Monday, 19 April 2021

ANJALAIAMMAL FREEDOM FIGHTER BORN 1890 -1961 JANUARY 20

 


ANJALAIAMMAL FREEDOM FIGHTER 

BORN 1890 -1961 JANUARY 20



நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய பெண்கள் பல பேர் உண்டு..அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்..கடலூரை சேர்ந்த ஆஞ்சலை அம்மாள் அப்படி பட்ட ஒரு வீரப் பெண்மணி..கல்வி அறிவு இல்லாவிட்டாலும்..தன் கணவரிடம் செய்திகளை கேட்டு தெரிந்து கொண்டு வீறு கொண்டு எழுந்தார்.


அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள்


தொழுநோயால் பாதிக்கப்பட்ட வீரர் சுப்பிரமணிய சிவா விற்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர் அஞ்சலையம்மாள்🙏🙏🙏🙏🙏


நாட்டின் விடுதலைக்கான போராட்ட களத்தில் இருந்த பெண்மணிகளில் ஒருவரான ஜான்சிராணி லட்சுமிபாய் தனது குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அஞ்சலையம்மாளோ வயிற்றில் குழந்தையை சுமந்தபடி அன்னியருக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசத்தை அனுபவித்தார்.


பாரம்பரியமிக்க கடலூர் முதுநகர் பகுதியில் சுண்ணாம்புகார தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்தார் அஞ்சலையம்மாள். இவரது கணவர் முருகப்பா, பத்திரிகை ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். அது சுதந்திர போராட்ட காலத்தின் உச்சகட்டம். நாட்டு நடப்புகளை தனது கணவர் மூலம் அறிந்துகொண்ட அஞ்சலையம்மாள் அன்னியரின் அடக்கு முறையை கண்டு வெகுண்டு எழுந்தார். அதுநாள் வரையிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த அவர் நாட்டின் விடுதலைக்காக வீதிக்கு இறங்கி வந்து போராட்டங்களில் ஈடுபட்டார்.


எளிய தோற்றத்துடன் காணப்பட்ட இவர் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை கண்டு மனம் அஞ்சாமல் தன் பேச்சால் பெண்களிடமும் நாட்டு பற்றை உருவாக்கினார். 1921-ம் ஆண்டு நடந்த இந்திய விடுதலை போராட்டத்தில் தென்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக கலந்துகொண்டார். இதன் மூலம் அவரது வீடு விடுதலை போராட்ட வீரர்கள் சந்திக்கும் இடமாக விளங்கியது. கடலூர் வழியாக செல்லும் தலைவர்கள் அஞ்சலையம்மாளின் வீட்டில் தங்கி உணவு உண்டு செல்ல தவறியது இல்லை.


1922-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிவிட்டு கடலூர் வழியாக கும்பகோணம் நோக்கி சென்றார். இதையறிந்த அஞ்சலையம்மாள் காந்தியடிகளை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் காந்தியடிகளை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தடையை மீறி காந்தியடிகளை குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று உணவளித்தார் அஞ்சலையம்மாள். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் கர்ப்பிணியாக இருந்த அவரை ஓராண்டு சிறையில் அடைத்தனர்.


பிரசவ நேரத்தின் போது பரோலில் விடுவிக்கப்பட்ட அவர் 3 மாத கைக்குழந்தையுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மதுவிலக்கு கோரி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார்.

1927-ம் ஆண்டு மக்களை கொன்று குவித்த ஆங்கிலேய படைத்தளபதி நீல் என்பவனுக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை அகற்றும் போராட்டத்தை அம்மையார் முன்னின்று நடத்தியதோடு கையில் வைத் திருந்த கோடாரியால் சிலையை வெட்டி உடைக்க முயன்றார். அப்போது ஆங்கிலேயர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அவருக்கும், அவரது கணவர் முருகப்பாவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குழந்தைகள் சிறுவர் சீர் திருத்த சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதன் பின்னர் 1931-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்த அஞ்சலையம்மாள் தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப்போராட்டம், சட்டமறுப்பு இயக்க போராட்டம், தனிநபர் சத்தியாகிரகப்போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றார். சத்தியாகிரகப் போராட்டத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறைவாசத்தின் போது கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சிறையிலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜெயில் வீரன்’ என பெயரிட்டார்.


சுதந்திரம் ஒன்றே தனது குறிக்கோள், அதை அடையாமல் சாகமாட்டேன் என்று கூறிய அஞ்சலையம்மாள் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடினார். இதன் பிறகும் பல குடும்பங்கள் மதுவால் சீரழிந்ததை கண்டு மன வேதனை அடைந்த அவர் மது விலக்குக்காக போராடினார். தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்து போராடிய அஞ்சலையம்மாள் 20-2-1961-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.


அவரது நினைவாக கடலூர் முதுநகரில் உள்ள பூங்காவில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment