Wednesday, 20 May 2020

CIGARETTE HAD A SECRET - SLAVISM OF SMOKE AGAIN -VETRIMARAN DIRECTOR



CIGARETTE HAD A SECRET - 
SLAVISM OF SMOKE AGAIN



.என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்’ என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிகோடின், பிரவுன் சுகரைவிட அடிக்‌ஷனான விஷயம்’ என்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கிறது. புகையிலைப் பொருட்கள்தான் முதலில் தடை செய்யப்படவேண்டிய போதைப்பொருள் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு சிகரெட் என்னைப் பாதித்திருக்கிறது. ஒரு நாளில் ஐந்து சிகரெட்டில் தொடங்கி, `பொல்லாதவன்’ சமயத்தில் ஒரு நாளைக்கு 170 சிகரெட்களைப் புகைக்கும் நிலைக்குச் சென்றிருந்தேன்.

`பொல்லாதவன்’ ரிலீஸுக்குப் பிறகு ஒருநாள் ஈ.சி.ஜி எடுத்துப்பார்த்தேன். நார்மலாக இல்லை எனத் தெரிந்ததும் `ஆஞ்சியோ செய்துபார்க்க வேண்டுமா?’ என கார்டியாலஜிஸ்ட் முரளிதரனிடம் கேட்டேன். ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், `ஆஞ்சியோ ஆப்ஷனல். ஆனா, சிகரெட்டை கட்டாயம் விடணும்’ என்றார். வீடு திரும்பும் வழியில் என்ன செய்யலாம் என்பதையும் சிகரெட் பிடித்தபடியே யோசித்துக்கொண்டிருந்தேன். புகைக்காத என் நண்பர்கள் என்னைவிட ஃபிட்டாக இருந்ததைக் கவனித்தேன். நானும் ஃபிட் ஆக வேண்டும் என நினைத்து, ஒரு மாதம் சிகரெட்டைத் தொடாமல் இருந்தேன். இனி நிச்சயம் சிகரெட்டைத் தொட மாட்டோம் என்ற கான்ஃபிடன்ஸ் கிடைத்தது.

ஒருநாள், ஸ்கிரிப்ட் வொர்க்கில் ஏதோ ஒரு நெருக்கடி வந்தது. அப்போது உதவியாளர் ரவியிடம் (`ஈட்டி’ பட இயக்குநர்) சிகரெட் வாங்கி வரச் சொன்னேன். நான் விட்டுவிட்டேன் எனத் தெரிந்ததால் தயங்கித் தயங்கித்தான் ஒரு பாக்கெட் வாங்கிவந்தார். அன்று 30 நாளைக்கும் சேர்த்துப் புகைத்துவிட்டேன். பாக்கெட்டில் இருந்த 10 சிகரெட்களையும் வரிசையாகப் புகைத்தேன். என் உடலுக்கு அவ்வளவு நிகோடின் தேவைப்பட்டது.

தயாரிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா அப்போது ஏழு வருடங்களாக புகைப்பழக்கத்தை விட்டிருந்தார். சிகரெட் பாக்ஸைப் பார்த்து `டேய்… தம்மாத்துண்டு இருந்துக்கிட்டு நீ என்னைக் கொல்ல பாக்கிறியா? இனிமே உன்னால என்னைக் கொல்ல முடியாது. வெளியே போ’ என ஜன்னல் வழியே வீசி எறிந்ததாகச் சொன்னார். நானும் அதே வசனத்தைச் சொல்லி ஜன்னல் வழியே வேகமாக சிகரெட் பாக்ஸை விட்டெறிந்தேன். அந்த ஐடியா வொர்க்அவுட் ஆனது.

ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே விட முடிந்தது. நான்காவது நாள் காலை நான் சிகரெட்டை விட்டுவிட்டேன் என்பதையே மறந்துவிட்டு சிகரெட்டை கையில் எடுத்துவிட்டேன். சிகரெட்டை நிறுத்துவது என முடிவெடுத்துவிட்டால் அது நம் கண் பார்வையிலே இருக்கக் கூடாது. மற்ற எல்லா அடிக்‌ஷனைவிடவும் புகை தந்திரமானது. என்றாவது ஒருநாள் சிகரெட் நம்மை மீண்டும் வென்றுவிடும். நான் மீண்டும் புகைக்க ஆரம்பித்தது என்னை டீமோட்டிவேட் செய்தது. ஒருமுறை நிறுத்திவிட்டு மீண்டும் புகைக்கும்போது உடல் இன்னும் மோசமானது.

