Monday, 28 September 2020

K.A.THANGAVELU TAMIL COMEDY ACTOR DIED 1994 SEPTEMBER 28

 


 K.A.THANGAVELU TAMIL COMEDY 

ACTOR DIED 1994 SEPTEMBER 28



.

கே. ஏ. தங்கவேலு (இறப்பு: 28.9.1994), மக்களால் செல்லமாக டணால் தங்கவேலு என்று அழைக்கப்படுபவர். 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இவர் இணைந்து நடித்த கல்யாணப் பரிசு திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவைப்படமாகும். தனது 9-ஆவது வயதிலேயே நாடகத்தில் நடிக்க வந்தவர். நாடகக் கம்பெனிகளில் வளர்ந்து தன் இளம் பருவத்திலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஆகியோர் இருந்த கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அவர்களது ‘பதிபக்தி’ நாடகம் தான் பின்னாளில் ‘சதி லீலாவதி’ என்ற படமாகவும் வந்தது. அந்த இளம் வயதில் நாடகத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்த போது தங்கவேலு மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். சினிமாவிலும் அதை மாற்றிக்கொள்ளாமல் பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்பட பல படங்களில் வயதான வேடங்களில் நடித்தார். இவர் நடிகர் திலகம்-நாட்டியப் பேரொளியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது. 1275-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.


கைதி கண்ணாயிரம், கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, நான் கண்ட சொர்க்கம், கற்புக்கரசி, எங்க வீட்டுப் பிள்ளை, சிங்காரி,அமரகவி, கலியுகம், பணம், அன்பு, திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே, பணக்காரி, பணம் படுத்தும் பாடு, பொன் வயல், அறிவாளி, தெய்வப்பிறவி, குலேபகாவலி, போன மச்சான் திரும்பி வந்தான், விளையாட்டுப் பிள்ளை, வைரமாலை போன்ற 1275-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடகங்களில் நடித்துள்ளார். கலைவாணரின் இயக்கத்தில் ‘பணம்’ [1952] படத்தில் அசல் கிழவனாக அதுவும் வில்லத்தனம் கலந்து கரார் பேர்வழியாக நடித்திருப்பார் கே.ஏ.தங்கவேலு.

கே. ஏ. தங்கவேலுவும்,எம்.சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, கல்யாணப் பரிசு நூறாவது நாள் விழாவின் போது மதுரையிலுள்ள ஒரு கோயிலில் வைத்து  1959-ஆம் ஆண்டு நகைச்சுவைச் சக்கரவர்த்தி டணால் கே.ஏ.தங்கவேலு அவர்கள் நடிகை எம்.சரோஜாவைத் திருமணம் செய்துகொண்டார். எம்.சரோஜா இவரது இரண்டாவது மனைவி.இத்தம்பதியருக்கு ஒரு மகள்.

சுகம் எங்கே படத்தில் ‘டணால்னு சொல்லு’ , ‘டணால்னு அடிச்சுட்டான்’ என்று அடிக்கடி ’டணால்’ சேர்த்து வசனம் பேச அதுவே அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் கே.ஏ.தங்கவேலு. தி நகர் ராஜா பாதர் தெருவிலுள்ள தங்கவேலுவின் வீட்டுக்கு அருகில் மற்றொரு வீடும் இருந்ததாம். 1958-இல் அந்த வீட்டைச் சுற்றி பெரிய பந்தல் போட்டு தங்கவேலு ‘நவராத்திரி விழா’ ஒன்றைக் கொண்டாடினார். அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி தமிழ்நாட்டிலேயே யாரும் நவராத்திரி விழாவை அவ்வளவு பிரம்மாண்டமாக, பிரம்மாதமாக கொண்டாடியதில்லை என்று கூறுமளவில் அதை தனி மனிதனின் சாதனையாக்கிவிட்டார்.

திருவாவடுதுறை ராஜரத்னம், காருக்குரிச்சி அருணாச்சலம், சிதம்பரம் ஜெயராமன் , ஏ.கே.சி. நடராஜன், தியாகராஜ பாகவதர் என்று ஒவ்வொரு நாளும் ஒரு இசை பிரபலத்தின் நிகழ்ச்சி நடைபெற்றதாம். 9 நாளும் கல்யாண வீடு போல் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சாப்பாடு பந்தி நடைபெறுமாம்.

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு


"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.

தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "சதிலீலாவதி". அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் "பணம்" என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். "சிங்காரி" என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.


800 படங்கள்


எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.



டூப் மாஸ்டர்


குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.


நாடகக்குழு


சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.


தி.மு.க. மாநாட்டில்


1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 25-9-1994 அன்று சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.


தூக்கத்திலேயே மரணம்


தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27-9-1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

அதிகாலையில் (28-ந்தேதி) 6 மணி அளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 77.


