Wednesday, 27 May 2020

DIL EK MANDHIR 1963








DIL EK MANDHIR 1963

உடனே புறப்படு கோபு! பம்பாயிலிருந்து அழைப்பு வந்திருக்கு. ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனாகுமாரி, மெஹ்மூத் எல்லோருக்கும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கதையைச் சொல்லி அவங்களை ஒப்பந்தம் செய்யப் போறோம்” என்று ஸ்ரீதர் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போய் நின்றார் கோபு. ‘பைஜூ பாவ்ரா’, ‘சாஹிப்’, ‘பீபி அவுர் குலாம்’ போன்ற படங்களைப் பார்த்து மீனாகுமாரியின் அபிமானியாக இருந்த கோபுவுக்கு, தான் அவர் எதிரே அமர்ந்து கதை சொல்லப் போகிறோம் என்றால் மலைப்பு ஏற்படாமல் இருக்குமா?

முட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இந்தி மறு ஆக்கத்துக்கு ‘தில் ஏக் மந்திர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டது. தமிழைப் போலவே இந்தியிலும் இருபத்தி ஐந்தே நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது. இதன் இசையமைப்பாளர்கள், ஷங்கர் - ஜெய்கிஷன். ராஜ்கபூரின் ‘ஆவாரா’ படத்துக்குப் பிறகு இந்த இரட்டை இசையமைப்பாளர்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர்.

‘தில் ஏக் மந்திர்’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இசையமைப்பாளர் இருவருக்கும் இடையே விரிசல் உருவானது. விஸ்வநாதன் - ராமாமூர்த்தியைப் போல் பிரிந்துவிட முடிவுசெய்துவிட்டனர். அபாரத் திறமைசாலிகளான இவர்கள் பிரிந்தால் ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் இசையாக்கம் பாதிக்கும் என்று கவலைகொண்டது சித்ராலயா. ஆனால், பிரிந்துபோவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அப்போது ராஜ்கபூரிடம் தனது பிரச்சினையை ஸ்ரீதர் எடுத்துச் சொல்ல, உடனே ஷங்கர், ஜெய்கிஷன் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அவ்வளவு பெரிய நடிகர் கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை. தன்னை நம்பி வந்துவிட்ட ஸ்ரீதருக்கு உதவியே தீர வேண்டும் என்று முடிவுசெய்த ராஜ்கபூர், இசையமைப்பாளர்கள் இருவருக்கும் ஒரு யோசனை சொன்னார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனை

“நான் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ‘ஷங்கர் –ஜெய்கிஷன்’ கூட்டணி என்பது வணிகரீதியாக ஒரு பிராண்ட் நேம் ஆகி விட்டது. இசை: ஷங்கர் - ஜெய்கிஷன் என்ற உங்கள் பெயரைப் பிரிக்காமல் அப்படியே வைத்திருங்கள். ஒரு படம் ஒப்பந்தமாகும்போது, படத்தில் உள்ள பாடல்களைச் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். படத்தில் ஆறு பாடல்கள் என்றால், ஷங்கர் மூன்று பாடல்களுக்கும் ஜெய்கிஷன் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கட்டும்.

நீங்கள் இருவரும் நேருக்கு சந்தித்துக்கொள்ளவே வேண்டாம். பகைமையும் பாராட்ட வேண்டாம். ஈகோ பிரச்சினை இல்லாமல் உங்கள் பெயரைப் பிரிக்காமல், தனித்தனியாக இசை அமையுங்கள்” என்று ராஜ்கபூர் சொன்ன சமரச யோசனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இந்த முறையிலேதான் ‘தில் ஏக் மந்திர்’ படத்துக்கு இசையமைக்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஜெய்கிஷன் பார்ப்பதற்கு அழகான கல்லூரி மாணவரைப் போலவே காட்சிதருவார். அவர் ஸ்ரீதர்-கோபு இருவரையும் சந்திக்க பம்பாயின் சர்ச்கேட் பகுதியில் அவர்கள் தங்கியிருக்கும் ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார். ஜெய்கிஷனை அடையாளம் கண்டுகொள்ளும் கல்லூரி மாணவிகள் அவர் காரை விட்டு இறங்கியதுமே மொய்த்துவிடுவார்கள். அவ்வளவு விசிறிகள்!

ஷங்கர் மற்றும் ஜெய்கிஷன்

படகு காரில் வீதியுலா!

ஜெய்கிஷனுக்கு கோபுவுடன் நெருக்கம் உருவாகக் கர்னாடக இசை, இந்துஸ்தானி இசையில் கோபுவுக்கு இருந்த ஆர்வமும் அறிவும் காரணமாக அமைந்துவிட்டன. ரஞ்சினி ராகத்தைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த கோபுவைப் பாடும்படி கேட்டு மகிழ்வார் ஜெய்கிஷன். கோபு – ஜெய்கிஷன் நெருக்கத்தையும் கோபுவுக்கு இருந்த இசை ஞானத்தையும் கண்டு பாடல் பதிவுப் பொறுப்பை கோபுவிடம் கொடுத்து விட்டு சென்னையில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

கோபு தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குக் காலையிலேயே வந்து, தனது சவுண்ட் ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போவார் ஜெய்கிஷன். பாடல் வேலைகள் முடிந்தபின் இரவு உணவுக்கு மரைன் டிரைவ் பகுதியில் இருந்த தன் வீட்டுக்கு கோபுவை அன்புக் கட்டளையிட்டு அழைத்துச்சென்றுவிடுவார். அந்த அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

