Sunday, 24 May 2020

NO CORONO COUNTRY IN INDIA - LAKSHADEEP




NO CORONO COUNTRY IN INDIA - LAKSHADWEEP

.கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு

இந்தியாவின் லட்சத்தீவில் இதுவரை ஒரு கொரோனா தொற்று பாசிட்டிவ் கேஸ் கூட இல்லை. கடுமையான கட்டுப்பாடுகளினால் கொரோனை விரட்டியடித்துள்ளது அந்தக் குட்டித் தீவு.

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த யூனியன் பிரதேசம் ஒன்றில் இதுவரை ஒரு பாசிட்டிவ் கேஸ் கூட பதிவாகவில்லை. லட்சத் தீவுகள் இந்தியாவில் இருக்கும் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. கேரளாவிலிருந்து அதிக போக்குவரத்து கொண்ட இது 36 தீவுகளாக அமைந்துள்ளன. அங்கு மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
மீன் பிடித்தல், தேங்காய் உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே லட்சத்தீவின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ளது. அப்படி வெளிநாட்டினர் பலரும் வரும் அந்தத் தீவில் இதுவரை ஒரு கொரோனா கேஸ் கூட கண்டறியப்படவில்லை என்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து 200- 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லட்சத்தீவு, தங்கள் அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் கேரளாவையே நம்பியுள்ளது.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதலில் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மார்ச் மாதம் 20-ம் தேதி வரை லட்சத் தீவுக்கும் கேரளாவுக்கும் இடையே அத்தியாவசியப் போக்குவரத்து நடைபெற்றுவந்துள்ளது. அப்படி இருந்தும் லட்சத்தீவில் வைரஸ் இல்லை என்பது கூடுதல் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. ``இந்தியாவில் வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டவுடனேயே வெளிநாட்டுப் பயணிகளின் வருகை மற்றும் உள்நாட்டினரின் வருகையை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடை செய்யத்தொடங்கிவிட்டோம். பின்னர் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது சுற்றுலாப் பயணிகளுக்கு மொத்தமாகத் தடை விதித்தோம்.

ஊரடங்கின்போது கேரளாவில் சிக்கி இங்கு வர நினைத்த லட்சத்தீவு மக்கள் அனைவருக்கும் கேரளாவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாசிட்டிவ் என ரிப்போர்ட் வந்தவர்களை அங்கேயே மருத்துவமனையில் அனுமதிக்கத் திட்டமிட்டோம். ஆனால், லட்சத் தீவைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்ததும் அவர்களை இங்கே அழைத்து வந்து தனிமைப்படுத்தினோம்” என லட்சத் தீவுகளின் சுகாதார செயலர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், ``ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் உதவியுடன் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொரோனா பாதிப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அந்த மக்களுக்கு யாருக்காவது சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்தோம். சில கொரோனா சாம்பிள்களை கேரளாவுக்கு அனுப்பி சோதனை செய்ததில் அனைத்து முடிவுகளும் நெகட்டிவாகவே வந்தது. அப்படி நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்களையும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தினோம்.

இந்தியாவில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபோது மிகவும் அத்தியாவசியத் தேவைகள் உள்ளவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தொழிலாளர்களுக்கும் கேரளாவில் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் அரசிடம் பாஸ் வாங்கிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். கட்டாய தனிமனித இடைவெளி, கடுமையான கட்டுப்பாடுகளின் விளைவாக கொரோனா இல்லாத தீவாக உருவாகியுள்ளது லட்சத் தீவு” என்று பெருமையாகப் பேசியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர்.

No comments:

Post a Comment