கருணாநிதி இரங்கல்


தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று தங்கவேலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவிக்கப்பட்டது. தங்கவேலு மறைவையொட்டி தி.மு.கழக தலைவர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-


கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக கலைவாணர் மறைந்த பிறகு அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தராக, கழகத்தின் மீதும், கழக முன்னணியினர் மீதும் எந்த நிலையிலும் நீங்காத பற்றுடையவராகவும் திகழ்ந்த தங்கவேலு அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனேன்.



ஜுலை 29, 30, 31-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்களும் தங்கியிருந்து, மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும் அந்த உரையில் இருந்த உறுதியையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் என்னுடன் கலந்து கொண்டு உணர்ச்சி மேலிட அவர் பேசியதையும் எப்படி மறக்க முடியும்.


அவரது இழப்பால் கலையுலகம் மட்டுமல்ல. கழகமும் பெருந்துயருக்கு உள்ளாகியிருக்கிறது. நானோ மனம் மிகவும் நொந்து போயிருக்கிறேன். மறைந்த தங்கவேல் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கும், குறிப்பாக அவரது துணைவியார் சரோஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.


குடும்பம்


தங்கவேலுவின் முதல் மனைவி பெயர் ராஜாமணி அம்மாள். அவருக்கு 2 மகள்கள். 2-வது மனைவி நடிகை எம்.சரோஜா. அவருக்கு ஒரே மகள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது


காமெடியும் காதலும் கலந்த லவ் பேர்ட்ஸ்! - டணால் தங்கவேலு - சரோஜா மகள் சுமதி


`அதான் எனக்குத் தெரியுமே...'



பூரி செய்ய சொல்லிக்கொடுக்கும் காமெடியில் டணால் தங்கவேலுவும் நடிகை டி.பி.முத்துலட்சுமியும் சேர்ந்து நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருப்பார்கள். அந்த அருமையான நகைச்சுவை நடிகரின் மகள் சுமதி தங்கவேலுவைச் சந்தித்தோம்.


“என்.எஸ்.கே.பெரியப்பா - மதுரம் பெரியம்மா தம்பதிக்கு அடுத்தபடியா நகைச்சுவை தம்பதி யார்னு கேட்டா எங்கப்பாவையும் எங்கம்மா நடிகை எம்.சரோஜாவையும்தான் சொல்வாங்க. அப்பாவும் அம்மாவும் `அடுத்த வீட்டுப்பெண்', `தெய்வப்பிறவி', `கல்யாணப் பரிசு', `தேனிலவு'ன்னு நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சிருக்காங்க. ஆனாலும், அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்சது, அப்பாவும் முத்துலட்சுமி அம்மாவும் ஜோடியா நடிச்ச ‘புருஷன் முதுகுக்குப் பின்னாடி தூங்கி மூஞ்சிக்கு முன்னாடி எழுந்திருக்கிற’ காமெடிதான்” என்று சிரிக்கிற சுமதி, பெற்றோர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.



``நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்ப அப்பாவும் அம்மாவும் நடிப்புல செம பிஸி. பாட்டி கவனிப்புலதான் வளர்ந்தேன். சின்ன வயசுல மற்ற குழந்தைகள் மாதிரியே, `அப்பா என்னை பள்ளிக்கூடத்துல கொண்டு வந்துவிடணும்', `அம்மா மதிய சாப்பாடு ஊட்டி விடணும்'கிற ஆசையெல்லாம் எனக்கும் இருந்தது. ஆனா, அப்பாவும் அம்மாவும் ஷிஃப்ட் போட்டு நடிக்கிற அளவுக்கு பிஸி. அதனால அவங்களை அதிகமா மிஸ் பண்ணி வேதனைப்பட்டிருக்கேன்.


.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பக்தி அதிகம். அவங்க சினிமா ஷூட்டிங்கை ஒரு தடவைதான் பார்த்திருக்கேன். ஆனா, கோயில்களுக்குப் பலமுறை போயிருக்கேன்.


நவராத்திரியை அப்பாவும் கிருஷ்ண ஜயந்தியை அம்மாவும் கோலாகலமா கொண்டாடுவாங்க. இப்ப அதையெல்லாம் நான் தொடர்ந்திட்டிருக்கேன். அப்பாவுக்கு மாட்டுப்பொங்கல் அன்னிக்குதான் பிறந்தநாள். அன்னிக்குக் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு சாப்பாடு போடுவாரு. அவர் இருந்தவரைக்கும் இதை விடாம செய்தார்” என்கிறவரின் குரல் கம்முகிறது. சிறிய இடை வேளைக்குப் பிறகு தொடர்கிறார் சுமதி.