எதிர்பார்த்தபடி இசை சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்தியாக முடிந்துவிட்டால் ஜெய்கிஷன் கோபுவைப் படகு போன்ற கூரை மடக்கப்பட்ட தன் காரில் ஏற்றிப் பக்கத்தில் அமர வைத்துக் கொள்வார். இடது கையால் காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு, பெண்கள் கல்லூரியின் பக்கமாகப் போய் கல்லூரி முடிந்து திரும்பும் மாணவிகளுக்குக் கையசைத்தபடி செல்வார். அவர்கள் “ஹோய்ய்ய் ஜெய்கிஷன்…” என்று குரலெடுத்து கத்தி ஆராவரம் செய்வதை வெகுவாக ரசிக்கும்போது ஜெய்கிஷன் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

கோபு பம்பாயில் தங்கியிருந்தபோது, இம்மாதிரி வீதியுலாக்களுக்கு அவரை அவ்வப்போது அழைத்துச் சென்றிருக்கிறார் ஜெய்கிஷன். “வேலை இல்லாமல் செங்கல்பட்டில் சுற்றிக்கொண்டிருந்த நான், புகழின் உச்சியில் இருந்த ஒரு இசையமைப்பாளரின் பக்கத்தில் அமர்ந்தபடி பம்பாய் வீதிகளில் உலா வந்ததைத் தன்னால் மறக்கவே முடியாது” என்று நினைவுகூர்கிறார் கோபு.

கோபு, சேட் ஆன கதை

‘தில் ஏக் மந்திர்’ படத்தில் ராஜேந்திரகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மீனாகுமாரி. இருவருமே அப்போது புகழின் சிகரத்தில் இருந்தார்கள். அவர்களுடன் பணியாற்றியது ஒரு கனவு போல் இருந்தது கோபுவுக்கு. சென்னை விஜயா ஸ்டுடியோவில்தான் ‘தில் ஏக் மந்திர்’ படப்பிடிப்பு நடந்தது. மீனாகுமாரி, ராஜேந்திரகுமார், ராஜ்குமார், நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான மஹ்மூத் ஆகியோர் தங்குவதற்காகப் படப்பிடிப்பு நடக்கும் தளத்தின் எதிரிலேயே ஒரு மினி மேக்-ஷிப்ட் பங்களாவை நிர்மாணித்திருந்தது சித்ராலயா.

‘தில் ஏக் மந்திர்’

அகில இந்திய நட்சத்திரங்களை இயக்குகிறோம் என்ற கவனத்துடன் தயாரிப்புப் பணிகள் முழுவதையும் கோபுவிடம் தந்துவிட்டு முழுக் கவனத்தையும் இயக்கத்தில் செலுத்திக்கொண்டிருந்தார் ஸ்ரீதர். மீனாகுமாரி தனக்கு எது தேவை என்றாலும் ‘கோபு சேட்’என்று அழைத்தபடி கோபுவிடம்தான் வருவார்.

பிழியப் பிழிய அழுது உணர்ச்சிகளைக் காட்டுவதில், தென்னாட்டின் சாவித்திரிக்குச் சரிசமமாக வட நாட்டில் மீனாகுமாரியின் கொடிதான் பறந்தது. மறுநாள் சோகக் காட்சிகளின் படப்பிடிப்பு என்பது முதல்நாள் மாலை சீன் பேப்பரைக் கையில் கொடுத்ததுமே தெரிந்துவிடும். சீனைப் படித்துச் சொன்ன நிமிடத்திலிருந்து தன்னைச் சோக நினைவுகளில் மூழ்கடித்துக்கொண்டு, சோகமாகவே காட்சி தருவார். காட்சி படமாக்கப்பட்டு படச்சுருள் ஓடுகிற சத்தம் மட்டுமே கேட்கும் செட்டில், ஸ்ரீதர் கட் என்று சொன்ன பிறகும் சற்று நேரம் அழுது விட்டுத்தான் ஓய்வார் மீனாகுமாரி.

அப்படிப்பட்ட சோககுமாரியைத் தனது மிமிக்ரி திறமையால் ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், மாதிரியெல்லாம் பேசிகாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பார் கோபு சேட். மீனாகுமாரிக்கும் தனிப்பட்ட முறையில் நிறையப் பிரச்சினைகள். அவற்றையெல்லாம் மறக்க அவ்வப்போது கோபுவின் வாயைக் கிண்டுவார். கோபுவும் மீனாகுமாரியும் மட்டும் தனியாகப் பேசிச் சிரித்துகொண்டிருப்பதை மொத்த செட்டும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.

படம் தயாராகி பம்பாயில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சிரத்தையுடன் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதரையும் கோபுவையும் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள் ஜெமினி –சாவித்திரி தம்பதி. ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் வெற்றி, அகில இந்திய அளவில் ஸ்ரீதருக்குப் புகழைத் தேடித் தந்தது. ‘தில் ஏக் மந்திர் –வாலா’ என்று இந்திப் படவுலகினர் ஸ்ரீதரை அழைக்கத் தொடங்கினர்.

ஸ்ரீதரை ஒப்பந்தம் செய்வதற்காகப் பெட்டி நிறைய பணத்துடன் சென்னைக்கு வந்து அவரது வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், ஸ்ரீதர் இந்தி பட மோகத்தில் விழவில்லை. முதலில் நான் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் என்று கூறி வருபவர்களைத் திருப்பி அனுப்பினார். மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டு, சாவகாசமாக ஸ்ரீதரும் கோபுவும் நாடகம் பார்த்து பொழுதைக் கழித்து கொண்டிருந்தார்கள்…

No comments:

Post a Comment