Tuesday, 6 April 2021

NEIVELI LIGNITE CORPORATION HISTORY

 

NEIVELI  LIGNITE CORPORATION HISTORY




1934ல் தனது 620 ஏக்கர் நெய்வேலி நிலத்தில் கிணறுகள் வெட்டிய ஜம்புலிங்க முதலியார் நீரில் கரித்துண்டுகள் இருப்பதைக் கண்டு ஆங்கில கலெக்டரிடம் தெரிவிக்கிறார். அவர் ஆங்கில அரசுக்குக் கொண்டு சென்று மேற்கொண்டு ஆய்வு நடத்தச் சொல்கிறார்.
சென்னையின் பின்னி கம்பெனி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கைவிடுகிறது. பின்னர் அரசின் ஜியோலாஜிகல் சர்வே அமைப்பு களம் இறங்கி, 500 டன் கரி இருப்பதாகக் கூறுகிறது. பின்னர் 1947ல் இந்திய அரசின் சுரங்கப் பொறியாளர் கோஷ் தலைமையிலான குழு சுமார் 2000 மில்லியன் டன் கரி இருப்பதாக உறுதி செய்கிறது. 1951ல் அமெரிக்க அரசு தனது பொறியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து, பொருளாதார ரீதியாகப் பலன் அளிக்கும் முயற்சியே என்று சான்றளிக்கிறது.
ஜம்புலிங்க முதலியார் தனது நிலத்தை அரசுக்கு இலவசமாக அளிக்கிறார்.



1953ல் கிருஷ்ண ராவ் என்னும் சென்னை மாகாண தொழில் மந்திரி முதல் சுரங்கம் வெட்டும் பணியைத் துவக்கி வைக்கிறார். 1954ல் பண்டித நேரு நெய்வேலிக்கு விஜயம் செய்கிறார். காமராஜர், வெங்க்கட்ராமன், சி.சுப்பிரமணியன் முதலியோரின் முயற்சியால் நெய்வேலி நிலக்கரி முயற்சியை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. பண்டித நேருவின் முயற்சியால் கிழக்கு ஜெர்னிமனியின் கே.எஃப்.டபிள்யூ. நிதி நிறுவனம் பணம் வழங்க, நெய்வேலி உருப்பெறுகிறது. டி.எம்.எஸ்.மணி என்னும் ஐ.சி.எஸ். அதிகாரியை நேரு அனுப்பி வைக்கிறார்.
இத்தனைக்குப் பின்னரே நெய்வேலி நிறுவனம் உருவாகிறது.
தேவையான பொறியாளர்கள் இல்லாத நிலையில், மணிமுத்தாறு அணைக்கட்டு வேலை முடிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த பி.டபிள்யூ.டி பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் நெய்வேலியில் வேலைக்கு ஏற்பாடாகிறது. எக்கச்சக்க வேலை, ஆனால் ஆள் இல்லை. அதனால் டிப்ளமா படித்தவர்கள் பலருக்கும் நெய்வேலியில் வேலை உறுதியாகிறது. தஞ்சை கிராமங்களில் இருந்த படித்த இளைஞர்கள் தட்டெழுத்தாளர், குறுக்கெழுத்தாளர் பதவிகளில் வேலைக்குச் சேர்ந்தனர்.
நெய்வேலியின் முதல் அனல் மின் நிலையத்தின் தலைமைப்



பொறியாளராக எஸ்.ராமச்சந்திரன் இருந்தார். அருமையான பொறியாளரான அவர் தேதியூர் சுப்பிரமணிய ஐயரின் மகனாவார். தேதியூர் சுப்பிரமணிய ஐயர் சௌந்தர்யலஹரிக்கு வியாக்கியானம் எழுதியவர்.
நெய்வேலி துவங்கப்பட்ட போது மந்தாரக்குப்பம் என்னும் கிராமத்திலேயே அனைத்து வேலைகளும் நடந்தன. பின்னரே நெய்வேலி நகரியம் கட்டப்பட்டது.
நெய்வேலி நஷ்டத்திலேயே இயங்கி வந்தது. மத்திய அரசு உதவி இல்லையேல் நெய்வேலி என்றோ காணாமல் போயிருக்கும். நெய்வேலியை லாபகரமாக மாற்றிய பெருமை பின்னர் வந்த சேர்மன் யக்ஞேஸ்வரன் என்னும் சுரங்கப் பொறியாளரையே சேரும்.
நெய்வேலியின் துவக்கத்தில் எந்தத் தொழிற்சங்கமும் இல்லை. முதலில் தோன்றியது INTUC மட்டுமே. அதன் தலைவராகக் கர்னாடகத்தைச் சேர்ந்த பட் என்பவர் இருந்தார். எந்தப் பிரச்னையிலும் மேலிடத்துடன் பேசியே சுமுகமாக முடித்து வைப்பரவராகத் திகழ்ந்தார். பின்னர் AITUC வந்தது. அதுவரை பிரச்னை இல்லை. பின்னர் CITU வந்ததும் வேலை நிறுத்தங்கள் துவங்கின. ஆனால், அப்போதும் லஞ்சம் இல்லை. பின்னர் திமுகவின் தொமுச தோன்றியது. லஞ்சம் நெய்வேலிக்குள் அடியெடுத்து வைத்தது.



பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த குடும்பத்தில் இருந்து நெய்வேலியின் சேர்மனாக வந்து சேர்ந்த ஜி.எல்.டாண்டன், நெய்வேலியைச் சுற்றிப் பார்க்கையில் கோவில்கள் இல்லாத நிலையைக் கண்டார். ஒவ்வொரு பிளாக்கிலும் கோவில் கட்ட அனுமதித்தார். தற்போது உள்ள பல மாரியம்மன் கோவில்கள் அவர் காலத்தில் உருவானவை, வளர்ச்சி பெற்றவை.
நெய்வேலி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு துவங்கியது காங்கிரஸ் எம்.பி. வள்ளல்பெருமான் காலத்தில். இன்றும் தொடர்கிறது.
நெய்வேலிக்கு நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்ள இவர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு:
1. ஜம்புலிங்க முதலியார்
2. காமராஜ்
3. ஆர்.வெங்கட்ராமன்
4. சி.சுப்பிரமணியம்
5. பண்டித நேரு
6. டி.எம்.எஸ்.மணி ஐ.சி.எஸ்.
பி.கு.: 1965ல் 'நெய்வேலியா? பூணூல் வேலியா?' என்று கையேடு அச்சடித்து விநியோகித்தது யார் என்று சொல்பவர்களுக்கு எந்தப் பரிசும் கிடையாது.

No comments:

Post a Comment