Tuesday, 21 April 2020

T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21




T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER ,
LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21





நான் என்றுமே தொலைக்காட்சியின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளுக்கு (reality music shows) எதிரானவன். அதற்கான காரணங்களை முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனால் பல மொழிகளில் இந் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் என்னை அவற்றின் நடுவராக இருக்கச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! அதற்குக் கொடுக்கப்படும் பணமும் உடனடியாகக் கிடைக்கும் புகழும் மிகவும் சபலமூட்டுபவைதான். ஆனால் நான் எப்போதும் திடமாகவே முடியாதென்று சொல்லிவிடுவேன். இந்தவகையான இசைப்போட்டி நிகழ்ச்சிகள் இசையுணர்வுக்குத் தீங்கானவை என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருக்கிறது என்றாலும் சில தருணங்களில் இந்நிகழ்ச்சிகளில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

முதல் ஆச்சரியம், ஒருமுறை இப்போட்டி ஒன்றில் வென்ற ஒரு 17 வயதுப் பாடகர் அவர் ஏ.எம். ராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னது. அதைப்பற்றி ஏ.எம்.ராஜா பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், சிறுவர் வரிசைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற பாடகன் அவனுக்குப் பிடித்தமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் என்று சொன்னது. ஒரு சிறுவனின் வாயிலிருந்து அதைக்கேட்பது மிக மிக ஆச்சரியம் அளித்தது. அந்தப் போட்டியின் முதல் சுற்றை நான் யூ டியூபில் (you tube) பார்த்தபோது அவன் மகாலிங்கத்தின் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்ற மரபிசை அடிப்படையிலான உச்சஸ்தாயிப் பாடலை எந்தவிதமான கருவியிசை உதவியும் இல்லாமல் மிகத்துல்லியமாகப் பாடினான்.

டி.ஆர்.மகாலிங்கத்தைப்பற்றி முதலில் நான் எங்களூரில் இருந்த வயதானவரான லூக்கோஸ் சேட்டனிடமிருந்துதான் கேள்விப்பட்டேன். ஒருமுறை நான் சமகாலத் திரையிசை பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “இப்போதுள்ள பையன்கள் பாடுவதெல்லாம் தண்ணீர்ப் பாட்டுகள். நீயெல்லாம் தியாகராஜ பாகவதரும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய அசலான கர்நாடக சங்கீதப் பாடல்களைக் கேட்க வேண்டும்.” அவர்களின் சிலபாடல்களை அவர் பலவீனமாக நகல்செய்து பாடியும் காட்டினார். டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் தன் கண்களாலேயே பார்த்தது உண்டு என்று சொல்லி சிறுவனான என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார்.

ஞான சௌந்தரி என்ற படத்தின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக அதன் கதாநாயகனான டி. ஆர்.மகாலிங்கம் கொச்சிக்கு வந்த போதுதான் லூக்கோஸ் சேட்டன் அவரைப் பார்த்தாராம். 1948ல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு கிறித்தவ பக்திப்படம். மலையாளியான ஜோசஃப் தளியத் அதை இயக்கியிருந்தார். ஞான சௌந்தரியின் பாடல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் புகழ்பெற்றிருந்தன.

டி.ஆர்.மகாலிங்கம் கொச்சி பத்மா ஹால் திரையரங்கில் கூடிய பல்லாயிரம் ரசிகர்கள் நடுவே பேசினார். அக்கால உச்ச நட்சத்திரமான டி.ஆர்.மகாலிங்கம் எப்படி அரங்கின் பால்கனியில் தோன்றி ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார் என்று லூக்கோஸ் சேட்டன் விளக்கினார். அழகனும் பாடகனுமாகிய தங்கள் கதாநாயகனை நேரில் கண்டதும் கூட்டமே போதை கொண்டது.

ஆனால் தொண்ணூறுகளில் சென்னைக்கு வந்தபின்னர்தான் நான் உண்மையில் டி.ஆர்.மகாலிங்கத்தைக் கேட்டு ரசிக்க முடிந்தது. எச்.எம்.வி நிறுவனம் தயாரித்த Legends-TR Mahalingam என்ற இசைத் தொகுப்புக்கு ஒரு விளம்பரப்படம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அப்போது நுட்பமாகக் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பல பாடல்களின் காட்சி வடிவங்களையும் பார்க்க முடிந்தது. நடிகராக டி.ஆர்.மகாலிங்கம் என்னைக் கொஞ்சமும் கவரவில்லை. ஆனால் கர்நாடகச் செவ்வியல் ராகங்கள் முதல் எளிய மெல்லிசை மெட்டுகள் வரை, பலவகையில் அமைந்த அவரது பாடல்கள், அவரது அபாரமான பாடும் திறனை எடுத்துக்காட்டி என்னை பிரமிக்கச்செய்தன.

