Saturday 22 December 2018

Fyodor Mikhailovich Dostoevsky, OCTOBER 30 TO JANUARY 28


Fyodor Mikhailovich Dostoevsky,
பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி OCTOBER 30 TO JANUARY 28




பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky, /ˌdɒstəˈjɛfski,_ˌdʌsʔ/;[2] உருசியம்: Фёдор Миха́йлович Достое́вский, உச்சரிப்பு: ஃபியோதர் மிக்கைலவிச் தஸ்தயெவ்ஸ்கி, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க, நவம்பர் 11 [யூ.நா. அக்டோபர் 30] 1821 – பெப்ரவரி 9 [யூ.நா. ஜனவரி 28] 1881) பரவலாக தஸ்தயெவ்ஸ்கி என அழைக்கப்படுபவர் ஒரு ரஷ்ய புதின எழுத்தாளரும் சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும் பத்திரிக்கையாளரும் தத்துவவாதியும் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவரின் முதல் நாவல் "புவர் ஃபோக்". இக்கதை 1846ல் பிரசுரமானபோது இவரின் வயது 25. " குற்றமும் தண்டனையும்" (1866), " அசடன்" (1869), "அசுரர்கள்" (1872) மற்றும் " கரமசோவ் சகோதரர்கள்" (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதியுள்ள தஸ்தயேவ்ஸ்கி, நிறைய புனைவு இல்லாதவற்றையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு[3]. இவர் 1864 எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலியல் படைப்புகளில் ஒன்று.


1821ல் மாஸ்கோவில் பிறந்த தஸ்தயேவ்ஸ்கிக்கு இலக்கியம், இளமையிலேயே குழந்தைக் கதைகள் சாகசக்கதைகள் மூலமாக அறிமுகமானது. பின்னர் பல்வேறு ரஷ்ய உலக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்தார். 1837ல் பதினைந்து வயதானபோது தாயார் இறந்த காலத்திலேயே பள்ளியிலிருந்து நின்று “நிகோலயேவ் ராணுவ பொறியியல்” மையத்தில் சேர்ந்தார்[4]. பின் பொறியியலாளராக வேலையில் சேர்ந்து நல்ல ஊதியம் பெற்றபோதே, மேலும் பணத்திற்காக மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்திருக்கிறார். 1840களின் நடுவில் அவர் எழுதி வெளிவந்த முதல் நாவலான ‘புவர் ஃபோக்’ செயின்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இலக்கிய வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுத் தந்தது.

‘ஜார்’ கால ரஷ்யாவை விமர்சித்ததால் தடைசெய்த புத்தகங்களை, விவாதித்த இலக்கிய அமைப்பில் இருந்தமைக்காக 1849ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை கடைசி நிமிடங்களில் ரத்தானது. தண்டனை குறைக்கப்பட்டு சைபீரிய சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பிறகு மேலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார்.

இதற்குப் பிறகான வருடங்களில் தஸ்தயேவ்ஸ்கி பத்திரிக்கையாளராக, பல்வேறு இதழ்களைத் தொகுப்பவராகவும் பதிப்பிப்பவராகவும் இருந்திருக்கிறார். “எழுத்தாளனின் நாட்குறிப்பு” என அது வெளியாகியுள்ளது[5]. பின்னர் மேற்கு ஐரோப்பாவில் தனது பயணங்களைச் செய்தபோது தொடர்ந்து சூதாடுபவராக ஆனார். அது பல்வேறு பணச்சிக்கல்களைக் கொண்டு வந்தது. ஆனாலும் அதே காலங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட புகழ்மிக்க ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய நூல்கள் 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புஷ்கின், ஷேக்ஸ்பியர், கொகோல், செர்வாண்டேஸ், பிளாட்டோ போன்ற பல்வேறு ஆளுமைகளால் கவரப்பட்ட இவர் செக்கோவ், நீட்ஷே, ஹெமிங்வே, அயன் ராண்ட், பிராய்ட் போன்ற வேறு ஆளுமைகளைக் கவர்ந்தவராகவும் உள்ளார்.


அவர் இயற்றிய " வெண்ணிற இரவுகள்" என்ற கதை இயற்கை என்ற தமிழ்த் திரைப்படமாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரின் கதைகளில் வெளிவந்த கதாபாத்திரமான அரசர் மிஷ்கின் என்ற பெயரைத் தன் புனைப் பெயராக ஏற்றுக்கொண்டார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மிஷ்கின்.

குடும்பம்

மரியா பியோதரோவ்னா தஸ்தயேவ்ஸ்கயா
தஸ்தயேவ்ஸ்கியின் பெற்றோர்கள் பின்ஸ்க் பகுதியைச் சேர்ந்த கூட்டுப் பண்பாடும் பல்வேறு உபப்பிரிவுகளும் கொண்ட தொன்மையான குடும்பமொன்றைச் சேர்ந்தவர்கள். 16ஆம் நூற்றாண்டு வரை நீளும் வேர்கள் கொண்ட இதன் பிரிவுகள் மரபான ரஷ்ய கிறிஸ்தவர்களையும் ரோமன் கத்தோலிக்கர்களையும் கிழக்கு கத்தோலிக்கர்களையும் உள்ளடக்கியது [6][7]. தஸ்தயேவ்ஸ்கியின் தாய்வழி முதாதையர் வணிகர்களாகவும், தந்தைவழி முதாதையர் இறைப்பணியில் இருந்தவர்களாகவும் தெரிகிறது [8][9]. அதே திருப்பணியில் சேரப்போவதாக எதிர்பார்க்கப்பட்ட இவரது தந்தை மிகயீல் வீட்டைவிட்டு கிளம்பிச் சென்று உறவுகளை நிரந்தரமாக முறித்துக்கொண்டார் [10].

