Wednesday 24 July 2019

jumbo circus history



ஜம்போ யானையும் வீழ்ந்த சர்க்கஸ் கம்பெனியும்... ஒரு துயர வரலாறு!
ஜார்ஜ் அந்தோணி

எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே தவிர்க்க முடியாத இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ”


சர்க்கஸ்... பேரைக் கேட்டாலே எனர்ஜி பொங்கும் ஒரு சொல்.. விலங்குகளும் மனிதர்களும் சேர்ந்து ஒரு யுகத்தையே பொழுதுபோக்கால் கட்டிப் போட்டு வைத்திருந்த காலம் அது. எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ” சர்க்கஸ் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, அங்கு வேலை செய்கிறவர்களுக்கும் விலங்குகளுக்கு அது வாழ்க்கை.

ஜம்போ 
ஜம்போ
மனிதனோ விலங்கோ... சர்க்கஸ் உலகத்தில் அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை. ஜம்போ 1860 ஆண்டு டிசம்பர் மாதம் சூடானில் பிறந்த ஆப்பிரிக்க யானை. ஜம்போ குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சர்க்கஸ் நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். Ringling Bros. and Barnum & Bailey Circus அமெரிக்கன் சர்க்கஸ் நிறுவனம். அதன் மற்றொரு பெயர் Ringling Bros. பல இடங்களுக்கும் பயணம் செய்து சர்க்கஸ் நடத்திய நிறுவனம். அதன் பிரபலமான ஸ்லோகன் ‘The Greatest Show on Earth’ . இந்த நிறுவனத்தின் கதை 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது.

1871 ஆம் ஆண்டு பார்னம் (Phineas Taylor Barnum) என்பவரால் தொடங்கப்பட்டது. பல இடங்களுக்கும் பயணித்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது போட்டியாகப் பல நிறுவனங்கள் சர்க்கஸ் உலகில் கால் பதித்திருந்தன. புதுப் புது சாகசங்கள், பல விலங்குகள் எனப் போட்டிப் போட்டு சர்க்கஸ் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்திருந்த காலம். போட்டிகள் அதிகமாக அதிகமாக ஒரு சர்க்கஸ் வெற்றி பெறுவதும், ஒரு சர்க்கஸ் தோல்வியடைவதும் இயல்பாக நடந்தன. சர்க்கஸ் உலகில் போட்டி நிறுவனத்தை ஜேம்ஸ் பெய்லி என்பவர் 'காப்பர் அண்ட் பெய்லி' Cooper and Bailey என்ற பெயரில் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போட்டிகளைச் சமாளிக்க இரண்டு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இயங்கும் உடன்படிக்கைக்கு வருகிறார்கள். அதன்படி 1881 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பெய்லி மற்றும் பார்னம் நிறுவனங்கள் இணைந்த பிறகு நிறுவனம் "பார்னம் & பெய்லி" என்று பெயர் மாற்றப்பட்டது. நிற்க..


ஜம்போ யானை பிறந்த சில மாதங்களில் கண்ணுக்கு முன்பாக தன்னுடைய தாயை வேட்டைக்குப் பறி கொடுத்தது. தாயை வேட்டையாடியவர்கள் குட்டியாக இருந்த ஜம்போவை சூடானில் இருந்து இத்தாலியில் இருக்கிற சூயஸ் நகருக்கு கடல்வழியாக கடத்திக்கொண்டு சென்றார்கள். அங்கிருந்து விலங்கு விற்பனை செய்பவர்கள் மூலமாக ஜெர்மனிக்குக் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு அங்கிருந்து லண்டன் நகரில் உள்ள லண்டன் விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இந்த விலங்குகள் பூங்கா 1828 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்குக் குழந்தைகள், சிறுவர்கள் என எல்லோரையும் முதுகில் சுமந்து செல்லும் வேலை ஜம்போவுக்குக் கிடைத்தது. ஜம்போவைப் பராமரிக்கும் பணிக்கு மேத்யூவ் ஸ்காட் என்பவரைப் பூங்கா நிர்வாகம் நியமித்தது. ஜம்போ என்கிற பெயர் இங்குதான் அதற்குச் சூட்டப்பட்டது. அதன் உருவமும் எடையும் ஜம்போ என்கிற பெயரை அதற்கு பெற்று தந்தது. அனோசன் அனந்த ஜெயஸ்ரீ என்கிற இந்தியர்தான் அதற்கு அந்தப் பெயரைச் சூட்டினார். ஜம்போவைப் பார்ப்பதற்காகவே மக்கள் லண்டன் பூங்காவிற்கு வந்து போனார்கள். பல ஆண்டுகளாக அதாவது 1882 ஆம் ஆண்டு வரை லண்டன் பூங்காவில் ஜம்போ இருந்தது.


