Wednesday, 7 April 2021

JAISHANKAR BIOGRAPHY

 



JAISHANKAR  BIOGRAPHY

#ஜெய்சங்கர்


1965, பொங்கல் பண்டிகையின்போது ஜெய்சங்கர் ஹீரோவாக நடிச்ச சிட்டாடல்-ஜோசப் தளியத்தின் ‘இரவும் பகலும்’ வெளிவந்தது. முதல் படத்திலேயே இரட்டை வேடம். பளிச்சென்று ரசிகர் மனதில் உட்கார்ந்து விட்டார் ஜெய்.

அதே ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ வெளிவந்தது. ஸ்ரீகாந்த் -ஜெயலலிதா-வெண்ணிற ஆடை நிர்மலா, மூர்த்தி, சைலஸ்ரீ என்று அனைவரும் புதுமுகம். ஜெ., கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதை.

அதே ஆண்டு ஜூன் 19-ம் தேதி ‘ஏவிஎம்’மின் ‘காக்கும் கரங்கள்’ படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நான் அறிமுகம்.

ஓராண்டு முன் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ரவிச்சந்திரன் அட்டகாசமான அறிமுகம். நகைச்சுவையில் உச்சம் தொட்ட வண்ணப்படம்.

1963-ல் கிண்டி கவர்னர் மாளிகையில் பணிபுரிந்த ஏவிஎம் ராஜன் ‘நானும் ஒரு பெண்’ படத்தில் இரண்டாம் கதாநாயகனாக பளிச்சென்று அறிமுகம்.

ஏவிஎம் ராஜன் என்னை விட 6 வயது பெரியவர். ரவிச்சந்திரன் 4 வயது. ஜெய்சங்கர் 3 வயது பெரியவர். ஸ்ரீகாந்த் 2 வயது பெரியவர். இந்த 5 பேரும் 1960- 65இல் அறிமுகமாகி அதிக ஆண்டுகள் அதிக படங்களில் நடித்தவர்கள்.




ரவிச்சந்திரனுக்கு 'காதலிக்க நேரமில்லை', 'இதயக்கமலம்', 'குமரிப்பெண்', 'நான்', 'மூன்றெழுத்து' என்று வண்ணப்படங்கள், வெற்றிப்படங்களாகத் தொடக்கத்தில் அமைந்தும் அவர் நெடுங்காலம் திரையுலகில் நிலைக்க முடியாமல் போனது துரதிஷ்டம்.

ஏவிஎம் ராஜனும், நாடகங்கள் எல்லாம் சொந்தத்தில் நடத்தி, ஜெமினி கணேசனை விட சில படங்களில் நடிப்புத் திறமை காட்டியவர். சொந்தப் படங்கள் சில எடுத்து அதன் தோல்விகளைத் தாங்க முடியாமல் சோர்ந்து போய்விட்டார்.

கே.பாலசந்தர் நாடகங்களில் 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர்நீச்சல்', 'நவக்கிரகம்' என நகைச்சுவை நடிப்பில் புகுந்து விளையாடிய ஸ்ரீகாந்த் ஒரு சில படங்களோடு கதாநாயகன் வேடங்களுக்கு, ‘டாடா’ காட்டி விட்டு குணச்சித்திர வேடங்களில், வில்லன் வேடங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.




இவர்களில் வயதில் மட்டுமல்ல, தோற்றத்திலும், இளையவனாக, பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் கால்வைக்கும் தோற்றத்துடன் அரும்பு மீசையுடன், முழுமையடையாத வாலிபத் தோற்றத்துடன் நான் இருந்தேன்.

ஜெய் ஒருவர்தான் மிடுக்கான நடை, ஆண்மை மிக்க தோற்றம், பரபரப்பான சுபாவம், ‘கமாண்டிங் அப்ரோச்’ உடன் தொடக்கத்திலிருந்தே தொய்வு இல்லாமல் 9 ஆண்டுகளில் கதாநாயகனாகவே 100 படங்களில் நடித்த இரண்டாவது ஹீரோ- முதல் ஹீரோ சிவாஜி. மற்ற எல்லோருமே சிறு வேடங்களில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து ஹீரோவாக 100-ஐத் தொட்டவர்கள்.

எம்ஜிஆரும், சிவாஜியும் பெரிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்ட காலகட்டத்தில், சின்ன பட்ஜெட்டில் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு காமதேனுவாக காட்சியளித்தவர் ஜெய்.

