Thursday, 25 February 2021

FAMOUS SNACKS IN AREAS OF TAMILNADU

 


FAMOUS SNACKS IN AREAS OF TAMILNADU

#கொஞ்சம் #கொறிங்க!

கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? – என்று கூடச் சிலர் நினைக்கலாம்.


நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது.

உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட – மிக்ஸரையும், மொறுமொறு பக்கோடாவையும் தான் தேச பக்தியுடன் மறந்துவிட முடியுமா?

நொறுக்குத்தீனி தின்பதை உடல்நல நிபுணர்கள் ஆரோக்கியமாகக் கண்டித்தாலும் அதிலும் வயிற்றுக்கும், நாக்குக்கும் வஞ்சகம் பண்ணாதவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தான் கொறிக்க எத்தனை ரகங்கள்?

– இதெல்லாம் விடுபட்டிருக்கிறதே என்று இதை வாசிக்கிறவர்கள் செல்லமாகக் கடிந்து கொள்ளக்கூடாது.

நடுத்தர வர்க்கத்துப் பொருளாதார பட்ஜெட்டோடு ருசி தேடி – ஒரு பொடி நடை போனால் – கண்ணில் சிக்கும் சமாச்சாரங்களில் சில மட்டும் இங்கே:

சென்னையில் மெரீனாப் பக்கம் போனால் சில்லென்ற காற்றுடன் மிளகாய் பஜ்ஜி, சுண்டல் வகையறாக்களைக் கொறிக்கலாம். பானி பூரி, பேல் பூரிக்கடைகள் தெருக்குத் தெரு வந்தாலும், குஜராத்திலிருந்தும், ராஜஸ்தானிலிருந்தும் வந்து குடியேறியவர்கள் மேலே லேசான கொத்தமல்லியும், ஓமப்பொடியும் தூவிக் கொடுக்கும் நேர்த்தி இருக்கிறதே அபாரம்!

அதே மாதிரி சில்லென்று லஸ்ஸி.





சௌகார்ப்பேட்டைப் பக்கம் போனால் டெல்லி அல்லது மும்பை பாணியில் தயிர் கலந்த பல சாட்களை விழுங்கலாம். இளம் சூட்டில் குலோப்ஜாமூன் சாப்பிடலாம். இளம் குளிரில் ரஸ மலாயோ, பாஸந்தியோ ரசித்துச் சாப்பிடுகிறவர்களின் முகத்தைப் பார்க்கணுமே. அவ்வளவு களை! தயிர்ப்புளிப்பும், இனிப்பும் சேர்ந்த பல பதார்த்தங்களைச் சாப்பிடத் தனியாக இன்னொரு உடம்பு வேண்டும்.

மைலாப்பூர் லஸ்ஸூக்கு அருகில் உள்ள அந்தக்கால ஹோட்டலான உடுப்பி சுகநிவாஸூக்குப் போனால் ஐஸ்கிரீம் எஃபெக்டில் சேமியா பகலாபாத் கொடுப்பார்கள். பாருங்கள். அவ்வளவு டேஸ்ட்! பல பிரபலங்கள் இதன் வாடிக்கையாளர்கள்.

கோவை, ஈரோட்டில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பல இனிப்புகள் இப்போது தமிழகம் முழுக்கப் பிரபலமாகிவிட்டன. சாத்தூர் சேவும், கோவில்பட்டி கடலைமிட்டாயும் தயாரான மறுநாளே இங்கு வண்டியிறங்கி வீதிக்கு வந்துவிடுகின்றன. சென்னையின் பல இடங்களில் போர்டுகளைப் பார்க்கலாம்.





திருவையாறில் கிடைக்கும் அல்வாவைப் போன்ற பதார்த்தமான அசோகா கூட சென்னைக்கு வந்துவிட்டது. தூத்துக்குடி மக்ரோன்களும், மஸ்கோத் அல்வாவும் கூட வந்துவிட்டன.

திண்டுக்கல்லில் நீண்ட காலப் பேராதரவுடன் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது விசேஷமான ஜிலேபிக்கடை. பெயரே ஜிலேபி அய்யர் கடை தான். மிருதுவான மைசூர்பாகும் இங்கு ஃபேமஸ். ஒரு ஜிலேபியை வாய்க்குள் தள்ளிவிட்டு எதிரே பார்த்தால் சிறு மலைப் பழங்களைக் கொத்தாக வாங்கலாம்.

ஆம்பூர்ப் பக்கம் பிரியாணிக்குப் பெயர் போன புராதன ‘ஸ்டார் பிரியாணி’ ஹோட்டலில் சில நாட்களில் அமர்க்களமான ஒரு ஸ்வீட்டைச் செய்கிறார்கள். அவ்வளவு தித்திப்பு. நாக்கில் நிற்கும் சுவை. ஒரு விழாவில் இதன் ருசியில் சொக்கிச் சர்க்கரை வியாதியை மீறி அடிக்கடி ருசி பார்த்தவர் – மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தஞ்சை, திருவையாறில் விசுக்கென்று உள்ளிறங்கும் அசோகாவும், மிக்ஸரும் நல்ல ஸ்வரக் கலவை. ஊட்டியிலும், கொடைக்கானலிலும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அடர்ந்த கிரே கலர் சாக்லேட்ஸ் குட்டீஸூக்குப் பிடிக்கும். இனிப்பு பட்டும்படாமலும் இருக்கும் வர்க்கியைக் குளிரோடு பெரியவர்கள் சாவகாசமாகக் கொறிக்கலாம்.





