Friday, 29 May 2020

LANDING ON MOON 1969 JULY 20 /21




LANDING ON MOON 1969 JULY 20 /21




கற்பனை நிஜமான கதை!

பகலில் சூரியனும் இரவில் சந்திரனும்தான் இயற்கையான வெளிச்சத்தைப் பூமிக்கு அளித்துக்கொண்டிருக்கின்றன. சூரியனைத் தவிர்த்து, பூமியிலிருந்து பார்க்கும்போது சற்றுப் பெரிதாகத் தெரியும் ஒரு வான் பொருள் சந்திரன்தான். கரிய வானில் மினுக்கும் நட்சத்திரங்களுக்கு இடையில் வட்டமாகவும் பிறையாகவும் காட்சியளித்துக்கொண்டிருக்கும் சந்திரனைப் பிடிக்காதாவர்களோ அதைப் பற்றிச் சிந்திக்காதவர்களோ இருக்க முடியுமா? பூமியின் துணைக்கோளான சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் வைத்து நாட்காட்டியை உருவாக்கினார்கள்.    நிலவு போன்ற முகம் என்று வருணித்துக் கவிதைகள் எழுதினார்கள். வழிபடவும் செய்தார்கள். இப்படிச் சந்திரன் பற்றிய சிந்தனையில் இருந்த மனிதர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனுக்குச் சென்று முதல் காலடியை எடுத்து வைத்தனர்.

சந்திரனுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இந்த எண்ணம் தோன்றிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லூசியன் என்ற சிரிய-கிரேக்க எழுத்தாளர் தன்னுடைய கதையில், பெரிய அலை ஒன்று 50 பேர் கொண்ட படகைச் சந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக எழுதியிருக்கிறார்!  இதுதான் சந்திரனுக்குப் பயணிப்பதற்கான  முயற்சியை பற்றிய முதல் கதை.

15-ம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகள் உருவானார்கள். அதுவரை இருந்து வந்த சூரியக் குடும்பம் பற்றிய கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. நிகோலஸ் கோபர்நிகஸ், சூரியனை மையமாக வைத்து பூமி சுற்றி வருவதாகச் சொன்னார். கலிலியோ கலிலி, சூரியப் புள்ளிகளையும் வியாழன், வியாழனின் சந்திரன்களையும் ஆராய்ந்து உண்மைகளை வெளியிட்டார். பூமியும் பிற கோள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதாகச் சொன்னார் ஜோஹன்னஸ் கெப்ளர். சந்திரனுக்குச் செல்வது பற்றிய ஒரு நாவலையும் இவர் எழுதினார். 1827-ம் ஆண்டு ஜார்ஜ் டக்கர், ‘A voyage to the Moon’ என்ற நாவலை எழுதி, வெளியிட்டார்.

AMP

இவருக்குப் பிறகு பல எழுத்தாளர்களுக்குச் சந்திரனுக்குப் பயணம் செய்யும் ஆவல் வந்துவிட்டது. அறிவியல் புனைகதைகளின் தந்தை என்று போற்றப்படுகிறவர் பிரெஞ்சு எழுத்தாளரான ஜூல்ஸ் வெர்ன். நீர் மூழ்கிக் கப்பல், விமானம், தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை எல்லாம் தனது கற்பனை வழியாக நாவல்களில் உருவாக்கினார். பின்னர்தான் அவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன! இவர் சந்திரனை வைத்து, ‘From the Earth to the Moon’, ‘Around the Moon’ என்ற இரண்டு நாவல்களை எழுதினார். கால இயந்திரம் என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸ், ’The First Man in Moon’ என்ற நாவலை எழுதினார். இதில் மனிதன் சந்திரனில் இறங்குவதாகவும் பிறகு பத்திரமாகத் திரும்பி வருவதாகவும் கதை அமைந்திருந்தது.

