Thursday, 1 April 2021

NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO

 


NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO

காதல் மட்டும் முக்கோணம் அல்ல
வாழ்க்கையும் தான்
தேவவிரதன்
''பாரதி... நீங்க இந்த நிறுவனத்தில, 10 வருஷத்திற்கும் மேல வேலை பாக்குறீங்க... பல நிலைகளுக்கு உயர்ந்து, இன்று, உயர்ந்த பதவியில் இருக்கிறீங்க. பேச்சுத்திறமை உள்ளவரும் கூட. அதோடு, இந்த வேலைக்கே உங்கள அர்ப்பணிச்சுட்டது போல், திருமணம் கூட செய்துக்காம தனியா வாழ்றீங்க... நீங்க வந்து பேசினால், எங்க கிளப்பில் உள்ள பெண்கள், ஏன் ஆண்களுக்கு கூட உற்சாகமா இருக்கும்,'' என்று, ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாதாந்திர கூட்டத்தில் பேசுமாறு குட்டிப் பிரசங்கமே செய்தார், அலுவலக நண்பர், வாசன்.
''எதுக்கு சார் இத்தனை ஐஸ் வைக்கிறீங்க... தாராளமாக வந்து பேசுறேன்; என்ன தலைப்புன்னு சொல்லுங்க...''
''கணினி துறையில் பெண்களின் பங்கும், எதிர்காலமும் என்பது பற்றி நீங்க பேசினால் தான் பொருத்தமாக இருக்கும்.''
''சரி... என்னைக்கு, எந்த இடத்தில்?''
''வரும் வியாழக்கிழமை; சென்னை -அடையார் காந்தி நகர் கிளப்பில்!''
''நேரம்?''
''மாலை, 6:30 மணி,'' என்றார், மிகுந்த மகிழ்ச்சியுடன்!
''சரி,'' என்று தலையசைத்தேன், அங்கே எனக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சி பற்றி அறியாமல்!
நான், வசதியில்லாத, தந்தையற்ற, தாய் மட்டுமே உள்ள பெண். பட்டப் படிப்பு முடித்ததுமே, கணினி துறையில் வேலையும், நல்ல சம்பளமும் கிடைத்தது. வயது, 40; திருமணம் ஆகவில்லை; வேண்டுமென்றே, நான் திருமணம் செய்யாமல் இருப்பதாக நினைத்தனர், சிலர். ஒருவகையில் அது நிஜம் தான்; முன்பின் தெரியாத ஒருவனை தேர்ந்தெடுத்து, கழுத்தை நீட்டி, அவனுக்கு ஏற்றார் போல் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஒருவன் வேண்டாம். அது, முடிந்து போன கதை!
இப்போது, என் வாழ்க்கையில் தனிமை இருந்தபோதிலும், அமைதி இருக்கிறது; அதை கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.
மாலையில், 15 நிமிடங்களுக்கு முன்பே, அரங்குக்கு போய் சேர்ந்து விட்டேன். வாசனும், காரியதரிசி மற்றும் இயக்குனர் ஆகியோர், கூட்டம் நடக்க இருக்கும் சிறிய ஹாலுக்கு என்னை அழைத்துச் சென்றனர். 50 பேர் அமரக்கூடிய ஹால் அது; 10 பேர் தான் வந்திருந்தனர். அதில், மூன்று பேர் பெண்கள்; வாசன் மற்றும் இயக்குனர் தவிர, இதர அங்கத்தினர்கள் அனைவரும் இளைஞர்களாகவே இருந்தனர்.
கூட்டத்தில், என் கல்வி, உத்தியோகம், பதவி உயர்வுகள், சாதனைகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை பற்றி குறிப்பிட்ட பின், ''பாரதி ஒரு புதுமைப்பெண்; ஆண்களுக்கு நிகராக எந்த துறையிலும் ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளவர்,'' என்றார், நண்பர் வாசன். அவர் பாராட்டு, கூச்சத்தை ஏற்படுத்தியது.
