Tuesday, 14 April 2020

P.B.SRINIVAS PLAYBACK SINGER ,A LEGEND


P.B.SRINIVAS PLAYBACK SINGER ,A LEGEND




பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ், தனது பெயரின் ‘பி.பி.எஸ்’ என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில் முழு நிறைவும் மகிழ்வும் கண்டவர். 1930-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவருக்கு 82 வயது.

இவரது அம்மாவுக்கு இசையில் மிகுந்த விருப்பம். அது அப்படியே மகனிடமும் தொற்றிக்கொண்டது. ஆனால், இவரது அப்பா இவரை ஓர் அரசாங்க உத்தியோகஸ்தராக்கி அழகுபார்க்கத்தான் ஆசைப்பட்டார். தன் மகன் இசையின் பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது என்று தீர்மானித்தார். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஒரு ஜோதிடர், இவர் இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தால் இவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் நேரும், மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாவார் என்று பலன் சொன்னார்.

எனவே, பி.பி.ஸ்ரீனிவாஸின் தந்தையார் தன் மகனை பி.காம். படிக்க வைத்தார். பட்டப் படிப்பு முடிந்ததும், தன் மகனை வழக்கறிஞராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், இவரை சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டார். எனினும், இசையில் இருந்த ஈடுபாடு காரணமாக, பி.பி.ஸ்ரீனிவாஸால் சட்டப் படிப்பில் நாட்டம் கொள்ள இயலவில்லை. ஜோஸியத்தைப் பொய்யாக்கியே தீருவது என்று சவால் விட்டு, இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

ஏ.எம்.ராஜாவை அறிமுகப்படுத்திய ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்தான் பி.பி.ஸ்ரீனிவாஸையும் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார். ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’ படத்தில்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார்.

கர்னாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகரான திறமை கொண்டவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். கஸல் பாடல்களை அழகாகப் பாடுவதில் மன்னன். ‘தவப்புதல்வன்’ படத்தில் தமிழ்ப் பாடகருக்கும் இந்துஸ்தானி பாடகருக்கும் ஒரு போட்டி வரும். ‘இசையில் சிறந்தது தமிழ் இசையே’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் தமிழ்ப் பாடகராக சிவாஜியும், அவருக்குப் போட்டியாக இந்துஸ்தானி இசை பாடுபவராக நாகையாவும் நடித்திருப்பார்கள்.

சிவாஜிக்கு டி.எம்.எஸ். பின்னணி பாட, நாகையாவுக்குக் இந்துஸ்தானியில் பின்னணி பாடுவார் பி.பி.எஸ். கதைப்படி தமிழ் இசைதான் சிறந்தது எனக் காட்டுவதற்காக டி.எம்.எஸ்ஸின் குரலை கம்பீரமாக உயர்த்தியும், பி.பிஎஸ்ஸின் குரலை பம்மிப் பதுங்குகிற மாதிரி வளைந்தும் குழைந்தும் பாடச் செய்திருந்தாலும், அந்தப் பாடலில் பி.பி.எஸ்ஸின் குரலில் வெளீப்பட்ட இனிமையை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இப்போதும் கேட்டுப் பாருங்கள், பி.பி.எஸ்ஸின் மயக்கும் குரலில் இந்துஸ்தானி இசை உங்கள் காதுகளை ஈரமாக்கும்.

தெலுங்கு, கன்னடம், இந்தி என எட்டு மொழிகள் தெரிந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எட்டு மொழிகள் தெரியும் என்றால், வெறுமே பேச, பாட மட்டுமல்ல; எட்டு மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர்.

உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று,

பி.பி.ஸ்ரீனிவாஸ்   - Play Back Singer
கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்! தமிழில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜாவின் குரல்தான் பொருத்தமானது பலரும் நினைத்திருந்த காலமும் இருந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்கிற பாடலை முதன்முதலாக ஜெமினிகணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸைப் பின்னணி பாட வைத்தார் ஜி.ராமநாதன். அது அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிடவே, அது முதல் ஜெமினிகணேசனுக்கு அதிகம் பாடத் தொடங்கினார் பி.பி.எஸ்.


