Monday, 30 August 2021

CHO AND HIS CINEMA WITH POLITICS

 

 CHO AND HIS CINEMA WITH POLITICS

 


எமர்ஜென்ஸிக்குப் பின்னால் மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி இந்திராவின் தொடர் ஆணவ, அராஜக, சர்வாதிகார, ஊழல் ஆட்சியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஒரு அருமருந்தாக அமைந்திருந்தது. விலைவாசிகள் கட்டுக்குள் வைக்கப் பட்டிருந்தன. ஒழுக்கத்திலும் ஊழல் அற்ற ஆட்சி தருவதிலும் மிகவும் கறாராக இருந்த மொரார்ஜி தேசாயின் தலமையை சோ வெகுவாக ஆதரித்தார்.
எமர்ஜென்சியின் பொழுதே டெல்லி அரசியல்வாதிகளில் சோ பிரபலமாகியிருந்தார். இளம் துருக்கியர் சந்திரசேகர், பிரதமர் மொரார்ஜி என்று பலரும் சோவின் நண்பர்களாக ஆகியிருந்தனர். ஆட்சி கவிழ்க்கப் பட்ட பிறகு மொரார்ஜி தேசாய் சென்னை வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு எவரும் வரவில்லை. பின்னர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி சோவுக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்த பின்னர் சோ வந்து அவரை அழைத்துச் சென்றார். டெல்லி அரசியல்வாதிகள் பலரையும் தமிழ் நாட்டு வாசகர்களுக்கு சோவின் துக்ளக் மூலமாகவே அறிமுகம் ஆனார்கள். வஞ்சனைகளும், சூதுகளும், சகுனித்தனங்களும், குழிபறித்தலும்,ஊழல்களும், விலை போதல்களும் நிறைந்த இந்தியாவின் மோசமான வருடங்கள் அவை. அனைத்தையும் ஒன்று விடாமல் தொடர்ந்து விரிவாக துக்ளக்கில் எழுதி வந்தார். சரண்சிங், ஜகஜீவன்ராம் போன்ற சந்தர்ப்பவாதிகளின் மோசமான பக்கங்கள் தெரிய வந்தன. ஜனதா கட்சியில் இருப்பவர்கள் எவரும் ஆர் எஸ் ஸில் இருக்கக் கூடாது என்ற பிரச்சினையை தூண்டி விட வைத்து மொரார்ஜி தலைமையிலான மத்திய அரசை இந்திரா கவிழ்க்க வைத்தார். மொரார்ஜி அரசின் வெளியுறவு அமைச்சராக வாஜ்பாயியும் தகவல் தொடர்பு அமைச்சராக அத்வானியும் இருந்தனர். இருவரும் ஆர் எஸ் எஸ்


