Wednesday, 29 April 2020

ARTHER WELLESLEY , 1 ST DUKE OF WELLINGTON BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14




ARTHER  WELLESLEY ,
1 ST DUKE OF WELLINGTON
 BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14


வெல்லெஸ்லி பிரபு (1798 - 1805)

ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை 'வங்கப்புலி' என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி 'இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு' என்பதற்குப்பதில் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் "துணைப்படைத் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

வெல்லெஸ்லி பதவியேற்ற போது இந்திய அரசியல் நிலைமை

வடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் சாமன் ஷா படையெடுக்கலாம் என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது. இந்தியாவின் வடக்கிலும், மத்தியிலும் மராட்டியர்கள் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினர். ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரெஞ்சுக்காரர்களை நியமித்தார். கர்நாடகப் பகுதியில் குழப்பம் நீடித்தது, பிரிட்டிஷாருக்கு திப்பு சுல்தான் சமரசத்துக்கு உடன்படாத எதிரியாகவே தென்பட்டார்.

காரன்வாலிஸ் பிரபுவுக்குப் பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்த சர் ஜான் ஷோர் ஆட்சிக் காலத்தில் அவர் பின்பற்றிய தலையிடாக் கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே எஞ்சியது. இதனால் ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது, அவரது தலையிடாக் கொள்கை பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும், நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறித்த செய்திகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இத்தகைய பின்னணியில் தான் வெல்லெஸ்லி தமது கொள்கையை வகுத்தார். பிரிட்டிஷ் புகழைத் தக்கவைப்பது, இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் குறித்த அச்சத்தை அகற்றுவது ஆகிய இரண்டுமே அவரது முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.

இந்திய அரசுகளில் நிலவிய கொடுங்கோன்மை மற்றும் ஊழலைக்களைவதற்கு இந்தியாவில் ஒரு வலிமைமிக்க பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கருதினார். ஆகவே தலையிடாக் கொள்கையைக் கைவிட்டு 'துணைப்படைத் திட்டம்' என்ற தமது குறிக்கோள் நிறைந்த திட்டத்தை அவர் வகுத்தார்.

துணைப்படைத் திட்டம்

வெல்லெஸ்லிக்கு முந்தைய ஆட்சியாளர்கள்கூட அயோத்தி நவாப், ஹைதராபாத் நிசாம் போன்ற இந்திய அரசர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய அரசுகளை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு ஆகும் செலவினங்களை ஈடுகட்ட அந்தந்த ஆட்சியாளர்களிடமிருந்து உதவித்தொகையையும் அவர்கள் பெற்றனர். இவ்வாறு ஏற்கனவே நடைமுறையிலிருந்த வழக்கத்தை வெல்லெஸ்லி தமது திட்டமாக விரிவுபடுத்தினார். இருப்பினும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில்தான் அவரது தனித்தன்மை வெளிப்பட்டது.

துணைப்படைத் திட்டத்தின் சிறப்புக் கூறுகள்

1 பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷ் அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு 'பாதுகாக்கப்பட்ட அரசு' என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 'தலைமை அரசு' என்று குறிக்கப்படும். அயல் நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு அமைதி ஆகியவற்றை பாதுகாப்பது பிரிட்டிஷாரின் கடமையாகும். படைகளுக்கு ஆகும் செலவினை சரிகட்ட 'பாதுகாக்கப்பட்ட அரசு' ஒரு தொகை அல்லது ஒரு நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு கொடுக்க வேண்டும்.


2. பாதுகாக்கப்பட்ட அரசு ஆங்கிலேயர் தவிர வேறு ஐரோப்பிய அரசுகளுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். குறிப்பாக பிரஞ்சுக்காரர்களுடன் உறவு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட அரசு வேறு இந்திய அரசுகளுடனும் அரசியல் தொடர்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.3. பாதுகாக்கப்பட்ட அரசின் ஆட்சியாளர் தனது படைகளைக் கலைப்பதுடன், ஒரு பிரிட்டிஷ் தூதுவரையும் தனது அரசவையில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை அரசின் அனுமதியின்றி அவர் ஐரோப்பியர்களை பணியில் அமர்த்தக்கூடாது.

4. பாதுகாக்கப்பட்ட அரசின் உள்விவகாரங்களில் தலைமை அரசு தலையிடக்கூடாது.

பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட நன்மைகள்


பிரிட்டிஷ் பேரரசுக் கொள்கையின் திறமைமிக்க செயல்களில் ஒன்றாக வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டம் கருதப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட அரசுகளின் செலவில் வணிகக்குழு இந்தியாவில் தனது படை வலிமையை பெருக்கிக்கொண்டது. வணிகக் குழுவின் ஆட்சிப் பகுதிகளில் போர்க்கால அழிவுகள் ஏற்படாமல் இத்திட்டம் பாதுகாத்தது. இதனால், இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி நன்கு நிலைப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்குள்ளிருந்த மற்றும் அயல்நாட்டு பகைவர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலிமையடைந்தது. இத்திட்டத்தின்கீழ் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் எளிமையாக விரிவடைந்தது. வெல்லெஸ்லி பிரபுவின் இத்தகைய அரசியல் வெல்திறனால் பிரிட்டிஷார் இந்தியாவின் தலைமையிடத்தைப் பிடித்தனர்.

துணைப்படைத் திட்டத்தின் குறைகள்


இந்தியப் பகுதிகளில் பிரிட்டிஷ் துணைப்படையை நிறுத்திவிட்டு இந்திய அரசர்கள் தங்களது படைகளைக் கலைத்து வீரர்களை வீட்டுக்கு அனுப்பியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வேலையிழந்த வீரர்கள் கொள்ளையில் ஈடுபட்டதால் ஏற்கனவே பிண்டாரிகளின் தொல்லைக்குட்பட்டிருந்த மத்திய இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும், துணைப்படைத்திட்டம் பாதுகாக்கப்பட்ட அரசுகளின் ஆட்சியாளர்களிடையே பொறுப்பின்மையை ஏற்படுத்தியது. அயல்நாட்டு அச்சம், உள்நாட்டு கலகம் ஆகியவற்றிலிருந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதால் தங்களது ஆட்சி பொறுப்புகளை அவர்கள் அலட்சியம் செய்தனர்.
உல்லாச வாழ்க்கையில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் முறைகேடான நிர்வாகம் தோன்றியது. காலப்போக்கில் இத்தகைய அரசுகளில் நிலவிய முறைகேடான ஆட்சியினால், பிரிட்டிஷாரே அவற்றை இணைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இவ்வாறு துணைப்படைத்திட்டம் நாடுகளை இணைப்பதற்கு அடிகோலியது. மேலும் பாதுகாக்கப்பட்ட அரசுகளிடமிருந்து பிரிட்டிஷார் அதிகபட்ச உதவித்தொகையை வாங்கியதால் பொருளாதாரமும் வெகுவாக பாதித்தது.


துணைப்படைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

ஹைதராபாத்

வெல்லெஸ்லி வகுத்த துணைப்படைத்திட்டம் 1798ல் முதன்முதலில் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமானதாகும். அதன்படி துணைப்படை நிர்வாகத்துக்காக ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்த பிரஞ்சுப்படைகள் முழுவதும் வெளியேற்றப்பட்டன. அதற்கு பதில் பிரிட்டிஷாரின் துணைப்படை நிறுத்திவைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைப்படி நிசாம் பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார். இப்பகுதி 'கொடை மாவட்டங்கள்' எனப்படும்.

அயோத்தி

ஆப்கானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாகக் காட்டி வெல்லெஸ்லி அயோத்தி நவாப் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார். இதன்படி, நவாப் செல்வ வளமிக்க பகுதிகளான ரோகில் கண்ட், கீழ் தோ ஆப், கோரக்பூர் போன்றவற்றை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். அயோத்தி தலைநகரில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. நவாப்பின் படையில் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க விதிமுனறகளை ஏற்படுத்தும் பொறுப்பையும் பிரிட்டிஷாரே மேற்கொண்டனர். இதனால், அயோத்தியின் உள்விவகாரங்களிலும் அவர்கள் தலையிடும் உரிமையைப் பெற்றனர். வணிகக் குழுவிற்கு வளமிக்க நிலப்பகுதிகள் கிடைக்க வழிசெய்த போதிலும், வெல்லெஸ்லியின் வரம்பு மீறிய இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தஞ்சாவூர், சூரத், கர்நாடகம்

தஞ்சாவூர், சூரத், கர்நாடகம் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை வெல்லெஸ்லி தாமே எடுத்துக்கொண்டார். தஞ்சையை ஆண்ட மராட்டியருக்கிடையே வாரிசுரிமைச் சிக்கல் நிலவியது. 1799-ல் தஞ்சை அரசர் சரபோஜியுடன் வெல்லெஸ்லி உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி, ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷாரே ஏற்றனர். சரபோஜி, 'ராஜா' என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார்.