மிகயீல் ஆந்த்ரேவிச் தஸ்தயேவ்ஸ்கி
1809ல் இருபது வயதான மிகயீல் தஸ்தயேவ்ஸ்கி மாஸ்கோவின் இம்பீரியல் மெடிக்கல் சர்ஜிகல் அகடமியில் தன்னைப் பதிவு செய்துகொண்டார். அங்கிருந்து மாஸ்கோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு ராணுவ மருத்துவராக பணியாற்றினார். 1818ல் மூத்த மருத்துவரானார். 1819ல் மரியா நெகயேவாவை மணந்து கொண்டார். அடுத்த ஆண்டு ஏழைகளுக்கான மரீன்ஸ்கி மருத்துவமனையில் பணியை ஏற்றுகொண்டார். மிகயீல், பியோதர் ஆகிய முதல் இரு மகன்கள் பிறந்தபின், பதவி உயர்வு கிடைத்து அவருடைய பொருளாதார நிலைமை ஏற்றம் அடைந்தது. பின் மாஸ்கோவிலிருந்து நூறு மைல் தொலைவில் உள்ள தரவோயே எனுமிடத்தில் சிறிய நிலமொன்றை வாங்கினார். கோடைகாலத்தில் குடும்பத்துடன் அங்கு செல்வதுண்டு [11]. தஸ்தயேவ்ஸ்கியின் பெற்றோருக்கு முறையே வர்வரா (1822–92), ஆந்த்ரே (1825–97), லுயுபோவ் (பிறப்பு, இறப்பு-1829), வேரா (1829–96), நிகோலாய் (1831–83), அலெக்சாண்ட்ரா (1835–89) என மேலும் ஆறு குழந்தைகள் பிறந்தனர் [12][8][9]

குழந்தைப்பருவம் (1821–1835)

மருத்துவர் மிகயீல் தஸ்தயேவ்ஸ்கி – மரியா தஸ்தயேவ்ஸ்கயா (நெகயேவா) தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 11 நவம்பர் 1821ல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி பிறந்தார். மாஸ்கோவின் செழிப்பற்ற ஒரு மூலையில் ஏழைகளுக்கென இருந்த மரீன்ஸ்கி மருத்துவமனையின் வெளிகளில் இருந்த இல்லத்தில் அவர் குடும்பத்துடன் வளர்ந்தார்[13]. அதன் தோட்டங்களில் விளையாடும் பொழுதுகளில் ரஷ்யாவின் அடித்தட்டு மக்களை, நலிவுற்ற நோயாளிகளை காணும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது[14].

மிக இளம் வயதிலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தஸ்தயேவ்ஸ்கிக்குக் கிடைத்துள்ளது. மூன்று வயதிலேயே வீரகதைகளையும் அற்புதங்களையும் சாகசக் கதைகளையும் வாசித்துக் காட்டிய பாட்டி அலேனா ஃப்ரொலோவ்னா, குழந்தைப்பருவத்தில் ஆர்வமூட்டும் மனிதராக இருந்திருக்கிறார்[15]. நான்கு வயதிருந்தபோது அவரது தாயார் "பைபிளை" கொண்டு இவருக்கு எழுத வாசிக்க கற்பித்தார். கரம்ஸின், புஷ்கின், டெர்ஸாவின் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள், ஆன் ராடிக்ளிப் போன்ற பேய்கதை இலக்கியங்கள், ஷில்லர், கதே போன்ற கற்பனாவாத இலக்கியம், செர்வான்டேஸ், வால்டர் ஸ்காட் போன்ற சாகசக் கதைகள், கூடவே ஹோமரின் காவியங்கள் என இவர் பெற்றோர் இவருக்கு அறிமுகப்படுத்திய இலக்கியங்கள் எண்ணற்றவை[16][17]. அவர் தந்தையின் கல்வி மீதான அணுகுமுறை சற்றே கண்டிப்பானது என்றாலும்[18], தஸ்தயேவ்ஸ்கி அவரே சொன்னதுபோல அவரின் கற்பனை உலகம் அவர்கள் இரவில் வாசித்துக் காட்டிய கதைகள் மூலம் வளர்ந்த ஒன்று[14].

இவரின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளில் சில இவரது புனைவுகளில் வருவதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ஒன்பது வயதேயான ஒரு சிறுமி குடிகாரன் ஒருவனால் வன்கொடுமைக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இவர் இவரின் தந்தையை அழைத்துவர அனுப்பப்பட்டார். ஒரு கொடுங்கனவாக இவரை ஆட்கொண்ட இந்த நிகழ்வு அசுரர்கள், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ஆக்கங்களில் வெளிப்பட்டுள்ளது[19]. இளம் தஸ்தயேவ்ஸ்கி தரவோயே தோட்டத்தில் இருக்குபோது ஒரு ஓநாயின் ஊளை கேட்டதாய் கற்பனை செய்யும் நேரம் பணிப்பெண்ணாகிய மேரி இவரை ஆற்றுப்படுத்தும் சித்தரிப்பு தி பெஸண்ட் மேரி எனும் கதையில் உள்ளது[20].

ஒழுங்கற்ற ஒரு உடல்நிலையை தஸ்தயேவ்ஸ்கி கொண்டிருந்தாலும் அவரது பெற்றோர் அவரைக் கொப்பளிக்கும் உணர்ச்சிகர மூளை கொண்ட, பிடிவாதமான, துடுக்கான சிறுவனாகவே இவரைப் பற்றி கூறியுள்ளனர்[21]. சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை, இவரை பிரெஞ்சு போர்டிங் பள்ளிக்கும், பிறகு செர்மக் போர்டிங் பள்ளிக்கும் அனுப்பிவைத்தார். அங்கு தனித்த, தன்னுள் ஆழ்ந்த, கனவுகளும் கற்பனைகளும் ததும்பிய உணர்சிகரமான சிறுவனாக கூறப்படுகிறார்[22]. பள்ளி கட்டணத்திற்காக இவரது தந்தை கடன் வாங்கவும் தனது சொந்த மருத்துவ சேவையை நீட்டிக்கவும் செய்துள்ளார். உயர் வகுப்பினரின் பிள்ளைகள் படித்த மாஸ்கோ பள்ளியில் தனது வகுப்பு சிறுவர்களிடம் இருந்து தஸ்தயேவ்ஸ்கி கலந்துசேர முடியாமல் தனித்து இருந்த அனுபவங்கள் தி அடலசென்ட் போன்ற கதைகளில் பிரதிபலிக்கிறது[23][17].

