எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்"
மரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது? - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan
நம் வாசகர் தியாகராஜன் 2004-ம் ஆண்டு சுனாமி அலைகளில் தன் மாற்றுத் திறனாளி நண்பரைக் காப்பாற்றிய தருணத்தைக் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளார்..
இடம் : கல்லூரி மாணவர் விடுதி, கடற்கரை, கடலூர். நாள் : டிசம்பர் 26 (ஞாயிறு), 2004. நேரம் : காலை 8 மணி (ஏறத்தாழ). இதுவும் ஒரு வழக்கமான காலையாகவே உதித்திருந்தது. காலை உணவை முடித்துவிட்டு செய்முறை பதிவேட்டினை நிரப்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 மீட்டர்தான் இருக்கும். கல்லூரியின் அருகிலேயே விடுதியும் இருந்தது.
மாற்று திறனாளியைக் காப்பாற்றிய தியாகராஜன்..
விடுதிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 முதல் 600 மீட்டர்தான் இருக்கும். எங்கள் விடுதிக்கும் கடற்கரைக்கும் இடையில் பெரிய மைதானம் இருக்கும். அங்கே அவ்வப்போது கிரிக்கெட் விளையாடுவார்கள். இது வேறு எங்கும் இல்லாத சூழல் என்பதால் எங்களுக்கு என்ன கவலைகள் இருந்தாலும் விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தால் அது சுகமான அனுபவமாக இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை என்றாலும்கூட எனக்குக் கொஞ்சம் அதிகமாக எழுத்து வேலைகள் இருந்ததால் வேறு வழியில்லாமல் சாப்பிட்ட உடனேயே அந்தப் பதிவேடுகளில் நேரத்தைச் சிதைத்துக்கொண்டிருந்தேன். விடுதியின் வெளிப்பகுதியில் போர்டிகோவில் விடுதி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய அறை அதை ஒட்டியே இருந்ததால் அவர்களின் சொற்பொழிவுகள் நன்றாகக் கேட்டது. அவற்றுள் சில நடிகர்களின் பெயரும், ``மச்சி", ``மாமா", ``மாப்ள" போன்ற சொற்களும் அடிக்கடி விழுந்தன. இப்படியாகக் கழிந்த சில நிமிடங்களுக்குப்பின். அங்கு நான் இதுவரை கேட்டிராத அலறல் சத்தங்கள் கேட்டன.
'என்னடா கடல் தண்ணி வெளிய வருது!!??' 'டேய் பயங்கரமா வருது டா ' 'கடல் பொங்கி வருது போல டா' 'எல்லாரையும் கூப்டுங்கடா' இது போன்ற பல கூச்சல்கள். எனக்கு அதற்குமேல் உள்ளே இருப்புக் கொள்ளவில்லை. ஏடுகளை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடி வந்தேன். கடல் நீர் மிக வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதற்குப் பெயர் சுனாமி என்பது அப்போது தெரியாது. சுனாமி என்ற உடன் தசாவதாரம், The Day After Tomorrow போன்ற படங்களில் வருவதுபோல உங்கள் எதிரே பல மீட்டர் உயரத்தில் தண்ணீர் தொட்டியைக் கவிழ்த்ததுபோல அரை ப்ரேமுக்கு தண்ணீர் மலைபோல திரண்டு வரும் என்று நினைக்காதீர்கள்.