Raja Sarbhoji
ராஜா சரபோஜி
[ ராஜா சரபோஜி பண்பு நலனும் ஒழுக்கமும் நிரம்பியவர் கவார்ட்ஸ் என்ற அறிஞரின் சீடர். தஞ்சையில் இவர் ஏற்படுத்திய சரஸ்வதி மகால் நூலகத்தில் பல அரிய புத்தகங்களும் கையேடுகளும் உள்ளன. இவர் கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்]

1759 ஆம் ஆண்டிலேயே சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறியது. 1799ல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப் மறைந்தார். அவரது சகோதரர் ஆட்சிக்கு வந்தார். இத்தருணத்தை நன்கு பயன் படுத்திக்கொண்ட வெல்லெஸ்லி சூரத்தின் ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றார். நவாப்பிற்கு பட்டத்தை சூட்டிக்கொள்ளும் உரிமையும் ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

கர்நாடகத்தில் வாழ்ந்த மக்கள் நீண்டகாலமாகவே இரட்டையாட்சியின் கொடுமையை அனுபவித்து வந்தனர். நவாப் உமாதத் உல் - உமாரா திறமையற்றவராகவும் செலவாளியாகவும் இருந்தமையால் முறைகேடான ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. 1801 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது மகன் அலி உசேன் நவாப் பதவியை ஏற்றார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்குமாறு வெல்லெஸ்லி அவரிடம் கூறினார். அதற்கு, நவாப் மறுக்கவே 1801 ஆம் ஆண்டு மறைந்த நவாப்பின் ஒன்றுவிட்ட மகனான ஆசிம் உத் தௌலாவுடன் வெல்லெஸ்லி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி கர்நாடகத்தின் ராணுவ மற்றும் சிவில் ஆட்சி முழுவதும் பிரிட்டிஷாரின் கைக்கு வந்தது.

நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் (1799)

நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். பிரிட்டிஷாரிடம் அடைந்த படுதோல்விக்கும், தன்மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் பழிவாங்குவதற்கான தருணத்தை திப்புசுல்தான் எதிர்நோக்கி இருந்தார். மேலும், மைசூரை ஒரு வலிமைவாய்ந்த அரசாக மாற்றவும் அவர் தீர்மானித்தார்.

பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போரிட பல்வேறு உதவிகளை திப்பு நாடினார். பிரான்சு, அரேபியா, துருக்கி போன்ற நாடுகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொண்டார். 1798 ஜூலையில் பிரஞ்சு புரட்சி அரசாங்கத்துடன் அவர் தொடர்பு கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஜாகோபியின் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பிரெஞ்சு குடியரசின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டது. சுதந்திர மரம் நடப்பட்டது. பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு, அவரிடமிருந்து நட்புக்கடிதம் ஒன்றையும் திப்பு பெற்றார். (அப்போது நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்திருந்தார்).

tipu-sultan
திப்பு சுல்தான்

இத்தருணத்தில்தான் வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவை அடைந்தார். வரும்போதே நெப்போலியப் படையெடுப்பு குறித்த அச்சம் அவருக்கு இருந்தது. எனவே மைசூருக்கு எதிராகப் போரிடுவது என அவர் தீர்மானித்தார். இதற்காக 1790 ஆம் ஆண்டு முக்கூட்டிணைவை மீண்டும் புதுப்பிக்க அவர் முயற்சியெடுத்து மராட்டியருடன் தொடர்பு கொண்டார். அவரது யோசனையை மராட்டியர் ஏற்கவில்லை. இருப்பினும் நடுநிலை வகிப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையில் ஹைதராபாத் நிசாமுடன் துணைப் படை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அங்கிருந்த பிரஞ்சுப்படை விலக்கப்பட்டது.