பின், நான் பேசத் துவங்கினேன்... கணினி துறையில் பொதுவாக உள்ள பிரச்னைகளான வேலை அழுத்தம், குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு படும் சிக்கல்கள், மாறுபடும் வேலை நேரங்கள், உடல்நலம், திருமணம் ஆனவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மகப்பேறு, உடல்நலம், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி என, இந்த வேலையால் உண்டாகும் சங்கடங்கள் பற்றி குறிப்பிட்டு, அவற்றை சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் சில குறிப்புகள் தந்தேன். கூட்டம் முடிவடைந்தது; பலர் என்னிடம் வந்து பாராட்டு தெரிவித்தனர்.
ஒருசில பெண்கள், 'உங்கள் ஆங்கிலப் புலமை மிக அற்புதம்; நீங்க, எங்க லேடீஸ் கிளப்பில் வந்து பேசணும்; உங்க போன் நம்பர் கொடுங்க...' என்று வாங்கிச் சென்றனர்.
கூட்டம் கலைந்து, நிகழ்ச்சியாளர்களிடம் விடைபெற்று வெளியே வந்தபோது, எதிரே அவன்... நான் எவ்வளவோ மறக்க முயன்றும், முடியாமல், என் மனதில் ஆழமாக பதிந்து போனவன்!
வழியை மறிப்பது போல், புன்னகையுடன் நின்றிருந்தான், ரகுராம். திடுக்கிட்டு அவனை பார்த்தேன்.
ஆறு ஆண்டுகள்...
அவனின் அந்த முகமும், தோற்றமும் அதிகம் மாறவில்லை. சற்று பெரிய மனிதத்தனம் மட்டும் முகத்தில் வந்திருந்தது; அதுவும், ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்ததால்!
''பாரதி... என்னை அடையாளம் தெரிகிறதா?'' என்றான். அதே மென்மையான குரல்!
'மனதில் எழுதி வைத்த உருவத்தை மறப்பதென்ன அவ்வளவு எளிதா...' என நினைத்தாலும், எதிர்பாராத இந்த சந்திப்பு, என்னை பேச்சிழக்க செய்திருந்தது.
''ஹலோ... உங்கள தான்; என்ன அப்படியே நிற்கிறீங்க,'' என்று என் பிரமிப்பை பார்த்து, கிண்டல் செய்தான்.
அதிர்ச்சியை சமாளித்து, புன்னகைத்து, ''ரகுதானே... பாத்து எவ்வளவு நாளாச்சு '' என்றேன்.
''பரவாயில்லயே... நினைவு இருக்கிறதே...'' என்று பாராட்டியவன், ''அந்த நாட்கள்ல ஆங்கிலத்துல பிளந்து கட்டியது போன்ற அதே ஆங்கிலப் புலமை... வாவ்...'' என்றான்.
''நீ எங்கே இங்கே?''
''நான், பெங்களூருல இருக்கேன்னு உங்களுக்கு தான் தெரியுமே... என் நண்பன் ஒருவன் இந்த சங்கத்தோட உறுப்பினர்; அவனை சந்திக்க வந்த போது, தான், இந்த மீட்டிங்கிற்கு செல்வதாகவும், என்னையும் உடன் வரச்சொன்னான். பேசப் போவது நீங்க தான்னு தெரிஞ்சவுடன், அட நமக்கு தெரிஞ்சவங்களாச்சே... அதோடு பாத்தும் ரொம்ப வருஷம் ஆச்சேன்னு வந்தேன். எப்படி இருக்கீங்க... ஐஞ்சு வருஷத்துக்கு முன் பார்த்தது போல் அப்படியே இருக்கீங்க,'' என்றான்.
'ஐஞ்சு வருஷம் இல்ல; ஆறு வருஷம், எட்டு மாசம்...' என்று மனதிற்குள் சொல்லி, ''ப்ரீதி எப்படி இருக்கிறா, குழந்தைக?'' என்றேன்.
''நல்லா இருக்கா... ஒரே ஒரு பையன்; நாலு வயசு.''
''ப்ரீதி வேலைக்கு போறாளா?''
''ம்... போறா,'' என்று இழுத்த மாதிரி சொன்னவன், அங்கு வந்த தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான். பின், அவனிடம், ''ஒரு காலத்தில எனக்கு இவங்க பாஸ்... ரொம்ப தெரிஞ்சவங்க... பயங்கர புத்திசாலி. அதான், பேசினத கேட்டாயே... ஐஞ்சு வருஷத்துக்கு பின் பாக்கிறேன்... பாரதி... எங்களோட டின்னருக்கு வாங்களேன்...''என்றான்.