முதலில் வரும் நீர் சுமார் ஒன்று முதல் இரண்டு மீட்டர் உயரத்தில்தான் இருந்தது. அன்று தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பிய இந்தோனேசிய ஒளிப்பதிவைக் கண்டவர்கள் நலம். உயரம் குறைவாக இருப்பினும் அதன் வேகம் மிக அதிகம். அந்த நீர் கடற்கரையை ஒட்டி இருந்த சிறு கட்டடத்தில் மோதி சுமார் இரண்டு மின் கம்பங்களின் உயரத்துக்கு எழுந்தது. இவ்வளவு விளக்கமாக எழுத நான் என்னவோ அங்கு ஒரு அரைமணி நேரம் நின்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன் என்று நினைக்காதீர்கள். நான் வெளியே வந்து 3-5 விநாடிகள்தான் பார்த்திருப்பேன். அதற்கு சில மாதங்கள் முன்பு வெளியாகி இருந்த 'The Day After Tomorrow' படத்தினை நான் பார்த்திருந்ததால், அதுபோல் இதுவும் ஒரு பேரழிவு என்று நான் யூகித்திருக்க வேண்டும். உடனே பக்கத்தில் இருந்த என் அறையினுள் ஓடினேன் (உள்ளிருந்தவர்களிடம் வெளியே போக சொல்லி கூவிக்கொண்டே). 2-3 விநாடிகளில் என் அறையில் விரித்து வைத்திருந்த பதிவேடுகளை மூடி மேலே அலமாரியில் வைத்துவிட்டு வெளியே ஓடினேன். இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் நான் அலமாரியின் கீழ் அடுக்கில் இருந்த எனது பெட்டியை தூக்கி மேல் அடுக்கில் வைத்துவிட்ட பின்னரே வெளியே ஓடினேன். இது எல்லாமே 'அந்த சில' விநாடிகளில். இந்த இடத்தில் நான் ஏன் வெளியே ஓட வேண்டும்? அந்தக் கட்டடத்தின் மாடியின் மேல் போயிருக்கலாமே என்று நினைப்பவர்களுக்குச் சிறு விளக்கம். எங்கள் விடுதி ஒரே தளம்( தரை தளம்) மட்டுமே கொண்ட கட்டிடம். மேலே சென்றால் மொட்டை மாடி . அவ்வளவே. அந்த சில விநாடிகளில் என் மனதில் பல எண்ணங்கள், யோசனைகள் வேறு என்னென்னவோ.
எல்லாமே உயிர்பிழைப்பினை ஒட்டியது. அதாவது வரக்கூடிய தண்ணீர் எவ்வளவு என்பதோ, அதன்பின் விளைவுகள் என்னென்ன என்பதோ எதுவும் தெரியாது. கடல் நீர் பொங்கி வருகிறது என்றால் அந்தக் கட்டடம் என்ன? பலமாடி கட்டடம் என்ன? காடென்ன? மலையென்ன? எல்லாமே மூழ்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை நான் மனதில் கொண்டிருந்தேன். எல்லாம் சில வெளிநாட்டுப் படங்களின் தாக்கம். எனவே, இப்படி சில கூறுகளை ஆராய்ந்து அதற்கு முடிவையும் அந்த சில விநாடிகளில் எடுத்துவிட்டு அதன்படி வெளியே ஓடினேன். அங்கே ஏற்கெனவே வெளியே நின்றவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் ஓட்டம் பிடித்தேன், வெறித்தனமாக வரும் தண்ணீரை பார்த்தபடி. இப்போது எனக்கும் தண்ணீருக்கும் 500 மீட்டருக்குள் இருக்கும். அங்கே காலையில் கடற்கரையில் தங்களது கார்களை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி சென்றவர்களை ஏற்கெனவே தண்ணீர் விழுங்கியிருந்தது. இப்போது அந்த மைதானத்தில் கிரிகெட் விளையாடியவர்களுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவர்கள் அலறியபடி ஓடி வந்தார்கள். நான் சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன். அங்கே என்னுடன் விடுதியில் இருந்த முத்துகுமரன் என்பவன் அலறினான். "ண்ணா!!!" இங்கு முத்துக்குமரனை பற்றி கண்டிப்பாக கூற வேண்டும். (அவன் முதலாம் ஆண்டு பயின்றான், மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல்படாது. இரண்டு புறமும் தாங்கியைக் கொண்டுதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.
தியாகராஜன் காப்பாற்றியது இவரைதான்..
எங்கள் ஊருக்கு அருகில்தான் அவனுடைய ஊர். எனவே, நாங்கள் ஏற்கெனவே நன்றாக அறிமுகம் ஆகியிருந்தோம். படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவான்.) நான் அறைக்குள் சென்று வெளியே வருவதற்குள் அவன் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிற்கு வெளியேறியிருந்தான். அப்போதுதான் அந்த அலறல் ("ண்ணா!!!") என் காதில் விழுந்தது. அதுவும் அவனைத் தாண்டி நான் இரண்டு அடிகள் வைத்தபின். அதன் பிறகே நான் அவனைக் கவனித்தேன். அதுவரை தண்ணீரை மட்டுமே பார்த்துக்கொண்டு ஓடினேன்.