இளமைக்காலம் (1836–1843)

பொறியியலாளர் தஸ்தயேவ்ஸ்கி
27 செப்டம்பர் 1837 அன்று தஸ்தயேவ்ஸ்கியின் தாயார் காசநோயால் காலமானார். அதற்கு முந்தைய மே மாதம் இவரையும் மூத்த அண்ணன் மிகயீலையும் பள்ளிகளை விடுத்து செயின்ட்.பீட்டர்ஸ்பர்கின் நிகோலயேவ் ராணுவ பொறியியல் மையத்திற்கு இவர்கள் பெற்றோர் அனுப்பியிருந்தனர். ஜனவரி 1838ல் தனது குடும்பத்தாரின் உதவியுடன் அகடெமிக்குள் தஸ்தயேவ்ஸ்கி சேர்ந்துகொண்டார். அண்ணன் மிகயீலுக்கு உடல்நிலை காரணமாக இடம் மறுக்கப்பட்டு எஸ்டோனியாவின் ரெவல் அகடமிக்கு அனுப்பப்பட்டார்[24][25].

ஆனால் தஸ்தயேவ்ஸ்கி அந்த அகடமியை வெறுத்தார். முதன்மை காரணம் அவருக்கு அறிவியல், கணிதம், ராணுவப் பொறியியல் போன்றவற்றிலிருந்த ஈடுபாடின்மையே. அவரது தோழர் கான்ஸ்டாண்டின் ட்ருடோவ்ஸ்கி இப்படி கூறியுள்ளார், “F. M. தஸ்தயேவ்ஸ்கியை விட ராணுவத் தோரணை குறைந்த வேறொரு மாணவர் எங்களிடத்தில் இல்லை. நிமிர்வற்றும் அசட்டுத்தனமாகவும் அவரது அசைவுகள் இருக்கும். அவர் அணிந்திருந்த உடையின் பாகங்கள் ஒவ்வொன்றும் யாரோ கட்டாயப்படுத்தி அவர்மேல் சற்று நேரத்திற்கு அணிவித்ததது போல கனத்து கிடக்கும்” [26]. தஸ்தயேவ்ஸ்கியின் ஆளுமையும் ஈடுபாடும் 120 வகுப்பு தோழர்களிடையே வேறொரு ஆளாக காட்டியது. தைரியமும் நீதியுணர்வும் வெளிப்பட்ட, புதிதாக வருபவர்களை காக்கக்கூடிய, ஆசிரியர்களுடன் ஒட்டிக்கொள்கிற, அதிகாரிகளின் ஊழலை விமர்சனம் செய்கிற, ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யும் இளைஞனாக வெளிப்பட்டிருக்கிறார். தனிமையில் தனக்கான இலக்கிய உலகில் திரிந்தாலும், வகுப்பு மாணவர்கள் இவர்மேல் மிகுந்த மரியாதையுடன் இருந்தனர். சமயத்தில் அவருக்கிருந்த தனித்த ஈடுபாடு காரணமாக ‘ போட்டியஸ் துறவி’ என்னும் பெயரும் அவருக்கு இருந்தது[27][28].

தஸ்தயேவ்ஸ்கியின் நரம்பு தொடர்பான சிக்கல்கள் முதலில் வெளிப்படத் தொடங்கியது அவர் 16 ஜூன்,1839 அன்று தந்தையின் மரணத்தை அறிந்தபோது[29]. ஆனாலும் இவரது மகளால் எழுதப்பட்டதிலிருந்து சொல்லப்பட்டு (பின்னர் சிக்மண்ட் ப்ராய்டால் விரிவு செய்யப்பட்டது[30])) வந்த வலிப்பு குறித்த தகவல்கள் இப்போது நம்பத் தகுந்தவையல்ல என கருதப்படுகிறது. தந்தையின் மரணத்திற்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்த தஸ்தயேவ்ஸ்கி தேர்வுகளில் தேறி பொறியியலாளர் தகுதியை அடைந்து, அகடமியிலிருந்து வெளிவந்தார். அண்ணன் மிகயீலை ரேவலில் சந்தித்தார். தொடர்ந்து விருந்துகளிலும், ஓபெராக்களுக்கும், நாடகங்களுக்கும் சென்றுவந்தார். இதே காலகட்டத்தில், அவருடைய இரு தோழர்களிடம் இருந்து சூதாடுவதைக் கற்றுக்கொண்டார்[31][28].

12 ஆகஸ்ட் 1843 அன்று தஸ்தயேவ்ஸ்கி லெப்டினன்ட் பொறியியலாளராகப் பணியில் இணைந்து மிகயீலின் நண்பரான ரிசன்காம்ப் என்பவரின் இல்லத்தில் தங்கினார். அவருடன் அடால்ப் டோட்டில்பென் என்பவரும் தங்கி இருந்தார். ரிசன்காம்ப் தஸ்தயேவ்ஸ்கி குறித்து இப்படி கூறினார், “அவருடைய அண்ணனை விடவும் எவ்வகையிலும் நற்குணங்களிலோ மரியாதையிலோ குறைந்தவர் அல்ல. ஆனால் நல்ல மனநிலையில் இல்லாதபோது சுற்றியிருக்கும் அனைத்திலும் உள்ள இருள் அவருக்கு தெரியும். மனம் வெறுத்து, தன் நற்குணங்களை மறந்துவிடுவதும் சமயங்களில் தன்னிலை அழிந்து வசைபாடும் அளவிற்கு சென்று விடுவதும் உண்டு”[32]. தஸ்தயேவ்ஸ்கியின் முதல் முழுமையான இலக்கிய படைப்பான அவர் மொழிபெயர்த்த பால்ஸாக்கின் ‘ யுஜீன் க்ரான்டெட்’’ நாவல் ரெபெர்டாயர் அண்ட் பாந்தியன் பத்திரிக்கையின் ஆறு மற்றும் ஏழாம் இதழ்களில் (ஜூன், ஜூலை 1843) வெளியானது[33][34]. அதை தொடர்ந்து வேறு சில மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. ஒன்றும் வெற்றிகரமாக அமையாத நிலையில், தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒரு நாவலை எழுதத் தொடங்கினார்[35][28].