கடந்தகாலத்தில் தமிழ்த் திரையுலகம் கண்ட பாடக நடிகர்களில் எம்.கெ.தியாகராஜ பாகவதர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் 1950களுக்கு முந்தைய திரைப்பாடல்களை ஆய்வுசெய்யும் திரைஆய்வாளர்கள் பாடக நடிகர்களில் அனைத்துத் தளங்களிலும் பாடி, சிறப்பாக நடிக்கவும்செய்த நட்சத்திரம் பி.யு.சின்னப்பாதான் என்று சொல்கிறார்கள். டி.ஆர்.மகாலிங்கம் திரையுலகுக்கு நடிகராக வழிதவறி வந்த மிகச்சிறந்த பாடகர். தியாகராஜபாகவதர், சின்னப்பா போன்றவர்களால் நிறுவப்பட்ட கர்நாடக சங்கீத பாணியிலான திரையிசைப் பாடல் மரபை அவர் முன்னெடுத்தார்.

பின்னணிப்பாடல்களும் ஒலிப்பதிவு நுட்பங்களும் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு நாடகம் அல்லது சினிமாவின் வெற்றி என்பது அதில் எத்தனை பாடல்கள் உள்ளன, கர்நாடக சங்கீதத்தில் அமைந்த அப்பாடல்களைப் பாடக நடிகர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதைச் சார்ந்தே இருந்தது. இந்திய மேடையிலும் திரையிலும் இசையே மையமாக இருந்த ஒரு காலம் அது. அன்று பாடகர்களே நட்சத்திரங்கள்.

தென்னிந்தியாவில் நாடக மேடையில் இருந்து பெரும் பாடக நடிகர்கள் உருவானார்கள். அவர்களில் முதல் உச்ச நட்சத்திரம் எஸ்.ஜி.கிட்டப்பாதான். அவர் ஒரு அபாரமான பாடகர். நல்ல நடிகரும் கூட என்கிறார்கள். கர்நாடக சங் கீதத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல அவரது நாடகங்களால் முடிந்தது. தேவாமிர்தவர்ஷிணி போன்ற அபூர்வமான ராகங்களை அவருக்கு முன்னர் எவரும் அந்த அளவு விரிவாகப் பாடவில்லை என்று சொல்கிறார்கள்.

அவரது குரலை நாடகங்களிலும் இசைத்தட்டுகளிலும் கேட்டு ரசித்த ரசிகர்கள் அவரது இழுத்துச்செல்லும் சில்லிட்ட குரலின் தீவிரத்தை மறப்பதேயில்லை. துரதிருஷ்டவசமாக எஸ்.ஜி.கிட்டப்பா 1933இல் தன் 28ஆவது வயதில், பேசும் சினிமா வருவதற்கு முன்னரே உயிர் துறந்தார். உச்சஸ்தாயியில் அதிரும் அவரது அபூர்வமான பாடுமுறையானது இசைக்கலைஞர்கள் நடுவே ஒரு தனிப் பாணியாகப் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது.

ஒலிப்பெருக்கிக் கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் பாடகர்கள் மிக உரக்கப் பாடி அனைவருக்கும் தங்கள் குரலைக் கேட்கும்படி செய்யவேண்டிய தேவை இருந்தது. ஆகவேதான் ஆரம்ப காலப் பாடகர்கள் உச்ச தொனியில் பாடுவதற்குத் தங்கள் குரலை, கடுமையான பயிர்ச்சிகள் மூலம் தயாரித்துக் கொண்டார்கள். மிகவும் பிற்பட்ட தொழில்நுட்பமும் ஏராளமான சிக்கல்களும் இருந்தாலும் அக்கால கட்டத்து பெரும் பாடகர்கள் அற்புதமான இசையை உருவாக்கினார்கள். இன்று நம்மிடம் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமே உள்ளது. தூய கர்நாடக இசையில் தொடங்கி இன்றைய பாடலா, பேச்சா என்று அடையாளம் காண முடியாத உளறல்கள் வரையிலான நம் ஜனரஞ்சக இசையின் பரிணாமம் இசை ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது.

