Sunday, 22 August 2021

ORU THALAI RAGAM -RAJENDAR

 


ORU THALAI RAGAM -RAJENDAR




ஒருதலை ராகம் பட பூஜை.
படம் சூப்பர் ஹிட்டாகி கோடி கோடியாகப் பணம் வரணும்.
சுற்றியிருந்தவர்கள் வாழ்த்து சொன்ன ஐயரை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
படத்தில் நடிப்பவர்களில் ஒரு முகம் கூட தெரிந்த முகம் கிடையாது.
படப்பிடிப்பு ஒழுங்காக நடந்து முடிந்து, சிக்கல் எதுவுமின்றித் திரையரங்கில் சொன்ன தேதியில் வெளியாகுமா என்பதே சந்தேகம். இந்த நிலையில் படம் சூப்பர் ஹிட்டாகி கோடிக்கணக்கில் கொட்டவேண்டும் என்று வாழ்த்துகிறாரே என்று பூஜையில் கலந்துகொண்ட படக்குழுவினருக்கு ஆச்சர்யம்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த வாக்கு பலித்தது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என ஒரு படத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் டி. ராஜேந்தர் என்கிற டி.ஆர். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எந்தத் துறையிலும் சாதித்துக் காட்டலாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பாடம் போதித்தவர்.
அடுக்கு மொழி வசனம் இவரது படங்களில் ஸ்பெசல் .
இவரது படங்களின் பாடல்களில் செட்டிங் குகள்
அழகானவை.
இளையராஜாவின் பாடல்கள்
பேசப்பட்டப் போது
இவரது இசையும் ரசிக்க வைத்தது.
ரஜினி படங்கள் ரீலிஷான போது
இவரது படங்களும் போட்டியிட்டு
வெற்றி பெற்றது.



சினிமாவில் இன்று வரை கதாநாயகிகளை தொடாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான். தங்கச்சி ஃ தங்கச்சி என்று தங்கச்சிகளை தங்கமாக தாங்கியது இவர் படததில்தான்.
தனது படங்களின் பெயர் எழுத்துக்கள் ஒன்பதில் முடியும் சென்டிமெண்ட் இவருக்கு உண்டு.
தனது மகன் சிம்புவை வைத்து
எங்க வீட்டு வேலன் என்ற படம் அன்றே
ஹிட் அடித்த வரலாறு.
சிறந்த தன்னம்பிக்கைக்கு இவரே உதாரணம்.
அதிக திறமையும் அடி சறுக்கும்
என்பதற்கு இவர் எடுத்த வீராசாமியே சாட்சி.
சினிமாவில் இருந்தாலும் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.
தாடியோடு நடித்து
சினிமாவில் அழகு தேவையில்லை
திறமை போதும் என்பதற்கு இவரே உதாரணம்
1980களில் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால் டி.ஆருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.

ஒரு நவீன அலையை உண்டாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் டி.ஆர்.
வேண்டுமானால், 80களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் ஒருதலை ராகம் படம் பற்றிக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாகச் சொல்வார்கள்.
1980-ல் வெளியான ஒருதலை ராகம் படத்தை டி.ஆர். இயக்கினாலும் தயாரிப்பாளருடனான மோதலால் படத்தில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.
பட வாய்ப்பு தரும்போது நான் தான் படத்தை இயக்குவேன், கதை, வசனம் உன் பொறுப்பு என்று தயாரிப்பு இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு டி.ஆர். தான் முழுப் படத்தையும் இயக்கியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட் - ராஜசேகரும் பட உருவாக்கத்தில் நிறைய பங்களிப்பு அளித்திருக்கிறார்கள்.
ஆனால் படம் வெளியானபோது தயாரிப்பு, இயக்கம் இ.எம். இப்ராஹிம் என்றுதான் இருந்தது. ஆனால் காலம், ஒருதலை ராகம் படத்தின் இயக்கத்துக்கான பொறுப்பை டி.ஆருக்கே வழங்கியது.
இதன் இன்னொரு சர்ச்சை, இசையமைப்பிலும் ஏற்பட்டது.
படப்பிடிப்பு முடிந்தபிறகு படம் வெளியாவதில் நிறைய தாமதம் ஏற்பட்டது. பணப் பிரச்னைகளால் திட்டமிட்ட தேதிகளில் வெளியிட முடியாத நிலை உருவானது.
நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவியூ காட்சிகளில் படத்தைப் போட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். ஆனால் நம்பிக்கையாக யாரும் நாலு நல்ல வார்த்தைகளைக் கூறவில்லை.
ஆனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படம் வெளியான பிறகு ரசிகர்கள் படத்தை அள்ளிக்கொண்டார்கள்.
கல்லூரி இளைஞர்கள் எப்படியொரு படத்துக்காகத் தவம் கிடந்தார்களோ அப்படியொரு படமாக அமைந்தது ஒருதலை ராகம்.
முழுக்க முழுக்கப் புத்தம் புதிய படையுடன் களமிறங்கிய 26 வயது டி.ஆர்., கல்லூரி இளைஞர்களிடம் முதல் படத்திலேயே பேராதரவைப் பெற்றார்.
சொல்ல முடியாத காதலையே படத்தின் மையக்கருவாக வைத்து கதையை உருவாக்கியிருந்தார்.
கதாநாயகன் தங்களுடைய தயக்க உணர்வுகளைப் பிரதிபலித்ததால் இளைஞர்கள் படத்தைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.
ரவீந்தர் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்.
படம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்த மற்றொரு காரணம் - பாடல்கள்.
வாசமில்லா மலரிது, இது குழந்தை பாடும் தாலாட்டு என பாடல்களும் இன்னொரு பக்கம் ரசிகர்களை ஈர்த்தது.
காதல் படமென்றாலும் அனைத்து பாடல்களையும் ஆண் பாடகர்களே பாடினார்கள்.
மயிலாடுதுறையில் படமாக்கப்பட்ட இந்தப் படம் சோகமான முடிவைக் கொண்டிருந்தாலும் அது படத்துக்குக் காவியத்தன்மையை அளித்தது.
புதுமுகங்கள் பங்களித்த படம் என்பதால் முதல் வாரம் குறைவான வரவேற்பே கிடைத்தது. ஆனால் முதல் வாரத்தில் படம் பார்த்த கல்லூரி இளைஞர்கள், படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வந்ததால் அதிகத் திரையரங்குகளில் படத்தைத் திரையிட ஆரம்பித்தார்கள்.
முதல் வாரத்தைத் தாண்டிய பிறகு இதன் ஓட்டத்தை அடுத்த ஒரு வருடத்துக்கு யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. படக்குழுவினர் தமிழகமெங்கும் சென்று படத்தை மேலும் விளம்பரம் செய்தார்கள்.
பட வெற்றியில் ஒரு சோகமும் உண்டு.
படம் வெளிவந்தபோது திரையரங்குக்குச் சென்று பார்க்கக் கையில் காசில்லை. நண்பர் ஒருவர் மூன்றாம் நாளன்று அழைத்துச் சென்றுள்ளார்.
படத்தை இயக்கியவர் என வேறொருவரின் பெயர், இசை - ஏ.ஏ. ராஜ் - டி. ராஜேந்தர் என்றெல்லாம் டைட்டில் கார்டில் வர, கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார் டி.ஆர். அந்தக் காயத்தால் தான் இன்றுவரை அந்த படத்தைப் பார்க்கவில்லை என்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த ரூபாவுக்கு ஒருதலை ராகம் ரூபா எனப் பெயர் கிடைத்தது. இதில் பவ்யமான பெண்ணாக நடித்ததால் பிறகு அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அதேபோன்ற வேடங்களே கிடைத்தன.
அடுத்தப் பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரையுலகை இவர் ஆளப் போகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது ஒருதலை ராகம் படம்.
இந்தப் படத்தில் நடித்த உஷாவைப் பிறகு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் டி.ஆர்.
இன்னொரு ஒருதலை ராகத்தை எப்போது நீங்கள் தருவீர்கள்? என்று டி.ஆரிடம் ஒருமுறை கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் -
ஒரு பெண் ஒருமுறைதான் பூப்படைவாள்.
2-வது படமாக வசந்த அழைப்புகள் எடுத்தார். இதற்கு இயக்கம் டி.ஆர். தான். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை டி.ஆரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
ஒருதலை ராகம் படத்தின் இயக்கம், இசை குறித்து ஏராளமான சர்ச்சைகள் உருவாக்கியதால் அவற்றையெல்லாம் உருவாக்கியது நான் தான் என உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் டி.ஆருக்கு ஏற்பட்டது.
