Friday, 17 May 2019

“நான் ஏன் பிறந்தேன்” தொடரை எழுதியது யாவும் வித்வான் வி.லக்ஷ்மணன் NOT MGR







“நான் ஏன் பிறந்தேன்” தொடரை எழுதியது யாவும் வித்வான் வி.லக்ஷ்மணன் NOT MGR

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தைக் குறித்து முன்பு எழுதிய அத்தியாயத்தில் சுருக்கமாக எழுதியிருந்த நான் இப்போது அதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.

நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.

“வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.

“இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.

இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.

1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘நாடோடி மன்னன்’ படத்தில்தான் நம்முடைய பெயர் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதன் மூலமாவது நமக்கு ஒரு திருப்பம் கிடைக்கும்” என திடமாக நம்பினார்

ஈரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்திற்கான தொடக்கம் சத்யா ஸ்டூடியோவில் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தடபுடலான ஏற்பாடுகளுடன் நடந்தது. கலைஞர் சம்மந்தப்பட்டால் அவருடைய உறவினரின் ஊடுருவல் இல்லாமலா? வழக்கம்போல் வசனம் எழுதும் பொறுப்பு “முரசொலி சொர்ணம்” என அறிவிக்கப்பட்டது.

கரைவேட்டிக்காரர்களை திருப்திபடுத்த அவ்வப்போது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் வளைந்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காலந்தொட்டு இருந்து வந்தது. அரசியல் ஆளுமை பெற்றவர்கள் அப்பாவி கலைஞர்களின் திறமைகளை களவாடிய அநியாயம் கணக்கிலடங்காது.

முரசொலி செல்வம்
எம்.ஜி.ஆருடன் சொர்ணம்

சொர்ணத்திற்கு வசனம் எழுதக்கூடிய திறமையுண்டு. அதை மறுப்பதற்கில்லை. எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். ஆனால் விளம்பரத்தில் “வசனம் : சொர்ணம்” என்று காட்டப்பட்ட அத்தனைப் படங்களின் வசனங்களும் அவர் எழுதியதல்ல. “அரசகட்டளை”, “உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற பல படங்களை இக்கூற்றுக்கு உதாரணம் காட்டலாம். “இணைந்த கைகள்” படத்தை பொறுத்த வரையில் கதை, வசனம், திரைக்கதை யாவும் ரவீந்தரின் பங்களிப்பாகவே இருந்தது.

டி.ஆர்.ராஜேந்தர் பாணியில் கதை, திரைக்கதை, வசனம் யாவுமே ரவீந்தர் என்றால் அப்போதெல்லாம் எடுபடாது. படம் வெற்றி பெறுவதற்கு அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கு உள்ள பிரபலங்களின் பெயர் கண்டிப்பாக இடம்பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இது சினிமா உலகின் மற்றொரு இருண்ட பக்கம்

எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ரவீந்தரை கருவேப்பிலையாகத்தான் கருதியது என்பது கசப்பான உண்மை. காரியம் முடிந்தபின் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவானாலும் சரி, அப்படத்தின் வெற்றிவிழாவானாலும் சரி ரவீந்தரை கண்ணில் காட்ட மாட்டார்கள். எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் ரவீந்தரை பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அலுவலக அறைதான் அவரது வீடு, அவரது உலகம் யாவுமே.

ரவீந்தர் மாதச் சம்பளத்திற்குத்தான் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகைக்கு அவர் பழச்சாறாய் பிழிந்தெடுக்கப்பட்டார். வாழ்க்கை முழுவதும் பேனா பிடித்தே அவரது கைரேகை தேய்ந்துப் போனது என்று சொல்லலாம். ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் ஆளாளுக்கு அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்கள். சந்தடி சாக்கில் சிந்துபாடி ரவீந்தருக்கு பல வகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்திய புண்ணியம் ஆர்.எம்.வீரப்பனைச் சாரும். எம்.ஜி.ஆரையே கைப்பாவையாக இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை அலைக்கழித்து வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி போயிருந்ததுது. அது மட்டுமல்ல பெரியவர் சக்ரபாணியை சமாளிப்பதே பெரும்பாடுதான்.