எழுத்தும் வாழ்வும்
தொடக்கம் (1844–1849)

தஸ்தயேவ்ஸ்கி, 1847

தஸ்தயேவ்ஸ்கி தனது முதல் நாவலான "புவர் ஃபோக்" கை மே 1845 ல் எழுதி முடித்தார். அந்த நேரத்தில் தன்னுடன் அறையை பகிர்ந்து கொண்டவரான டிமிட்ரி க்ரிகோரோவிச் அதன் கைப்பிரதியை கவிஞரான நிகோலாய் நெக்ராசோவிடம் எடுத்துச் சென்றார். அவர் அதை புகழ்பெற்ற விமர்சகரான விஸ்ஸாரியோன் பெலின்ஸ்கியிடம் கொடுத்தார். பெலின்ஸ்கி அந்த நாவலை ரஷ்யாவின் முதல் சமூக நாவல் என்றழைத்தார்[36]. செயின்ட்.பீட்டர்ஸ்பர்க் தொகுப்பில் 15 ஜனவரி 1846 அன்று வெளியான "புவர் ஃபோக்" நல்ல வரவேற்பை பெற்றது[37][38].

தனது ராணுவப்பணி வளர்ந்து கொண்டிருக்கும் இலக்கிய வாழ்வை சிதறடிக்கும் என்று உணர்ந்த தஸ்தயேவ்ஸ்கி, வேலையிலிருந்து நீங்குவதாக கடிதம் எழுதினார். பிப்ரவரியில் வெளியாகும் முன்பு, 30 ஜனவரி 1846 அன்று நோட்ஸ் ஆப் தி பாதர்லாண்ட் என்ற இலக்கிய இதழில் இரண்டாவதாக எழுதப்பட்ட ‘தி டபுள்’ வெளியாயிற்று. ஏறத்தாழ இதே நேரத்தில் பிரெஞ்சு அறிஞர்களான ஃபோரியர், காபெட், ப்ருதான், செயின்ட்.சைமன் ஆகியோரின் எழுத்துக்கள் வழியாக " சோஷலிசத்தை" தஸ்தயேவ்ஸ்கி கண்டடைந்தார். பெலின்ஸ்கியுடனான உறவின் மூலம் சோஷலிசம் மீதான தனது அறிவை வளர்த்துக்கொண்டார். அது ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கொண்டிருந்த நீதியுணர்வும், அதன் தர்க்கமும் அவரை கவர்ந்ததாய் இருந்தது. ஆனாலும் பெலின்ஸ்கியின் நாத்திகவாதம் மரபான ரஷ்ய கிறித்தவ நம்பிக்கைகள் கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் உறவை நாளுக்கு நாள் சிக்கலாக்கியது. விளைவாக அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுடனான உறவை தஸ்தயேவ்ஸ்கி முறித்துக்கொண்டார்[39][40].

"தி டபுள்" நூலிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது, தஸ்தயேவ்ஸ்கியின் உடல்நிலை மோசமாவதும் அடிக்கடி வலிப்பு ஏற்படுவதும் நிகழ்ந்தது. ஆனாலும் அப்போதும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருந்தார். 1846லிருந்து 1848வரை ‘ஆனல்ஸ் ஆப் தி பாதர்லாண்ட்’ என்ற பத்திரிக்கையில் அவர் எழுதிய சிறுகதைகள் வெளியாகின. அவற்றில் மிஸ்டர். ப்ரொகார்ச்சின், தி லாண்ட்லேடி, பலவீனமான இதயம், வெண்ணிற இரவுகள் போன்ற கதைகள் அடங்கும். இந்த கதைகள் வரவேற்பு பெறாமல் மீண்டும் நிதி நெருக்கடிக்கு உள்ளானபோது அவர் இணைந்த உடோபியன் சோசியலிச பெடெகோவ் வட்டம் அவரை காத்தது. அந்த வட்டம் கலைந்தபோது, தஸ்தயேவ்ஸ்கிக்கு அப்போலன் மயகோவ், அவரது சகோதரர் வலேரியன் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். 1846ல் கவிஞர் அலெக்சி ப்லஷேயேவ் அவர்களின் தூண்டுதலினால் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தில் இணைந்தார்[41]. அது ரஷ்யாவில் சமூகப் புரட்சிகள் வரவேண்டும் என்ற நினைக்ககூடியது. தஸ்தயேவ்ஸ்கி இவ்வட்டத்தின் நூலகத்தை சனி, ஞாயிறுகளில் பயன்படுத்திக் கொள்வதோடு எப்போதேனும் அதன் கலந்துரையாடல்களில் பங்கேற்பதும் உண்டு[42][43].

1849ல் தஸ்தயேவ்ஸ்கி (1846லிருந்து) திட்டமிட்ட 'நெடோச்கா நெஸ்வநோவா நாவலின் முதல் சில பகுதிகள் ‘ஆனல்ஸ் ஆப் தி பாதர்லாண்ட்’ல் வெளிவந்தது. நாடுகடத்தப்பட்ட போது அந்தப் பணி அப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு தஸ்தயேவ்ஸ்கி அதை முழுமை செய்ய முயற்சிக்கவில்லை[44].