அதுமட்டுமல்ல, சினிமா என்பது ஒரு இண்டஸ்ட்ரி. இதில் ஹீரோ, ஹீரோயின்கள், குணச்சித்ர நடிகர்கள், நகைச்சுவை நடிக, நடிகையர், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டண்ட் நடிகர்கள், நடன ஆசிரியர்கள், நடனமணிகள், எடிட்டர்கள், பிராசஸ்ஸிங் லேப் தொழிலாளர்கள் என எண்ணற்ற பிரிவில் பல்லாயிரக்கணக்கானோர் சினிமாவை நம்பி வாழ்கிறார்கள்.

எம்ஜிஆரும், சிவாஜியும் அதிகமாகப் போனால் 3, 4 படங்களே வருஷத்துக்கு நடிக்க முடியும் என்னும் போது இத்தனை தொழிலாளர்கள் குடும்பம் வயிறு கழுவ நிறைய பேர் படங்கள் தயாரித்தாக வேண்டும். இதில் ஓன்றிரண்டு படங்கள் எடுத்து தொடர்ந்து நஷ்டமானால் அந்தத் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் காஸ்ட்யூமர், மேக்கப்மேன், புரொடக்ஷன் மேனேஜர் போன்றோரையெல்லாம் தயாரிப்பாளர் ஆக்கியவர் ஜெய். பெரிய பட்ஜெட் படம், பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டிய கதையெல்லாம் வேண்டாம். 3 லட்சம், 4 லட்சம் ரூபாயில் ஒரு படத்தை முடிக்கிற அளவுக்கு, அளவான கதை, விஜயா கார்டனில் 3 பாட்டையும் படமாக்கி விடலாம் என்ற அளவில் பட்ஜெட் போட்டு, அதற்கு வாகான கதாநாயகி, வில்லன்களை நடிக்க வைத்து 30 நாளில் படம் முடிக்கும் அளவுக்கு பல தயாரிப்பாளர்களை உருவாக்கினார் ஜெய்.

படம் முடிந்து வியாபாரம் முன் பின் ஆகி, சில ஆயிரங்கள் லாபம் வந்தாலும், அதே தயாரிப்பாளருக்கு அடுத்த படத்துக்குத் தேதி கொடுத்தார். பேசிய சம்பளத்தில் கால் பகுதிதான் கொடுத்திருப்பார்கள். மற்ற நடிகர், நடிகையருக்கு செட்டில் பண்ணி, டைரக்டர், கேமராமேனுக்கு செட்டில் பண்ணி மீதி இருந்தா எனக்குக் கொடு என்பார். நான் அறிந்தவரை அவர் முழுச் சம்பளமும் வாங்கிய படங்கள் 10-20 கூட இராது.

இரவும், பகலும் மாற்றி மாற்றித் தேதி கொடுத்து வாரம் ஒரு படம் திரைக்கு வரும் நிலையை உருவாக்கி FRIDAY HERO- என்று பேசும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டார்.

ஒரு கதாசிரியன் சிரமப்பட்டால் ஒரு கம்பெனியில் அவரை எழுதவைப்பார். ஒரு டைரக்டர் சிரமப்பட்டால் ஒரு தயாரிப்பாளரைக் கை காட்டுவார். இப்படி அவர் படங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்ததா என்பதை விட, பல குடும்பங்களில் விளக்கெரியக் காரணமாக இருந்தார்.

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று ஷான்கானரி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹாலிவுட்டில் கலக்கிய காலத்தில் இங்கு ஜெய் பேர் வாங்கினார். ஒளிப்பதிவாளர், கர்ணனும், மாடர்ன் தியேட்டர்ஸாரும் - ராபின்ஹூட் பாணி, டிடெக்டிவ் ஹீரோவாக 'ஜம்பு', 'கங்கா', 'காலம் வெல்லும்', 'எங்க பாட்டன் சொத்து' என்று கர்ணனும் - 'சி.ஐ.டி சங்கர்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'வல்லவன் ஒருவன்' என்ற தலைப்புகளில் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும், ஸ்டண்ட் படங்களைத் தொடர்ந்து எடுத்து ஜெய் நிரந்தரமாய் ஹீரோவாக நிலைக்க உதவினார்கள்.

'ஜீவானாம்சம்', 'கன்னிப்பெண்', 'சூதாட்டம்', 'எங்க பாட்டன் சொத்து' போன்ற படங்களில் ஜெய் ஹீரோ, நான் இரண்டாவது கதாநாயகன்... பின்னாளில், ‘இன்று நீ நாளை நான்’ படத்தில் நான் ஹீரோ, ஜெய் எனக்கு அண்ணனாக நடித்தார்.

சிவாஜி போன்ற உலகப் புகழ் நடிகரே, 'தாவணிக் கனவுகள்', 'தேவர் மகன்', 'படையப்பா' போன்ற படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்கவேண்டிய காலம் வரும்போது ஜெய் மட்டும் தப்ப முடியுமா? ஆனாலும், ஏவிஎம் நிறுவனத்தினர் ரஜினிக்கு சமமான வில்லன் வேடங்களை அவருக்குக் கொடுத்து கெளரவப்படுத்தினர்.

