதியாக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். மாணவர்கள் எந்நேரமானாலும் தன் வீட்டுக்கே வந்து சந்தேகம் கேட்பதை விரும்புவார். மாணவர்களின் தோளில் கைபோட்டு, நட்புணர்வுடன் பழகும் குணம் அவரிடம் இருந்தது. மேலும் தன் கையாலேயே மாணவர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுப்பார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா.

ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவர் பதவிவரை உயர்ந்து, தான் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தத்துவ மேதையாகவும், ஞானியாகவும் திகழ்ந்து, இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மேதையாக விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தனது கருத்தை தெளிவுடனும், ஆணித்தரமாகவும் தெரிவிக்கும் வல்லமை படைத்த டாக்டர் ராதாகிருஷ்ணன், 1975-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி காலமானார். இந்நாளில் அவரின் நினைவைப் போற்றி வணங்குவோம்.


டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..

அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்..
அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்..விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..

அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..

எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..
ஆயிற்று..

அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கை யாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது...

சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர் அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்.."இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".???

அங்கே ஒரு சிறு சலசலப்பு..

அரசர் பதிலளிக்கிறார்,
" நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்"..

"இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?

அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது"..என பெருமையாக குறிப்பிடுகிறார்..சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..

உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு...

"குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ"..

ஆசிரியர் தின வாழ்த்துகள்.

No comments:

Post a Comment