உறுப்பினர்களாக இருப்பதைக் கை விட மாட்டோம் என்று பிடிவாதமாக மறுத்து விட்டனர். சரண்சிங்கின் பிடிவாதத்தினாலும் சரண்சிங், ஜகஜீவன்ராம் போன்றோர்களின் குடுமிப் பிடி சண்டைகளினாலும், அவசரப் பட்டு இந்திரா கைது செய்யப் பட்டதினாலும், சரண்சிங் இந்திராவின் சதித் திட்டங்களினாலும் ஒரு நல்ல ஆட்சியை மொரார்ஜி அளிக்க முயன்றும் அது முடியாமல் பாதியிலேயே கவிழ்ந்தது. வாராது வந்த ஒரு நல்ல ஆட்சி கவிழ்க்கப் பட்டது. இதனால் அளவிடாத விரக்திக்கு சோ உள்ளானார். இப்படியாக ஜனதா கட்சியின் அற்ப ஆயுள் முடிந்து பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் பழைய ஜனசங்கம் புது உருவம் எடுத்து இரண்டு எம்.பிக்களுடன் தன் கணக்கைத் துவக்கியது.
cho_thuglaq_cartoon_on_indira_gandhiஎண்பதுகளின் முற்பகுதியில் மத்தியில் இந்திராவின் ஊழல் ஆட்சியும் எண்பதுகளின் நடுவே மாநிலத்தில் எம் ஜி ஆரின் உடல் நலத்தால் நலிந்த ஆட்சியுமாக ஒட்டு மொத்த இந்தியாவுமே குழப்பத்தில் இருந்தது.
டெல்லியில் இந்திரா அரசின் ஊழல்களையும் சஞ்சய் காந்தியின் அடக்குமுறைகளையும் எதிர்த்து வந்தார். இந்திரா மாநிலத்தில் வென்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஜனதா சர்க்கார்களையெல்லாம் சர்வாதிகாரமாகக் கலைத்தார். ஆந்திராவின் தன் சொந்த செல்வாக்கில் ஜெயித்திருந்த என் டி ராமாராவின் அரசாங்கத்தை பாஸ்கர ராவ் என்ற ஒரு அடியாள் மூலமாக கலைத்தார். என் டி ஆருக்கு நெஞ்சு வலி வந்தது. மீண்டும் கடும் போராட்டங்களுக்குப் பிறகு என் டி ஆரின் அரசு அமைய சோ கடுமையாகப் பாடு பட்டார். என் டி ஆருடன் கூடவே இருந்து அங்கு நடந்த அநியாயங்களை இந்திராவின் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடினார். என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அந்த போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக சோவின் செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது
அதே சமயத்தில் ஜனதா கட்சியைத் தமிழ் நாட்டில் சோ பிரபலப் படுத்துவதில் மும்முரமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியில் சோ சேர்ந்தே விட்டார். அனேகமாக சோஉறுப்பினராக சேர்ந்த ஒரே கட்சி மொரார்ஜி தலமையிலான ஜனதா கட்சியாகவே இருக்கும். சோவைப் பின்பற்றி நானும் அதில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்தேன். இந்திரா சரண்சிங் சதியால் மொரார்ஜி தேசாய் கவிழ்க்கப் பட்ட பொழுது சோ ஜனதா ஆட்சியை மீட்க்க மிகவும் பாடு பட்டார். 1980ம் வருடம் தமிழ் நாட்டில் ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்பொழுது சோ ஜனதா கட்சிக்காக கடும் பிரசாரம் செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஜனதா கட்சியில் இருந்து பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் போன்ற பெரிய தலைவர்கள் யாவரும் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் பக்கம் தாவி விட்டனர். அப்பொழுது பா.ராமச்சந்திரன் தன்னுடன் சத்தியமூர்த்தி பவனையும் காங்கிரஸுக்கு அர்ப்பணித்ததினால் அவருக்குக் கூலியாக கேரள மாநிலத்தின் ஆளுனர் பதவி வழங்கப் பட்டது. நெல்லை ஜெபமணி மற்றும் தமிழருவிமணியன் மட்டுமே தமிழக ஜனதாவில் மீதம் இருந்தனர். இறுதி வரை நெல்லை ஜெபமணி மட்டுமே அந்தக் கட்சியில் தொடர்ந்தார். பின்னர் அந்தக் கட்சியின் அருமையான சின்னமான ஏர் உழவன் சின்னத்தை சுப்ரமணிய சுவாமி எடுத்துக் கொண்டு இப்பொழுது அவரும் அந்தக் கட்சியை பாரதிய ஜனதாவில் இணைத்து விட்டார்.
தமிழ் நாட்டில் சோ தொடர்ந்து எம் ஜி ஆர், கருணாநிதி இருவரையுமே கடுமையாக எதிர்த்து வந்தார். மாற்றாக ஜனதா கட்சியை முன்னிறுத்தி வந்தார். எம் ஜி ஆரின் அனைத்து கோமாளித்தனங்களையும் சோ கடுமையாகவே விமர்சித்து வந்தார். மாநிலத்தில் எம் ஜி ஆரின் உடல் நிலை சீர்கெட்டு அவர் அமெரிக்காவிலும் மீண்டும் தமிழ் நாட்டில் மோசமான உடல்நிலையோடும் அதிகாரிகளால் நடத்தப் படும் ஒரு ஆட்சியாக பேருக்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கும் முன்பாகவே எம் ஜி ஆரின் இந்திராவின் ஆதரவு காரணமாக தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு பெருகியிருந்தது. பிரபாகரனுக்கும் பத்மநாபாவுக்கும் துப்பாக்கி சண்டைகள் தமிழ் நாட்டில் நடக்கும் அளவுக்கு சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிப்புகள் நடக்கும் அளவுக்கு அவர்கள் சுதந்திரமாக உலவி வந்தார்கள். தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர். ஒட்டு மொத்தத் தமிழ் நாடே ஈழத்தமிழர் ஆதரவு என்னும் மாய வலையில் சிக்கியிருந்தது.