ஜெய் பெயரைச் சொன்னால் 'குழந்தையும் தெய்வமும்', 'பட்டணத்தில் பூதம்', 'முகூர்த்தநாள்', 'உயிரா மானமா?', 'பூவா தலையா?', 'நூற்றுக்கு நூறு', 'குலமா குணமா', 'சூதாட்டம்', 'துணிவே துணை' போன்ற கதையம்சம் உள்ள படங்களும் அவரது பட்டியலில் உண்டு என்று அவரது ரசிகர்கள் அறிவார்கள்.

தயாரிப்பாளர், கதாசிரியர்களுக்கு மட்டும் அவர் உதவி செய்யவில்லை. மெர்சி ஹோம் என்ற அனாதை இல்லத்தை தத்து எடுத்துக் கொண்டார். தன்னுடைய பிறந்த நாள், மற்ற நடிகர்களின் பிறந்த நாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு உணவும், உடையும் வழங்கி அவர்கள் முகத்தில் சிரிப்பு மலர்வதை ரசிப்பார்.

நடிகர்களுக்கு அமைதியான, இனிமையான குடும்ப வாழ்க்கை அமைவது இறைவன் கொடுத்த வரம். பெற்றோர் பார்த்த கீதாவையே மணந்துகொண்டு இரண்டு ஆண் வாரிசுகள், ஒரு பெண் வாரிசுக்குத் தந்தையானார்.

திரையுலகம் பரம்பரை சொத்து அல்ல, ஹீரோவின் மகன் நிச்சயம் ஹீரோ ஆவான் என்பதும் இங்கு உத்தரவாதமல்ல. சினிமா ஒரு நிலையான, பாதுகாப்பான தொழிலும் அல்ல என்பதை எனக்கு முன்னரே உணர்ந்து கொண்டார் ஜெய். அதனால் குழந்தைகளை முறையாக டாக்டருக்கும், இன்ஜினீயருக்கும் படிக்க வைத்தார்.

இன்று சென்னையில் விரல் விட்டு எண்ணக்கூடிய புகழ்மிக்க கண் மருத்துவர்களில் விஜய் சங்கர் முக்கியமானவர். மோடியிலிருந்து சோ வரை அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், தொழிலதிபர்கள் என்று டாக்டர் விஜய் சங்கரைத் தெரியாத விஐபிக்கள் குறைவு.

அப்பாவைப் போலவே சுறுசுறுப்பு. அப்பாவைப் போலவே அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைக்கும் பண்பு, இரவு 10 மணிக்கு அழைத்தாலும் உடனே போனை எடுத்துப் பேசும் குணம் அத்தனை குணங்களையும் அப்பாவிடமிருந்து சுவீகரித்து விட்ட பிள்ளை.

அடுத்த மகன் சஞ்சய் இன்ஜினீயர். கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் கவனம் செலுத்துபவர். கடைக்குட்டி சங்கீதா, அவரும் மருத்துவர். இப்படி அழகாக, அருமையாக குழந்தைகளை வளர்த்து, முறையாகப் படிக்க வைத்து, அவர்கள் வெற்றிகரமாக வாழும் வாழ்க்கையை உடன் இருந்து பார்த்து சந்தோஷப்படுவதே எந்த மனிதனுக்கும் பிற்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

எதிலும் விரைவும், வேகமும் காட்டும் ஜெய் இவ்வுலகை விட்டுப் போவதிலும் வேகம் காட்டி 61 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்தது அவருடைய சக கலைஞனான எனக்கும் பெரிய வருத்தம்தான்.

1999-ல் எங்கள் திருமண ஆண்டின் வெள்ளி விழா நிகழ்ச்சி மிக எளிமையாக நெருங்கிய நண்பர்களுடன் எங்கள் வீட்டில் நடந்தது. பத்திரிகையாளர் சுதாங்கன் மூலம் இதைத் தெரிந்து கொண்டு, ‘சிவா நம்ம ஆளுடா. அவன் அழைச்சுத்தான் போகணுமா? வா, போலாம்!’ என்று வந்து எங்களை மனமார ஆசிர்வதித்தார். போகும்போது, ‘டேய் சிவா, விருந்து சாப்பாட்டை என் வீட்டுக்கு அனுப்பிடு. நான் ரிலாக்ஸ்டா சாப்பிடறேன்’ என்று அன்புக்கட்டளை இட்டுச் சென்றார். சக நடிகர்கள் தோழமையுடன் இருந்த நாட்கள் அவை.

No comments:

Post a Comment