அதுதான் இரயில் பயணங்களில். ஒருதலை ராகம் படத்தை நகல் எடுத்தது போலவே அமைந்தது.
அந்தப் படத்தின் திரைமொழியும் யதார்த்தமான நடிப்பும் இதில் அமையாவிட்டாலும் வணிக அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் டி.ஆர்.
ராஜீவ், ஸ்ரீநாத், ஜோதி நடித்த இந்தப் படம், ஒருதலை ராகம் போலவே அமைந்ததால் அதற்கு அளித்த வரவேற்பையே இதற்கும் வழங்கினார்கள் ரசிகர்கள். வசந்த காலங்கள்..., வசந்தம் பாடி வர வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா போன்ற பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தார் டி.ஆர்.
2-வது பெரிய வெற்றியை அடைந்ததால் டி.ஆரின் பெயர் திரையுலகில் அழுத்தமாகப் பதிந்தது. ஒருதலை ராகம் வெற்றி தனக்குத்தான் சொந்தம் என்பதை இந்த வெற்றியின் மூலம் உணர்த்தினார்.
கல்லூரி இளைஞர்களுக்காகப் படமெடுத்து வந்த டி.ஆர்., சீக்கிரமே தனது பாதையை மாற்றிக்கொண்டு பெண்களையும் கவர ஆரம்பித்தார்.
பல பொறுப்புகளைச் சுமந்துகொண்டாலும் வேகம் மட்டும் குறையவில்லை. தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா,
உறவை காத்த கிளி என முதல் படத்தை இயக்கியதிலிருந்து அடுத்த நான்கு வருடங்களுக்குள் கடகடவென படங்களை இயக்கினார்.
உறவை காத்த கிளி படத்தில் ஜீவிதாவை அறிமுகம் செய்தார். பத்மா என்கிற அவருடைய பெயரை ஜீவிதா என மாற்றினார்.
இதில் தான் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1983-ல் இரு சூப்பர் ஹிட் படங்களை அளித்தார் டி.ஆர்.
கங்கா, நளினி, டி.ஆர். நடித்த படம் - உயிருள்ளவரை உஷா.
சிவகுமார், நளினி, ஆனந்த்பாபு நடித்த படம் - தங்கைக்கோர் கீதம்.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார் டி.ஆர்.
இந்த இரு படங்கள் மற்றும் அதன் பாடல்களின் வெற்றிகள் டி.ஆரின் புகழை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றன.
தமிழில் ஒரு வருடம் வரை ஓடிய உயிருள்ள வரை உஷா படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு அங்கு இரு வருடங்கள் ஓடியது.
எப்படி இத்தனை திறமைகள் இவரிடம் உள்ளன, எல்லா வேலைகளையும் செய்ய இவருக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் வியக்க வைத்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரஜினிக்கும் கமலுக்கும் பெரிய ரசிகராக இருந்தார் டி.ஆர். ஆனால் 80களின் மத்தியில் அவர்களுக்கு இணையான புகழை தானும் அடைந்தார்.
அடுத்த பெரிய வெற்றி 1986-ல் மைதிலி என்னை காதலி படத்தில் கிடைத்தது.
சங்கர் - ரூபா (ஒருதலை ராகம்), ஸ்ரீநாத் - ஜோதி (ரயில் பயணங்களில்),
கங்கா - நளினி (உயிருள்ளவரை உஷா),
சிவகுமார் - நளினி (தங்கைக்கோர் கீதம்)
என பலவிதமான ஜோடிகளை டி.ஆரின் படங்களில் பார்த்த ரசிகர்களுக்கு டி.ஆர். - அமலா ஜோடி மிகவும் வித்தியாசமாக அமைந்தது.
டி.ஆர். அமலாவை விரும்பாவிட்டாலும் அமலாவின் கவித்துவமான காதலை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள்.
பரதநாட்டியம் தெரிந்தவர் தான் கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்பதால் சென்னை கலாஷேத்ராவில் பயின்று கொண்டிருந்த அமலாவைப் பார்த்த நொடியில் தேர்வு செய்தார்கள் டி.ஆரும் உஷாவும்.