"காப்பாத்துங்கண்ணா." அவனது முகத்தில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதனின் உணர்வுகளைப் பார்த்தேன். அந்த அலறலில் பரிதாபமும் அழுகையும் கலந்திருந்தது. நான், முன்னால் ஓடியவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவனைக் கத்தி கூப்பிட்டேன். திரும்பினான். நான் சைகையால் இவனைக் காட்டினேன். அதன்பிறகு அவன் திரும்பவில்லை. அப்போது நான் இரண்டு விநாடிகள் யோசித்திருப்பேன். உடனே அவனை என் தோளில் தூக்கினேன். அப்போது நானே 48-52 கிலோ எடை மட்டுமே இருப்பேன். அவனுடைய எடையும் அதற்குக் கீழ் இருக்காது. இருப்பினும் இன்றுவரை நான் அவனை எப்படி தூக்கினேன் என்று தெரியாது (இவன் என்ன இரண்டாம் ராஜ மௌலியோ என்று நினைத்துவிடாதீர்கள் ). அவனை அப்படி தூக்கியபடி சில மீட்டர்கள் ஓடினேன். அங்கிருந்து சுமார் 200 மீட்டர்கள் ஓடினால் ஒரு சுற்றுசுவர் வரும் (அது ஒரு காவல் உயரதிகாரியின் மாளிகையின் சுற்றுச்சுவர்). அது கொஞ்சம் பழங்காலத்து சுவர். எனவே, அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால் ஒரு தற்காலிக பாதுகாப்பு என்று என் மனதில் ஒலித்தது. என் தோளில் அவனுடன் நான் ஓடிய அந்த சில நிமிடங்களில் என் நெஞ்சே வெடித்துவிடும் அளவுக்கு விரிந்தது. இருப்பினும் அன்றைய நாள்களில் நான் தினமும் காலையில் கடற்கரையை ஒட்டிய ஈரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த துறைமுகத்துக்கு ஓட்டப்பயிற்சி எடுத்திருந்ததால் இது சாத்தியமாகியிருக்க வேண்டும். இருந்தாலும் அப்போது என் மனதில் 'உயிரே போனாலும் இவனைக் காப்பாற்றாமல் விடக் கூடாது' என்றெல்லாம் நினைக்கவில்லை.
'முடிந்த வரை முயற்சி செய்து பார்ப்போம், ஒருவேளை இறுதி நிமிடங்களில் முடியாத நிலை வரும்போது நாம் மட்டுமேயாவது ஓடிவிடுவோம் ("உசுருக்கு ஒண்ணுன்னா நாங்க தண்ணி மேலையே ஓடுவோம்"- வடிவேல் சொல்வதைப்போல இருந்தாலும் அது நகைப்புக்கானது அல்ல. மரண விளிம்பில் ஒரு மனிதனின் தைரியம். "Survival of the fittest") என்றே என் மனதில் இருந்தது. இன்னொரு விஷயம் அவன் என் தோளில் இருக்கும்போதும் அவனுடைய தாங்கி இரண்டையும் அவன் கையிலிருந்து விடவில்லை. அது அவ்வப்போது என் காலில் இடித்தது. ``எவ்ளோ தூரத்துல தண்ணி வருது பாரு" அப்போதும் அவனிடம் நான் கேட்டேன். அவன் என்ன சொன்னான் என்று கேட்கவில்லை. ஒரு விநாடியில் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்போது அந்த மைதானத்தைத் தாண்டியிருந்தது. அங்கே கிரிக்கெட் விளையாடியவர்கள் அதில் கலந்துவிட்டிருந்தனர். கரையோரம் விட்டிருந்த 15-20 மீன்பிடிப் படகுகள் அந்தத் தண்ணீரில் மிதந்து வந்தன. அதோடு இரண்டு மூன்று கார்கள் தலைகீழாக மிதந்து வந்தன. இன்னும் பல பொருள்கள் மிதந்து வந்திருக்க கூடும், நான் அவற்றைக் கவனிக்கவில்லை. இப்போது அந்த சுற்றுச்சுவர் எனக்கு 10 மீட்டர் தொலைவே இருந்தது. எனது கால்கள் சொல்லமுடியாத வலியைக் கண்டது. மார்பும் முன்பு இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக மூச்சு வாங்கியது. இருப்பினும் அதே வேகத்தைக் குறைக்கவில்லை. சுவரின் அருகில் சென்றதும் கிட்டத்தட்ட கீழே போட்டேன் அவனை.