பி.பி.எஸ்ஸின் குரலில் ‘மயக்கமா, கலக்கமா? மனதிலே குழப்பமா?’ பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன? ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...’, என சோகத்தில் மூழ்குவதாகட்டும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள், தேன்மலர்க் கிண்ணங்கள்’ எனக் காதலில் களிப்பதாகட்டும்... பி.பி.எஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.


பி.பி.எஸ் - எஸ்.பி.பி. இந்த எழுத்து ஒற்றுமையில் அதிகம் மகிழ்ந்தவர் ’பாடும் நிலா பாலு’வான பாடகர்

பி.பி.ஸ்ரீனிவாஸ்   - Play Back Singer
எஸ்.பி.பாலசுப்ரமணியன். தன்னை பி.பி.எஸ்ஸின் விசிறி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். திரைத் துறையில் வாய்ப்பு வேண்டி அவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை அணுகியபோது, தான் பி.பி.எஸ்ஸின் தீவிர ரசிகன் என்றும், அவரது பாடல்களை அட்சரம் பிசகாமல் அப்படியே தன்னால் பாட முடியும் என்று சொல்லி, அவர் பாடிக் காண்பித்த பாடல்... பி.பி.எஸ்ஸின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே...!’ வேடிக்கை என்னவென்றால், நிலவை நெருங்காதே என்று பாடி வாய்ப்புக் கேட்ட அதே எஸ்.பி.பி-தான் எம்.ஜி.ஆருக்காக ‘ஆயிரம் நிலவே வா’ என்று அழைத்துப் பாடி பிரபலமானார்.


கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு பி.பி.எஸ். பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர்டூப்பர் ஹிட்! பின்னர் ஏற்பட்ட ஒரு சின்ன மனஸ்தாபத்தால் பி.பி.எஸ். குரல் வேண்டாம் என்று மறுத்து, தானே சொந்தக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார் ராஜ்குமார். அப்போதும் கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை பி.பி.எஸ். ‘ராஜ்குமார் மிகச் சிறந்த பாடகர். அவர் குரல் கம்பீரமானது’ என்று பெருந்தன்மையோடு பாராட்டினார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.


மற்றவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டுவதில் வஞ்சனையே செய்வதில்லை பி.பி.ஸ்ரீனிவாஸ். ‘ஜானகியா! அடேயப்பா! கேக்கணுமா! அற்புதமான பாடகி!’ என்பார். ‘ஏ.எம்.ராஜாவின் குரலில் உள்ள குழைவும் இனிமையும் யாருக்கு வரும்?’ என்பார். ‘சலீல் சௌத்ரி மிகப் பெரிய கம்போஸர்! எப்பேர்ப்பட்ட மனுஷன்’ என்று பாராட்டுவார்.


நமது ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்று அந்தக் காலத்தில் அழகான, இனிமையான குரலில் பாடி, இந்தித் திரையுலலில் பிரபல பாடகிகளாக இருந்தவர்கள் கீதா தத், ஷம்ஷத் பேகம் ஆகியோர். அவர்களுடன் இணைந்து பாடியிருக்கிறார் பி;.பி.ஸ்ரீனிவாஸ். ‘உங்கள் குரல் முகம்மது ரஃபியின் குரலைப் போன்று இனிமையாக உள்ளது’ என்று அவர்கள் மிகவும் பாராட்டியதோடு, இவரோடு இணைந்து பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.


இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடல் போன்று பல பாடல்களில் இந்த குரல் வித்தையைச் செய்திருக்கிறார் அவர். இப்படிக் குரலை உருட்டும் வித்தையை  ‘யோட்லிங்’ என்பார்கள். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையை முதன்முதலில் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!


சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்தி ரசம் சொட்டும் ‘சாரதா புஜங்க ஸ்தோத்திரம்’, ’ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ போன்றவற்றையும் தமது இனிமையான குரலில் பாடியிருக்கிறார் பி.பி.எஸ்.
இவர் ஒரு பாடகர் மட்டுமல்ல; நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்ற வரகவியும் ஆவார். தனக்குத் தெரிந்த எட்டு மொழிகளிலும் லட்சக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார் இவர். எந்த விழாவிலாவது இவர் கலந்துகொண்டால் அந்த விழா குறித்து இவரின் ஒரு வாழ்த்துப் பாடல் நிச்சயம் இருக்கும். தெரிந்தவர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால் அதற்கும் ஒரு வாழ்த்துப் பாட்டு எழுதி அனுப்பி வைப்பார்.