டி.ஆர்., அமலா, ஸ்ரீவித்யா நடித்த இந்தப் படத்தில் அழகான காதல் காட்சிகளும் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அதற்குக் கிடைக்கும் ஆதரவால் திரையுலகை அசைத்துப் பார்த்தார் டி.ஆர்.
1987-ல் டி.ஆர் அளித்த இன்னொரு சூப்பர் ஹிட் படம் - ஒரு தாயின் சபதம்.
டி.ஆர்., சாரு ஹாசன், ஸ்ரீவித்யா நடித்த இந்தப் படத்துக்குப் பெண்களின் ஆதரவு வழக்கத்தை விடவும் அதிகமாக இருந்தது. வழக்கறிஞர் வேடத்தில் அடுக்குமொழி வசனங்களைப் பேசி அசத்தினார் டி.ஆர்.
1987-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது தைரியமாக ஒரு தாயின் சபதம் வெற்றி விழாவுக்கு கருணாநிதியை அழைத்தார் டி.ஆர்.
அப்போது அவர் திமுக உறுப்பினராக இருந்தார்.
அந்த விழாவில் 33 வயது டி.ஆரை, என் தம்பி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று பாராட்டினார் கருணாநிதி.
1987-ல் எல்லாம் ரஜினி, கமல் எல்லாம் உச்சத்தில் இருந்தார்கள். இன்னொரு பக்கம் மோகன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துக்கொண்டு வந்தார்.
தமிழ் சினிமாவே பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது.
இந்த மாற்றங்களில் டி.ஆரின் படங்களுக்கும் ஓர் இடம் இருந்தன.
ரஜினி, கமல் படங்கள் வெளிவரும்போது இருந்த எதிர்பார்ப்பு டி.ஆருக்கும் இருந்தது.
தனக்கென்று ஒரு வழி அமைத்துக்கொண்டு எந்த விமர்சனங்களையும் சட்டை செய்யாமல் தனக்குத் தோன்றிய கதையைப் படமாக எடுத்து அதை மக்களிடமும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தார் டி.ஆர்.
தாய்மார்களின் ஆதரவை மேலும் வலுவாக்குவதற்காக டி.ஆர். இயக்கிய மற்றொரு படம் -
" என் தங்கை கல்யாணி."
டி.ஆர்., சுதா, ஸ்ரீவித்யா, எஸ்.எஸ். சந்திரன் நடித்த படம். தங்கை மீது மிகுந்த பாசம் வைப்பதால் ஓர் அண்ணன் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர்ச்சிகரமான காட்சிகளால் ரசிகர்களை ஈர்த்தார்.
பாடல்கள் வழக்கம் போல ஹிட்டாகின. டி.ஆரிடம் வழக்கமான மற்றொரு சூப்பர் ஹிட் படம்.
டி.ஆரின் செட்டுகளும் 80களில் விவாதங்களைக் கிளப்பின.
ஒவ்வொரு பாடலுக்கு டி.ஆர். எப்படி செட் அமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
யதார்த்த வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களுடன் திரையரங்குக்கு வரும் ரசிகர்களுக்கு செட்கள் மூலம் கற்பனை உலகத்தைக் காட்டவேண்டும் எனப் பிரியப்பட்டு அதில் வெற்றியும் அடைந்தார் டி.ஆர்.
என் தங்கை கல்யாணி படத்தின் இன்னொரு சிறப்பு, இதில்தான் வடிவேலு நடிகராக அறிமுகமானார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வடிவேலுவை அழைத்து சிறிய காட்சி ஒன்றில் நடிக்கவைத்தார் டி.ஆர்.
இதற்குப் பிறகுதான் என் ராசாவின் மனசிலே படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் வடிவேலு.
டி.ஆரின் மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா ஆகிய படங்களிலும் வடிவேலு நடித்துள்ளார்.
90களில் தமிழ் சினிமாவின் காட்சிகள் மாறின. ஜெண்டில்மேன், ரோஜா போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றிகள் புதிய பாதையை உருவாக்கின.
இந்தக் காலக்கட்டத்தில் டி.ஆரின் கவனமும் தன்னுடைய வெற்றியை விடவும் சிம்புவைக் கவனமாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதில்தான் இருந்தது.