மத்தியில் இந்திரா மறைவுக்குப் பின்னர் ராஜீவ் ஆட்சிக்கு வந்த பொழுது சோ அவரை இந்திரா அளவுக்கு எதிர்க்கவில்லை. ராஜீவும் சோவுடன் சுமுகமான உறவையே பேணி வந்தார். ஈழத்தமிழர் பிரச்சினை உட்பட சோவிடம் அவர் கலந்தாலோசித்தார். ராஜீவின் பிற்கால ஊழல்களை துக்ளக்கில் வெளியிட்ட போதிலும் ராஜீவிடம் ஓரளவுக்கு மென்மையாகவே சோநடந்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். 1987ம் வருட இறுதியில் எம் ஜி ஆர் மறைவும் தொடர்ந்து ராஜீவின் தோல்வியும் மீண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் குழப்பமான ஒரு அரசியல் சூழலை ஏற்படுத்தின. அந்த சமயத்தில் போஃபர்ஸ் ஊழலுக்கு மத்தியிலும் மத்தியில் ராஜீவ் அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லது என்று சோ விரும்பினார். ராஜீவை எதிர்த்து தனிக் கட்சி துவங்கியிருந்த வி பி சிங்கை ஆரம்பம் முதலாகவே சோ கடுமையாக எதிர்த்து வந்தார். அவரை என்றுமே சோ நம்பியதில்லை. பல தலைவர்கள் மீதான சோவின் அவநம்பிக்கைகளும் எதிர்காலம் குறித்த் அச்சங்களும் சற்று காலம் தாழ்ந்தே மக்கள் உணர ஆரம்பித்தனர். அவர் ஒரு அரசியல் தீர்க்கதரிசி என்பதை மீண்டும் மீண்டும் அவர் நீரூபித்து வந்தார்.
“தமிழகத்தில் கூர்மையான அரசியல் விழிப்புணர்வையும் ஜனநாயக சிந்தனைகளையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய பிதாமகர் சோ ராமசாமி மறைந்து விட்டார். இந்திய தேசிய உணர்வையும் இந்துமதப் பற்றையும் சமரசமின்றி ஊடகங்களில் வெளிப்படுத்தியவர். நவீன அரசியல் அங்கதத்தின் அரிச்சுவடியைத் தமிழனுக்குக் கற்றுக் கொடுத்தவர். பலதுறைகளில் புலமை பெற்றிருந்த அறிஞராக இருந்தும் சாமானியனுக்கும் புரியும்படியான எளிமையுடன் பேசியும் எழுதியும் தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைத் திறனை மேம்படுத்தியவர். சாணக்கியரும் நாரதரும் வசிஷ்டரும் விதுரரும் இணைந்தது போன்ற ஒரு மகத்தான ஆளுமை. அவரது மறைவுக்கு இதயபூர்வமான அஞ்சலி”.
– ஜடாயு, ஃபேஸ்புக்கில்.
ராஜீவ் ஆட்சிக்கு வந்தவுடன் ஷா பானு வழக்கு வந்தது. இந்திராவின் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில் ராஜீவின் காங்கிரஸ் கட்சிக்கு 3/4 மெஜாரிட்டி இருந்தது. 1985ம் ஆண்டில் ஷா பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஷா பானுவுக்கு ஆதரவாக ஷரியா சட்டம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. அலகாபாத் கோர்ட் தீர்ப்புக்குப் பின்னால் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தது போன்ற ஒரு பெரும் தவறை பார்லிமெண்ட்டில் தன் அசுர பலத்தைக் கொண்டு ராஜீவும் செய்தார். இந்திய அரசியல் சட்டத்தில் முஸ்லீம் பெண் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு ஜூவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை நிராகரித்தார். முஸ்லீம்களுக்கு ஆதரவாக அவர்களின் ஓட்டுக்காக அரசியல் சட்டத்தை அவர் மாற்றத் துணிந்தது இன்னும் இரு பெரும் பூதங்களை உருவாக்கி விட்டது. ஒன்று ராஜீவுக்கு எதிராக மண்டல் கமிஷன் சிபாரிசுகளை அமுல் படுத்தக் கோரி வி.பி.சிங் நாடு முழுவதும் பிற்பட்டவர்களைத் தூண்டி விட்டு ஒரு போராட்டத்தைத் தூண்டினார். அதை எதிர் கொள்ளவும் இந்துக்களின் ஓட்டுக்கள் ஜாதி ரீதியாகப் பிரிவதைத் தடுக்கவும் பாப்ரி கும்முட்ட பிரச்சினையை பி ஜே பி கையில் எடுத்தது. வலுவான மெஜாரிடி இருந்தும் தனது இஸ்லாமிய ஆதரவு அரசியலினாலும் பின்னாளில் பெரும் ஊழல்களை மேற் கொண்டதினாலும் ராஜீவ் செல்வாக்கை இழந்தார். இவை யாவும் 1986 – 89 கால கட்டங்களில் நடந்து கொண்டிருந்தன. மீண்டும் துக்ளக் ராஜீவின் சட்ட திருத்தத்தைக் கடுமையக எதிர்த்தது. முஸ்லீம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இந்துக்களைக் கிள்ளி விட்ட ராஜீவ் ராம ஜன்ம பூமியில் மீண்டும் சிலைகளை வைப்பதை அனுமதித்து அந்தப் பக்கம் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.