இவர் தான் எழுதும் பாடல்களில் ஒரு புதுமையைச் செய்வார். அதாவது, பதினைந்து, இருபது வரிகளில் இவர் கவிதை அமைந்ததென்றால், ஒவ்வொரு வரியிலிருந்தும் ஐந்தாவது எழுத்தை மட்டும் எடுத்துச் சேர்த்துப் படித்தால், அது அந்த விழாவுக்கான, அல்லது அந்த விழா நாயகருக்கான வாழ்த்துரையாக ஆசி கூறுவது போன்று வாக்கியம் அமையும்!


பிறரை மனம் கனிய வாழ்த்துவது என்பது இவருக்கு ரொம்பவும் பிடித்தமானது. எப்போதும் இவரது சட்டைப் பையில் பத்துப் பன்னிரண்டு பேனாக்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். சட்டென்று அவற்றை எடுத்து  வண்ண வண்ண எழுத்துக்களில் கவிதையோ வாழ்த்தோ எழுதுவது இவர் பழக்கம்.
சென்னை, வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்ட்டாரெண்ட் இருந்தவரையில், இவரை நாள் தவறாமல் அங்கே பார்க்கமுடிந்தது. வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் இவர் வரும் ஒரே இடம் அதுதான். இவருக்கு ரொம்பப் பிடித்தமான இடம் அது. அவரைச் சந்திக்க விரும்புகிறவர்களும் சரியாக அவர் வரும் நேரத்தைக் கணக்கிட்டு அங்கே வந்து அவருக்காகக் காத்திருப்பார்கள்.


உடையில் மிகவும் கவனம் செலுத்துவார் பி.பி.எஸ். எம்.ஜி.ஆருக்கு வெள்ளைத் தொப்பி அடையாளம் போன்று பி.பி.ஸ்ரீனிவாஸும் கறுப்பும் வெளுப்பும் கலந்த ஒரு தொப்பியை ரொம்பக் காலம் அணிந்திருந்தார். பின்பு, அதைத் துறந்து தங்க ஜிகினா பளபளக்கும் ஒரு டர்பனை அணியத் தொடங்கினார். ’சக்கரவர்த்தி போல உடை அணியணும்; சாமானியன் போல கலந்து பழகணும்’ என்பது பி.பி.எஸ்ஸின் சித்தாந்தம். அந்த அளவுக்கு எல்லோரிடமும், எந்தவொரு சின்ன பந்தாவுமின்றி எளிமையாக, இனிமையாகப் பேசிப் பழகுவதில் பி.பி.எஸ்ஸுக்கு நிகர் இல்லை.


’மெல்லிசை’ என்று சொல்கிறபோதே ‘பி.பி.ஸ்ரீனிவாஸ்’ என்ற சொல்லும் சேர்ந்து நம் மனத்தில் உதிக்கிறது. அந்த அளவுக்குத் தன் கானக் குரலால் காற்றில் தேனை நிரப்பியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
சமீபத்தில் கர்நாடக அரசு, பி.பி.எஸ்ஸின் இசைச் சேவையைப் பாராட்டி 2500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வழங்கி கௌரவித்தது. 


மற்றபடி... தமிழ் இசை, இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்புச் செய்யும் ஜாம்பவான்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு சாபம்! அந்த வகையில் எழுத்தாளர் சுஜாதா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.எஸ். வரிசையில் பி.பி.ஸ்ரீனிவாஸுக்கும் சுண்டல் மாதிரி யார் யாருக்கோ விநியோகம் ஆகிற தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டம் தவிர, எந்த உயரிய விருதும் கிடைத்ததில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். வழக்கம்போல், அந்த விருதுகளுக்குக் கொடுப்பினை இல்லை என்று நாம் நம் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டாலும், ஒரு பக்கம் இம்மாதிரி மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை செய்யாத நமது அசிரத்தையை நினைத்து எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது.


‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...’
பி.பி.எஸ்ஸின் குரல் காற்றில் கரைகிறது.


No comments:

Post a Comment