டி.ஆர்.மகாலிங்கத்துக்கு வருவோம். கிட்டப்பாவின் பாணியை டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு முன்னெடுத்துச்சென்றவர் எவரும் இல்லை. கிட்டப்பாவைப் போலவே டி.ஆர்.மகாலிங்கமும் அவரது பெரும்பாலான பாடல்களை அதி உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார் என்றாலும் மிகத்தாழ்ந்த ஸ்தாயிகளில் பாடுவதிலும் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. ‘நானன்றி யார் வருவார்’, ‘கண்களின் வெண்ணிலவே’ போன்றவை அத்தகைய பாடல்கள். அவரது மகத்தான வெற்றிப்பாடலான ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ (மாலையிட்ட மங்கை) அதி உச்ச ஸ்தாயியில் தொடங்கி, மென்மையான இன்னிசை ஆலாபனையாகி, அதிலிருந்து துள்ளலான தாளத்தை நோக்கிச் செல்கிறது. டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் உச்சக்கட்ட கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

அவரது குரல்வளம் பாடும் நுட்பம் போன்றவை அவரது மிகச்சிறந்த பாடல்களான ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ (அமுதவல்லி) போன்றவற்றில் வெளிப்படுகின்றன. அவரது சுருதி மிகமிகத் துல்லியமானது. சங்கதிகள் பற்பல எதிர்பாராத தன்மைகள் கொண்டவை. உதாரணமாக ‘காடுவிட்டு வந்த மயிலோ’ என்ற ஒரு வரியில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர் கையாளும் சங்கதியின் நுட்பம் அப்பாடலை நூறு முறை கேட்கச் செய்கிறது.


சீர்காழி கோவிந்தராஜன் டி.ஆர். மகாலிங்கத்தின் மிகச்சிறந்த ரசிகர் என்று சொல்லப்படுகிறது. மகாலிங்கத்தின் பாணியைப் பின்பற்றும் விதமாக அவர் தன்னுடைய குரலையும் பாடும் முறையையும் பயிற்சி செய்து உருவாக்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. உச்ச ஸ்தாயியில் பாடுவது என்ற அம்சத்தைத் தவிர்த்தால் இந்த விஷயம் உண்மையல்ல என்றுதான் எனக்குப்படுகிறது.

அகத்தியர் படத்தில் இரு பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்த ராஜனுடன் இணைந்து பாடியிருக்கிறார். ‘நமச்சிவாயம் எனச் சொல்வோமே’, ‘இசையாய் தமிழாய் இருப்பவனே’ ஆகிய இப்பாடல்கள் இரு பாடகர்களையும் ஒப்பிடுவதற்குச் சிறந்த உதாரணங்களாக அமைபவை. டி.ஆர்.மகாலிங்கம் சற்றும் சிரமம் தெரியாமல், துல்லியமான சுருதியுடன், சரளமான சங்கதிகளுடன், உயிரோட்டமுள்ள உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் இந்தப் பாடல்கள் வழியாக மிதந்து செல்கிறார். ஆனால் சீர்காழி கோவிந்தராஜனின் பாடும்முறை வலிந்து செய்வதாக இருக்கிறது.


என்னால் சீர்காழி கோவிந்தராஜனின் குரலையோ, பாடும் முறையையோ ரசிக்க முடிந்ததே இல்லை. வெண்கலக் குரலோன் போன்ற பல துதிகள் அவர்மேல் உள்ளன என்றாலும் அவரது குரல் சற்றும் இசைத்தன்மைகொண்டது அல்ல. அவரது குரல் எந்த நடிகருக்கும் பொருந்தியதுமில்லை, கதைச் சந்தர்ப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாடும்முறையை மாற்றியமைக்க அவரால் முடிந்ததுமில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களுக்காக அவர் பாடியிருந்தாலும் அதிகமும் பொதுவான பின்குரலாகவே அமைந்தது அவரது பாட்டுகள்.

என்னுடைய ரசனையின்படி சீர்காழி கோவிந்த ராஜனின் குரல் இயல்பிலேயே சுருதி நடுங்கும் தன்மை கொண்டது. வீரக்கனல் படத்தில் வரும் ‘சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா?’ என்ற பாடலில் அவருடன் சேர்ந்துபாடும் சுசீலாவின் பாடும்முறையுடன் ஒப்பிட்டு இதை நாம் தெளிவாகவே உணரலாம். ‘சிரிக்கக் கூடாதா?’ போன்ற இடங்களில் அவரது சுருதி முற்றிலும் விலகுகிறது. பெரும்பாலான கீழிறங்கும் சுரங்கள் (landing notes) அவரிடம் அப்படித்தான் அமைகின்றன. பெரும்புகழ்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ போன்ற பாடல்களில்கூட அவரது சுருதி முற்றிலும் விலகுவது நாம் உணரலாம். அவரது அதீதமான கமகங்கள் வலிந்துசெய்யப்படுவனவாகவும் கேட்பதற்கு நெருடலானவையாகவும் உள்ளன.