''இல்ல; நான் வீட்டுக்கு போகணும்,'' என்றேன் அவசரமாக!
அதற்குள், அவனின் நண்பன், ''சாரி ரகு... நான் உடனே பேக்டரிக்கு போகணும்; ஏதோ பிரச்னையாம்... நீ இவங்க கூட போ,'' என்றான்.
''பாரதி... நீங்க எனக்கு கம்பெனி கொடுத்துதான் ஆகணும்,'' என்றான் உறுதியாக ரகு!
''வீட்ல அம்மா காத்திருப்பாங்களே...'' என்றேன் சங்கடமாக!
''போன் பண்ணி சொல்லுங்க; ப்ளீஸ், பாரதி, பிகு பண்ணாதீங்க,'' என்றான்.
எனக்கு மனசு துடித்தது; அது மகிழ்ச்சியினாலா, பதற்றத்தினாலா, எதிர்பாராத சந்திப்பினாலா என்று தெரியவில்லை.
ஒரு நிமிடம் யோசித்தேன்; பின், ஒரு முடிவுடன், ''சரி போகலாம்... நீ எங்க தங்கியிருக்கே?'' என்றேன்.
''ஸவேரா.''
''சரி... என் கார்ல போயிடலாம்,'' என்று கூறி, வெளியே வந்தோம்.
''சொல்லுங்க பாரதி... உங்க லைப் எப்படி போகுது... இன்னும் சிங்கிள்... என்ஜாயிங் யுவர் ப்ரீடம்,'' என்றான்.
எனக்கு கத்திக்குத்து பட்டாற்போலிருந்தது. சமாளித்துக் கொண்டேன். அன்று, என்னிடம், தான் ப்ரீதியை காதலிப்பதாக சொன்னதையே தாங்கிக் கொண்டவள் தானே... அடுத்த ஆறு மாதங்களிலேயே திருமணம் செய்து, ரகு - ப்ரீதி இருவருமே, நான் இருந்த நிறுவனத்திலிருந்து விலகி, பெங்களூருவில் வேறு வேலைக்கு சென்றனர். அங்கு சென்றபின், ரகு ஓரிரு மெயில்கள் அனுப்பியதற்கு கூட நான் பதில் தரவில்லை. காரணம், நான், அவனை பார்க்கும் பார்வையில், காதலும், ஏமாற்றமும் தெரிகிறது என்று ப்ரீதி, ரகுவிடம் சொன்னதாகக் கூறியபின், அவன் நட்பைத் தொடர்வதில் என்ன அர்த்தம்!
உண்மை சுடும்; அது, என்னையும் சுட்டது.
ஓட்டலுக்கு சென்று, அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து, உணவுக்கு ஆர்டர் செய்த பின், தன் குடும்பம், வேலை, குழந்தை பற்றி கூறினான், ரகு. தாங்கள் குடும்பத்துடன் சென்ற இடங்கள் என்று மொபைல் போனில் புகைப்படங்களைக் காட்டினான். நான் மவுனமாக, ''ஓ... வெரி நைஸ்... அப்படியா... குட்,'' என்று ஒற்றை சொற்களாக பதில் சொல்லியபடி இருந்தேன்.
அவன் பேசி முடித்த பின், ''ரகு... சந்தோஷமாக தானே இருக்கிறாய்,'' என்றேன் புன்னகையுடன்!
உடனே, மவுனமானான். என் முகத்தை நேராக பார்க்காமல், உணவையே பார்த்தான். அவன் மவுனம் வியப்பை தந்தது.
''ஏய்... என்ன திடீர்ன்னு அமைதியாயிட்டே?''
நிமிர்ந்து, என்னை பார்த்த ரகுவின் முகத்தில், மெலிதாக ஒரு சோகம் படர்ந்திருந்தது.
''என்ன ரகு...'' என்றேன், சற்றே கவலை தோய்ந்த குரலில்!
''நான் சந்தோஷமாக இல்ல...''