“இணைந்த கைகள்” படத்தை தயாரிக்க முடிவானபோது விரக்தியின் விளிப்புக்கே ரவீந்தர் கொண்டு செல்லப்பட்டார்.

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

ஒரு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி எவ்வளவுதான் உழைத்தாலும் “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்றுதான் விளம்பரப்படுத்தப்படுமே அன்றி ரவீந்தரின் பெயர் பிரபலமாகிவிடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீரப்பன் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..

எந்த நாகூர்க்காரரின் (நீதிபதி மு.மு.இஸ்மாயீல்) புண்ணியத்தில் ஆர்.எம்.வீரப்பன் கம்பன் கழகத் தலைவராக பதவி வகித்தாரோ அதே ஆர்.எம்.வீரப்பன்தான் இன்னொரு நாகூர்க்காரரின் வயிற்றிலும் எட்டி உதைத்து விளையாடி வந்தார்.

“இணைந்த கைகள்” படத்திற்கு அதிசயமாக “கதை:ரவீந்தர்” என அவரது பெயர் விளம்பர போஸ்டர்களில் அலங்கரித்தன. ரவீந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை.

கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.

இப்படத்தின் கதையையும் “தினத்தந்தி” பத்திரிக்கையில் வெளிவரச் செய்தனர். இப்படத்தின் கதையை வடிவமைப்பதற்குள் ரவீந்தருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. காரணம் கதையை ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, ஐந்துமுறை மாற்றியமைத்து எழுத வேண்டியிருந்தது.

Daku_Mansoor_(1934) (1)

“டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.

கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.

இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார். மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.

இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.

ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன் புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?

ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.

சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

inaintha kaigal

நடிகை கீதாஞ்சலி எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.

வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.

இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார். திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.

இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.

“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல் – [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல் [எம்.ஜி.ஆர். – லதா]
“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்
மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்றன.

பலமுறை மாற்றியமைக்கப்பட்ட “இணைந்த கைகள்” படத்தின் கதைதான் பின்னர் “உழைக்கும் கரங்கள்” மற்றும் “அரசகட்டளை” படமாக உருமாறியது.

MGR Nanjil
எம்.ஜி.ஆருடன் நாஞ்சில் மனோகரன்
“உழைக்கும் கரங்கள்” படத்தில் மன்சூர் கதாபாத்திரத்தை ரங்கன் என்று மாற்றியமைத்து அதை அரசியல் தாளிப்பு நிறைந்த திரைக்கதையாக ரவீந்தர் மாற்றியமைத்தார். படவிளம்பரத்திலோ கதை-வசனம் நாஞ்சில் மனோகரன் என்றிருக்கும். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் விஷயத்தில்அரசியல் ஆளுமை கொண்டவர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்தது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டு. இது போன்றுதான் “நாடோடி மன்ன”னிலும் கண்ணதாசன் பெயரும் ரவீந்தர் பெயரோடு இணைத்துக் காட்டப்பட்டது.

“கணவன்” படக்கதை எம்.ஜி.ஆரே எழுதியதாகத்தான் இதுவரை எல்லோராலும் நம்பப்படுகிறது. “Wood Cutter” ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வைத்து எம்.ஜி.ஆரின் தூண்டுதலால் கதையை வரிக்குவரி வடித்தவர் ரவீந்தர்,

MGR-with-his-ghost-writer-Vidwan-V.-Lakshmanan
எம்.ஜி.ஆருடன் வித்வான் வி. லக்ஷ்மணன்
அதேபோன்று எம்.ஜி.ஆர். எழுதி வந்த “நான் ஏன் பிறந்தேன்” தொடரை எழுதியது யாவும் வித்வான் வி.லக்ஷ்மணன், இதைச் சொன்னதும் ரவீந்தர்தான். இப்படி வெளியில் வராத உண்மைகள் இன்னும் எத்தனையோ உண்டு.