ஆனால் அகத்தியர் படத்தில் வரும் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘ஆண்டவன் தரிசனமே’ போன்ற பாடல்களைக் கேட்டால் தெரியும் அவர் ஒரு இசை அற்புதம் என்று. அவரது குரல் எப்போதும் பிசிறே இல்லாமல் நழுவிச்செல்கிறது. எந்த சுரத்திலும் சுருதிபிசகாமல் நினைத்த சங்கதிகளைப் பிறப்பிக்கிறது. ‘ஆசைகொண்டேன் அமுதமே’, ‘சங்கம் முழங்கிவரும்’ ‘இளைய கன்னியின் அழகிய வதனம்’, ‘எதிர்கொண்டு வரவேற்குதே’, ‘காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்’ ‘மதுரமான ருசி உள்ளதே’, ‘நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா’ ‘கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று’ போன்ற ஏராளமான பாடல்களில் டி.ஆர்.மகாலிங்கத்தின் இசையின் நுட்பங்களையும் அழகுகளையும் நாம் காணலாம்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது முன்னோடியும் மானசீக குருவுமான கிட்டப்பாவைப்போலவே சிறுவனாக இருக்கும்போதே மேடைகளில் பாட ஆரம்பித்தார். விரைவிலேயே அவர் பெரும் புகழ்பெற்றார். அவருக்கு அவரது உச்ச ஸ்தாயிப்பாடல்களே புகழ்பெற்றுத்தந்தன. அக்காலத்தில் ஸ்பெஷல் நாடகங்கள் என்று அழைக்கப்பட்ட இந்நாடகங்களில் சிறப்புப் பாடகராக வந்து பாடுவது அவரது வழக்கம்.

தன் 14ஆவது வயதிலேயே டி.ஆர்.மகாலிங்கம் வெற்றிகரமான நாடக நடிகராகவும் பாடகராகவும் புகழ்பெற்று அப்புகழின் வழியாகத் திரையுலகுக்குள் நுழைந்தார். அது 1937ல் ஏ.வி.எம் எடுத்த நந்தகுமார் திரைப்படம். இளம் கண்ணனின் வேடத்தில் டி.ஆர்.மகாலிங்கம் அதில் நடித்தார். பாடல்கள் புகழ் பெற்றபோதும் படம் ஓடவில்லை. தொடர்ந்து டி.ஆர். மகாலிங்கம் 10 முக்கியமற்ற படங்களில் நடித்தார், எந்தப் படமும் அவருக்கு நல்ல இடத்தைப் பெற்றுத்தரவில்லை. மனம் தளர்ந்தபோதிலும் அவர் முயற்சியைத் தளரவிடவில்லை. அப்போதுதான் ஏ.வி.எம், அன்று சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி ஸ்பெஷல் நாடக மேடையில் பெரும்புகழ் பெற்றிருந்த ‘ஸ்ரீவள்ளி’யை சினிமாவாக எடுத்தார்கள். டி.ஆர்.மகாலிங்கம் அன்று ஒரு வெற்றிகரமான நடிகராக இல்லாத காரணத்தால் அவருக்கு மிகக்குறைவான ஊதியமே பேசப்பட்டது.

1945ல் வந்த ஸ்ரீவள்ளியில் டி.ஆர்.மகாலிங்கம் முருகனாக நடித்தார், அந்தப்படம் டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு பெரிய நடிகராக நிலை நாட்டியது. அது ஏ.வி.எம் நிறுவனத்தின் பெரும் தொடக்கமாகவும் அமைந்தது. அதில்தான் டி.ஆர். மகாலிங்கம் இன்றும் பேசப்படும் ‘காயாத கானகத்தே நின்றுலாவும்’ என்ற உச்ச ஸ்தாயிப்பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார். ஏற்கனவே எஸ்.ஜி.கிட்டப்பாவால் ஸ்பெஷல் நாடக மேடைகளில் பாடப்பெற்று புகழ்பெற்றிருந்த அப்பாடலை கிட்டப்பாவின் ரசிகர்களே ஏற்றுக் கொள்ளும்படி துல்லியமாகப் பாடினார் டி.ஆர்.மகாலிங்கம். பல இடங்களில் பொன்விழா கண்ட ஸ்ரீவள்ளி டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு உச்ச நட்சத்திரமாக ஆக்கியது.

