Sunday 1 January 2017

பதான்கோட் தாக்குதல் முதல் ஜெயலலிதா மறைவு வரை : அதிர்வுகள் நிறைந்த 2016




பதான்கோட் தாக்குதல் முதல் ஜெயலலிதா மறைவு வரை : அதிர்வுகள் நிறைந்த 2016


2016-ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள் என பல அதிர்வுகளைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதுபற்றி, முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு.

ஜனவரி 2 :பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான எல்லைப்பகுதியில் உள்ள பதான்கோட்டில், ராணுவத்திற்கு சொந்தமான விமான தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஜனவரி 2 ஆம் தேதி இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் ராணுவம் மீது நடத்திய தாக்குதலில், 7 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாட்கள் முடிவில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் பதற்ற நிலைக்கு இத்தாக்குதல் வழிவகுத்தது.
பதான்கோட் தாக்குதல்



ஏப்ரல் 5 : பிகாரில் பூரண மதுவிலக்கு
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. எதிரும், புதிருமாக இருந்த நிதிஷ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இருவரும் இணைந்து ஒன்றாக களம் கண்டு தேர்தலில் வெற்றி பெற்றனர். வெற்றியை தொடர்ந்து பிகார் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார். இந்த ஆண்டு நிதிஷ் செய்த அதிரடி காரியம்தான் பூரண மதுவிலக்கு. மாநிலம் முழுக்க மது விற்கவும், குடிக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர், அரசின் இந்த உத்தரவுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால், இறுதியாக உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.


ஏப்ரல் 10 : கேரளாவில் வெடி விபத்து; 112 பேர் பலி
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பரவூர் புட்டிங்கல் பகவதி ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுத்தோறும் திருவிழாவின்போது வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருப்பார்கள். அதுபோல் இந்தாண்டு அதிகாலையில் நடத்தப்பட்ட வாண வேடிக்கையிலிருந்து வெளியான தீப்பொறிகள், பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் மீது விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. 112 பேர் பலியானார்கள். 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் குறைந்தது 150 வீடுகள் சேதமடைந்தன.

கேரளா புட்டிங்கல் பகவதி அம்மன் ஆலய வெடி விபத்துImage 
இது குறித்து மேலும் படிக்க :கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி
மே மாதம்: 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களால் அதிர்ந்த இந்தியா
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற்றன. தமிழகத்தில் அ.தி.மு.கவும், அசாமில் பா.ஜ.கவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியை கைப்பற்றின. மேற்கு வங்கத்தில் சி.பி.எம் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. ஆனால், கேரளாவில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. முதல் முறையாக வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை பா.ஜ.க பெற்றது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல்கள்

இது குறித்து மேலும் படிக்க :வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவின் முதல் ஆட்சி
மே 23: ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வர்
தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 134 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், மே மாதம் 23-ஆம் தேதி, தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1987-ல் எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பெருமையைப் பெற்றார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்த தி.மு.க மீண்டும் அந்தத் தகுதியை பெற்றது. தற்போது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து மேலும் படிக்க :ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு

ஜூன் 24 : மர்மம் விலகாத ஸ்வாதி படுகொலை மற்றும் ராம்குமார் தற்கொலை
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்வாதி என்ற 24 வயதுப் பெண் சென்னையை அடுத்து உள்ள பரனூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பணிக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்த நிலையில், திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் ஸ்வாதியை வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவானார். பின், போலிஸ் விசாரணையை தொடர்ந்து, திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே சிறையில் மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் தெரிவித்தனர்.

ஸ்வாதி
இது குறித்து மேலும் படிக்க :சென்னையில் தொடரும் கொலைகள்; இன்றும் ஒரு கொலை
ஸ்வாதி கொலை:எட்டு நாட்களில் முடிவுக்கு வந்த தேடுதல் வேட்டை
ஜூன் 22 : இருபது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ
இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமானது புதிய மைல் கல் சாதனை ஒன்றை செய்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 20 செயற்கைக்கோள்களைத் தாங்கிய பிஎஸ்எல்வி - சி 34 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட தினம். இந்த ராக்கெட்டில் ஏழுநூறு கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் முதல் சிறிய அளவில், ஒன்றரை கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்கள் வரை செலுத்தப்பட்டுள்ளன.