டாக்டர் முரளிதரனைச் சந்தித்து மீண்டும் மீண்டும் புகைப்பதை அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் `அப்படித்தான் ஆகும். ஒரு வாரம் நிறுத்தி ஆரம்பிப்பீங்க. அடுத்த தடவை ஒரு மாசம். அப்புறம் ஆறு மாசம் ஆகும். இப்படியே தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தால் ஏழாவது தடவைக்குள் உங்களுக்கே தெரியாம நிரந்தரமா நிறுத்திடுவீங்க. எஃபர்ட் போடுறதை மட்டும் நிறுத்தாதீங்க’ என்றார்.

எனக்கு முரளிதரனை அறிமுகம் செய்தது தனுஷின் அக்கா கணவர் ஆஞ்சநேயன் கார்த்திகேயன்தான். அவரும் ஒரு கார்டியாலஜிஸ்ட். `சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது எல்லாம் 200 மி.லி குளிர்ந்த நீர் குடித்தால், அந்த எண்ணம் தள்ளிப்போகும்’ என அவர் ஒரு ஐடியா தந்தார். என்னால் நம்ப முடியவில்லை.

ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, முரளிதரன், ஆஞ்சநேயன், படித்த பல புத்தகங்கள் எனப் பலரும் பல ஐடியாக்கள் சொன்னார்கள். எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்ததில் ஒன்று புரிந்தது. புகைப்பதை விடுவது என்பது, நமது இலக்கு. அந்த இடத்துக்குச் சென்று சேர பாதைகள் வெவ்வேறு. நம்முடைய பாதையை நாமேதான் கண்டுபிடிக்க வேண்டும். அவரவர் சூழல், வாழ்க்கை முறை, வேலை பொறுத்து ஒவ்வொருவருக்கும் அது மாறும். இந்தப் புரிதல் வந்ததும் என்னால் புகையை விட்டுவிட முடியும் என்ற தைரியம் வந்தது.

அப்போதுதான் (நவம்பர் 14, 2008) `வாரணம் ஆயிரம்’ படம் வெளியானது. ஆர்த்தியும் நானும் சென்றிருந்தோம். அந்தப் படமும் அதில் புகை கையாளப்பட்ட விதமும் என்னை ஏதோ செய்தன. வெளியே வந்ததும் `இதை கடைசி தம்மா வெச்சிக்கலாம்’ என நினைத்தபடி புகைத்து முடித்தேன். அதன் பிறகு இன்று வரை நான் புகைக்கவில்லை. இன்றும் ஒவ்வொரு நாளும் புகை என்னைத் துரத்திக்கொண்டே இருப்பதால்தான் `இன்று வரை புகைக்கவில்லை’ எனச் சொல்கிறேன்.

சிகரெட்டை, உலகம் முழுக்கவே வீரத்துடன் உருவகப்படுத்தி இருக்கி றார்கள். நண்பர்கள் என்றால் புகைக்க வேண்டும், காதல் தோல்வி என்றால் தாடியும் சிகரெட்டும் கட்டாயம் என நம்பவைத்ததில் சினிமாவுக்குப் பெரும்பங்கு உண்டு. நான் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததும் சினிமாவைப் பார்த்துதான்; விட்டதும் சினிமாவைப் பார்த்துதான். 20 ஆண்டுகளாகப் புகைப்பிடித்த நான், புகையை நிறுத்துவதற்கு `வாரணம் ஆயிரம்’ ஏதோ ஒரு வகையில் உந்துசக்தியாய் இருந்தது. ஒரு ஃபிலிம் மேக்கராக கெளதம் மேனன் அவர்களின் மிகப்பெரிய வெற்றியாக நான் இதைப் பார்க்கிறேன். என் படங்களில் ஹீரோக்கள் யாருமே புகைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நவம்பர் 15-ம் தேதி காலையில் தூங்கி எழுந்ததும், மனம் மீண்டும் சிகரெட்டைத் தேடியது. அந்தக் காலத்தில், காலை எழுந்ததும் ஒரு சிகரெட், டாய்லெட்டில் ஒன்று, குளித்துவிட்டு ஒன்று, டீ குடிப்பதற்கு முன்னர் ஒன்று, குடித்த பிறகு ஒன்று… என எல்லா செயல்களுக்குமே சிகரெட்டைக் காரணமாக வைத்திருந்தேன். அதனால் அடுத்த நாள் காலை எழுந்ததும் சிகரெட் நினைவுவந்தது. அப்போது அந்த இடத்தில் சிகரெட் இருந்திருந்தால் புகைத்திருப்பேன். ஒருநாள் புகைக்காமல் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் இருக்காது. அதன் வாழ்வு 24 மணி நேரம்தான். அதனால் சிகரெட்டை நிறுத்தி 24 மணி நேரம் நெருங்க நெருங்க, புகைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகும். அன்று இரவு சீக்கிரமே வீட்டுக்குச் சென்று, வாசலிலேயே நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்தேன்.