1947ல் சுதந்திரம் கிடைத்ததுமே ஏ.வி.எம் அவர்களின் சமூகப் படமான நாம் இருவரை வெளியிட்டது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்கள்தான் அப்படத்தின் முக்கியமான கவர்ச்சியாக இருந்தன. ‘சோலை மலரொளியோ’, ‘வாழிய செந்தமிழ்’, ‘வெற்றி எட்டுத் திக்கும் கொட்ட’, ‘விட்டு விடுதலையாகி’ போன்ற பாரதியார் பாடல்களை அப்பழுக்கற்ற துல்லியத்துடன் பாடி அக்காலகட்டத்தையே கவர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். மதுரையில் திரையரங்கிற்கு டி.ஆர்.மகாலிங்கம் வந்தபோது ரசிகர்கள் அவரைத் தூக்கிவைத்துக்கொண்டு நடனமாடினார்கள். சுதந்திரம் கிடைத்த களிப்பும் பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளும் அந்தப் படத்தின் வெற்றியில் பெரும் பங்குவகித்த போதிலும்கூட டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

1948ல் ஏ.வி.எம் வெளியிட்ட ‘வேதாள உலகம்’ டி.ஆர்.மகாலிங்கத்தின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம். இப்படத்திலும் ஏராளமான பாரதியார் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற பாடல்கள் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் பெரும் வெற்றியை அடைந்தன.

மாபெரும் வெற்றிப்படமான ஞானசௌந்தரி அதைத் தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் அதே இயக்குநர் டி.ஆர்.மகாலிங்கத்தை நாயகனாக வைத்து எடுத்த சமூகப்படமான ‘இதய கீதம்’ ஒரு பெரும் தோல்வியாக இருந்தது. டி.ஆர். மகாலிங்கத்தின் உச்ச நட்சத்திரப் புகழ் அப்படத்துக்கு உதவவில்லை. ஆனால் அதில் அவர் பாடிய ‘வானுலாவும் தாரை நீயே இதய கீதமே’ என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் இதழ்களில் ஒலிக்கிறது.

அதைத்தொடர்ந்து வந்த லைலா மஜ்னு படமும் வெற்றி பெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் டி.ஆர்.மகாலிங்கம் அவரது வாழ்க்கையின் மிக மோசமான முடிவை எடுத்தார். அவரே படங்களை எடுத்து அவற்றில் நடிக்க முடிவுசெய்தார். மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை போன்ற படங்களை அவரே தயாரித்தார். ஜே.ஆர்.ரங்கராஜுவின் பிரபலமான நாவலை ஒட்டிய மோகனசுந்தரம் ஜி.வரலட்சுமியுடன் இணைந்து அவர் பாடிய ‘ஓ ஜெகமதில் இன்பம்’, ‘புள்ளிமானைப்போலே’, ‘கண்ணீர் தானோ’, ‘கனவிலும் உன்னை மறவேன்’ போன்ற இணைக்குரல் பாடல்களுக்காகப் புகழ்பெற்றது. ஆனால் படம் பெரும் தோல்வியடைந்தது. தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களையும் அவரே தயாரித்தார். அவை வெளியாகவே இல்லை. இக் காலகட்டத்தில் வெளிவந்த அவரது எல்லாப் படங்களுமே தோல்வி அடைந்தன. பொருளாதார ரீதியாக டி.ஆர்.மகாலிங்கம் முற்றிலும் நலிவடைந்து போனார்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை அன்றைய இயக்குநர்களும் உச்ச நடிகர்களும் எல்லாம் தடுத்தார்கள். காரணம் டி.ஆர்.மகாலிங்கம் அன்று சினிமாவின் மைய ஓட்டத்தை விட்டு வெகுவாக விலகிச் சென்றுவிட்டிருந்தார். ஆனால் மாலையிட்ட மங்கை ஒரு இசைப்படம் ஆகையால் கண்ணதாசன் துணிந்து அம்முடிவை எடுத்தார்.

