Tuesday, 26 May 2020

MADURAI BIRIYANI ,PAROTTAA , FISHES IN ROADSIDE



MADURAI  BIRIYANI ,PAROTTAA ,
FISHES IN ROADSIDE 



.மதுரையின் உணவுக்கடைகள பற்றி ஒரு திரட் போடுறேன்... மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க... வாங்க போவோம்

முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..
ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு...

கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...

காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு..

பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்

பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்...
11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க...
மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம்

அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்

பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு...
அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும்வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சரபோட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.
அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க..
.
அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்..
நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்...

மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு..
கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும்

இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடைலெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்..

அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள...

குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம் தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க

வெத்தலப்பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும்.

வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்திவிடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டுபாருங்க....
கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக..

சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்... மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும்...

இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும் டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம்
தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு...
அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது

ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா

அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க...

தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க...
நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு ...

நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும்.
சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா..

பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளுமுருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க
ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா

ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு...
ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய்விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்... முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க...

யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா... முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும்...

டின்னர மதுரைல கொண்டாடலாம்யா...
புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க...

சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா ப்ம்ஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்..

ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும்
தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்

க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்...
கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்

சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப்பொங்கல்( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...

இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது... அங்கயெல்லாம் போனா மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல சரியா பங்கு போட்டுக்குவோம்

மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும்

பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்

யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடை நைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்...

நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன்.

கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

No comments:

Post a Comment