லண்டன் விலங்கியல் பூங்காவில் Abraham Bartlett என்பவர் தலைமை பதவியிலிருந்தார். ஜம்போ யானை ஆக்ரோஷமாக இருக்கிறது; மதம் பிடித்தால் அடக்குவது சிரமம் என்று சொல்லி ஜம்போவை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அது அவருக்கு அவ்வளவு சுலபமான வேலையாக இல்லை. ஏனெனில் விஷயம் அறிந்த பத்திரிகைகள் ஜம்போவை விற்பனை செய்வது தவறு என எழுதின. சுமார் 1,00,000 பள்ளிக் குழந்தைகள் ஜம்போவை விற்பனை செய்யக் கூடாது என கையெழுத்திட்டு இங்கிலாந்தின் அப்போதைய ராணி விக்ட்டோரியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், எந்த ஒரு முயற்சியும் ஜம்போவிற்கு கை கொடுக்கவில்லை. ஜம்போவிற்கு பலமாக இருந்த அதன் உடலமைப்பே அதற்குப் பலவீனமாகவும் மாறிப் போனது. அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டுமானால் ஜம்போவை விற்பதே சரி என வாதாடி கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

காலம் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில தவறுகளை நிகழ்த்த ஆரம்பிக்கும்."பார்னம் & பெய்லி" சர்க்கஸ் நிறுவனம் ஒன்றாக இணைந்தது இந்தத் தருணத்தில்தான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட "பார்னம் & பெய்லி" நிறுவனம் ஜம்போவை பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்றார்கள். அதன் பராமரிப்பாளரும் ஜம்போவுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். ஜம்போவின் நட்சத்திர அந்தஸ்து, மற்றும் அதன் உருவமும் தனி ஓர் அடையாளமாக மாறியது. "பார்னம் & பெய்லி" நிறுவனத்திற்கு லாபம் பல மடங்காக உயர்ந்தது. ஜம்போவை வாங்கச் செலவழித்த தொகை மூன்றே வாரங்களில் மீண்டும் லாபமாகக் கிடைத்தது.

1880 மே மாதம் 30 தேதி நியூயார்க்கின் ப்ரொக்ளின் பாலத்தை ஜம்போவோடு சேர்த்து பார்னம் & பெய்லி நிறுவனத்தைச் சேர்ந்த 21 யானைகளும் கடக்கும் பொழுது மிக பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். அப்போது ஜம்போ எந்த அச்சமும் இன்றி சாதுவாகவே நடந்துகொண்டது. எந்தக் காரணத்தைச் சொல்லி ஜம்போவை விற்பனை செய்தார்களோ அது பொய்யாகப் போனது.


1885 ஆண்டு செப்டம்பர் மாதம், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள செயின்ட் தாமஸில் சர்க்கஸ் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. சர்க்கஸ் நடத்துவதற்கு அந்த இடமும் சூழ்நிலையும் பொருந்திப் போனது. அங்கு சர்க்கஸ் நடத்துவதற்கு முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. சர்க்கஸ் நிறுவனம் விலங்குகள் மற்றும் பொருள்களை ரயில் மூலமாகவே எடுத்துச் செல்லும். செயின்ட் தாமஸ் பல ரயில் பாதைகளை இணைக்கிற இடமாகவும் இருந்தது. செப்டம்பர் மாதம் 15 தேதி இரவு எல்லா யானைகளும் தங்களுடைய பணியை முடித்து விட்டு மீண்டும் தங்களுடைய பெட்டிகளுக்கு திரும்பி கொண்டிருந்தன. பயணச் சாலையில் பல ரயில் பாதைகள் இணைகிற இடமாக இருந்தது.

அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக வந்துவிடக் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. சரக்கு ரயில் ஜம்போ மீது மோதியதில் ஜம்போ அதே இடத்தில் உயிரை விட்டது. ‘குட்டி யானையைக் காப்பாற்றச் சென்ற ஜம்போ எதிர்பாராமல் விபத்தில் சிக்கி விட்டது’ என சர்க்கஸ் நிறுவன உரிமையாளரான பார்னம் உலகிற்கு அறிவித்தார். கண்டனங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் ஆங்காங்கே நிகழ்ந்தன


ஜம்போவின் வரலாறு அதோடு முடிந்து விடவில்லை. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’. ஏற்கெனவே பார்னம் நிறுவனம் ஜம்போ யானையை வைத்து நன்கு காசு பார்த்திருந்தது. ஜம்போவின் விலை என்னவென்று நிறுவனமும் அதனுடைய முதலாளிகளும் அறிந்திருந்தனர். ஜம்போ என்கிற பெயர் மிகப் பெரிய வியாபாரத்தை உருவாக்கி வைத்திருந்தது. அதை பார்னம் பயன்படுத்திக் கொண்டார். யானையின் உடல் பாகங்களை விற்பனை செய்வது என்கிற முடிவிற்கு வருகிறார். முதலில் யானையின் இதயத்திலிருந்து தொடங்கினார். மார்ச் 1886 இல், “47 பவுண்டுகள் எடையுள்ள இதயம், ‘பார்னமின் புகழ்பெற்ற ஜம்போவின் இதயம்” என்கிற அடைமொழியோடு கார்னல் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் நிபுணரிடம் $ 40 க்கு விலை போனது.


வேறு எந்த வகையில் ஜம்போவின் உடலை விற்பனை செய்யலாம் என யோசித்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு புது எண்ணம் தோன்றியது. ஜம்போவின் எலும்புக் கூட்டை சர்க்கஸ் நடக்கிற இடங்களில் வைத்து கூட்டத்தைக் கூட்டினார். ஜம்போவின் எலும்புக்கூட்டைப் பார்க்க மக்கள் கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு ஜம்போ என்கிற பெயர் சர்க்கஸ் உலகில் மந்திரச் சொல்லாக இருந்தது. 1889 ஆம் ஆண்டு வரை ஜம்போவின் எலும்புக் கூடு பல நாடுகளுக்கும் பயணித்தது. கடைசியாக அதே ஆண்டு நியூயார்க் நகரத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.


ஜம்போ என்கிற பெயருக்கு கிடைத்த வாழ்க்கை கூட அந்த யானைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்துயரம்.








No comments:

Post a Comment