Friday, 11 September 2020

PALUM PAZHAMUM TAMIL MOVIE FEATURES



PALUM PAZHAMUM  TAMIL MOVIE FEATURES


பாலும் பழமும்

09.09.1961 அன்று வெளியாகி இன்று 09.09.2020, 59 வருடங்களை நிறைவு செய்து 60வது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திரை காவியத்தை பற்றி ஒரு நினைவு கூறல் (மீள் பதிவு)
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே 1961-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டு ஆங்கில phrases மிகப் பொருத்தமாக அமையும். ஒன்று Embarrassment of Riches மற்றொன்று Spoilt for Choices. காரணம் அந்தளவிற்கு எதை எடுப்பது எதை விடுவது என்று குழம்பி போவோம்.
பெரும்பாலானோரிடம் பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் என்ற மூன்று பா வரிசை காவியங்களும் ஒரே காலண்டர் ஆண்டில்தான் [1961-ல்] வெளியானது என்று சொன்னால் பிரமிப்பாக பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அவர்களிடம் அது மட்டுமல்ல


செக்கிழுத்த செம்மல் வ.உ.சியாகவும் நடிகர் திலகம் வாழ்ந்த வருடமும் 1961 என்பதை சுட்டிக் காட்டுவேன். அது மட்டுமல்ல லட்சியவாதியான அரசியல்வாதியாக தியாகத்தின் உருவமாக அவர் இயல்பாக வாழ்ந்த எல்லாம் உனக்காகவும் அதே வருடம்தான் என்பேன், தாய் மகன் பாசம், குடிபோதையில் மகன் வாழ்வு சீரழிவதை கண்டு தாய் தவிப்பதை கண் முன் நிறுத்திய புனர் ஜென்மம் இதே 1961-ல்தான்..நடிகர் திலகம் ஏற்று நடிக்காத புராண கதாபாத்திரங்களே இல்லை என்பதற்கு மற்றொரு ஆதாரமான முருக பெருமான் வேடத்தை அவர் அணிந்த ஸ்ரீவள்ளி வெளிவந்ததும் இதே 1961-ல்தான். இவையெல்லாம் போதாது என்பது போல் 14 கெட் அப்களில் [14 வித்தியாச தோற்றங்களில்] அவர் நம்மை மயக்கிய மருத நாட்டு வீரன் திரைக்கு வந்ததும் இதே 1961-ல்தான் என்று சொல்லும்போது பலரும் பிரமிப்பின் எல்லைக்கு போய் விடுவார்கள். அதனால்தான் இந்த 1961-ஐ பொறுத்தவரை அந்த ஆங்கில phrases அந்தளவிற்கு பொருத்தம் என்று சொன்னேன்.
இனி பாலும் பழமும் படத்திற்கு வருவோம். அந்த மூன்று பா வரிசை படங்களை எடுத்துக் கொண்டோமோனால் பலருக்கு முதல் சாய்ஸாக ரஹீமை பிடிக்கும். பலருக்கு முதல் சாய்ஸாக ராஜு என்ற ராஜசேகரனை பிடிக்கும். மற்ற பலருக்கு முதல் சாய்ஸ் Dr ரவி. எனக்கு மூன்று பேரையுமே ரொம்ப பிடிக்கும் என்ற போதினும் நேரிய நூலிழையில் ரவி வெற்றி பெறுவார். அதற்கு மனதளவில் நான் பிரமிக்கும் காரணம் அவர் ஏற்றிருந்த ரோலும் அதை திரையில் வடிவமைத்த விதமும். உயர்நிலை பள்ளிப்படிப்பிற்கு கூட போகாத ஒருவர் ஒரு சிறப்பு மருத்துவரை தோற்றத்தில், நடையில் பேச்சில் ஏன் மொத்த உடல் மொழியில் கொண்டு வந்தாரே அதற்காக!
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you don't mind? அந்த stylised ஆங்கில உச்சரிப்பு நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 56 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1980-ம் வருடம் பிப்ரவரி மாதம். மதுரை ஸ்ரீதேவியில் பாலும் பழமும் எண்ணற்ற மறு வெளியீடுகளில் ஒன்றாக வெளியாகியிருக்கிறது. நாங்கள் நண்பர்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு முன் வரிசையில் கல்லூரி மாணவிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். நான் மேலே குறிப்பிட்ட அந்த டா போட்டு பேசும் காட்சியில் அந்த வசனம் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோசம் பக்கத்தில் திரும்பி ஒருவருக்கு ஒருவர் அதை பற்றி சிலாகித்து பேசியது அனைத்தும் பசுமையாக மனதில் இருக்கிறது. பாலும் பழமும் வெளிவந்த பிறகு நடிகர் திலகத்திற்கு ஏற்கனவே இருந்ததை விட பெண் ரசிகைகள் ஏராளமாக பெருகினார்கள் என்று சொல்லுவார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது கிட்டத்தட்ட படம் வெளியான 20 வருடங்களுக்கு பிறகும் அதுவும் அன்றைய நான் குறிப்பிடும் காலகட்டத்தில் [1980] 19,20 வயது பெண்கள் மத்தியிலும் கூட தொடர்ந்தது என்பதற்கு நானே நேரடி சாட்சி.
அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி. சிபாரிசு கடிதம் கேட்கும் ராதாவிடம் சிரித்துக் கொண்டே முடியாது என்று சொல்லும் இடம். அதை தமாஷ் என்று நினைத்து ராதா மீண்டும் வற்புறுத்த சற்றே கடுமையாக அதே சமயம் குரலை உயர்த்தாமல் பேசும் நடிகர் திலகம், ராதா விடும் சவாலைகளையும் சாபங்களையும் அமைதியாக கேட்டு வெளியே போக சொல்வது, ஏங்க இப்படி பேசினீங்க என கேட்கும் சரோஜாதேவியிடம் casual ஆக கவலைப்படாதே என சொல்லுவது, அது போல் சுப்பையா மற்றும் பாலையா ஆகியோரிடம் காட்டும் பணிவு, திருமண விஷயத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம், Chief டாக்டர் நாகையாவிடம் காட்டும் அந்த professional மரியாதை, சௌகாரிடம் மனம் விரும்பி அன்பு செலுத்த முடியாமல் அதே நேரம் வெறுத்தும் ஒதுக்காமல் தவிக்கும் தவிப்பு, சாந்தி இருந்தால் உதவி செய்வாள் என கணவன் அடிக்கடி சொல்ல என்னாலும் முடியும் என்று சௌகார் ஆர்வக்கோளாறில் எடுத்துக் கொடுக்க ஆனால் அதெல்லாம் தப்பு தப்பாக இருப்பதை பார்த்து ஒரு பக்கம் கோபம் அதே நேரத்தில் கோபப்பட்டுவிட்டால் மனைவி மனம் புண்படுமே என தன்னை தானே அடக்கி கொள்ளும் அந்த இயலாமை, நர்ஸாக வந்திருக்கும் நீலா சாந்தியாகி விட மாட்டாளா என்ற உள்மன ஆசை, தவிப்பு இப்படி எத்தனை எத்தனை பாவங்கள்! பின்னியிருப்பார்.
சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அபிநய சரஸ்வதி அருமையாக செய்த படங்களில் இதுவும் ஒன்று.
இரண்டாம் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரத்திற்கும் கூடுதலாக கண் பார்வை இழந்தவராகவே வருவார். அதிலும் கண் கட்டு போட்டுக் கொண்டு இருப்பார். எந்த ஒரு முகத்திற்கும் முக்கியமானது கண்கள். அதிலும் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நடிப்பு கலைக்கு கண்கள் இன்றிமையாதவை. அதையும் தாண்டி சோகம், ஏமாற்றம், விரக்தி, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, குற்ற உணர்வு போன்ற அனைத்து உணர்வுகளையம் கண்களின் உதவி இல்லாமலே பார்வையாளனுக்கு கடத்தும் அந்த திறமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே சொந்தம். தம்பி நசீர் வெளிநாட்டிலிருந்த்து வந்ததும் அவன் சிகிச்சையால் தன் கண்கள் குணமாகி விடும் என்ற நம்பிக்கையை வார்த்தைகளிலேயே பிரதிபலிப்பார். தன் மனைவி என்று தெரியாமலே தன் தம்பியை திருமணம் செய்து கொள்ள அவர் சரோஜாதேவியிடம் பேசும் காட்சி, அதிலும் அதை தாங்க முடியாமல் சரோஜாதேவி அறையை விட்டு வெளியே ஓடி சென்று அழுதுக் கொண்டு நிற்க அது தெரியாமல் மனம் விட்டு ஆனந்தமாய் சிரிப்பாரே அது கோடி பெறும். நடிகர் திலகத்தின் சிரிப்பையும் சரோஜாவின் அழுகையையும் மாறி மாறி காட்டும் பீம்பாய்க்கும் ஸ்பெஷல் பாராட்டு.
கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் பாடகர் திலகமும் இசையரசியும் கொடி கட்டி பறந்த படம் இது. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலில் கணவன் மனைவியின் அன்னியோனியத்தை கவியரசர் எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்.
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
ஆரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே
நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் இரண்டாவது சரணத்தில் இசையரசி பாடும் வரிகளில்
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை .
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை மெய்மறக்க செய்யும் பாவம், உச்சரிப்பு.
போனால் போகட்டும் போடா பாடலையெல்லாம் போகிற போக்கில் விவரித்து விட முடியாது. அதை ஒரு தனி பதிவாக செய்ய வேண்டும்.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் கிட்டத்தட்ட அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. அதாவது தாங்க முடியாத சோகத்தையும் கையறு நிலையையும் போனால் போகட்டும் போடா பிரதிபலித்தால் எல்லையற்ற காதலை தன உயிரினும் மேலான கணவனை, யாரை பார்க்க கூடாது என்று நினைத்தாளோ அந்த கணவனின் அருகில் ஓடிச்சென்று விட துடிக்கும் அந்த காதல் உன்னதத்தை காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல் வெளிப்படுத்தும். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் புது மணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஆலாபனை வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அதை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
அதே போல் என்னை யாரென்று எண்ணி பாடலும் அற்புதமான ஒன்று. பட சூழலுக்கு ஏற்ப பாடல் வரிகள் சிக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கவியரசர் தன்னுடைய தனி கவிதை தொகுப்பில் தன பழைய காதலியை வெகு நாட்கள் கழித்து சந்தித்தபோது எழுதிய கவிதை வரிகளை படத்தின் பாடல் வரிகளாக மாற்றிக் கொடுத்தது பற்றி அனைவரும் அறிந்திருக்க கூடும். இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட இருந்த நாளில் தனக்கு கடுமையான ஜலதோஷம் என்றும் தன்னால் பாட முடியாது என்று டி எம்.எஸ் அவர்கள் போனில் மெல்லிசை மன்னரிடம் சொல்ல இந்த ஜலதோஷ குரல்தான் இந்த பாடலுக்கு தேவை என்று மன்னர் அவரை வரச் சொல்லி பாடல் பதிவு செய்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்தது என்று இசை வல்லுநர்கள் சொல்ல கேள்வி. இந்த நாடகம் அந்த மேடையில் பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சுசீலாம்மாவின் சோகம் கசியும் குரலில் அதை கேட்கும்போது மனதை ஏதோ பிசைவது போல் இருக்கும்.
பாலும் பழமும் ஏற்படுத்திய ஒரு தாக்கம் தமிழகத்தில் மருத்துவர்கள் பெரும்பாலானோர் Dr ரவியை தங்களின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டனர் என்பதுதான். அந்த ஹேர் ஸ்டைலை கூட பின்பற்றினார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. பெண்கள் மத்தியில் பாலும் பழமும் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. பாலும் பழமும் டிசைன் என்றே ஒரு புடவை மிக பிரபலம் ஆனது. 1961-ல் அப்படி இருந்தது ஆச்சரியமில்லை. இப்போதும் அந்த டிசைன் இருக்கிறது. அதற்கு அதே பாலும் பழமும் டிசைன் என்றுதான் பெயர் என்பதை அண்மையில் ஒரு புடவை கடையில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.
பாலும் பழமும் படத்தை பற்றி இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். நேரமின்மை காரணமாக பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்..
நான் முன்பொரு முறை பாலும் பழமும் பற்றி எழுதும்போது இப்படி எழுதி் முடித்திருந்தேன் அதையே மீண்டும் இந்த பதிவிற்கு முடிவுரையாக எழுதுகிறேன்
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
அன்புடன்
.
Image may contain: 2 people

No comments:

Post a Comment