– அப்துல் கையூம்


திரை உலக துரோகங்கள்

“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை. வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன்.

மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன்.

உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன்.

மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “

அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.

ஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சிலை” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில் “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்

அந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது. கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954), போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார். அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.

ரவீந்தர் ஏன் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார்? எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை? என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார்? ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை?

அவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா? இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.

“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”

என தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.

ரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

“அரச கட்டளை” படத்தின் ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.

“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

இப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர், சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.

“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK” தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். இப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.

1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.

தி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.

அப்பொழுது நடந்த நிகழ்வு …

தேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.

அங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் . கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …

” அது யார் கார் ? காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”

சபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.

காமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .

“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா? ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .

“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .

இருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள். ரயில் போனதும் கார் புறப்பட்டது .

மக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான். இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …

அப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .

இது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டளை”.

இந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.

கதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.

சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர். தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.

எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது. அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.

இப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்

“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்

அரசகட்டளை என்னாகும்”

என்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர். வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜி நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ! ஆடி வா! ஆடி வா! ….. ஆளப் பிறந்தவனே! ஆடிவா!” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.

இந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.

“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை. ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”

என்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.

இப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.

”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள் இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.

”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”

”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”

“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”

”ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”

”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”

” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”

“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

புகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.

கதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.

– அப்துல் கையூம்


கருத்துக்களையும் திருடும் சினிமா உலகம்

வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?” என்பார்கள். வலுவான அஸ்திவாரத்துடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் கதை-வசனகர்த்தா ரவீந்தர்.

வடிவேலு ஒரு படத்தில் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பார். ரவீந்தரைப் பொறுத்தவரை அவரது பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்காக இருந்தது. அதனால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தது.

“நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானாய்” அதிர்ஷ்டக் காற்றடித்து களம் புகுந்தவரல்ல ரவீந்தர். சரியான குருவிடம், முறையான பயிற்சி பெற்று, வசனக்கலையில் வளமான தேர்ச்சி பெற்றவர்

யார் அந்த ரவீந்தரின் குரு? அறிஞர் அண்ணாவா? கலைஞர் மு,கருணாநிதியா.? யார் அவர்?

திரைப்படத்துறையில் ரவீந்தருக்கு குருவாக வாய்த்த அந்த மனித சாதாரண மனிதரல்ல. “வசனகர்த்தாக்களின் பிதாமகன்” என்றழைக்க தகுதி படைத்தவர்.

வெறும் பாடல்களின் தொகுப்பாக இருந்த தமிழ்ப்படங்களுக்கு வசன மழை பொழிவித்த வசீகர படைப்பாளி.

செந்தமிழ் இலக்கியத்தை திரையுலகில் திறம்பட புகுத்திய சீர்த்திருத்தவாதி.

கம்பன் மகன் “அம்பிகாவதி” துன்பவியல் கதைக்கு கன்னித்தமிழல் உரையாடல் எழுதிய கலைஞானி..

ஐம்பெரும் தமிழிலக்கியங்களையும் ஐயமறக் கற்று திரைவானில் வார்த்தை விளையாட்டு ஆடிய வசனவேந்தன். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும், குண்டலகேசியையும் அதன் சுவை சற்றும் குன்றாது அவரால் வெள்ளித்திரையில் வார்த்தெடுக்க முடிந்தது.

அவர் பெயர் இளங்கோவன். ரவீந்தரைப் போன்று சினிமா உலகம் மறந்துபோன முன்னோடிகளில் அவரும் ஒருவர். செங்கல்பட்டு இவரது சொந்த ஊர்.

இளங்கோவன் இளமையிலும் முதுமையிலும்
“படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்”

என்று “தனது கலையுலக அனுபவங்கள்’ தொடரில் எழுத்துலக மேதை ஜெயகாந்தன் இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரம் காவியம் வடித்த இளங்கோவடிகள் மீது கொண்ட அதீத காதலால் தணிகாசலம் என்ற தன் பெயரை இளங்கோவன் என்று மாற்றிக்கொண்டவர்.