படம் தொடங்கியபோது கண்ணதாசனின் தி.மு.க நண்பர்கள் ஒரு பிராமணனை அப்படத்தில் நடிக்கவைப்பதாகச் சொல்லி அவரை எதிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய திராவிட அரசியல் சூழலில் பிராமண வெறுப்பு அத்தகைய உச்சத்திலிருந்தது. அவர்களை சமாதானம் செய்வதற்காக, தி.மு.கவின் கொள்கைகளை மறைமுகமாகப் புகழும் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்ற பாடலை கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் பாடச்செய்தார். இப்படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘நானன்றி யார் வருவார்’ போன்ற காலத்தாலழியாத பாடல்கள் உள்ளன.

நானன்றி யார் வருவார் பாடலை கண்ணதாசன் மகாதேவி படத்துக்காக எழுதினாராம். எம். ஜி.ஆர் அப்பாடல் பிடிக்கவில்லை என்று நிராகரித்தார். ‘கண்மூடும் வேளையிலும்’ என்று ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் பாடும் பாடல்தான் அதற்குப் பதிலாக மகாதேவியில் சேர்க்கப்பட்டது.

மாலையிட்ட மங்கை படத்துக்குப் பின்னர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மதிப்பு மீண்டும் நிலைபெற்றது. ஆனால் குறுகிய காலத்துக்குத்தான். அவரைப்போன்ற பாடகநடிகர்களின் காலம் முடிந்துவிட்டிருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் யுகம் நடந்துகொண்டிருந்தது. நடிகர்கள் பாடவேண்டிய அவசியமே இருக்கவில்லை. மேலும் சமூகப்படங்களில் பாடல்களைவிட வசனங்கள் முக்கியம் என்பதனால் அவருக்கு அவை பொருத்தமாக இருக்கவில்லை.

டி.ஆர்.மகாலிங்கம் அக்கால கட்டத்து ‘நவீன’ பாடல்களுக்கு எதிராகவும் இருந்தார். கர்நாடக இசை பாணியில் அமைந்த பாடல்களையே அவர் விரும்பினார். ஏ. எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்த் திரைப் பாடல்களின் சுவையையே மாற்றி அமைத்தார்கள். பின்னணிப் பாடகர்கள் உருவாகி வளர்ந்து வந்த இந்தப் புதிய சூழலைப் புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் மகாலிங்கம் மறுத்தார். அவர், நடிகர்கள் பாட வேண்டும் என்ற மரபு முறையில் பிடிவாதமாக இருந்தார். பாடக நடிகரான டி.ஆர்.மகாலிங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

படங்களில் தான் நடிக்கும் பாத்திரங்களுக்கு தானே பாடுவேன் என்று சொல்லி தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புகளை அவரே நிராகரித்தார். பிறருக்குப் பின்னணி பாட அவர் முற்றிலும் மறுத்துவிட்டார். பாடல் இல்லாத நடிப்புக்கோ நடிப்பு இல்லாத பாடலுக்கோ தான் தயாரில்லை என்று அவர் ஒதுங்கிய காரணத்தால் சினிமா அவரைக் கைவிட்டது. அவரது இனிமையான பாடல்களைக் கேட்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தார்கள்.

பாடும் வாய்ப்புள்ள படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்தார். திருவிளையாடல் (1965), அகத்தியர் (1971), திருநீலகண்டர் (1972), ராஜராஜ சோழன் (1973) முதலியவை உதாரணங்கள். இப்படங்களிலும் அவரது அற்புதமான பாடல்கள் வரத்தான் செய்தன. திருவிளையாடல் படத்தின் ‘இசைத்தமிழ் நீ செய்த’ பாடலும் அகத்தியர் படத்தின் ‘மலைநின்ற திருக்குமரா’ பாடலும் அவை வெளிவந்த காலத்தைப் பெரிதும் கவர்ந்து இன்றும் புகழுடன் இருக்கின்றன.

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட சரிவைப் புரிந்துகொள்ள முடியாமல் சென்னையை விட்டு விலகி தன் சொந்த ஊரான சோழவந்தான் அருகில் உள்ள தென்கரைக்குப் போய்ச்சேர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஞான சௌந்தரி, ஸ்ரீ வள்ளி என்று பொன்விழாப் படங்களின் நாயகனாக இருந்தவர் சினிமாவை விட்டு விலகி நாடகமேடைக்குத் திரும்பினார். உச்ச நட்சத்திரமாக, பெரும் செல்வந்தராக இருந்த கடந்த காலத்தின் திரையுலக நினைவுகளுடன் டி.ஆர்.மகாலிங்கம் நாடகமேடைகளில் கடைசிவரை பாடி நடித்தார்.