ஜூலை 9 : காஷ்மீரில் வன்முறையை தூண்டிய புர்ஹான் வானியின் மரணம்
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதியாக கருதப்பட்டவர் புர்ஹான் வானி. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் புர்ஹான் வானி மிகவும் பிரபலம். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான புர்ஹான் வானி, ஸ்ரீநகருக்கு தெற்கே 45 மைல் தொலைவில் உள்ள அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்தபோது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த 10 மாவட்டங்களிலும் கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இது குறித்து மேலும் படிக்க :ஹிஸ்புல் முஜாகிதீன் குழுவின் முக்கிய தலைவன் சுட்டுக் கொலை
ஜூலை 22 : மாயமான இந்திய விமானப் படையின் விமானம் ஏ என் 32
சென்னையிலிருந்து அந்தமானுக்குச் செல்லும் வழியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ என் 32 விமானம் நடுவானில் காணாமல் போனது. சென்னையிலிருந்து 150 கடல் மைல் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கூறப்பட்டது. அதில், 29 பேர் இருந்தனர். காணாமல் போன இந்த விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் பணிகளில் 17 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் 23 விமானங்கள் ஈடுபட்டன. இந்திய வரலாற்றிலே காணாமல் போன விமானத்தை தேடி நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை இது. செப்டம்பர் மாதம் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு அதில் பயணித்தவர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அறிவித்தது.


:காணாமல் போன விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் தப்ப வாய்ப்பு குறைவு: இந்திய விமானப்படை
ஜூலை 26 : 16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இரோம் ஷர்மிளா
2000 ஆம் ஆண்டு மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் (ஆயுதப் படையின் சிறப்பு அதிகார சட்டம்) ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 14 வருடங்களாக மூக்கு வழியாக குழாய் பொருத்தப்பட்டு கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தன்னுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டார். மேலும், அரசியலில் நுழையவும் திட்டமிட்டுள்ளார்.


இது குறித்து மேலும் படிக்க :16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம்
ஆகஸ்ட் 3 : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி மசோதா
நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை .அ.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர். ஜி.எஸ்.டி மூலம் இறையாண்மை என்பது ஒன்று குவிக்கப்பட்ட அனைவராலும் பகிரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று அரசின் நிலைப்பாட்டை விவாதத்தின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கிப் பேசினார்.


இது குறித்து மேலும் படிக்க :ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது
ஆகஸ்ட் 14 : பாடலசிரியர் நா. முத்துக்குமார் மரணம்
தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியரான நா.முத்துகுமார் உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 41-வது வயதில் காலமானார். 'பட்டாம் பூச்சி விற்பவன்' என்ற கவிதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கால்பதித்த முத்துகுமார் பல்வேறு கவிதை தொகுப்புகளின் மூலம் தனிமுத்திரை பதித்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள அவர் தங்க மீன்கள் படத்தில் வரும் ''ஆனந்த யாழை மீட்டுகிறாள்'' என்ற பாடல் வரிகளுக்காக தேசிய விருதை பெற்றவர். ''இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே '' என்று வைரமுத்து உருக்காமான இரங்கலை தெரிவித்தார்.


செப்டம்பர் 7 : காவிரி விவகாரமும்; கர்நாடக கலவரமும்
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவைக் கண்டித்து அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து மாண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களும், தமிழர்களுக்கு சொந்தமான கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. டெப்போ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் தனியார் நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு சமூக விரோதிகளால் தீ வைத்ததுக் கொளுத்தப்பட்டது.


இது குறித்து மேலும் படிக்க :காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடரும் போராட்டம் (படத்தொகுப்பு)
பெங்களூரில் வன்முறையாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
செப்டம்பர் 10 : தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 'தங்கமகன்' மாரியப்பன்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதே போட்டியில், இந்தியாவின் இன்னொரு வீரர் வருண் சிங் பாட்டி வெண்கலப்பதக்கம் வென்றார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். 

உறவினர்கள் பலரும் மாரியப்பன் குடும்பத்தை கைவிட்ட நிலையில், செங்கல் சுமந்து, விவசாய கூலி வேலை செய்து, வீடுவீடாக காய்கறிகளை விற்று தனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தவர் மாரியப்பனின் தாய் சரோஜா.