தேசவிலக்கம் சைபீரியாவுக்கு (1849-1854)

பெட்ராஷேவ்ஸ்கி வட்ட நண்பர்களின் தண்டனை நிறைவேற்றம் குறித்த ஓவியம்
சர்வதேச விஷயங்களை கையாளும் அமைச்சகத்தின் ஒரு அதிகாரியான லிப்ராண்டி என்பவரிடம் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தை குறித்து புகார் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட "கொகோலுக்கு ஒரு கடிதம்" உள்ளிட்ட பெலின்ஸ்கியின் ஆக்கங்களை வாசித்ததாகவும், அதை நண்பர்களிடம் சுற்றில் விட்டதற்காகவும் தஸ்தயேவ்ஸ்கி குற்றம் சாட்டப்பட்டார். குழுவைப் பற்றி கூறிய அண்டோநெல்லி எனும் அரசு தரப்பு ஆள் அவரது அறிக்கையில் குறைந்தது ஒரு கட்டுரையாவது ரஷ்யாவின் அரசியலையும் மதத்தையும் விமர்சிப்பதாயுள்ளது என்று கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தஸ்தயேவ்ஸ்கி தான் அவற்றை இலக்கிய ஆக்கங்களாக மட்டுமே வாசித்தாக கூறினார். அரசியல் பற்றி அல்லாமல் மனிதனின் ஆளுமை, அகங்காரம் என்பவை குறித்ததாய் அமைந்தது அவரது பேச்சு. டிசம்பர் புரட்சி போலவோ, 1848களின் புரட்சிகள் போலவோ ஏதேனும் கிளம்பக்கூடும் என்று அஞ்சிய சக்கரவர்த்தி முதலாம் நிகோலஸ் மற்றும் பிரபு ஆர்லோவ் ஆகியோரின் கோரிக்கையின் பேரில் தஸ்தயேவ்ஸ்கியும் அவரது "சதிகாரர்களும்" 23 ஏப்ரல், 1849 அன்று கைது செய்யப்பட்டார்கள். அதி பயங்கரமான குற்றவாளிகள் இருந்த அதிக பாதுகாப்பு கொண்ட பீட்டர்- பால் கோட்டையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்[45][46][47].

ஜார் மன்னரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிலிருந்த பொறுப்பு ஜெனரல் இவான் நபகோவ், பிரபு பவெல் காகரின், பிரபு வாசிலி டொல்கோருகோவ், ஜெனரல் யகோவ் ராஸ்டோவ்த்செவ், உளவுத்துறை தலைமை அதிகாரி ஜெனரல் லியோன்ட்டி ஆகியோர் முன்னிலையில் வழக்கு நான்கு மாதம் நடந்தது. வட்டத்தின் நண்பர்களுக்கு மரண தண்டனை என்றும், அவர்கள் துப்பாக்கியால் சுடப்படவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. கைதிகள் 23 டிசம்பர், 1849 அன்று செயின்ட். பீட்டர்ஸ்பர்கின் செம்யோநோவிற்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டனர். தஸ்தயேவ்ஸ்கி இரண்டாம் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றார். ப்லஷேயேவும் டுரோவும் அவருக்கு அடுத்தடுத்து நின்றனர். ஆனால் ஜார் கொடுத்தனுப்பிய ஆணையால் கடைசி நிமிடங்களில் தண்டனை ரத்தானது.

பதிலாக சைபீரியா, ஓம்ஸ்கின் கடோர்கா சிறைமுகாமிற்கு அனுப்பப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுமையான வேலைகளும் பின்னர் கட்டாய ராணுவப் பணியும் கொடுக்கப்பட்டது. பதினான்கு நாட்கள் தொடர் குதிரை வண்டி பயணத்திற்கு பிறகு கதிகள் டோபோல்ஸ்க் எனும் நிலையத்திற்கு வந்தனர். அப்போதிருந்த அவலமான சூழல்களையும் பொருட்படுத்தாது தன்னுடன் இருந்த பிற கைதிகளை தஸ்தயேவ்ஸ்கி மன அமைதி படுத்த முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியின் பரிவை வியந்த இவான் யாஸ்ட்ர்செம்ப்ஸ்கி என்பவர் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டார். டோபோல்ஸ்கில் அவர்களுக்கு உணவும் உடையும் அளித்த டிசம்பரிச பெண்கள், பத்து ரூபிள் நோட்டு அடங்கிய ஒரு புதிய ஏற்பாட்டையும் வழங்கினர். பதினொரு நாட்கள் கழித்து தஸ்தயேவ்ஸ்கி ஓம்ஸ்கை அடைந்தார்[46][48]. அவர் கூடி இருந்த மற்றொரு பெட்ராஷேவ்ஸ்கி வட்ட நண்பர் கவிஞர் செர்ஜை டுரோவ் மட்டுமே[49]. தஸ்தயேவ்ஸ்கி அவரது அனுபவத்தை இப்படி எழுதியுள்ளார்:

கோடைகாலத்தில், தாங்க முடியாத புழுக்கம். பனிக்காலம், பொறுக்கமுடியாத குளிரைத் தருவது. எல்லாத் தரைகளும் பூஞ்சை பூத்திருக்கும். ஒரு அங்குலம் அளவு கூட தேவையற்ற கழிவுகள் தரையில் தேங்கியிருக்கும். யாரேனும் வழுக்கி விழலாம் ... பீப்பாயில் அடைக்கப்பட்ட மீன்கள் போல நாங்கள் இருந்தோம் ... திரும்புவதற்கு கூட இடம் இருக்கவில்லை. விழிப்பதிலிருந்து துயிலும்வரை சேற்றுப் பன்றிகள் போல் நடந்துகொள்ளாமல் இருப்பது மிகக்கடினம் அங்கு ... ஊரும் பேன்கள், தாவும் விட்டில்கள், சுற்றி வரும் கருவண்டுகள் ...[50]

ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்டு விடுதலை வரை அவர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். அவரது புதிய ஏற்பாட்டை படிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வலிப்பு தவிர்த்து மூலமும் அவரை பாதித்தது. காய்ச்சலில் உடல் எடை குறைவதும், இரவில் சமயங்களில் அதிக வெப்பமாகவும், அதிக குளிராகவும் உணர்வது நடந்தது. அங்கிருந்த சிறிய கழிப்பறையின் வீச்சம் மொத்த கட்டிடம் முழுவதும் பரவியிருந்தது. அது 200 பேரால் பயன்படுத்தப்பட்டது. தஸ்தயேவ்ஸ்கி எப்போதேனும் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அங்கு நாளிதழ்களையும் டிக்கன்ஸின் நாவல்களையும் வாசித்தார். சக கைதிகளால் பெரிதும் மதிக்கப்பட்ட தஸ்தயேவ்ஸ்கி, அவரின் வெறுப்புமிழும் சொற்களால் சிலரால் வெறுக்கவும்பட்டார்[51][52].

சிறைவிடுதலையும் முதற்திருமணமும் (1854-1865)
14 பிப்ரவரி, 1854ல் சிறையிலிருந்து வந்தபோது தனது அண்ணன் மிகயீலிடம் பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்றும், விகோ, ஹெகல், காண்ட் போன்றோரின் புத்தகங்களை அனுப்பி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்[53]. அவரது சிறை அனுபவங்களில் இருந்து எழுதப்பட்ட ‘சவங்களின் வீடு’ வ்ரெம்யா இதழில் 1861ல் வெளியானது[54]. ரஷ்ய சிறைகளைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவலாக அது சொல்லப்படுகிறது. மார்ச் மாதத்தின் நடுவில் செமிபலாட்டின்ஸ்கிற்கு கட்டாய ராணுவ பணியில் சேர்வதற்கு முன், தஸ்தயேவ்ஸ்கி புகழ்பெற்ற புவியியலாளர் ப்யோட்ர் செம்யோநோவையும் பண்பாட்டாய்வாளர் ஷோகன் வாலிகனுலியையும் சந்திக்க நேர்ந்தது. நவம்பர் 1854ல் தண்டனை நிறைவேற்றம் போது இருந்தவரும், தனது புத்தகங்களின் பிரியருமான அலெக்சாண்டர் எகோரோவிச் ராங்கேலை தஸ்தயேவ்ஸ்கி சந்தித்தார். செமிபலாட்டின்ஸ்கிற்கு வெளியே கொசாக் தோட்டத்தில் இருவரும் தங்களுக்கான இல்லங்களை அமர்த்திக்கொண்டனர். ராங்கேல் தஸ்தயேவ்ஸ்கி குறித்து இவ்வாறு சொல்கிறார், “எளிதில் சினம் கொள்ளக்கூடியவராக இருந்தார். ஆரோக்கியமற்ற அவரது முகம் கரும்புள்ளிகள் நிரம்பியதாகவும், வெண்மையான அவரது முடி குட்டையாக வெட்டப்பட்டும் இருந்தது. நடுவாந்தர உயரத்திற்கு சற்று அதிக உயரமாக இருந்தவர், தனது சாம்பல் நீல நிறக்கண்களால் என்னை தீவிரமாக பார்த்தார். அப்படி அவர் பார்ப்பது எனது ஆன்மாவை ஊடுருவி நான் என்ன வகையான மனிதன் என கண்டறிய விரும்புவது போல் இருந்தது.”[55][56][57]

செமிபலாட்டின்ஸ்கில் தஸ்தயேவ்ஸ்கி பள்ளிக்குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லி கொடுப்பதன் மூலம் நிறைய உயர்குடியினரின் தொடர்புகளை பெற்றார். அதில் லெப்டினண்ட் கர்னல் பெலிகோவ் செய்தித்தாள்கள் வாரப்பத்திரிக்கைகள் போன்றவற்றிலிருந்து வாசித்துக்காட்ட தஸ்தயேவ்ஸ்கியை அழைப்பார். அப்படியொரு அழைப்பின்போது அலெக்சாண்டர் இவானோவிச் இசயேவ், மரியா டிமிட்ரியேவ்னா இசயேவா குடும்பத்தை தஸ்தயேவ்ஸ்கி சந்தித்தார். பின்னர் மரியாவின் மீது காதல் கொண்டார். குஸ்நெட்ஸ்கில் புது பதவியில் சேர்ந்து 1855ல் அலெக்சாண்டர் இசயேவ் காலமானார். பின் மரியா தன் மகனை அழைத்துக்கொண்டு தஸ்தயேவ்ஸ்கியுடன் பர்னோலுக்கு சென்றார். 1856ல் உடோபிய வட்டங்களில் தன் செய்கைகளை பொறுத்தருளக் கோரி ராங்கேல் மூலம் ஜெனரல் எட்வர்ட் டோட்ல்பென்னிற்கு கடிதம் அனுப்பினார். விளைவாக அவரது நூல்களை பதிப்பிப்பதற்கும், திருமணம் செய்துகொள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவரை காவலர்கள் பின்தொடர்ந்தனர். முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் திருமண கோரிக்கையை மரியா நிராகரித்தார். இருவரும் வாழ்வில் ஒத்துப்போக முடியாது என்றும் தஸ்தயேவ்ஸ்கியின் பொருளாதாரமும் அதற்கு வழிசெய்யாது என்றும் கூறினார். ஆனால் பின்னர் இவர்கள் இருவரின் திருமணம் செமிபலாட்டின்ஸ்கில் 7 பிப்ரவரி, 1857 அன்று நடந்தது. அவர்கள் குடும்ப வாழ்வு அத்தனை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அத்துடன் தஸ்தயேவ்ஸ்கியின் வலிப்புகளோடு ஒத்துழைக்க மரியாவால் இயலவில்லை. அவர்களின் உறவை பற்றி தஸ்தயேவ்ஸ்கி இப்படி எழுதியுள்ளார்: “அவளின் விசித்திரமான புதிரான அதே சமயம் அற்புதமான குணாதிசயங்களால், நிச்சயமாக நாங்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையும் தடுக்க இயலவில்லை. ஆக, எந்த அளவுக்கு மகிழ்ச்சி அற்றவர்களாக இருந்தோமோ அந்த அளவு ஒருவரை ஒருவர் நெருங்கிக்கொண்டும் இருந்தோம்.” பெரும்பாலும் இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர்[58]. 1859ல் நலிவடைந்து கொண்டே வந்த அவரது உடல்நிலையால் ராணுவப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். முதலில் ட்வேரில் பத்தாண்டுகள் கழிந்து தனது சகோதரனை கண்டபிறகு செயின்ட்.பீட்டர்ஸ்பர்கிற்கு சென்றார்[59][60].