1978ல் தன் 58 ஆவது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தார். ஆனால் இந்த கணம்கூட நிலாவென சிரிக்கும் செந்தமிழ் தேன் மொழியாக அவரது குரல் வசீகரம் எங்கெங்கெல்லாமோ ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


தமிழில் ஜெயமோகன்

போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.
‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.

14 வயதில் சினிமா

1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.

முதல் வெற்றி

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.

‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.

இசை வாரிசு

ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.

எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

சினிமாவைத் தூக்கியெறிந்தார்!

புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

அரசியலில் சிக்காதவர்

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஞானம்

எம்.ஜி.ஆர்-டி.ஆர்.மகாலிங்கம் – இரண்டு திரையுலகக் குடும்பங்கள்!

சோழவந்தானுக்கு அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் வீட்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரும் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்!

 பழைய நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவைப் போல பாடக்கூடியவரும், நாற்பது ஐம்பதுகளில் திரைப்படத் துறையில் நடிகராவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ரி.ஆர்.மகாலிங்கம் பற்றி தெரிந்து கொள்வோமா? பாடவும் நடிக்கவும் தெரிந்த சிலரில் ரி.ஆர்.மகாலிங்கம் முக்கியமானவர். மிக அருமையான குரல் வளம், நல்ல பிருகாவுடன் பாடக்கூடிய திறமை, அழகு இவ்வளவும் ஒருங்கே அமைந்த நடிகர் ரி.ஆர்.மகாலிங்கம். ஏவி.எம் நிறுவனம் எடுத்த வேதாள உலகம், ஸ்ரீ வள்ளி முதலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை. மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, ராஜ ராஜ சோழன் போன்ற படங்களிலும் இவருடைய இசை இன்று வரை ஜீவனோடு பாடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். செந்தமிழ் தேன்மொழியாள் போன்ற இறவா புகழுடைய பாடல்கள் இவருடையவை. 

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த மகாலிங்கம் இளம் வயதிலேயே நடிப்பிலும், பாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அந்தக் கால வழக்கப்படி சிறுவர்களை வைத்து நாடகம் நடத்தும் கம்பெனிகளிலும், தனியாக நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஸ்பெஷல் நாடகங்கள் போன்றவற்றிலும் இவர் கலந்துகொண்டு நடித்து வந்தார். இவருடைய பாட்டுக்காகவே இவரை நாடகங்களில் பாடச் சொல்லிக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப்படி இவர் நாடகங்களில் நடித்த நாட்களிலேயே பிரபல பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் இவருடைய தோழராக இருந்திருக்கிறார். எஸ்.சி.கிருஷ்ணனுக்கு தனிச்சிறப்பு மிக்க கட்டைக் குரல். அந்தக் குரலோடு இவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவுக்குப் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலத்தில் இப்போது போன்ற ஒலி அமைப்புகள் கிடையாது என்பதால் பாடுபவர்கள் கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருப்பவருக்குக் கூட கேட்கும்படி உரத்த குரலில் பாடவேண்டும். அதனால்தான் இந்தப் பாடகர்கள் உச்சஸ்தாயில் மிக சுலபமாகப் போய் பாடுவதை நாம் கவனிக்க வேண்டும். இப்போதெல்லாம் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்பது போல மெல்லிய குரலில் பாடினாலும், ஒலிவாங்கி அதனை மிக துல்லியமாக பதிவு செய்து விடுகிறது. அப்போது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒலி அமைப்புகள் எதுவும் இல்லாமல் கூட்டத்தின் சந்தடிகளையும் மீறி, திருவிழா என்றால் அங்கு நடக்கும் மேள தாள சத்தங்களையும் தாண்டி பாடினால்தான் மக்கள் காதுகளுக்கும் போகும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படிப் பாடுவதனால் இவர்களுடைய உடல் சக்தி குறையவும், அதனால் கிட்டப்பா போன்ற பெரிய நாடக நடிகர்/பாடகர்கள் இளமையில் மாண்டு போவதும் சகஜமாக இருந்து வந்தது.
இளம் வயதிலேயே மிக அருமையாகப் பாடிவந்த ரி.ஆர்.மகாலிங்கம் கிட்டப்பா போல பாடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார். இந்த நாட்டின் நாடகக் கலைக்கும் இசைத்துறைக்கும் பெருத்த நஷ்டம் கிட்டப்பாவின் இறப்பு. அவர் தனது 28-ஆம் வயதில் காலமாகிவிட்டார். அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய ரி.ஆர்.மகாலிங்கம் வந்துவிட்டார். இவருடைய 14-ஆம் வயதில் 1937-இல் ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய ஓர் திரைப்படத்தில் “நந்தகுமார்’ என்ற பெயரில் உருவான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை உருவாக்கியவர் காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்கள். அப்போது அவர் காரைக்குடியில் சினிமா ஸ்டுடியோ வைத்து படங்களை எடுத்து வந்தார். ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இளம் வயது லீலைகளை எடுத்துக் கூறும் ஓர் அற்புதமான நூல். அதில் கிருஷ்ணன் சிறு பிள்ளை காலத்தில் நடந்தவற்றை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காது. அப்படி அந்தக் கதை சிறுவயது கிருஷ்ணன் பற்றியது என்பதால் சிறுவனான ரி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் செட்டியார் அவர்கள். மேலும் சிறுவன் மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவன். அந்தப் படம் ஒன்றும் வெற்றிப் படமாக அமையவில்லை. இருந்தாலும் அதில் வந்த பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. அடுத்து செட்டியார் எடுத்த படம் ஸ்ரீ வள்ளி. அந்தப் படத்தில் மகாலிங்கம்தான் கதாநாயகன். ஸ்ரீ வள்ளி நாடகங்களில் விளம்பரம் செய்யும்போது முருகன் தானாகவும், கிழவனாகவும், வேட்டுவனாகவும் வரும் காட்சிகள் இருப்பதால் அந்தந்த நடிகரின் பெயருக்கு முன்னால் இன்னார் வேலன், வேடன், விருத்தனாக நடிக்கும் என்று எழுதுவார்கள். ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தில் ரி.ஆர்.மகாலிங்கம், அப்படி வேலன், வேடன், விருத்தனாக வந்து பாடி நடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இன்றைய புகழ்பெற்ற நடிகை லக்ஷ்மியின் தாயார் காலஞ்சென்ற குமாரி ருக்மணி.