இதைக் கேட்டதும், எனக்கு வருத்தமாக இருந்தது; என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஓர் உயர்ந்த உணர்வு; ஒருவர் மீது தோன்றும் காதலின் ஆழம், காலப்போக்கிலோ, பார்வையிலிருந்து விலகுவதாலோ, தொடர்பு அற்றுப் போவதாலோ நீர்த்துப் போகாது என்று நினைப்பவள். ரகு எனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்; அதற்கு காரணங்கள் பல... அவன், என்னை விட இளையவன்; அந்த வகையில், என் காதலை அவனிடம் வெளிக்காட்டியதில்லை. அவன் பேச்சு, பழக்கம், நட்பு இவற்றின் மூலம், அவன் என்னை விரும்புகிறானோ என்ற எதிர்பார்ப்பு உருவானது நிஜம்தான். ஆனால், அவனே, தன் வயதொத்த ப்ரீதியை காதலிப்பதாக கூறியபோது, அதிர்ச்சியாக இருந்தாலும், அது நியாயமானது என்றே முடிவு செய்தேன். என்னுடையது ஒருதலைக் காதல்... அது நிறைவேறவில்லை; அதற்கு அவனை நோவதில் என்ன பயன்!
என்னை சமாளித்து, ''என்ன சொல்றே...'' என்றேன் அழுத்தமாக!
''நான், ப்ரீதிய காதலிக்க ஆரம்பித்த போது, அவள், என்னை உங்க கூட அதிகம் பழக வேணாம்ன்னு சொன்னாள்ன்னு சொன்னேனே... அதாவது, உங்க பார்வையில் காதல் தெரிகிறதுன்னு சொன்னாள்... நான் கூட, 'ரப்பிஷ்' என்றேன்... ஞாபகம் இருக்கா...'' என்று கேட்டான்.
'எப்படி மறப்பேன்... அவள் சொன்னது உண்மை தானே...' என்று மனதில் கூறினாலும், ''ஆமாம்... அதற்கென்ன...'' என்றேன் குரலை சாதாரணமாக வைத்து!
''ப்ரீதி சந்தேக பிராணி; நான் எந்த பெண்ணிடம் பேசினாலும், பழகினாலும் அவளுக்கு உடனே சந்தேகம் வந்துடும். உங்கள பற்றி கூறியதுபோல் அவர்களை பற்றியும் சொல்ல ஆரம்பிச்சுடுவாள்... ரொம்ப பொசசிவ்!''
எனக்கு இந்த பதில் சற்று ஆச்சரியம் தந்தாலும், அதிர்ச்சி தரவில்லை. பொதுவாகவே, எந்த மனைவி தான், தன் கணவன், மற்ற பெண்களுடன் சகஜமாக பேசிப் பழகுவதை சகித்துக் கொள்வாள்... அதை, சரசம் என்றல்லவா நினைப்பாள்!
நான் லேசாக சிரித்து, ''அது, இயற்கை தான் ரகு... பெண்கள், கணவனை தங்கள் ஆளுமைக்குள் வைத்திருக்கதான் விரும்புவாங்க,'' என்றேன்.
''எல்லாரும் அப்படியில்ல; என் நண்பர்களோட மனைவியரை பாத்திருக்கிறேனே... ப்ரீதி ரொம்ப அதிகம்; சில நேரங்கள்ல இதனால் எங்க ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் துவங்கி சண்டையாகிடும். சில நேரங்கள்ல அவ, ஹிஸ்டரிகலாக ஆவதும் உண்டு.''
''ஓ...'' என்றேன். நிஜமாகவே ரகுவின் நிலை குறித்து வருத்தம் தோன்றியது.
''யாராவது சைக்யாட்ரிஸ்ட்டை சந்திக்கலாமே...''
''வேறு வினையே வேணாம்... 'என்னை பைத்தியம்ன்னா நினைச்சே'ன்னு கத்தி ஆர்பாட்டம் செய்துடுவா...'' என்ற போது, அவன் முகம், வேதனையில் தோய்ந்திருந்தது.
''என் பையனோட எதிர்காலத்த நினைச்சு தான் கவலைப்படுறேன்; அவ, அவனிடமும் ரொம்ப பொசசிவ்,'' என்றான்.
இது உண்மையிலேயே பிரச்னைக்குரிய விஷயம் தான்; ஆனால், ரகுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
''கவலைப்படாத... காலமும், வயதும் எல்லாவற்றையும் சரி செய்யும்,'' என்றேன் சமாதானமாக! அதேசமயம், மனதின் ஒரு மூலையில் குரூரமான திருப்தி தோன்றுவது, அவமானமாக இருந்தது.