“ ‘தேனிலவு’ பட ஷூட்டிங்ல அம்மா, அப்பா, வைஜெயந்திமாலாம்மா மூணு பேரும் குதிரை வண்டியில போற சீன் எடுத்தாங்களாம். திடீர்னு குதிரை மிரண்டு ஓடி, காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒட்டின ஒரு தடுப்புக்கிட்ட போய் நின்னுச்சாம். உடனே கீழே குதிச்ச அப்பா, வைஜெயந்தி அம்மாவை முதல்ல இறக்கிவிட்டாராம். அம்மா ஆதங்கப்பட்டுக்கேட்டதற்கு, `உன்னை மொதல்ல இறக்கிவிட்டா, அவன் பொண்டாட்டியை மொதல்ல பத்திரமா இறக்கி விட்டுட்டான்னு சொல்லிடுவாங்க. அதான்’னு சொன்னாராம் அப்பா'' என்று சிரிக்கிறார் சுமதி.


“அம்மா அப்பா ரெண்டு பேருமே ஒருநாள் கூட என்னைப் பார்த்து கை ஓங்கியது கிடையாது. ஜஸ்ட் ஒரு பார்வைதான். என் தப்பு எனக்குப் புரிஞ்சிடும். என் முன்னாடி கெட்ட வார்த்தை, கெட்ட விஷயங்கள் எதுவும் பேசாம, கவனமா என்னை வளர்த்தெடுத்தாங்க. நேரம் கிடைக்கிறப்போ என்னையும் என் ரெண்டு அக்காக்களையும் (பெரியம்மா பெண்கள்) ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொல்வாங்க. டான்ஸ் ஆடுறது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ்னு அம்மா சொல்வாங்க.


.

அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க வைக்கிற மீன் குழம்புன்னா அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மா கைப்பக்குவம் எனக்கும் வந்துடுச்சுபோல... நான் சமைக்கிற பிரியாணின்னா அம்மா அப்பா ரெண்டு பேருமே ருசிச்சு சாப்பிடுவாங்க. ‘ஹோட்டல் பிரியாணியைவிட நீ பண்றதுதாம்மா நல்லாருக்கு’ன்னு அப்பா சொல்வாரு” என்கிற சுமதியின் குரலில் இப்போதும் பெருமிதம்.


``எனக்குக் கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. கணவர் பிசினஸ்மேன்'' என்கிறவரின் பேச்சு மறுபடியும் பெற்றோர் பக்கமே திரும்புகிறது.


“கோயம்புத்தூர்ல ஒரு நாடகம் நடிக்கிறதுக் காக அம்மாவும் அப்பாவும் கிளம்பணும். திடீர்னு அம்மாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிடுச்சு. அப்பாவுக்கு அம்மாவை விட்டுட்டுக் கிளம்ப மனசே இல்லை. வீட்டுக்கு வந்த டாக்டர்கிட்ட ‘அவளை எப்படியாவது எழுப்பி உட்கார வெச்சிடுங்க. அவ மேடைகூட ஏற வேண்டாம். சும்மா என்கூட வந்தா போதும் டாக்டர்’னு சொல்லிட்டே இருந்தார். பிறகு வேறு வழியில்லாம அப்பா அரைமனசாவே கிளம்பிப்போனார். போயிட்டு வந்த பத்து நாள்ல 1994 செப்டம்பர் 28-ம் தேதி அப்பா தவறிட்டார்.


‘லவ் பேர்ட்ஸ் மாதிரி இருந்தோமே. என் பறவை பறந்துபோயிடுச்சே’ன்னு அம்மா சொல்லி அழுதுட்டே இருப்பாங்க. அப்பாவுக்கு ஒரு சமாதி அமைக்கணும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆசை. அப்பாவுக்கு அப்புறம் எங்கேயும் வெளியே வர மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க. கலைஞர் ஐயாதான் ஃபிலிம் சிட்டி அவார்டு கமிட்டியில ஒரு போஸ்ட்டிங் கொடுத்தார். அதுல அஞ்சு வருஷம் இருந்தாங்க. ஒரு நாள் டிபன் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தாங்க. அப்படியே என்னை விட் டுட்டுப் போயிட்டாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் நினைவுகளோடும் அவங்க விட்டுட்டுப் போன பெருமைகளோடும்தான் நான் வாழ்ந்திட்டிருக்கேன்” என்கிறவரின் கண்களில் மெலிதாக ஈரம் படர ஆரம்பிக்கிறது.

.



சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.


‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்! 



“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி!


‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’


‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.


சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.

‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம்.


எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’

சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி.

பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர்.

தங்கவேலு 10/10


1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர்.

2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.

3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு.

4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.

5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.

6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.

7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார்.

8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.

No comments:

Post a Comment