கண்கள் அடைத்தன. அந்த ஒருநாளை தாண்டிவிட்டால் பிரச்னை இருக்காது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். வீட்டுக்குள் கரன்ட் இல்லை. இருந்தும் ஓடிப்போய்த் தூங்கிவிட்டேன். நிகோடின் இல்லாததால் நல்ல தூக்கம் வந்தது. முதல் நாளை வெற்றிகரமாக சிகரெட்டே இல்லாமல் தாண்டிவிட்டேன். `இனி நான் ஸ்மோக்கர் இல்லை’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அடுத்த நாள் சிகரெட் எண்ணம் வந்தபோது `ஐ யம் நாட் எ ஸ்மோக்கர். ஐ யம் எ ஹெல்த்தி பெர்சன்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

புகைப்பதை நிறுத்தியதும் மீண்டும் புகைப்பதற்கான ஆர்வம் எழுவதில் ஒரு பேட்டர்ன் இருக்கும். முதல் நாள் அதிகமாக இருக்கும். அப்படியே அடங்கி, ஒரு வாரம் முடிந்த பிறகு இன்னும் வேகத்துடன் அந்த ஆர்வம் எழும். பின்னர் ஒரு மாதத்தில் வரும். மூன்று மாதம், ஒரு வருடம் என அப்படியே சென்று, எட்டு வருடம் கழித்து ஒருமுறை தோன்றும். அதையும் தாண்டிவிட்டால் மீண்டும் புகைக்கவே மாட்டோம் என்கிறார்கள்.

நான் புகைப்பதை நிறுத்தியதும் `அலுவலகத்தில் யாரும் புகைக்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டேன். ஏ.சி அறைக்குள் புகைப்பது என் வழக்கம். அந்த ஒரு வார காலம் அலுவலகத்தில் புகை வாசனையே வரவில்லை. எட்டாவது நாள் சிகரெட்டை மனது இன்னும் தீவிரமாகத் தேடியது. தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் ரிலீஃப் ஆக இருந்தது. புகைப்பதை மறக்க சூயிங் கம்மும் பழங்களும் உதவின. கொய்யாப்பழம், திராட்சை, மாதுளை போன்ற ஃப்ரெஷ்ஷான பழங்களைச் சாப்பிட்டால் அந்த ஜூஸ் உடம்புக்குள் இறங்குவதே இதமாக இருக்கும்.

அடுத்த கெடு மூன்று மாதம். இரண்டு நாட்களில் `ஆடுகளம்’ ஷூட்டிங் தொடங்கவிருந்தது. பிருத்வி என்னிடம் வந்து `அசிஸ்டென்ட் டைரக்டர் மனசெல்லாம் சரியில்லையே’ என்றார். உதவியாளர்கள் யாரும் என்னுடன் சரியாகப் பேசுவது இல்லை. ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டதாகச் சொன்னார். அதைச் சரிசெய்துகொள்ளச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். எனக்கு டென்ஷனாக இருந்தது. நான் பாஸ்கரை அழைத்து ஒரு சிகரெட் வாங்கிக்கொண்டு வரச் சொன்னேன். முதலில் தயங்கியவன், பின்னர் சென்றான். நான் டி.வி-யில் படம் பார்க்கத் தொடங்கிவிட்டேன். சில மணி நேரத்தில் சிகரெட் ஞாபகம் வர பாஸ்கரைத் தேடினேன். அவனும் மற்ற உதவியாளர்களும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிகரெட் வாங்க அவன் போகவே இல்லை.