இது குறித்து மேலும் படிக்க :பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை
செப்டம்பர் 18 : ஊரி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல்

இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 படையினர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்பட்டது. எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இதை நடத்தியதாக கூறப்பட்டது. ஊரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அமைந்து தீவிரவாத நிலைகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் படிக்க :ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்

அக்டோபர் 24 : டாடா குழுமங்களிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி
இந்தியாவின் தொழில்துறைத் தலைவர்களில் மிகவும் அறியப்பட்டவரான ரத்தன் டாடா கடந்த 2012 ஆம் ஆண்டோடு பணி ஓய்வு பெற அவருடையை உறவுக்காரரான சைரஸ் மிஸ்திரி டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். டாடா நிறுவனத்தின் நூற்றைம்பது வருட சரித்திரத்தில் டாடா என்ற குடும்பப் பெயர் இல்லாத ஒருவர் குழுமத்துக்கு தலைமை ஏற்பதென்பது இதுவே முதல் முறை. நான்கு ஆண்டுகள் கழித்து 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக சபை தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் மிஸ்திரி. பெரும்பாலான டாடா நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், ஆனால், நிறுவன கணக்குகளில் அவற்றின் மதிப்புக்கள் உயர்த்திக் காட்டியதாகவும் மிஸ்திரி எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் படிக்க :டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி மாற்றம்
டாடா குழுமம் பெரும் இழப்பை சந்திப்பதாக சைரஸ் மிஸ்திரி எழுதிய கடிதம்
நவம்பர் 8 : உயர்மதிப்பு நோட்டுக்களை நீக்கி பிரதமர் மோதி அதிரடி உத்தரவு

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு, தொலைக்காட்சியில் நேரலையில் உரையாற்றிய பிரதமர் மோதி, கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக நாளை முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை நிதானமாக அறிவித்தார். அவர் அறிவித்த சிலமணி நேரங்களிலே இந்தியா முழுக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லா நோட்டுகளாக ஆகின. தொடர்ந்து, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. தற்போது, மோதி அறிவிப்பு வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள போதிலும் பணத் தட்டுப்பாடு நீங்கியப்பாடில்லை. நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் ஒட்டுமொத்த குடிமக்கள் வரிசையாக நின்று தங்களுடைய வங்கிக்கணிக்கிலிருந்த பணத்தை எடுப்பதற்குள் பெரும் சிரமத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலும் படிக்க :இந்தியாவில் இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - மோதி

நவம்பர் 30 : திரையரங்குகளில் தேசிய கீதம் : சர்ச்சைக்குள்ளான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்,தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடுமுழுக்க பெரும் சர்ச்சையும், அதிருப்தியையும் கிளப்பியது. கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்க தவறிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலும், திரையரங்கு ஒன்றில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத பலரை வலது சாரி ஆர்வலர்கள் தாக்கினர்.

இது குறித்து மேலும் படிக்க :இந்திய திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்
நவம்பர் 22 : கர்நாடக இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா மறைவு
பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞரும், இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா தன்னுடைய 86வது வயதில் காலமானார். 

கர்நாடக இசை பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். தன் பெற்றோர்களிடம் இசை பயின்ற முரளிகிருஷ்ணா, பின்னர் முறையாக சங்கீதம் பயின்று தனது எட்டாவது வயதிலேயே பொது மேடையொன்றில் தனது முதல் கச்சேரியை நடத்தினார். அந்த கச்சேரியில் அவர் பாடல் திறனை மெச்சி, அவருக்கு 'பால' என்ற அடைமொழி வழங்கப்பட்டது. திருவிளையாடல் படத்தில் அவர் பாடிய 'ஒரு நாள் போதுமா' பாடல் மிகப் புகழ் பெற்றது. நூல் வேலி படத்தில் அவரது ' மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே' , கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' போன்ற பாடல்கள் பெரிய அளவில் 'ஹிட்' ஆகின.
கர்நாடக இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா மறைவு

டிசம்பர் 5 : முதல்வர் ஜெயலலிதா மரணமும், அவரது தோழி சசிகலா நியமனமும்
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று, நீர்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை, லண்டன் டாக்டரின் ஆலோசனை, அப்போலோவின் உயர்தர சிகிச்சை என அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.. இறுதியாக, டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மாரடைப்பால் காலமானதாக அப்போலோ அறிவித்தது. எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டார். அ.தி.மு.கவின் பொதுசெயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கட்சியின் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டாார். டிசம்பர் 31-ஆம் நாள் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது குறித்து மேலும் படிக்க :ஜெயலலிதா காலமானார்
டிசம்பர் 7 : துக்ளக் 'சோ' ராமசாமி மறைவு

"சோ" என அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி 1934 டிசம்பர் 5ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார். 1950களில் நாடகங்களை எழுதி நடிக்க ஆரம்பித்த சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 1971ல் இவரது இயக்கத்தில் முகமது பின் துக்ளக் திரைப்படம், இவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று. 1999ல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சோ, 2005 வரை அந்தப் பதவியில் இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய சோ, அவர் காலமான இரண்டு நாட்களில் காலமாகிவிட்டார்.


No comments:

Post a Comment