வெல்லெஸ்லி திப்பு சுல்தானுடனும் துணைப்படை ஒப்பந்தம் செய்துகொள்ள விழைந்தார். பிரஞ்சுக்காரர்களை விரட்டும்படியும் ஆங்கிலத் தூதரை ஏற்கும்படியும் வணிகக் குழுவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் இணக்கமாக செல்லும்படியும் கோரி வெல்லெஸ்லி திப்புவுக்கு கடிதங்கள் எழுதினார். இவற்றை திப்பு அலட்சியப்படுத்தியதால் நான்காம் மைசூர் போர் தொடங்கியது. இப்போர் குறுகிய காலமே நடைபெற்றது. ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் ராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கியது. தலைமை ஆளுநரின் சகோதரர், ஆர்தர் வெல்லெஸ்லியின் சென்னைப் படைகள் திப்புவை அவரது தலைநகர் ஸ்ரீரங்கபட்டணத்திற்கே பின்வாங்கும்படி செய்தது. படுகாயம் அடைந்த நிலையிலும் திப்பு இறுதிவரை போரிட்டார். ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

போருக்குப்பின் மைசூர்


திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, மைகுர் வெல்லெஸ்லியின் காலடியில் கிடந்தது. மைசூர் அரசின் மையப் பகுதியில் மீண்டும் இந்து அரசை அவர் ஏற்படுத்தினார். மூன்றாம் கிருஷ்ணராஜா என்ற ஐந்து வயது சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டான். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் தலைநகராகியது. முந்தைய அமைச்சரான பூரணய்யா திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் அரசின் எஞ்சிய பகுதிகளை பிரிட்டிஷாரும் நிசாமும் பங்கிட்டுக் கொண்டனர். கனரா, வையநாடு, கோயம்புத்தூர், தர்மபுரி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகியவற்றை பிரிட்டிஷார் தம்வசமே வைத்துக்கொண்டனர். கூட்டியை சுற்றியிருந்த பகுதிகள், சித்தூரின் ஒரு பகுதி, சித்தலதுர்க்கா மாவட்டங்கள் ஆகியவை நிசாமுக்கு கொடுக்கப்பட்டன. மைசூரில் ஆங்கிலேய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெல்லெஸ்லியும் மராட்டியர்களும்




துனணப்படைத் திட்டத்திற்கு உட்படாத ஓரே பகுதி மராட்டியமாகும், மராட்டியர்களின் தலைவராக நானா பட்னாவிஸ் திறம்பட செயல்பட்டார். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் சிக்காமல் மராட்டிய அரசை சுதந்திரமாக வைத்திருக்க அவர் பாடுபட்டார். திப்புவுக்கு எதிராக காரன் வாலிசுக்கு உதவியதால், மைசூரிலிருந்து பெரும் நிலப்பகுதிகள் அவருக்கு கிடைத்தன. 1800 ஆம் ஆண்டு நானா பட்னாவிஸ் மறைந்தது மராட்டியருக்கு பேரிழப்பாகும்.

Baji_Rao_II
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கல்விமானாகவும் தோற்றப் பொலிவுடனும் இருந்தபோதிலும், அவரிடம் அரசியல் அறிவு குறைவாகவே காணப்பட்டது. மராட்டிய தலைவர்களுக்கிடையே காணப்பட்ட உட்பூசல் அழிவுக்கே இட்டுச் சென்றது. ஜஸ்வந்த் ராவ் ஹோல்கரும், தௌலத்ராவ் சிந்தியாவும் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டனர். பேஷ்வா ஹோல்கருக்கெதிராக சிந்தியாவை ஆதரித்தமையால், ஹோல்கர் பேஷ்வாமீது படையெடுத்தார். இப்போரில் பேஷ்வா, சிந்தியா இருவரும் தோல்வியடைந்தனர். பூனாவைக் கைப்பற்றிய ஹோல்கர் அந்நகரை சூரையாடினார். பெரும் கொள்ளைப் பொருளுடன் தமது தலைநகர் திரும்பினார்.


பீதியடைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். 1802ல் அலர் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி பேஷ்வா மீண்டும் மராட்டிய அரசின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது பெயரளவுக்கே என்ற போதிலும், பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுகிறது.

ஏனெனில், இவ்வுடன்படிக்கைப்படி மராட்டியரின் அயலுறவுச் கொள்கை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனால் மராட்டியத் தலைவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்படுவது தவிர்க்கப்பட்டது. எனவேதான் மராட்டியர்கள் இந்த உடன்படிக்கையை அடிமை சாசனம் என்று குறிப்பிட்டனர்.