மேலும் 80களில் வெளிவந்த டி.ஆர். பாணியிலான படங்கள் 90களில் வேறு வடிவம் கொண்டன.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, நடிப்பு, பாடல்கள், இசை என பல துறைகளையும் ஒரு கை பார்த்த டி.ஆர், படத்தொகுப்பை மட்டும் விட்டுவிட்டார்.
அதற்கு அவர் அளிக்கும் விளக்கம் படத்தொகுப்பாளரின் வேலை என்பது ஓர் அறைக்குள் அடைந்து கிடக்கவேண்டும்.
என்னால் அப்படி இருக்கமுடியாது. இசையமைக்கும்போது கூட நடந்துகொண்டே இசையமைப்பேன்.
எனக்கு படத்தொகுப்பு பிடிக்கும் என்றாலும் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்பியதால் அந்த வேலையைச் செய்யவில்லை என்கிறார்.
1986-ல் தேசிய விருது பெற்ற கன்னட இயக்குநர் கிரீஷ் காசரவல்லி, டி.ஆர். படம் எடுக்கும் விதம், அவருடைய வெற்றிகள் எல்லாம் கேள்விப்பட்டு டி.ஆரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
இதை நடிகர் சாருஹாசன் டி.ஆரிடம் தெரிவித்தபோது மறுத்துள்ளார்.
எல்லோரும் ஒரு வழியாகப் போய்க்கொண்டிருப்பார்கள்.
அந்த விதிமுறைகளை மீறி வெற்றி பெறுபவன் மீது கோபம் இருக்கும். அந்தக் கோபத்தை அடக்கி வைத்திருப்பார்கள்.
நாம் கால் தடுமாறும்போது நம் காலை வாரிவிடுவார்கள். என்னை வைத்துப் படம் எடுத்தால் அது எனக்கே எதிராகத் திரும்பிவிடும் என்று விளக்கம் சொல்லி கோரிக்கையை மறுத்துள்ளார்.
டி.ஆர். பற்றி சாரு ஹாசன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
படப்பிடிப்பில் ஒரு துண்டுக் காகிதம் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக்கொண்டு வரும் இயக்குநர் இவரைத் தவிர உலக அளவில் யாரும் இல்லை.
1980களில் இளையராஜா, வைரமுத்து, வாலி என இசையுலகில் புதுக்கூட்டணிகள் அசத்திக்கொண்டிருந்தபோது இவர்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாமல் தனி ஆளுமையாக உருவாகினார் டி.ஆர்.
எளிமையான அதேசமயம் அர்த்தமுள்ள வரிகள் இளைஞர்களை மிகவும் ஈர்த்தன. இசையிலும் கலக்கியதால் இசை வாய்ப்புகளும் டி.ஆரை நோக்கி வந்தன.
இயக்குநராக, நடிகராக, இசையமைப்பாளராக, கதாசிரியராக என டி.ஆர். கை வைத்த எந்தத் துறையிலும் அவருக்குத் தோல்வியே கிடைக்கவில்லை. அதேபோல டி.ஆர். பாடல்கள் என்றால் அதுபற்றி பல மணி நேரம் பேசக்கூடியவர்கள் இன்றைக்கும் உள்ளார்கள்.
ஒருதலை ராகம் படத்தில் இது குழந்தை பாடும் தாலாட்டு, வாசமில்லா மலரிது (எஸ்.பி.பி) பாடல்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன.
முதல் படத்திலேயே எல்லாப் பாடல்களையும் எழுதி இசையமைத்தார். என் கதை முடியும் நேரமிது, நான் ஒரு ராசியில்லா ராஜா (டி.எம்.எஸ்.), அட மன்மதன் ரட்சிக்கணும் (ஜாலி ஆபிரஹாம்), கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்... (பி.ஜெயச்சந்திரன்), கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு... (மலேசியா வாசுதேவன்) என ஏழு பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக மாற்றினார்.
ஒருதலை ராகம் என்பது காதல் படம். அதில் பெண் குரலே இடம்பெறாமல் புதுமை செய்திருந்தார்.
ஒருதலை ராகம் படத்தில் டி.ஆரின் பங்களிப்பில் நிறைய சர்ச்சைகள் உள்ளதால் தன்னுடைய திறமை, வெற்றிகளை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார் டி.ஆர். அதுதான் இரயில் பயணங்களில். வசந்தம் பாடிவர வைகை ஒடிவர (எஸ்.பி.பி.), அமைதிக்குப் பெயர்தான் சாந்தி (டி.எம்.எஸ்.), வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் (ஜெயச்சந்திரன்) என படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகி டி.ஆரின் இசைத் திறமையை மீண்டும் நிரூபித்தன.
