BANUMATHI RAMAKRISHNA BIOGRAPHY
தடைகளை உடைத்த வெற்றி!
பதிமூன்று வயதில், இரண்டாம் நாயகி. 18 வயதில், கதாநாயகி, மணப்பெண். 21 வயதில், நட்சத்திர நாயகி, பாடகி மற்றும் ஒரு குழந்தைக்கு அம்மா. 22 வயதில், கதாநாயகி, பாடகி, 'ஸ்டோரி ரைட்டர்' மற்றும் தயாரிப்பாளர் என்று, அடுத்தடுத்த வளர்ச்சிகள்.
புது வெள்ளம் பாய்ந்து வரும்போது, பழசெல்லாம் அடித்துச் சென்று விடும்.
வெற்றி பேரலையில், 'இனி, பானுமதி நடிக்க மாட்டாள்...' என்ற தடை உத்தரவு, வெள்ளத்தில் அடித்துச் சென்றது. தடை போட்டவரே, நடிக்க வைத்து, இயக்கும் சூழல் உருவானது; விதி வலியது.
பரணி நட்சத்திரத்தில், அழகு மகன் பிறந்த நேரம், தங்கள் வாழ்வில் செல்வமும், செல்வாக்கும் பெருகுவது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர்.
ஸ்வர்க்கசீமா கொடுத்த மாபெரும் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள, 'பானுமதி நடித்தால், படம் நன்றாக ஓடும். அவர், ராசியான நடிகை...' என்று, 'கால்ஷீட்' கேட்டு, தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.
'நாமளே சொந்த பட கம்பெனி ஆரம்பிக்கலாமே... நீங்க,'டைரக் ஷன்' பண்ணுங்க...' என்று, புது ஐடியா கொடுத்தார், பானுமதி.
'அருமையான யோசனை. நீ, ஹீரோயினி; நான் இயக்குனர்...' என்று புன்னகைத்தார், ராமகிருஷ்ணா.
'பரணி பிக்சர்ஸ்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டது. ராமகிருஷ்ணா, ஒரு கதை சொன்னார்.
'கதை நல்லா இருக்கு. ஆனா, கொஞ்சம் அபசகுனமா இருக்கு. நம்ம முதல் படம், குடும்ப கதையாக, குறிப்பா, பெண்களை கவரும் வகையில் இருந்தால் நல்லா இருக்கும்...' என்று, தன் கருத்தை வலியுறுத்தி, சின்ன வயதில், அம்மாவிடம் கேட்ட புராண கதையை சொன்னார், பானுமதி.
எல்லாருக்கும் பிடித்து போனது, கதை. கணவன் - மனைவி சேர்ந்து திரைக்கதை அமைத்தனர். அந்த படம் தான், ரத்னமாலா. கணவன் இயக்க, மனைவி, கதாநாயகியாக நடித்ததோடு, ஒரு பாடலும் பாடினார். மகன் பெயரில் தயாரித்த முதல் படம், 100 நாள் ஓடி, பெரும் வெற்றிவாகை சூடியது.
அடுத்து -
கணவரின் இனிய நண்பர், எல்.வி.பிரசாத் இயக்கி, 'ஹீரோ'வாக நடித்த, கிரஹப்பிரவேசம் படத்தில், ஜோடியாக பானுமதி நடிக்க, ஒப்பந்தம் முடிவானது. படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில், திடீரென்று பிரசாத்தை நீக்கிவிட முடிவு செய்தார், தயாரிப்பாளர். அப்போது, பெரிய பிரபலமில்லை, எல்.வி.பிரசாத்.
ராமகிருஷ்ணாவிடம், 'இந்த படம் இல்லாமல் போனால், நான் பழையபடி, பம்பாய் போய் ஏதேனும் வேலை பார்க்க வேண்டியது தான்...' என்று, தன்னிலையை சொல்லி கலங்கினார், எல்.வி.பிரசாத்.
அப்போது, 'பிரசாத் இல்லையென்றால், நான் நடிக்க மாட்டேன். வந்து, உங்கள், 'அட்வான்சை' வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று பானுமதி, ஒரு போடு போட்டதும், ஆடிப்போனார், தயாரிப்பாளர்.
'அம்மாயி, பிரசாத்காரு தான் டைரக்டர்; நீங்க தான், ஹீரோயினி...' என்று, சரண்டராகி விட்டார்.
தன் கணவரின் நண்பரை காப்பாற்றினார். அந்த படம், 100 நாள் ஓடி, எல்.வி.பிரசாத் என்ற திறமையான நடிகர் மற்றும் இயக்குனர், சினிமாவுக்கு வரமாக வாய்த்தார்.
இவர் தான், கே.பாலசந்தர், கமல்ஹாசனை வைத்து, ஹிந்தியில், ஏக் துஜே கேலியே படத்தை எடுத்தவர். ராஜபார்வை படத்தில், மாதவியின் தாத்தாவாக நடித்தவர்.
பானுமதி, தமிழில் ஒப்பந்தமான முதல் படம், ரத்னகுமார். அன்றைய சூப்பர் ஸ்டார், பி.யு.சின்னப்பா தான், 'ஹீரோ!' மொத்தம், 15 பாடல்கள். கர்நாடக, இந்துஸ்தானி மெட்டுகளில் அமைந்த பாடல்களை பாடியிருந்தார், பானுமதி.
சின்னப்பாவும், பானுமதியும், ஒரு கதம்ப பாடலை பாடியிருந்தனர். ஆடி, பாடி, பிச்சை எடுக்கும் காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்தனர்.
தமிழில் முதன் முதலில் ஒப்பந்தமான இப்படம் வெளியாக, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. காரணம், சின்னப்பாவுக்கும், பானுமதிக்கும் ஏழாம் பொருத்தம்.
படப்பிடிப்பு துவங்கிய கொஞ்ச நாளிலேயே முட்டல், மோதல் ஆரம்பமாகி விட்டது. இருவரும் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம், தலைவலி என்று சொல்லி போய் விடுவார், பானுமதி.
ஒருநாள், குடித்துவிட்டு வந்தார், சின்னப்பா.
'நான், இவரோட நடிக்க மாட்டேன்...' என்று பின் பக்கமாக, காரில், வீட்டுக்கு போய் விட்டார், பானுமதி.
கிருஷ்ணன் - பஞ்சு இயக்கி, ஆரூர்தாஸ்வசனம் எழுதிய, பத்து மாத பந்தம் படத்தில், கர்நாடக இசைப் பாடகி, கல்யாணி பாத்திரத்தில் நடித்ததோடு, ஒரு பாடலையும் எழுதியிருந்தார், பானுமதி. அதில், அவர் பாடிய, 'பாப் மியூசிக்' பாடல், படம் வருமுன்னே வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றது; படமும் பெரும் வெற்றி பெற்றது.