Monday, 12 April 2021

S.V.RAMDASS ,VILLAIN ACTOR BORN 1934 AUGUST 23

 


S.V.RAMDASS ,VILLAIN ACTOR 

BORN 1934 AUGUST 23



S.V.ராமதாஸ்-வயது-83. பழம்பெரும் நடிகர்.தமிழ், தெலுங்குப் படங்களில் வில்லனகவும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். கொஞ்சும் சலங்கை, ஆசைமுகம், படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், தங்கை, திருடன், வசந்த மாளிகை, கழுகு, இராணுவ வீரன், மூவேந்தர், உயிர் மேல் ஆசை, இதோ எந்தன் தெய்வம், இதயக்கனி, சங்கிலி, கொஞ்சும் குமரி, அறிவாளி, தேடி வந்த லட்சுமி, புன்னகை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். திரையுலகில் பீடி, சிகரெட், மதுப்பழக்கம், பெண் சகவாசம் என்று எந்த கெட்டப் பழக்கத்திற்கும் அடிமையாகாத ஒரு நடிகர் இவர்.


சூப்பர்வைசராகயிருந்து நடிகரானவர் எஸ்.வி.ராமதாஸ். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன்கள் பட்டியலில் எஸ்.வி.ராமதாசுக்கும் ஓர் இடமுண்டு.


அந்த கணீர் குரல், வில்லன்களுக்கே உரிய கம்பீர உடல்வாகு இதெல்லாம் இவரை நிரந்தர வில்லனாக்கியது. இவரது தாய் மொழி தெலுங்கு. 23.8.1934 அன்று ஆந்திராவிலுள்ள சின்ன கிராமம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் பி.ஏ., வரை தமிழில் பட்டப்படிப்புப் பயின்றவர். நடிப்பாசை காரணமாக 20 வயதிலேயே சென்னைக்கு வந்தார். ஹார்பரில் சூப்பர் வைசர் வேலை பார்த்துக் கொண்டே பட வாய்ப்புக்களைத் தேடினார். ஹார்பரில் நடக்கும் நாடகங்களில் இவர் நடித்தார். இதே ஹார்பரில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் நடத்தினார். அதில் இவருக்கு ராமர் வேடம். மனோகர் இராவணன். இந்நாடகத்தை அந்நேரத்தில் ஏவி.எம்மில் சீப் எடிட்டராகயிருந்த பிற்கால இயக்குநர் எம்.வி.ராமன் பார்த்தார். இவரது நடிப்பு அவருக்குப் பிடித்துப்போக ஏவி.எம் தயாரித்த பிரமாண்ட வண்ணப்படமான ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவருக்காக சிபாரிசு செய்து வாய்ப்பு வழங்கினார். அப்படத்தில் ஜெமினிகணேசனின் அப்பாவாக வயதான கெட்டப்பில் நடித்தார். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். இந்தப் படம் வெளிவந்த பிறகு அடுத்த படமுடனே கிடைத்தது. ஜோசப் தளியத் எடுத்த படமான விஜயபுரி வீரன் படமே அது.இப்படம் ரசிகர்களிடையே இவரை அடையாளம் காணச் செய்தது. அடுத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய வீரத்திருமகன்’ படத்தில் ராஜா தர்பாரில் சர்வாதிகாரியாக-வில்லனாக நடிக்க வைத்தார். ஏவ்.எம்மில் நிறைய செலவு செய்து எடுத்தப்படமான இப்படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும் வீரத்திருமகன் வெளிவந்த நேரத்தில் ஒரு பத்திரிகை இப்படி விமர்சனம் செய்தது. “படத்தில் நடித்தவர்கள் பலர்.நடித்திருப்பவர் ஆந்திர வில்லன் எஸ்.வி.ராமதாஸ்”.இது இவரது நடிப்புக்குக் கிடைத்த பெரிய வெகுமதி.





