Tuesday, 26 May 2020

TRICHY STREET VENDOR`S CRITICAL LIFE ON CORONO



TRICHY STREET VENDOR`S 
CRITICAL LIFE ON CORONO



.திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

By புமாஇமு -May 26, 20200
திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம்.

ராணி (வயது:45)

“என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், கரண்டு பில் கட்டனும், காய்கறி வாங்கனும் என்ன பன்றது? இதுல வேற இந்த போலிசு வந்து கடையை போடதனு இளநீயயும், கத்தியயும் துக்கிட்டு போகுது.



500 ரூவா பணத்த கட்டித்தான் வாங்கிட்டு வந்தேன். ரொம்பக் கஷ்டமா இருக்கு. எனக்கு ரெண்டு புள்ளைங்க ஒருத்தன் ஆட்டோ ஒட்டுறான். இப்ப வேலைக்கு போகல. அவனுக்கு பொம்பள புள்ளைங்க இருக்கு. எங்க எல்லாத்துக்கும் இந்த நூறு ரூவா பத்துமா? இதுல வேற ஒருபக்கம் பஸ் டிக்கெட், பால் விலைனு ஏத்துறானுங்க. இன்னொரு பக்கம் சாராய கடையை திறந்து சாவடிக்குறானுங்க. கொரானாவால சாகறமோ இல்லையோ சாரயத்தால சாவறது உறுதி.

மோடியும் எடப்பாடியும் என்ன ஆட்டம் போடுறானுங்க நம்ம கிட்ட போக முடியுமா? போலிசு பந்தோபஸ்து. எல்லா வசதியும் எல்லாம் இருக்குது அவனுங்கல என்ன செய்றது, அவனுங்கள நாலு நாளைக்கு இளநீ வியாபாரம் பண்ண விடனும். நாலு இளநீ வெட்டறதுக்குள்ள நாப்பது பிரச்சனை வந்துடுது, நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இவனுங்க நம்ம பிரச்சனைய எதுவும் தீர்க்க மாட்டனுங்க அடுத்த முறை ஓட்டு கேட்டு வரட்டும் வெட்டு… தான்.”

சண்முகம், பழ வியாபாரி (வயது:45)

“ரெண்டு மாசமா கடையே போடவிடல. இப்பத்தான் ரெண்டு நாளா கடை போடுறோம். மொத்த வியாபார கடையில 10,000-த்துக்கு 15,000-த்துக்கு சரக்கு எடுப்போம். அதை வித்து அவங்க கடனை அடைச்சிட்டு அதுல மீதி தான் வருமானம். இப்ப கட ஓடவேயில்ல. அடுத்தவன் காசுல கடன் வாங்கி திங்குற மாதிரிதான் எங்க வாழக்கை. அத்தியாவசியப்பொருள், பழம் விக்கலாம்னு சொல்லுறாங்க, ஆனா போலிசு வந்து கடையை மூடுன்னு சொல்லுது. போலிசு வரப்போ மூடிக்குறோம், அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி வியாபாரம் பாக்குறம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கு வீட்டு வாடகை ரெண்டு மாசமாக கட்ட முடியல, பால் டீ குடிக்கிறதயே நிறுத்திட்டோம்.

திடீர்னு ஊரடங்குனு சொல்லுறாங்க கடன் கொடுக்குறவன் கூட கடன் தர யோசிக்கிரான். இருந்த காச வைச்சி ஒரு வாரம் ஓட்டுனோம். அப்புறம் அஞ்சு வட்டிக்கு கடனா வாங்கித்தான் பொழப்ப ஒட்டுறோம். வீட்டுக்காரவங்க வாடகை கேக்குறாங்க. வேலைக்கு போயி தறோம்னு சொல்லி சமாளிக்கிறோம்.



கவர்மெண்டு 1000 ரூவா பணம் கொடுத்துது. அதை வாங்க போனப்ப வண்டிக்கு 500 ரூவா ஃபைன் போட்டு புட்டுங்கிகிச்சு. வியாபாரிகளுக்கு 10,000 கடன் உதவினு அறிவிச்சுருக்கான் நாம போயி கேட்டா எந்த பேங்குல தருவான். எவனும் தரமாட்டன். கேட்டா வருமான வரி, பான் கார்டு இருக்கா, என்ன வருமானம் அப்படினு ஆயிரம் கேள்வி கேட்பான். அரசியல்வாதி திட்டத்த அறிவிக்கிறது எல்லாம் கவர்ச்சிக்கு தான் அடுத்த முறை ஒட்டு வாங்கத்தான். நமக்கு ஒன்னும் கிடையாது.”

கெஜலட்சுமி (வயது 32)

“வீட்டு வேலை செய்யுறேன். ரெண்டு மாசமா அப்பார்ட்மெண்டுக்கு வேலைக்கு போகல. கொரானா பயத்துல வர வேணாம்னு சொல்லிட்டாங்க. வார்த்தையால சொல்ல முடியல அந்த அளவுக்கு கஷ்டத்த அனுபவிச்சிட்டோம். இப்படி ஒரு நெருக்கடி இதுவரைக்கும் பார்த்தது இல்லை. 1000 ரூபாய் காசு எம்மாத்திரம். கூலி வேலைக்கு போறவங்க எதை வைச்சி சாப்பாடுவாங்கனு தெரியவேணா. வீட்டு வாடகை, குழுக்கடன் எப்படி கொடுக்க போறேனு நினச்சாவே தூக்கம் வர மாட்டங்குது.”

.

