Wednesday 2 December 2020

ஓஷோ பாணியில் நித்யானந்தா...

 



ஓஷோ பாணியில் நித்யானந்தா...





அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன? -
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!
ர.முகமது இல்யாஸ்
`ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. தற்போது அவர், ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று ஒரு `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ரஜ்னீஷ் தனக்கென்று `கம்யூன்; உருவாக்கியபோது என்ன செய்தார்?
ரஜ்னீஷ்!
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய உலகைக் கலக்கிய இந்திய சாமியாரின் பெயர். தனது பிற்காலத்தில் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ், தனது அமெரிக்க சீடர்களால் `பகவான்' எனறு அழைக்கப்பட்டார். தற்போது நித்யானந்தா, ஈக்வடார் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருப்பதோடு, அதைத் தனி நாடாக அறிவிக்கப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது பேச்சுகளில் ஓஷோவை காப்பியடிப்பதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது ஓஷோ பாணியில் தனக்கென்று தனியாக `கம்யூன்' ஒன்றை உருவாக்க இருக்கிறார் நித்யானந்தா. இந்த வாரத்தின், ஜூனியர் விகடன் இதழில் இதைப் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்.
`ஓஷோ' என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷ், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். ரஜ்னீஷின் சீடர்கள், அமெரிக்க அரசால் கிரிமினல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டனர். சர்ச்சைகளின் முடிவில், ரஜ்னீஷ் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் இந்தியாவில் பிரிந்தது.
அமெரிக்காவில் ரஜ்னீஷ் செய்தது என்ன?
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்திலுள்ள சிறிய கிராமம், ஆன்டெலோப். அந்தச் சிறிய கிராமத்தின் மக்கள்தொகை, வெறும் 60 பேர் மட்டுமே. ஆன்டெலோப் அருகில் இருந்த பெரும் நிலப்பரப்பை விலைகொடுத்து வாங்கியது ரஜ்னீஷின் ஆசிரமம். 64,000 ஏக்கர் நிலம், ஏறத்தாழ 5.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு, ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய்.அந்தப் பெரும் நிலப்பரப்பில், ரஜ்னீஷுக்காக ஆசிரமம் கட்டப்பட்டது. மேலும், சீடர்கள் தங்குவதற்கான இடம், தனியாக காவல்துறை, தீயணைப்புத் துறை, உணவகங்கள், மால்கள் முதலானவை கட்டப்பட்டன. வெறும் 60 பேர் மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டெலோப் கிராமத்தில், ரஜ்னீஷ் சீடர்கள் படிப்படியாகக் குடியேறினர். இந்தக் குடியேற்றம், அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த நிலப்பரப்பு `ரஜ்னீஷ்புரம்' என அறிவிக்கப்பட்டதோடு, சில நாள்களிலேயே தனது 7 ஆயிரம் சீடர்களோடு அங்கு குடியேறினார் ரஜ்னீஷ். தன் சீடர்களைச் சந்திக்க, 1980-களிலேயே, ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் வருவார் `பகவான்' ரஜ்னீஷ்.
ஆன்டெலோப் கிராம மக்களின் பதற்றம் காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. கிராம உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ரஜ்னீஷின் சீடர்கள், `ஆன்டெலோப்' கிராமத்தின் பெயரை, `ரஜ்னீஷ்புரம்' என அதிகாரபூர்வமாக மாற்றினர். ஆன்டெலோப்பின் குடிமக்களின் வரிப்பணத்தில் `ரஜ்னீஷ்புரம்' அதிகாரபூர்வமாக உதயமானது. ஆன்டெலோப் கிராமத்தில் ரஜ்னீஷின் சீடர்கள் பல்வேறு கட்டுமானங்களைச் செய்தனர். உதாரணமாக, ரஜ்னீஷ் ஆசிரம நிலத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு விமான ரன்வே ஒன்று அமைக்கப்பட்டது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஹிட்லரின் பெயர் சூட்டப்பட்டது.