தஸ்தயேவ்ஸ்கி பாரீஸில், 1863
"அ லிட்டில் ஹீரோ" (தஸ்தயேவ்ஸ்கி சிறையில் நிறைவு செய்த ஒரே படைப்பு) ஒரு இதழில் வெளிவந்தது. 1860வரை "அங்கிள்’ஸ் ட்ரீம்", "தி வில்லேஜ் ஆப் ஸ்டேபாஞ்சிகொவோ" கதைகள் வெளியாகவில்லை. 1860 செப்டெம்பரில் "சவங்களின் வீடு" ரஸ்கி மிர் (ரஷ்ய உலகம்)ல் வெளியானது. தன் சகோதரரை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வ்ரெம்யா (காலம்) இதழில் "தி இன்சல்டட் அண்ட் இஞ்சூர்ட்" வெளியானது[61]}}. அது அவரது சகோதரரின் சிகரெட் தொழிற்சாலையில் கிடைத்த பணத்தில் வெளியான இதழ்[62][63][64].

7 ஜூன், 1862ல் தஸ்தயேவ்ஸ்கி மேற்கு ஐரோப்பாவிற்கு பயணமானார். கொலோன், பெர்லின், ட்றேச்டேன், வீஸ்பாடன், பெல்ஜியம், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு அவர் சென்றார். லண்டனில் எழுத்தாளர் ஹெர்சனை சந்தித்தார். கிறிஸ்டல் மாளிகைக்கு சென்று வந்தார். நிகோலாய் ஸ்ட்ரகொவுடன் சுவிட்சர்லாந்துக்கும், துரின், லிவேர்னோ, ஃப்லோரேன்ஸ் போன்ற வட இத்தாலிய நகரங்களுக்கும் சென்றார். அவை குறித்து ‘விண்டர் நோட்ஸ் ஆன் சம்மர் இம்ப்ரஷன்ஸ்’ல் பதிவு செய்திருக்கிறார். அதில் சமூக மாற்றம், முதலாளித்துவம், பொருள்முதல்வாதம், கத்தோலிக்கம், ப்ரோடஸ்டன்டிசம் குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார்[65][66].

1863 ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை மேற்கு ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பயணம் செய்தார். தனது இரண்டாம் காதலியான போலினா சுஸ்லோவாவை சந்தித்து, பின் சூதாட்டத்தில் அனைத்து பணத்தையும் இழந்தார்.1864ல் மனைவி மரியாவும், சகோதரர் மிகயீலும் இறந்தனர். மரியாவின் மகனுக்கு தனித்து விடப்பட்ட தந்தையாகவும் சகோதரனின் குடும்பத்திற்கு ஒரே ஆதரவாகவும் ஆனார். வ்ரெம்யாவிற்கு அடுத்து தன் சகோதரனுடன் இணைந்து நடத்திய ‘எபோக்’ இதழ் தோல்வி அடைந்தது. அப்போது இருந்த பணக்கஷ்டத்தை நண்பர்களும் உறவினரும் கொடுத்தவற்றில் சமாளிக்க முடிந்தது[67][68].

இரண்டாவது திருமணமும் தேன்னிலவும் (1866-1871)
1866 ‘தி ரஷ்யன் மெஸ்சென்ஜெர்’ன்[69] ஜனவரி, பிப்ரவரி இதழ்களில் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் முதல் இரு பகுதிகள் வெளிவந்தன. அது அந்த இதழுக்கு மேலும் 500 சந்தாதாரர்களை பெற்றுத்தந்தது[70].

செப்டம்பர் மத்தியில் செயின்ட்.பீட்டர்ஸ்பர்க் சென்ற தஸ்தயேவ்ஸ்கி, அவருடைய பதிப்பாளரான பியோதர் ஸ்டெல்லோவ்ஸ்கிக்கு ஒரு உறுதிமொழி அளித்தார். "தி காம்ப்ளர்" (சூதாடி) என்ற சூதாட்ட பழக்கம் குறித்த நாவலை நவம்பரில் முடித்துவிட முடியும் என்று கூறினார். ஆனால் அப்போது அவர் நாவலை எழுத ஆரம்பிக்கவே இல்லை. தஸ்தயேவ்ஸ்கியின் நண்பர் மில்யுகோவ் அவரை ஒரு உதவியாளரை வேலைக்கு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினார். தஸ்தயேவ்ஸ்கி பீட்டர்ஸ்பர்கில் பவெல் ஒல்கின் என்பவரை சந்தித்ததில், அவர் தனது இருபது வயது மாணவியான அன்னா கிரிகோரியேவ்னா ஸ்னிட்கினாவை பரிந்துரைத்தார். அன்னாவின் சுருக்கெழுத்து சூதாடி நாவலை 30 அக்டோபர் அன்று முடிக்கச்செய்தது. இருபத்தியாறு நாட்களில்[71][72]. அவர் தஸ்தயேவ்ஸ்கி சராசரியான உயரம் கொண்டிருந்தவர் என்றாலும் எப்போதும் நிமிர்ந்தே இருக்க விரும்புவார் என்று சொல்கிறார். “மெல்லிய செம்மை கலந்த பிரவுன் நிற முடி அவருக்கிருந்தது. முடிக்கென்று சில திரவியங்கள் உபயோகிப்பார். மிகக்கவனமாக அவர் அதை சீவியிருப்பார் ... அவருடைய கண்கள், வித்தியாசமானவை. ஒன்று அடர் பிரவுன் நிறம். மற்றொன்றில் உள்விழி பெரிதாக இருப்பதால் நிறத்தை சொல்ல முடியாது (இது காயத்தால் ஏற்பட்டது). அந்த கண்களின் விசித்திர தன்மையால் அது தஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு விளக்கமுடியாத மர்மமான தோற்றத்தை அளித்தது. அவரது முகம் வெளிறியதாக ஆரோக்கியமற்றதாக காணப்பட்டது”[73].