உஷா

“கணவர் பெயிண்ட் அடிக்குற வேல… அன்னாடம் வேலைக்கு போனாதான் காசு. இப்ப ரொம்ப கஷ்டம். 40 நாளா குடிக்காம அவரும் நிம்மதியாக இருந்தாரு, நாங்களும் நிம்மதியா இருந்தோம், பிள்ளைங்களோடயும் பாசமாக இருந்தாரு. சாரய கடைய திறக்கிறாங்கனு சொன்னவுடனேயே பிள்ளைங்க அழுதுடுச்சி. மறுபடியும் அவரு யார் கிட்டயோ கடன் வாங்கி குடிச்சிட்டு வந்துட்டாரு. மக்களுக்கு நல்லதே செய்யாதா கவர்மெண்ட் எதுக்கு? இப்படி ஏழைகள போட்டு கஷ்டப்படுத்துது.

ஸ்டாலின் கட்சி காரங்க 5 கிலோ அரிசி கொடுத்தாங்க அதுவும் நல்லா இல்ல. ஏதோ கிடச்சதுனு தின்னோம். குழம்புக்கு காசு இல்லை. துவையல், புளிரசம், தக்காளி கடஞ்சி திங்கிறோம். 1000 ரூபாய் டீ செலவுக்கே சரியா போயிடுச்சி. இவங்கள கேக்க ஆளே இல்லையா, மோடியாலயும் நமக்கு எதுவும் இல்லை. எடப்பாடியாலயும் புண்ணியமில்லை.”


ஊரடங்கால் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.
ரேவதி (வயது 40)

“கோயில் வாசால்ல பூ கட்டி விக்கிறேன். கோயில் மூடியதால வேலைக்கும் வழியில்லாமல் போய்டுச்சு. இந்நேரம் ஏப்ரல் தொடங்கி எங்களுக்கு நல்லகாலம். திருவிழா, பண்டிகைன்னு நிறைய வேலை கிடச்சிருக்கும். நம்பி கடன் வாங்கலாம் வியாபாரம் பண்ணி அடைச்சிக்கலாம்னு நினச்சோம் ஆனால் கடனாளி ஆயிட்டோம். ஜூன் மாதம் பொறந்தா பள்ளிகூடம் பீஸ் கட்டனும், லாக்டவுன் முடிஞ்சா குழுக்கடன் கட்டனும். வீட்டுல இருந்தா கடன் கட்ட முடியுமா. கவர்மெண்ட் அரிசியை மாடு கூட திங்காது. மோசமான கவர்மெண்டுங்க… போராடுனாலும் ஒன்னும் செய்யமாட்டான். நம்ம கஷ்டத்த நாம தான் பாத்துக்கனும்.”

செல்வி அயனிங் வண்டி

“துணி அயனிங் தரவங்க மாடி வீட்டுல இருக்காங்க. 2 மாசமா துணி கேட்டதுக்கு வீட்டுக்கு வரவேண்டாம் நாங்க கூப்பிடறப்ப வாமான்னு சொல்லிட்டாங்க. துணியை தேய்த்து தான் வீட்டு வாடகை, சாப்பாடு எல்லாம் பாக்கனும் ஏதோ கையில இருந்து கொஞ்சம் காச வச்சி செலவு செய்தாச்சு இனியும் ஊரடங்க நீட்டினால் என்ன செய்ய போறோம் தெரியாது. காசு இல்லை, நகையும் இல்லை. ரேசன் பொருள வச்சிதான் சாப்பிடறோம் கூலி வேலை செய்றவங்கள அரசு கவனிக்கல. எடப்பாடி, மோடி ஏழைகளுக்கு இல்ல. எங்கள பொழைக்க விட்டா தேவல்ல. இன்னும் என்னத்த தான் குறைக்கிறது.” என்று வேதனையுடன் பேசினார்.”

அலமேலு (வயது 38)

“ஓட்டலில் வேலை செய்பவர், பாத்திரம் விளக்குவது, கூட்டுவது, என முழு நாளைக்கும் வேலை மாசம் 6000 ஆயிரம் கொடுப்பாங்க. கொரானா வந்ததால 2 மாசமா வேலை இல்லை. இப்ப ஒட்டல் திறந்தாச்சுனு சொன்னாங்க போன் பண்ணி கேட்டா அப்புறம் சொல்லுறோம்னு முதலாளி சொல்றாரு. ரெண்டு புள்ளைங்கள வைச்சிகிட்டு எப்படி சாப்புடுறது. அவருக்கும் பொழப்பு இல்லை. இன்னும் மிச்ச நாள கடத்த என்ன செய்ய போறோம்னு தெரியல. பால் வாங்றது இல்லை. வெறும் வரக்காபித்தான். ஒரு நாளைக்கு சாப்பாடு இரண்டு நேரம் தான். காய் போட்டு குழம்பு வச்சி ரொம்ப நாளு ஆச்சு. அரசாங்கத்த பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.”

இப்படி மக்கள் அன்றாடம் தங்களால் சொல்ல முடியாத துன்ப, துயரங்களை சந்தித்தித்து வருகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளோ ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதற்காக பல லட்சம் கோடிகளில் சலுகைகளை வாரி வழங்குவதையே தனது பொருளாதாரக் கொள்கையெனக் கொண்டுள்ளது. சமீபத்தில் அரசு அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதார திட்டமும் மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது. ஆனால் கொழுத்த முதலாளிகளுக்கோ அறுசுவை விருந்தாகியுள்ளது.

நமது வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். போராட வேண்டும்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

No comments:

Post a Comment