“பூம்புகார்” வடித்த கலைஞர் மு.கருணாநிதியை இன்று நாம் சிலாகித்துப் பேசுகிறோம். கலைஞரின் எழுத்துக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் இளங்கோவன். இதைக் கலைஞரே ஒருமுறை பிரகடனப்படுத்தியுள்ளார்.

1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில் ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

மெளனப் படங்கள், பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அதில் பாடல்கள்தான் நிறைந்திருக்கும். குறைந்த பட்சம் இருபத்தைந்து பாடல்களாவது இடம்பெற்றுவிடும். இளங்கோவனின் வருகைக்குப்பிறகுதான் வசனங்கள் மகத்துவம் பெற்றன. வசனகர்த்தாக்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

இலக்கியத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த இளங்கோவனிடம் உதவியாளராக பணியாற்றியபோது ரவீந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்; ஏராளம். இளங்கோவனின் கைவண்ணத்தில் அனல் தெறிக்கும். அடுக்குமொழி வசனங்கள் அரங்கத்தை அதிர வைக்கும். உதவியாளராக இருந்த ரவீந்தரிடமும் அதன் பாதிப்பு வெளிப்பட்டது. பசுந்தமிழில் பக்குவம் பெற இளங்கோவனின் பாசறை அவருக்கு பெரிதும் வழிவகுத்தது. தமிழ்மொழியில் தனித்துவம் கண்ட தணிகாசலத்தின் குருகுலத்தில் ரவீந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்.

தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ அதே அளவு ஆங்கிலத்திலும் இளங்கோவன் புலமை வாய்ந்தவர். ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்” காவியத்தின் சுவையை பருகிய அவர் அதே பாணியில் காதல் ரசம் சொட்டும் வசனங்களை “அம்பிகாவதி”யில் வடித்திருந்தார்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பார்கள். வசனகர்த்தாக்களின் பிதாமகனாக விளங்கிய இளங்கோவனிடம் “ராஜ ராஜன்” படத்தில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் ரவீந்தரின் எழுத்துக்களுக்கு உரமூட்டியது. புடம்போட்ட தங்கமாய் அவரது எழுத்தாற்றல் இன்னும் பெருகேறியது..

1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆரின் மேடை நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ரவீந்தர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய முதற்படம் “குலேபகவாலி” (1956). “இந்தப் படத்துலே நான்தாங்கனி புலி கூட சண்டை போடுற காட்சியிலே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு நடிச்சேன்” என்று பெருமையாக எங்க ஊரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் நாகூர் எஸ்..பரீது பெருமையாகச் சொல்வதை செவியுற்றிருக்கிறேன். “குலேபகவாலி” படத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாஸ் பெயர்தான் காட்டப்பட்டது.

அதன்பிறகு ரவீந்தர் வசனம் எழுதிய “மகாதேவி” (1957) படத்திலும் திரைக்கதை வசனம் : கண்ணதாசன் என்று காட்டப்பட்டது.

“ராஜராஜன்” திரைப்படம் வெகு நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா, எஸ்.சி.சுப்புலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.

“ராஜ ராஜன்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் முத்தான பாடல்கள்.

எழுபதுகளில் சிலோன் ரேடியோவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான் அடிக்கடி ஒலிக்கும்.

“நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே”

“யமன் கல்யாணி” ராகத்தில் இசையமைக்கப்பட்டு, சீர்காழி கோவிந்தர்ராஜனும் ஏ.பி.கோமளாவும் பாடிய காலத்தால் அழியாத இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதே படம் பின்னர் 1963-ஆம் ஆண்டு “ராஜாதி ராஜூ கதா” என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.

இருவரும் திரையுலகம் மறந்துப்போன முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்

பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.

Victor Hugo எழுதிய “Les Mis’erables” என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு” இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.

அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும் Justin Huntly Mccarthy எழுதிய “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.

இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.












No comments:

Post a Comment