பசீன் உடன்படிக்கையின் உடனடி விளைவாக பிரிட்டிஷ் படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையின் கீழ் பூனாவிற்கு சென்று அங்கு பேஷ்வாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஹோல்கர் பூனாவிலிருந்து தப்பியோடினார்.

இரண்டாம் மராட்டியப் போர் (1803 - 1805)

தௌலத்ராவ் சிந்தியாவும், இரகூஜி பான்ஸ்லேயும் பசீன் உடன்படிக்கையை மராட்டியரின் தேசத்திற்கு ஏற்பட்ட இழுக்காக கருதினர். இவ்விரு தலைவர்களின் படைகளும் ஒன்றிணைந்து நர்மதை ஆற்றைக் கடந்து வந்தன. 1803 ஆகஸ்டில் வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக போர் அறிவிப்பு செய்தார். 1803 ஆகஸ்டில் அகமது நகரை கைப்பற்றிய ஆர்தர் வெல்லெஸ்லி மராட்டியக் கூட்டுப்படைகளை அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள அசே என்ற இடத்தில் முறியடித்தார்.

பின்னர், மராட்டிய தேசத்துக்குள் நுழைந்த ஆர்தர் வெல்லெஸ்லியின் படைகள் போன்ஸ்லேயை அரகான் சமவெளியில் தோற்கடித்தன. இதன் விளைவாக, வெல்லெஸ்லி போன்ஸ்லேயுடன் தியோகன் உடன்படிக்கையை செய்துகொண்டார். இதுவும் ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி ஒரிசாவின் கட்டாக் மாகாணம் பிரிட்டிஷாருக்கு கிடைத்தது.

சிந்தியாவுக்கு எதிராக பிரிட்டிஷ் படைத்தளபதி லேக் மேற்கொண்ட படையெடுப்பு பிரமிக்கத் தக்கதாகும். வரலாற்றுப் புகழ்வாய்ந்த டெல்லி நகருக்குள் நுழைந்த லேக். அங்கிருந்த முகலாயப் பேரரசர் ஷா ஆலத்தை பிரிட்டிஷாரின் பாதுகாப்பில் கொண்டு வந்தார். பரத்பூர் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய லேக் ஆக்ராவை ஆக்ரமித்துக் கொண்டார். இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான மராட்டிய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிந்தியா பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொண்டார். இது கர்ஜி - அர்ஜூன்கான் உடன்படிக்கை எனப்படும்.
சிந்தியாவின் பகைவர் என்பதால், ஹோல்கர் இப்போரில் மராட்டியரை ஆதரிக்காமல் தனிமை காத்தார். வெல்லெஸ்லி ஒப்பந்தம் செய்யத் தூண்டியபோது பெரும் கோரிக்கைகளை ஹோல்கர் முன்வைத்தார். இதனால், வெல்லெஸ்லி அவர்மீது போர் தொடுத்தார். இப்படையெடுப்பு நன்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஆங்கிலேய தளபதிகளின் சில தவறுகளால் ஹோல்கரை வெல்லத் தவறினார்.

வெல்லெஸ்லி பற்றிய மதிப்பீடு

ஆதிக்கக் கொள்கையை பின்பற்றிய வெல்லெஸ்லி நாடுகளை வென்று இணைப்பதிலேயே குறியாக செயல்பட்டார். பேரரசுக்கு அடிகோலிய மாமனிதர்களில் வெல்லெஸ்லியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்பதை பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். இந்தியாவில் பிரிட்டிஷ் தலைமையை ஏற்படுத்தியதே அவரது முக்கியச் சாதனையாகும். இந்திய அரசுகளின் பலவீனத்தை கண்டறிந்து தனது அரசியல் நுட்பத்தை (துணைப்படைத் திட்டம்) அவர் நன்கு பயன்படுத்தினார். கர்நாடகம், தஞ்சாவூர் அரசுகளை இணைத்தமையால் சென்னை மாகாணம் உருவாக அவர் வழிவகுத்தார். சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று இவரை அழைக்கலாம். இத்தகைய வழிகளில், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி வணிகக்குழுவின் பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. "வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக இவர் மாற்றினார்".

அடுத்த தலைமை ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ (1805 - 1807) இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது ஆட்சியின் போதுதான் 1806 ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் நடை பெற்றது.

.

No comments:

Post a Comment