பெண் குரலில் ஒரே ஒரு பாடல். வசந்தம் பாடி வர பாடலை ஜானகி பாடியிருந்தார்.
மோகன், பூர்ணிமா நடித்த கிளிஞ்சல்கள் படத்துக்கு இசையமைத்து அதிலும் வெற்றியை நாட்டினார் டி.ஆர்.
விழிகள் மேடையாம் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆனது.
இதன்பிறகு, தான் இயக்காத பல படங்களுக்கு இசையமைத்தார்.
தங்கைக்கோர் கீதம் படத்தில் எஸ்.பி.பி பாடிய தஞ்சாவூரு மேளம், எல்.ஆர். அஞ்சலி பாடிய தண்ணியில மீனப்போல... மற்றும் டி.ஆர். பாடிய தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி போன்ற பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
ரசிகர்கள் தனது இசையையும் பாடல் வரிகளையும் ரசிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு டி.ஆரிடமிருந்து இன்னும் விதவிதமான பாடல்கள் வெளிவந்தன.
உயிருள்ளவரை உஷாவில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய வைகைக் கரை காற்றே நில்லு மற்றும் எஸ்.பி.பி. பாடிய கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்குப் பாடல்கள் ஹிட் ஆகின. ஜானகி இரு பாடல்களைப் பாடினார்.
உறவைக் காத்த கிளியில் 4 பாடல்கள் தான். யேசுதாஸ் பாடிய எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
பூக்களைத்தான் பறிக்காதீர்கள் பாடப் பாடல்களை யாரால் மறக்க முடியும்?
1986-ல் வெளியான இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பூக்களைத்தான் பறிக்காதீர்கள் பாடலை எப்போது கேட்டாலும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்லும்.
1986-ல் வெளியான மைதிலி என்னை காதலி படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
யேசுதாஸ், டி.ஆர். பாடிய அட பொன்னான மனசே, டி.ஆர். பாடிய என் ஆசை மைதிலியே, எஸ்.பி.பி. பாடிய பொன்மானை, தண்ணீரிலே நானும் உந்தன் பாடல்கள் எல்லாம் ரசிகர்களைச் சிலிர்க்க வைத்தன.
யோசித்துப் பாருங்கள், இளையராஜா இசையில் ராஜாங்கம் நடத்திய காலக்கட்டத்தில் தன்னளவில் இன்னொரு பக்கம் ஹிட் பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்துக்கொண்டிருந்தார் டி.ஆர்.
90களில் தேவா எப்படி இசையமைப்பாரோ அப்படி இசையமைத்திருந்தார்.
விஜய்காந்த் நடிப்பில் ராஜசேகர் இயக்கிய கூலிக்காரன் படத்துக்கு. எஸ்.பி.பி. பாடிய வெச்சக்குறி தப்பாது, எஸ்.பி.பி., ஜானகி பாடிய குத்துவிளக்காக பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.
1987-ல் வெளியான ஒரு தாயின் சபதம் படத்தில் சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது, அட காதலிச்சா போதாது, ராக்கோழி கூவையில போன்ற பாடல்களை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தார்கள்.
என் தங்கை கல்யாணி படத்தில் தோள் மீது தாலாட்ட, தங்கச்சிக்கு சீமந்தம், பூ ஒன்று வளர்த்தேன் எனத் தொடர்ந்து ஹிட் பாடல்களை அளித்தார் டி.ஆர். இந்தப் படத்தின் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்தார் டி.ஆர்.
இதற்காக அவருக்கு தங்க இசைத்தட்டு பரிசாகக் கிடைத்தது.
1955/May/09 அன்று பிறந்து
தற்போது 66வயதை கடந்துகொண்டிருக்கும் இவரின் பிள்ளைகள் சிலம்பரசன் (நடிகர் சிம்பு)தற்போது தமிழ்திரைஉலகில் லிட்டில் சுப்பர் ஸ்டார் என அழைக்கபடுபவர்..
மற்றும் குறளரசன்,இலக்கியா ஆகியோரை உள்ளடக்கிய மகிழ்வான குடும்பம்..

No comments:

Post a Comment