Saturday, 25 April 2020

PUTHUMAI PITHAN WRITER BORN 1906 APRIL 25 - 1948 JUNE 30


PUTHUMAI PITHAN WRITER
 BORN 1906 APRIL 25 - 1948 JUNE 30




.புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.[3
வாழ்க்கைக் குறிப்பு

மணிக்கொடி இதழ்
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.[7][8][9]


இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.[8]

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார்.[8][10]

திருநெல்வேலியில் இவர் வாழ்ந்த்த வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவுக்கு திருநெல்வேலி மாநகராட்சி புதுமைப்பித்தன் வீதி என்ற பெயரை 2016 செப்டம்பர் 15 அன்று சூட்டியது.[11]

படைப்புகளும் சிந்தனைகளும்
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.[9][12] தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?
மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை[13]


தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்:


வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.[14]

புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன
சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.[15][16]

மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில்
அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர்.[17] அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.[12][18][19]

கவிதைகள்
புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் இன்றைய தமிழ் வசன நடை) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது.[9]

அரசியல் புத்தகங்கள்
புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.[8][9]

எழுத்துநடை
சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார்.[7][8][9]
புனைப்பெயர்கள்
புதுமைப்பித்தனின் பிற புனைப்பெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைப்பெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[15][16]

சர்ச்சைகள்
தழுவல் கதைகள்
மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி, பயம், கொலைகாரன் கதை, நல்ல வேலைக்காரன், அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி, தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.[7][8][12][16][18][20][21]

பிற விமர்சனங்கள்
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார்.[7] சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார்.[14][22] 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.[23][24]

படைப்புகளின் பட்டியல்
Search Wikisource விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
ஆசிரியர்:புதுமைப்பித்தன்
(முழுமையானதல்ல)

கவிதைகள்
திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
மூனாவருணாசலமே மூடா
இணையற்ற இந்தியா
செல்லும் வழி இருட்டு
அரசியல் நூல்கள்
ஃபாசிஸ்ட் ஜடாமுனி
கப்சிப் தர்பார்
ஸ்டாலினுக்குத் தெரியும்
அதிகாரம் யாருக்கு
சிறுகதைகள்
சாபவிமோசனம்
செல்லம்மாள்
கோபாலய்யங்காரின் மனைவி
இது மிஷின் யுகம்
கடவுளின் பிரதிநிதி
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
படபடப்பு
ஒரு நாள் கழிந்தது
தெரு விளக்கு
காலனும் கிழவியும்
பொன்னகரம்
இரண்டு உலகங்கள்
மனித யந்திரம்
ஆண்மை
ஆற்றங்கரைப் பிள்ளையார்
அபிநவ ஸ்நாப்
அன்று இரவு
அந்த முட்டாள் வேணு
அவதாரம்
பிரம்ம ராக்ஷஸ்
பயம்
டாக்டர் சம்பத்
எப்போதும் முடிவிலே இன்பம்
ஞானக் குகை
கோபாலபுரம்
இலக்கிய மம்ம நாயனார் புராணம்
'இந்தப் பாவி'
காளி கோவில்
கபாடபுரம்
கடிதம்
கலியாணி
கனவுப் பெண்
காஞ்சனை
கண்ணன் குழல்
கருச்சிதைவு
கட்டிலை விட்டிறங்காக் கதை
கட்டில் பேசுகிறது
கவந்தனும் காமனும்
கயிற்றரவு
கேள்விக்குறி
கொடுக்காப்புளி மரம்
கொலைகாரன் கை
கொன்ற சிரிப்பு
குப்பனின் கனவு
குற்றவாளி யார்?
மாயவலை
மகாமசானம்
மனக்குகை ஓவியங்கள்
மன நிழல்
மோட்சம்
'நானே கொன்றேன்!'
நல்ல வேலைக்காரன்
நம்பிக்கை
நன்மை பயக்குமெனின்
நாசகாரக் கும்பல்
நிகும்பலை
நினைவுப் பாதை
நிர்விகற்ப சமாதி
நிசமும் நினைப்பும்
நியாயம்
நியாயந்தான்
நொண்டி
ஒப்பந்தம்
ஒரு கொலை அனுபவம்
பால்வண்ணம் பிள்ளை
பறிமுதல்
பாட்டியின் தீபாவளி
பித்துக்குளி
பொய்க் குதிரை
'பூசனிக்காய்' அம்பி
புரட்சி மனப்பான்மை
புதிய கூண்டு
புதிய கந்த புராணம்
புதிய நந்தன்
புதிய ஒளி
ராமனாதனின் கடிதம்
சாப விமோசனம்
சாளரம்
சாமாவின் தவறு
சாயங்கால மயக்கம்
சமாதி
சாமியாரும் குழந்தையும் சீடையும்
சணப்பன் கோழி
சங்குத் தேவனின் தர்மம்
செல்வம்
செவ்வாய் தோஷம்
சிற்பியின் நரகம்
சித்தம் போக்கு
சித்தி
சிவசிதம்பர சேவுகம்
சொன்ன சொல்
சுப்பையா பிள்ளையின் காதல்கள்
தனி ஒருவனுக்கு
தேக்கங் கன்றுகள்
திறந்த ஜன்னல்
திருக்குறள் குமரேச பிள்ளை
திருக்குறள் செய்த திருக்கூத்து
தியாகமூர்த்தி
துன்பக் கேணி
உணர்ச்சியின் அடிமைகள்
உபதேசம்
வாடாமல்லிகை
வாழ்க்கை
வழி
வெளிப்பூச்சு
வேதாளம் சொன்ன கதை
விபரீத ஆசை
விநாயக சதுர்த்தி
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆஷாட பூதி
ஆட்டுக் குட்டிதான்
அம்மா
அந்தப் பையன்
அஷ்டமாசித்தி
ஆசிரியர் ஆராய்ச்சி
அதிகாலை
பலி
சித்திரவதை
டைமன் கண்ட உண்மை
இனி
இந்தப் பல் விவகாரம்
இஷ்ட சித்தி
காதல் கதை
கலப்பு மணம்
கனவு
காரையில் கண்ட முகம்
கிழவி
லதீபா
மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
மணிமந்திரத் தீவு
மணியோசை
மார்க்ஹீம்
மிளிஸ்
முதலும் முடிவும்
நாடகக்காரி
நட்சத்திர இளவரசி
ஓம் சாந்தி! சாந்தி!
ஒரு கட்டுக்கதை
ஒருவனும் ஒருத்தியும்
பைத்தியக்காரி
பளிங்குச் சிலை
பால்தஸார்
பொய்
பூச்சாண்டியின் மகள்
ராஜ்ய உபாதை
ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
சாராயப் பீப்பாய்
சகோதரர்கள்
சமத்துவம்
ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
சிரித்த முகக்காரன்
சூனியக்காரி
சுவரில் வழி
தாயில்லாக் குழந்தைகள்
தையல் மிஷின்
தந்தை மகற்காற்றும் உதவி
தெய்வம் கொடுத்த வரம்
தேசிய கீதம்
துன்பத்திற்கு மாற்று
துறவி
உயிர் ஆசை
வீடு திரும்பல்
ஏ படகுக்காரா!
யாத்திரை
எமனை ஏமாற்ற
யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
திரைப்படத்துறையில்
காமவல்லி (கதை, உரையாடல்)
ராஜ முக்தி (உரையாடல்)

No comments:

Post a Comment