அந்தப் படத்தில் மகாலிங்கத்துக்கு நல்ல பெயர் வந்தது. அது முதல் அவருக்கு ஏறு முகம்தான். பல படங்கள் வந்தன. அவற்றில் நடித்தார். செல்வம் சேர்ந்தது. வழக்கம் போல சொந்தத்தில் படம் எடுத்தார். மோகனசுந்தரம் என்ற படத்தில் நடித்த எஸ்.வரலக்ஷ்மியுடன் இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  சின்னத்துரை இவர் தயாரித்தது. அது தோல்விப்படமாக அமைந்தது. அதனால் ஓரளவுக்கு இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. சில காலம் சினிமாத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்த இவரை மறுபடி சினிமாவுக்குக் கவியரசு கண்ணதாசன் கொண்டு வந்தார். பின்னர் ஏ.பி.நாகராஜன் வாய்ப்புக்கள் கொடுத்தார். அவருடைய திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், அகத்தியர் போன்ற படங்களில் இவருக்கு பாடவும் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன.

ரி.ஆர்.மகாலிங்கம் நடித்து வெளியான படங்களின் பட்டியலும் பெரியதுதான். அவை:-

நந்தகுமார்,  ஸ்ரீ வள்ளி, நந்தனார், மனோன்மணி, வேதாள உலகம், சின்னதுரை, தெருப்பாடகன், திருநீலகண்டர், விளையாட்டு பொம்மை, மோகனசுந்தரம், மச்சரேகை, நாம் இருவர், பவளக்கொடி, ஆதித்தன் கனவு, ஞானசெளந்தரி, ரத்தினபுரி இளவரசி, லைலா மஜ்னு, வேலைக்காரன், தயாளன், ஆட வந்த தெய்வம், இதய கீதம், அபலை அஞ்சுகம், மணிமேகலை, அமுதவல்லி, திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், அகத்தியர், திருமலை தெய்வம், கவலை இல்லாத மனிதன், பண்ணையார் மகள், மாலையிட்ட மங்கை போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள். மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படுத்தத்தான் செய்யும். திவால் நோட்டீஸ் கூட கொடுத்துவிட்டார். அப்படி நல்ல நிலையிலிருந்த ரி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. இரவு நித்திரைக்குச் சென்றவர் உறக்கத்திலேயே இறந்து போனார். இவரது மனைவி சமீபத்தில்தான் காலமானார். என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்!

No comments:

Post a Comment