நான் சென்று `என்னடா… போய் சிகரெட் வாங்கிட்டு வா’ என்றால், அவன் நகரவே இல்லை. எனக்குக் கோபம் அதிகரித்தது. அருகில் இருந்த கார்த்தியிடம் சிகரெட் கேட்டால், புகைக்கும் பழக்கமே இல்லாததுபோல `சிகரெட் இல்லையே’ என்றான். அந்தக் கோபத்துடன் காரை ரிவர்ஸ் எடுத்து, முதல் கியர் போட்டு அப்படியே நிறுத்திவிட்டேன். மறுநாள் காலை வரை இந்த எண்ணம் இருந்தால் சிகரெட் பிடிக்கலாம். இல்லையென்றால் வேண்டாம் என முடிவெடுத்து காரை மீண்டும் திருப்பி நிறுத்தினேன். பாஸ்கர், கார்த்தி யாரையும் பார்க்காமல் வேகமாக அறைக்குச் சென்று படுத்துவிட்டேன். அடுத்த நாள் காலை புகைக்கும் நினைவே வரவில்லை. முதல் நாள் இரவு புகைக்கும் ஆசை வந்த எந்தத் தடயமுமே எனக்குள் இல்லை.

புகைப்பழக்கம் இருக்கும் எல்லோருக்குமே 20 ஆண்டுகளில் உடல் `இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. நிறுத்தித்தான் ஆகணும்’ என ஒரு சிக்னல் கொடுக்கும். அதைக் கேட்டால் நிறுத்திவிட முடியும். இல்லையேல் சிரமம்தான். எனக்கு அப்படித் தோன்றியபோது நான் புகைப்பதை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். 58 முதல் 62-க்கு மேல் என் எடை எப்போதும் கூடியது இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சிகளால் 68 கிலோ ஆனது. `ஆடுகளம்’ படத்துக்கு அந்த பலம் தேவைப்பட்டது. அதீத உடல் உழைப்பு தேவைப்பட்ட புராஜெக்ட் அது. `ஆடுகளம்’ நான் நினைத்ததுபோல ஓரளவுக்கு வர சிகரெட்டை நான் நிறுத்தியது ஒரு முக்கியமான காரணம்.

ஒருமுறை சத்யஜித் ரேவிடம் நல்ல இயக்குநர் ஆக என்ன தகுதி வேண்டும் எனக் கேட்கப்பட்டது. `ஒரே இடத்துல எட்டு மணி நேரம் உங்களால நிக்க முடியும்னா, மற்ற தகுதி எல்லாம் தானா வந்துடும்’ எனச் சொன்னதாக பாலு மகேந்திரா சார் அடிக்கடி சொல்வார். உடல் ஆரோக்கியம் ஓர் இயக்குநருக்கு முக்கியமான தேவை. எல்லா வேலைகளுக்குமே தேவை என்றாலும் ஒரு ஃபிலிம் மேக்கருக்கு இது அடிப்படை தேவை. என்னைப் பொறுத்தவரை ஒரு பாக்ஸர் அல்லது ஒரு மாரத்தன் வீரருக்கு இருக்கவேண்டிய ஃபிட்னஸ் ஒரு ஃபிலிம் மேக்கருக்கும் தேவை. ஓர் இயக்குநர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்போது எடுக்கும் படத்துக்கும், அப்படி இல்லாதபோது எடுக்கும் படத்துக்கும் நிறைய வித்தியாசம் தெரியும்.

புகைப்பதை விட்டால் நாம் தூங்கும் நேரம் சரியாகும். ஒரு கட்டுக்கோப்பில் நம்மால் இருக்க முடியும். இன்னும் ஆர்வத்துடன் காமத்தைக் கொண்டாட முடியும். நம் வாழ்க்கை இன்னும் அழகாக மாறும். இது எல்லாமே என் வாழ்வில் நான் அனுபவித்துச் சொல்கிறேன்.

இந்தச் சமூகத்துக்கு நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்றால், நிகோடின் இல்லாமல் வாழ்ந்தாலேபோதும் என நினைக்கிறேன். புகைப் பிடிப்பவர்கள் அதை நிறுத்தினால் நல்லது. பிடிக்காதவர்கள் அதைத் தொடங்காமலே இருந்தால் மிகவும் நல்லது. இதை நான் இன்று புகையைவிட்டதால் சொல்லவில்லை, முன்னர் நான் புகைத்ததால் சொல்கிறேன்.

– வெற்றிமாறன்

No comments:

Post a Comment