ரஜ்னீஷ் ஆசிரமத்தின் நடவடிக்கைகளை ஒரேகான் மாகாணத்தின் பல்வேறு சிவில் அமைப்புகள் எதிர்க்கத் தொடங்கின. 1984-ம் ஆண்டு, ரஜ்னீஷ் ஆசிரமம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே உதவும் என்ற முடிவுக்குவந்தனர். ரஜ்னீஷ்புரம் கிராமம் இருந்த வாஸ்கோ என்ற மண்டலத்தின் ஆட்சியாளர்களாக மாறுவது என்று தீர்மானம் செய்தபோதும், ரஜ்னீஷ் சீடர்களுக்கு யார் வாக்கு செலுத்துவார்கள் என்ற கேள்வி அவர்கள் முன் நின்றது. ஏனெனில், மொத்த வாஸ்கோவிலும் ரஜ்னீஷ் சீடர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.
இதைச் சரிசெய்ய, சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கினர் ரஜ்னீஷ் சீடர்கள். இதை முன்னின்று நடத்தியவர், ரஜ்னீஷின் தனிச்செயலாளரும் முதன்மைச் சீடருமான மா அனந்த் ஷீலா. வாஸ்கோ மக்கள், தேர்தலில் வாக்கு செலுத்த வரக்கூடாது என முடிவுசெய்து திட்டம் தீட்டினர். அதன்படி, ரஜ்னீஷ் சீடர்கள் பொது மக்கள் பயன்படுத்தும் 10 ரெஸ்டாரன்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு ரெஸ்டாரன்டாகச் சென்று, `சால்மோனெல்லா' எனப்படும் பாக்டீரியா நிரம்பிய திரவம் ஒன்றை உணவில் கலந்துவிட, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயிர்ப்பலி எதுவும் இல்லையென்றபோதிலும், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.
ஒரு பக்கம், சால்மோனெல்லா தாக்குதல் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் வீடற்றவர்களைத் தேடிய ரஜ்னீஷ் சீடர்கள், `வீட்டைப் பகிர்வோம்' என்ற மனிதாபிமான நோக்கத்தில் திட்டம் அறிவித்து நாடு முழுவதும் ஏறத்தாழ 2,500 பேரைப் பேருந்தில் அழைத்துவந்தனர். வீடற்றவர்களுக்கு தங்குமிடம் அளிக்கும் திட்டமாக வெளியில் தெரிந்தாலும், இவர்களைப் பதிவுசெய்வதன் மூலம் தங்களுக்கான வாக்காளர்களை உருவாக்குவதே ரஜ்னீஷ் ஆசிரமத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.போலி வாக்காளர்கள் உருவாவதை அறிந்த அமெரிக்க அரசு, வாஸ்கோ பகுதிக்கு `எமர்ஜென்சி' அறிவித்து, தேர்தலைத் தடைசெய்தது. சால்மோனெல்லா விவகாரமும் போலி வாக்காளர் விவகாரமும் ஊடகங்களை ஈர்க்க, சர்ச்சை உருவானது. மா அனந்த் ஷீலாவும் அவரது கூட்டாளிகளும் தனி விமானம் ஒன்றில் அமெரிக்காவை விட்டு வெளியேறினர். ரஜ்னீஷ் ஊடகங்களை அழைத்து, தான் மிகவும் நம்பிய ஷீலா தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் பேட்டியளித்தார்.
எனினும், ரஜ்னீஷுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மேற்கு ஜெர்மனியில் இருந்த ஷீலா, அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா திரும்பிய ரஜ்னீஷ், சில நாள்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது ஆன்மிக பாணியில் மாற்றங்களைப் புகுத்தியதோடு, தன் பெயரையும், `ஓஷோ' என்று மாற்றிக்கொண்டார்.
ரஜ்னீஷ், மா அனந்த் ஷீலா, அமெரிக்காவில் நிகழ்ந்த சர்ச்சைகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஆவணப்படம் ஒன்றை சில ஆண்டுகள் முன்பு வெளியிட்டது `நெட்ஃப்ளிக்ஸ்' நிறுவனம். `Wild wild Country' என்ற தலைப்பில் வெளிவந்த அந்த ஆவணப்படம், ரஜ்னீஷ்புரத்தின் அன்றைய கால வீடியோக்களைக் கொண்டதோடு, மா அனந்த் ஷீலாவுடனான உரையாடலையும் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. ரஜ்னீஷ் ஆசிரமங்கள்மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் மீதும் உண்டு. தற்போது நித்யானந்தா, ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார் என்பது ரஜ்னீஷின் கால சர்ச்சைகளை மீண்டும் உருவாக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Anandan Brindha, Aman Tamilan and 10 others
1 Comment



No comments:

Post a Comment