ஜூல்ஸ் வெர்னின் நாவல்களை வைத்து, 1902-ம் ஆண்டு ‘A trip to the Moon’ என்ற பிரெஞ்சு சாகசத் திரைப்படம் வெளியானது. 1929-ம் ஆண்டு 5 ஆண்களும் ஒரு பெண்ணும் சந்திரனில் தங்கம் தேடுவதுபோல் திரைப்படம், ஆஸ்திரேலிய இயக்குநரால் எடுக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தது. கற்பனைகளில் இருந்த சந்திரன் தொடர்பான விஷயங்கள் எல்லாம் நிஜத்தில் செயல்படுத்தும் காலமும் வந்தது. 1957-ம் ஆண்டு அன்றைய சோவியத் ஒன்றியம், லூனா 2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாகச் சந்திரனில் இறக்கி, சாதனை படைத்தது!

அந்தக் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே யார் முதலில் சாதிப்பது என்ற பனிப்போர் நிலவி வந்தது. 1961-ம் ஆண்டு அடுத்த பத்தாண்டுகளில் சந்திரனில் மனிதனை இறக்குவோம் என்று அறிவித்தார், அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி. பல்வேறு பரிசோதனைகள். பல்வேறு தோல்விகள். இறுதியாக 1969-ம் ஆண்டு ஜூலை 16 அன்று அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனுக்குக் கிளம்பியது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் மூவரும் இருந்தனர்.  அப்பல்லோ 11 வெற்றிகரமாகச் சந்திரனின் தரையில் இறங்கியது. பூமி அல்லாத ஒரு வான் பொருளில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். அவருக்கு மட்டுமின்றி, மனிதகுலத்துக்கே இது மகத்தான தருணமாக இருந்தது.

AMP


’இது மனிதனின் மிகச் சிறிய காலடி, மனிதகுலத்துக்கோ மிகப் பெரிய பாய்ச்சல்’ என்றார் ஆம்ஸ்ட்ராங். 


20 நிமிடங்களுக்குப் பிறகு பஸ் ஆல்ட்ரின் சந்திரனில் இறங்கினார். இருவரும் 2 மணி நேரம் சந்திரனில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார்கள். புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். ஜூலை 24-ம் தேதி பத்திரமாகத் பூமிக்குத் திரும்பி வந்தனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சந்திரயான் 1 உட்பட எத்தனையோ நாடுகள் சந்திரனுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் சந்திரனில் மனிதர்களை இறக்கிய சாதனை இன்றுவரை அமெரிக்காவிடமே இருக்கிறது!  மனிதர்கள் எவ்வளவு அபாரமான, அழகான கற்பனைகளைச் செய்கிறார்கள்! அந்தக் கற்பனைகளைத் தங்களது பேராற்றல் மிக்க அறிவால் நிஜமாக்கியும் காட்டுகிறார்கள்!நீல் ஆம்ஸ்ட்ராங்ஆம்ஸ்ட்ராங், மைக்கேல், ஆல்ட்ரின்

* நமக்குத் தெரிவதுபோல் சந்திரன் அழகானது அல்ல. சந்திரனின் மேல் பரப்பு குண்டும் குழியுமாக இருக்கிறது. * சந்திரனின் மேற்பரப்பு இருளாக இருக்கிறது. * சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் தரை இறங்கியதை அமெரிக்கா உலகம் முழுவதும் ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியை சுமார் 65 கோடி பேர் பார்த்தனர். * காற்றும் நீரும் சந்திரனில் இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், சந்திரயான் 1 நீர் இருப்பதைத் தெரிவித்திருக்கிறது. * சந்திரனுக்குச் செல்வதற்காகவே ‘லூனா’ என்ற பெயரில் சோவியத் ஒன்றியம் ஏராளமான விண்கலங்களை அனுப்பியிருக்கிறது. ‘லூனா 1’ விண்கலம்தான் பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டிச் சென்ற முதல் விண்கலம். ‘லூனா 2’ விண்கலம் தான் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கியது. * அமெரிக்கா இதுவரை 6 முறை 12 மனிதர்களைச் சந்திரனில் இறக்கியிருக்கிறது.


No comments:

Post a Comment