மைதானத்தைத் தாண்டி உள்ள சிறு பள்ளத்தைக் கடந்து எங்களுக்கு 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் இரைச்சலுடன் வந்தது. அவனை ஒரே விநாடியில் தூக்கி சுவரின் மேல் வைத்தேன். சுவர் என் கழுத்து உயரம் இருக்கும். அதன் உட்புறம் அந்தச் சுவரை ஒட்டி மண்மேடு இருந்தது. அதில் அவன் இறங்கிவிட்டான். நானும் மேலே ஏறி உட்புறம் குதித்து ஓடினேன். அந்தச் சுற்று சுவரின் வாயிலில் எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மை ஏதோ சதியாளர்கள் என்று நினைத்துச் சுட்டுவிடுவார்களோ என்ற பயம் வேறு எனக்கு. ஆனால் தண்ணீரின் இரைச்சலைக் கேட்டு, பார்த்து அவர்கள் ஓடியிருக்க வேண்டும்.
ஒருவரையும் அங்கு காணவில்லை. அதன்பின் நான் நகருக்குள் ஓடி தீயணைப்பு நிலையத்தில் சொல்லி அந்த சிவப்பு நிற வண்டியில் விடுதிக்கு வந்து அதன்மேல் இருந்தவர்களை வெளியேற்றி கூட்டிச்சென்றேன். அப்போது தண்ணீர் வடிந்திருந்தது. விடுதியின் உட்புறம் சென்று பார்த்தேன். அரை அடி உயரத்திற்கு களிமண். அங்கங்கே பலவகை மீன்கள். நான் எனது லுங்கியை மாற்றிவிட்டு அங்கிருந்த எனது பேன்ட்டை அணிந்துகொண்டு வெளியேறினேன். முத்துக்குமரனை அவன் இருந்த இடத்தில் விட்டுவிட்டுச் சென்று இருந்தால் அதற்கு சற்றுத் தள்ளி இருந்த கருவேல புதர் வேலியில் அவனைக் கண்டேடுத்திருக்க நேர்ந்திருக்கும். அவ்வாறு சில உடல்களை மறுநாள் கண்டெடுத்ததாக அறிந்தேன். நான் அடுத்த நாள் வரை ஊருக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு போன் செய்து அனைத்தையும் தெரிவித்தேன். தொலைக்காட்சி செய்தியில் அவர்களும் பார்த்ததாக அதிர்ச்சியுடன் கூறினார்கள். முத்துகுமார் அன்றைய தினமே வீட்டுக்குச் சென்று நடந்த அனைத்தையும் அவனுடைய வீட்டில் சொல்லியிருக்கிறான். அன்று மாலை அவனது தந்தை எங்கள் வீட்டுக்கு வந்து அனைத்தையும் கூறி நெகிழ்ந்ததாகப் பின்னர் அறிந்தேன் (அவற்றில் ``கடவுள் மாதிரி", ``சாமிய்யா அவன்", ``உங்க பையன் இல்லனா" போன்ற சொற்களும் அடக்கம்). அவனைச் சந்தித்து பல வருடங்கள் அகிவிட்டன. தற்போது அவன் சென்னையில் ஏதோ ஒரு நல்ல வேலையில் இருப்பதாக சில வருடங்கள் முன்பு அறிந்தேன். அன்று அவனுக்கு நான் கடவுளாக தெரிந்திருக்கக் கூடும். இன்றும் எனது 'ஆட்டோகிராப்' எனப்படும் பதிவில் அவன் எழுதியதை (``எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்") படிக்கும்போது அந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே மனதில் காட்சிகளாய் விரியும்.