ஒரு நிமிடம் மவுனமாக இருந்தான், ரகு. பின், என் முகத்தை நேராக பார்த்து,''நான் ஒண்ணு சொன்னா, தப்பாக எடுத்துக்க மாட்டீங்களே...'' என்றான்.
''என்ன... 'உங்களப் போல் கல்யாணமே செய்துக்காம இருந்திருக்கலாம்'ன்னு சொல்லப் போறே அதானே... கல்யாணம் செய்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தும் எல்லாரும் என்னிடம் வழக்கமாக பேசும் வசனம் தானே...'' என்றேன் சிரித்தபடி!
''இல்ல பாரதி...''
''பின்னே...''
''ஆறு வருஷத்துக்கு முன், வலிய வந்து, ப்ரீதி என் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால், நான் உங்களத்தான், 'என்னை, கல்யாணம் செய்துகிறீங்களா'ன்னு கேட்டிருப்பேன்,'' என்றான் ரகு அழுத்தமாக!
அன்று, ரகு, ப்ரீதியை காதலிப்பதாக சொன்ன போது, என் மனதில், மின்னல் இன்றி, இடி இறங்கியது போலிருந்தது. இப்போது, வானமே பிளந்து, இடியும், மின்னலுமாக மழை என் மீது பொழிவது போல் இருந்தது. விதி, எவ்வளவு வலியது!
இரண்டு நிமிடம் பேசவேயில்லை. தொட்டாலே வலிக்குமோ என்று பயந்து கொண்டிருந்த என் மனதை, அவன் வார்த்தைகள் கூரான கத்தியால் கிழித்து திறந்தது போல் இருந்தது. வலியா, சுகமா, வேதனையா, இன்பமா... எங்கோ லேசாகி, வானத்தில் பறப்பது போல் பறந்து, திடீரென்று கீழே விழுந்தது போல் இருந்தது.
உணர்ச்சிகளுக்கு முன், அறிவு விழித்துக் கொண்டது.
''என்ன பாரதி... பதிலே பேசாமல் இருக்கீங்க... நான் தப்பாக பேசிட்டேனா...''
அதுநாள் வரை நெருங்கி பழகியும், ரகுவை, நான் தீண்டியதில்லை. இன்று, அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால், அது அபத்தம்; என் வலது கரத்தால் அவன் கைமேல் தட்டினேன்.
''ரகு... குடும்பம்ன்னா, இதுபோன்ற கருத்து வேற்றுமைகள், சச்சரவுகள் வர்றது சகஜம். நீ புத்திசாலி; நிலைமையை புரிந்து சரி செய்வாய்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,'' என்றேன் புன்னகையுடன்!
''ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்... அன்று, நான், உங்களிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தால், என்ன பதில் சொல்லி இருப்பீங்க...'' என்றான் ரகு!
மெல்ல சிரித்து, ''கேட்காத கேள்விகளுக்கும், சொல்லாத பதில்களுக்கும் மதிப்பு அதிகம்; அதைப் பற்றி பேசக்கூடாது,'' என்று கூறி, ''நீ, ஜாவேத் அக்தர் என்ற இந்தி கவிஞர் எழுதிய பாடலை கேட்டிருக்கிறாயா...'' என்றேன்.
''என்ன அது?''
'கனவுகளின் ஊர்வலம், சில நொடிகளுக்கே நின்றது; நீயும், நானும் நம் வழிகளில் பிரிந்து சென்றோம். நம் இதயங்களின் கதை, சில நொடிகளுக்கே தோன்றியது; நீயும், நானும் நம் வழிகளில் பிரிந்து சென்றோம்...' எனும் அர்த்தம் தோனிக்கும் அந்த பாடலின் வரிகளை இந்தியில் சொன்னதும், ''கேட்டிருக்கேன்... ஷாருக்கான் - ப்ரீதி ஜிந்தா நடித்த படம்; அருமையான பாடல்,'' என்றான் மெதுவாக!
''நாம் பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது; எங்கோ ஒருநாள் மீண்டும் சந்திப்போம்,'' என்று கூறி கிளம்பினேன்.
அந்த பாடலின் வரிகளும், ரகுவின் பார்வையும் என்னை பின்தொடர்ந்தது; நான் திரும்பவில்லை.
தேவவிரதன்
s

No comments:

Post a Comment