இவர் நடிகர் எஸ்.ஏ.அசோகனின் உதவியுடன் எம்.ஜி.ஆருடன் அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் இவரது முதல் படம் ‘ஆசை முகம்’.அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் கன்னித்தீவின் சர்வாதியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் 3000/- ரூபாய்.  சிவாஜிகணேசனுடன் ‘கர்ணன்’ படத்தில் தேவேந்திரன் வேடம் ஏற்றார். இப்படத்தில் கர்ணனை ஏமாற்றி கவச குண்டலங்களை வாங்கும் வசனங்களைக் கேட்ட விமர்சகர் ஒருவர் “இனி இவர் ராமதாஸ் இல்லை, குரல் தாஸ்” என்று புகழ்ந்தார். இதுவும் இவரது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாகும்.


எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா, ரிக்‌ஷாக்காரன், குடியிருந்த கோயில், நம்நாடு, நாளை நமதே போன்ற எண்பது படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜிகணேசனுடன் 20 படங்களில் நடித்துள்ளார். இவர் எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும் சில மனநிறைவான படங்கள் உண்டு. அதிலொன்றுதான் டி.ராமாநாயுடு தயாரித்து பி.மாதவன் இயக்கிய “குழந்தை உள்ளம்”.கல்லுக்குள்ளும் ஈரமுண்டு என்பதுதான் கதையின் மூலக்கரு. பேபி ராணி அனாதை குழந்தையாக நடிக்க மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ் மூவரும் கொள்ளைக்காரர்களாக நடித்தனர். கொடூர குணங்கொண்ட 3 கொள்ளைக்காரர்களும் அந்த குழந்தையின் அன்புக்கு எப்படி கட்டுப்படுகிறார்கள் என்கிற அந்தக் கதையில் இவர் ரொம்பவே அனுபவித்து நடித்திருந்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.


இவர் சொந்தமாக நாடக்குழுவும் வைத்திருந்தார். இவர் நடித்த கடைசி படம் சரத்குமாருடன் மூவேந்தர். இதில் சரத்குமாரின் தந்தையாகவும் நம்பியாரின் மகனாகவும் லெட்சுமியின் கணவராகவும் நடித்திருந்தார். இப்படத்தில் எம்.என்.நம்பியாரும் பூச்சி என்ற பெயருடன் இவரும் வரும் காட்சிகளெல்லாம் திரையரங்குகளில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவை ததும்ப நடித்திருந்தார். இராணுவ வீரன் படத்தில் மில் முதலாளியாக நடித்திருந்தார்.


இவர் ”சேவல் கூவுகிறது ஞாயம் பிறக்கிறது” என்ற ஒரு சொந்த படத்தைக் கருப்பு-வெள்ளையில் தயாரித்தார். அப்படம் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த தருவாயில் கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்திற்குப் படங்கள் முற்றிலும் மாறியிருந்த காலம். அதனால் விநியோகஸ்தர்கள் எவரும் திரைப்படத்தை வாங்காததால் திரைக்கு வராமலேயே டப்பாவுக்குள் முடங்கியது. இதனால் பல இலட்சங்களை இழந்து பரிதவித்தார்.


இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டார். அக்காலத்தில் நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், பார்த்திபன் போன்றோர் சென்று பார்த்து வந்தனர். பார்த்திபன் திரைப்படத்தில் நடிக்க வரும் முன் ராமதாஸின் நாடகக்குழுவில் இருந்தார். பார்த்திபன் ரூ-10000/- கொடுத்து உதவியதோடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ராமதாசின் உடல் நிலை குறித்து கடிதமெழுதினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா அதிமுக-வின் சார்பில் ரூ-1,04,000/- உதவியளித்தார். இருந்தும் சிகிட்சை பலனின்றி 08.08.2004 அன்று தனது 83-ஆவது வயதில் காலமானார்.


இராமதாஸிற்கு சந்திரா என்ற மனைவியும் லெட்சுமணசாமி, இராதாகிருஷ்ணன், வேணுகோபால் என்ற 3 மகன்கள். மனைவி சந்திரா 2003-இல் மரணமடைந்துவிட்டார்.


நன்றி: தினத்தந்தி 10.12.2000, 9.08.2004 நாளிட்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பெற்றது.


இராணுவ வீரன் படத்தில் ராமதாஸ் தனித்தும் ரஜனிகாந்துடனும்

No comments:

Post a Comment