மதுரைக்குப் போனால் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு பலகாரக் கடை. நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை. நெல்லை இருட்டுக்கடை மாதிரி மிக எளிமையான கடை. எம்.எஸ்.சுப்புலெட்சுமி, நேரு உட்படப் பலர் சாப்பிட்ட கடை இன்னும் அதே கோலத்தில். மேலே நெய் பொருக்கோடிய கெட்டியான அல்வா. பெரிய சைஸில் மஞ்சர் வர்ணச் செழுமையுடன் பூந்தி. இரண்டையும் சாப்பிட்டுவிட்டு காராசேவுடன் ருசிக்கு மங்களம் பாடிவிடலாம்.

வெல்லம் ஊடுருவிய அதிரசமும், எள்ளுச் சீடையும் இங்கு பலருக்கு மறக்க முடியாத ஐட்டங்கள். வாழைக்காய், வெங்காய பஜ்ஜிகளும், ஆமவடை என்றழைக்கப்படும் மசால் வடையைத் தேங்காய்ச் சட்னியுடன் சிலர் கலந்துகட்டிச் சாப்பாட்டைப் போலச் சாப்பிடுவதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது!

இதே மதுரையில் சௌராஷ்டிரா சமூகத்தினர் தயாரிக்கும் பன் அல்வா மிருதுவான ரகம். இதமான போளிகள் ஒரு பக்கம் என்றால் விளக்குத்தூண் அருகே ஜிகர்தண்டா தவிர, மதுரையின் இன்னொரு ருசியான அடையாளம் பருத்திப்பால்.

திருநீற்றுப் பட்டையடித்த வெண்கலப் பானைகளில் பருத்திப்பாலை ரசித்துக் குடித்தபடி தீப்பொறி ஆறுமுகத்தின் ‘அசைவப் பேச்சை’க் குறுகுறுக்கக் கேட்பது மதுரைக்காரர்களின் அந்த நாள் ஞாபகம்.





ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் காலையிலேயே இனிப்புப் போண்டாவும், தேயிலை நீருமாக உழைக்கப் போகிறவர்களுக்கு விடியும். உஷ்ணமான மண்ணில் கடல்பாசி போட்டு எலுமிச்சை பிழிந்து தரப்படும் சர்பத் வயிற்றுக்குத் தரப்படும் ஒத்தடம்.

காரைக்குடிக்கு நகர்ந்தால் சொல்லவே வேண்டாம், நகரத்தாருக்கே உரித்தான பலகாரங்கள்.

தேன்குழல், விதவிதமான பணியாரங்கள், பால், பிடி கொழுக்கட்டைகள், வாய்க்குள் போட்டதும் கரையும் வெள்ளை உருண்டையான சீடைகள். இனிப்புப் பூரணம் வைத்த கொழுக்கட்டைகள். சீயங்கள் என்று ருசிக்கு எவ்வளவு போட்டி?

சாத்தூருக்குப் போனால் எள்ளும், மிளகும் சேர்ந்த பக்குவத்தில் காரச் சேவுக்குத் தனி ருசி. கெட்டியான பதத்தில் கிண்டி துண்டு போடப்படும் கடலை மிட்டாய்கள், கொக்கோ மிட்டாய்களை இன்னும் உலக வர்த்தகத்தால் முறியடிக்க முடியவில்லை. இங்கு செய்யப்படும், கம்மர்க்கெட்டுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது.

திருநெல்வேலிக்குப் போனால் அல்வா தவிர இனிப்பான கோபுரம் போல அடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு, முந்திரிக்கொத்து, தட்டை, சீவல் என்று கொறிக்க ஏராளமான ஐட்டங்கள்.

குற்றாலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் தென்காசியில் பிரபலமான ஒரு ஸ்வீட்டின் பெயர் குஜ்லீப்பா! பார்க்க நம்மூர் பணியாரம் கெட்டியானதைப் போல இருக்கிறது. இந்தப் பகுதியில் சீவலுடன் பக்கோடாவும் தாராளம்.

தூத்துக்குடியில் முந்திரி சேர்ந்த மக்ரோன் மாதிரியே பலவிதமான அல்வாக்கள் தயாராகிக் கடல் கடந்து போகின்றன. நாகர்கோவிலில் லேசான உப்பு ருசி கொண்ட நேந்திரங்காய் சிப்ஸூம், உப்பேரியும் வித்தியாசமான பதார்த்தங்கள். சாயா அல்லது சுக்குக்காபியுடன் ஒரு மசால் வடை அல்லது தட்டை சேர்ந்து தள்ளினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வயிற்றுக்கு ஓய்வு கொடுத்துவிடலாம்.

இங்கு பன நுங்குடன் சர்பத்தைக் கலந்து குடிக்கத் தனி ரசிகர்கள்.

தூத்துக்குடியில் பனங்கிழங்கும், ராமநாதபுரம், சாத்தூரில் வெள்ளரிக்காயும், நெல்லை, மதுரையில் கொய்யாவும், திண்டுக்கல்லில் மலைப்பழமும், திராட்சையும் இயற்கை தந்த அருமையான நொறுக்குத்தீனிகள்.

இதைவிட இயற்கையான தீனிக்கு முதுமலைக் காட்டுப்பக்கம் இருக்கிற மலைவாழ்மக்கள் வாழ்விடங்களில் கிடைக்கிற வெள்ளை வெளேரென்று பளிச்சென்றிருக்கும் மூங்கில் குருத்தும், அப்போது தான் தேனீ பறக்க, இறக்கப்பட்ட கெட்டிதட்டிய தேனையும் சுவைக்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் உண்மையாகவே பாக்யவான்கள்!

No comments:

Post a Comment