15 பிப்ரவரி, 1867 அன்று செயின்ட்.பீட்டர்ஸ்பர்கின் ட்ரினிட்டி பேராலயத்தில் ஸ்னிட்கினாவை தஸ்தயேவ்ஸ்கி மணந்தார். "குற்றமும் தண்டனையும்" நாவல் மூலம் கிடைத்த 7000ரூபிள்கள் அவர்கள் கடனை அடைக்க போதுமானதாக இல்லை. அன்னா அவரது பொருட்களை விற்கவேண்டி வந்தது. 14 ஏப்ரல், 1867ல் விற்று கிடைத்த பணத்தின் மூலம் ஜெர்மனியில் தங்களது தாமதமான தேன்னிலவை துவக்கினார்கள். பெர்லினில் தங்கி அங்கிருந்து புகழ்பெற்ற ட்ரெஸ்டன் ஓவிய அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார்கள். அங்கிருந்து தனது கதைகளுக்கு தஸ்தயேவ்ஸ்கி ஒரு தூண்டுதல் கிடைக்கும் என்று எண்ணினார். ஜெர்மனியில் பிரான்க்புர்ட், டார்ம்ஸ்டாட், ஹைடல்பெர்க், கார்ல்ஸ்ருஹே ஆகிய இடங்களுக்கும் சென்றனர். பேடன்-பேடனில் ஐந்து வாரங்கள் இருந்தனர். அங்கு துர்கனேவுக்கும் அவருக்கும் இடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டது. மீண்டும் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்தார்[74]. பின்னர் மனைவியுடன் ஜெனீவா சென்றார்.

பேடன்-பேடனில் தஸ்தயேவ்ஸ்கிக்கு நினைவுத்தகடு
1867 செப்டெம்பரில் தஸ்தயேவ்ஸ்கி "அசடன்" நாவல் தொடர்பான வேலையை தொடங்கினார். நீண்ட திட்டத்திற்கு பிறகு, முதல் 23நாட்களில் நாவலின் முதல் நூறு பக்கங்களை எழுதினார். அது ‘தி ரஷ்யன் மெஸ்சென்ஜெர்’ல் 1868 ஜனவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது.

இவர்களின் முதல் குழந்தை சோனியா ஜெனீவாவில் மார்ச் 5, 1868ல் பிறந்தார். அந்த குழந்தை மூன்று மாதத்திலேயே நிமோனியாவால் இறந்தது. அப்போது தஸ்தயேவ்ஸ்கி அனைத்தையும் இழந்த ஒரு தனித்த பெண்போல எப்படி அழுது புலம்பினார் என்பதை அன்னா கூறியுள்ளார்[75]. பின்பு அவர்கள் ஜெனீவாவிலிருந்து வெவேய்க்கும் மிலனுக்கும் இறுதியில் ஃப்லோரேன்ஸிற்கும் சென்றனர். ஜனவரியில் நிறைவு செய்யப்பட்ட அசடன் நாவல் ‘தி ரஷ்யன் மெஸ்சென்ஜெர்’ல் 1869 பிப்ரவரியில் வெளியானது[76][77]. 1869, செப்டம்பர் 25 அன்று அன்னா இரண்டாவது குழந்தையான மகள் லுயுபோவை பெற்றெடுத்தார். 1871ல் வீஸ்பாடனின் சூதாட்ட மன்றத்திற்கு இறுதியாகச் சென்று வந்தார். அன்னா தங்களது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கு பிறகு தஸ்தயேவ்ஸ்கி சூதாடுவதை நிறுத்திவிட்டதாக சொல்கிறார்[78]. ஆனால் இன்றும் இது ஒரு விவாதத்திற்குரிய பகுதியாகவே உள்ளது[79]}}.

‘மக்களின் வஞ்சம்’ எனப்படும் ஒரு சோசலிச புரட்சிக்குழு 21 நவம்பர், 1869 அன்று இவான் இவனோவ் என்ற தன் உறுப்பினர் ஒருவரையே கொலை செய்துவிட்டது என அறிந்து தஸ்தயேவ்ஸ்கி "அசுரர்கள்" (Demons) என்ற கதையை எழுத ஆரம்பித்தார்[80]. 1871ல் தஸ்தயேவ்ஸ்கியும் அன்னாவும் பெர்லினுக்கு ரயிலில் பயணம் செய்தனர். பயணத்தின்போது சோதனையிடத்தில் பிரச்சினைகள் வரலாம் என நினைத்ததால் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய ‘அசடன்’(Idiot) உள்ளிட்ட பல கைப்பிரதிகளை எரித்துவிட்டார். 8 ஜூலை அன்று தன் குடும்பத்துடன் பீட்டர்ஸ்பர்க் வந்திறங்கினார். மூன்று மாதங்களுக்கு திட்டமிட்டிருந்த தேன்நிலவு முடிந்து திரும்பும்போது நான்கு வருடங்கள் ஆகியிருந்தது[81][82].

No comments:

Post a Comment