இரண்டு முடிவுகளுமே மிகப் பெரும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஒரு பூகம்பம் வெடிக்கக் காத்திருந்தது. ராஜீவ் மாலத் தீவில் நடந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை இந்திய ராணுவம் கொண்டு அடக்கியதும் அமைதிப் படைகளை இலங்கைக்குள் அனுப்பியதும் புலிகளிடத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது. இலங்கை அமைதி ஒப்பந்தம், அமைதிப் படையை அனுப்பியது, விமானங்கள் மூலம் தமிழர்கள் பகுதியில் உணவு போட்டது எல்லாம் உருவாக்கியிருந்த ஆரம்ப கால ஆதரவுகளை தமிழ் நாட்டின் பிரிவினைவாத திராவிட இயக்கங்களும் தி மு கவும் கலைத்தனர். ராஜீவின் இலங்கை முடிவுகளை சோ ஆதரித்து வந்தார். தமிழ் நாட்டின் பிரிவினைவாத சக்திகளை அடையாளம் காட்டி வந்தார். மத்தியில் வி பி சிங்கின் அரசியலைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 89ம் வருட தேர்தலில் ராஜீவ் தோல்வி அடைந்து இந்தியாவில் மீண்டும் ஒரு குழப்பமான சூழல் உருவாகியது. வி பி சிங் என்னும் சதிகாரனின் ஒரு தீய சக்தியின் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்தக் காலக் கட்டங்களில் மத்திய அரசியலிலும் சரி மாநில பிரச்சினையிலும் சரி, இலங்கைப் பிரச்சினையிலும் சரி சோ தீவீரமாக செயல் பட்டு வந்தார். மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்.
1989 முதல் 90ம் வருடம் வரை இந்தியா மீண்டும் ஒரு பெரும் சூறாவளியில் சிக்கித் தவித்து வழி தெரியாத குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழம்பிய சூழலில் ஓரளவுக்கு அரசியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து தனது துக்ளக் மூலமாக சோ ஒரு தெளிவினை அளித்துக் கொண்டேயிருந்தார். பொருமிக் கொண்டிருந்த அனைத்து எரிமலைகளும் ராஜீவின் அனைத்து தவறுகளின் விளைவுகளும் ஒன்றின் பின் ஒன்றாக வெடிக்க ஆரம்பித்திருந்தன. சோவின் வேலை கூடுதலாகிக் கொண்டே போயிருந்தது. வி பி சிங்கின் சூழ்ச்சியினால் அமுல் படுத்தப் பட்ட ரிசர்வேஷனும், ராஜீவின் ஓட்டு ஆசையினால் ஷா பானு வழக்கினால் செய்யப் பட்ட சட்ட திருத்தமும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்க்கு உயிர் ஊட்டின. இவை எல்லாமே 89-91க்குள் கனன்று வெடித்தன. வி பி சிங்கின் சூழ்ச்சிகளைக் கண்டு பொறுக்காத பா ஜ க அவரது அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியது. ராஜீவ் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையிலான அரசு உருவானது. வி பி சிங்கின் பிரிவினைவாத அரசியலைக் கடுமையாக எதிர்த்து வந்த சோ சந்திரசேகர் தலைமையிலான அரசு உருவாவதில் உதவினார். சந்திரசேகர் சோவின் நண்பருமாவார். ராஜீவும் அந்தக் குழப்பமான சூழலில் சோவின் கருத்துக்களுக்கு செவி மடுத்தார். தமிழ் நாட்டில் எம் ஜி ஆர் மறைவுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவும் ஜானகியும் பிரிந்து நிற்க மீண்டும் தி மு க ஆட்சிக்கு வந்தது. பல வருடங்களுக்குப் பின்னால் ஆட்சியை ருசிக்கும் கருணாநிதி பழைய ஊழல்களைத் தொடர்ந்தார். தமிழ் நாட்டை புலிகளிடம் அடகு வைத்தார். தமிழ் நாடு மற்றொரு காஷ்மீராகும் சூழலை அடைந்து கொண்டிருந்தது. சோ அதை மிகத் தீவீரமாக எதிர்த்து வந்தார். இந்தியாவின் ஒற்றுமைக்காக கருணாநிதி அரசு கலைக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த சமயத்தில்தான் தொடர்ந்து பல பயங்கரமான சம்பவங்கள் நடந்தன.
(தொடரும்)
1975ல் சோவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் சோவும் ஜெயலலிதாவும் பிரதான கதாபாத்திரங்களாக நடித்தனர்.
1975ல் சோவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் சோவும் ஜெயலலிதாவும் பிரதான கதாபாத்திரங்களாக நடித்தனர்.

No comments:

Post a Comment