Friday, 28 August 2020

MOHAMED NABI1S DAUGHTER FATIMA DIED 632 ,AUGUST 28



MOHAMED NABI1S  DAUGHTER  
FATIMA DIED 632 ,AUGUST 28



முகம்மது நபியின் மகள் 
பாத்திமா இறந்தார் 632,AUGUST 28

அண்ணல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும் இணைந்த திருமணத்தில் முதல் குழந்தையாக காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அந்த குழந்தை சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்து விட்டது. காசிமின் இழப்பை ஈடுகட்ட அடுத்தடுத்து உம்முகுல்தூம், ஜைனப், அப்துல்லாஹ், ருகையா ரலியல்லாஹு அன்ஹும் போன்ற குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களில் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறைந்து விட்டார்கள்.

அண்ணலாரின் 35ஆவது வயதில் கதீஜா பிராட்டியர் கருவுற்றனர். அதன்பின் பெண் குழந்தையைப் பெற்று அதற்கு பாத்திமா என்று பெயரிட்டனர். இவர்களுக்கு வேறு பெயர்களும் இருந்தன. அவற்றில் அஸ்ஸஹ்ரா(ஒளிரும் எழில் நங்கை), ஸையிதத்துன்னிஸா (பெண் குலத்தின் பெருமகள்), அல்முபாரகா (அருட்கொடை), அல்சித்தீகா (வாய்மை நிறைந்தவர்) என்ற பெயர்களும் அவர்களுக்கு இருந்தன.

அண்ணலாருக்கு நபிப்பட்டம் கிடைத்த பிறகு, அவர்களுக்கு உறுதுணையாய் தம் அன்னையருடன் பாத்திமா நாயகி அவர்களும் இருந்தார்கள். அண்ணலார் கதீஜா நாயகியார் மறைந்தபிறகு> நான்கு குழந்தைகளை வளர்க்கக் கூடிய பொறுப்பு அவர்களை வந்தடைந்தது.

இந்நிலையில் குறைஷிகள் துன்பம் பெருகியது. அண்ணலாருக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஐந்து வயது சிறுமியாக இருந்த பாத்திமா நாயகி அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே சென்று விட்டால் தீயின் மீது நிற்பவர் போல் தான் துடித்துக் கொண்டிருப்பார்கள். தந்தையாருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது அவர்கள் நலமாய் இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருப்பார்கள்.

அண்ணலார் ஒருமுறை வீதியின் வழியே சென்று கொண்டிருக்கும்போது ஒரு கயவன் அவர்கள் மீது மண்ணைவாரி இறைத்தான். இதைக் கண்ட பாத்திமா நாயகி அவர்கள் துடித்தார்கள். தந்தையார் மகளுக்கு இறைவன் நமக்கிருக்கிறான் என்று ஆறுதல் கூறினார்கள்.

அருமைத் தோழர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் யத்ரிப் சேர்ந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில ஏற்பாடுகள் செய்த பின்னர் தம் கண்மணி மகளார் பாத்திமா அவர்களை அழைத்து வரும்படி உண்மை ஊழியர் ஸைதை அனுப்பி வைத்தனர். சில நாட்களில் யத்ரிப் வந்து சேர்ந்தார்கள் பாத்திமா நாயகி அவர்கள்.

இளம் வயதிலேயே மனைவியை இழந்து விட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பொழுது உம்முசல்மா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடித்தனர். உம்முசல்மா அவர்களும், வேறு சிலரும் பாத்திமா நாயகியை கண்போல பேணிஅன்புடன் கவனித்தார்கள். அவர்களில் ஒருவர் அலி நாயகத்தின் அன்னையான பின்தே அசத் ஆவார்கள்.

அடக்கமுள்ளவர்களாயினும் பாத்திமா நாயகி அவர்கள் அழகாகப் பேசும் திறன் வாய்ந்தவர்களாக இருந்தனர். சின்னஞ்சிறு வயதில் அத்துணை நாகரீகத்துடன்பேசியவரை நான் கண்டதில்லை என்று வியந்து கூறுகிறார்கள் அஸ்மா பின்த் அனீஸ் அவர்கள்.

பாத்திமா நாயகி அவர்கள்ஒதுங்கியிருக்கும் உயர்குணம் படைத்தவர்கள். அடுத்த வீட்டு சிறுமிகளுடன் அதிகம் பழகுவதில்லை. ஆனால் அவர்களைக் காணும் போது அன்புடன் உரையாடவும் ஒருபோதும் தவறுவதில்லை. ஏதும் வேடிக்கை காணவோ, தோழிகளை வெளியே சென்று சந்திக்கவோ சென்றது கிடையாது. சிறுமிகளுடன் அவர்கள் அதிகம் கலந்து உறவாடினும் அவர்கள் அனைவரின் அன்பும் பாத்திமா நாயகி அவர்களுக்கு கிடைத்திருந்தது.

மக்கநகரில் வாழ்ந்ததுபோலவே மதீனா நகரிலும் பாத்திமா நாயகி அவர்கள் தம் காலத்தை தந்தையாரை மகிழ்விப்பதிலும், அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனிப்பதிலும் கழித்தார்கள். தந்தையாருடன் இருக்கும்போது அவர்கள் அதிகம் மகிழ்ச்சி கொண்டார்கள்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு திருமண வயது வந்தது. தம்மை அணுகி பெண் கேட்போர் அனைவருக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வின் உத்திரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’ என்று பதில் உரைத்ததைக் கண்டு கேட்டவர்கள் மௌனமாயினர். அவர்களில் அபூபக்கர் சித்தீக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

நாட்கள் பலவாகியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொல்லாது போகவே, பெண் கேட்டவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்தனர். இறுதியில் தம் மருமகனார் அலி நாயகத்தை பாத்திமா நாயகிக்கு மணம் முடித்து கொடுக்க அண்ணலார் விரும்புகிறார்கள் என்று கண்டு கொண்டு, அலி நாயகத்தை பெண் கேட்டு செல்ல தூண்டினர்.

அதற்கு அலி நாயகம் தான் மிகவும் ஏழ்மையில் உள்ளேன். எனக்கு மனைவியை காப்பாற்றும் வசதி வந்ததும் பொறுத்திருக்கிறேன். என்று சொன்னார்கள். வந்தவர்கள் தாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று அலி நாயகத்திடம் சொன்னார்கள். இவர்களின் ஊக்கத்தால் உரம்பெற்ற அலி நாயகம் அவர்கள் அல்லாஹ்வின் தூதரை அணுகத் துணிந்தார்கள்.

அண்ணலாரின் வீட்டை அடைந்துத கதவை தட்டினார்கள். திறக்கப்பட்டது. தயக்கத்துடன் ஒரு மூலையில் சென்று நாணத்துடன் அமர்ந்து கொண்டார்கள். அண்ணலார் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்தார்கள். வீட்டின் மூலையில் நாணத்துடன் அமர்ந்திருந்த அலி நாயகத்தை கண்டதும் அன்புடன் ‘நீர் என்றுமில்லாமல் அதிக நாணத்துடன் அமர்ந்திருக்கிறீர்களே’ என்று கேட்டார்கள். நீங்கள் சொல்ல வந்தவிசயத்தை தயக்கமில்லாமல் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலாரின் மகளை மணந்து கொள்ள அனுமதி கேட்டார்கள். அக்கணமே அண்ணலார் அலி நாயகத்;தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். சற்று முன்னர்தான் அலி நாயகத்துடன் பாத்திமா நாயகிக்கு திருமணம் நடந்தேற வேண்டுமென்று இறைவன் தெரிவித்ததாகவும் தெரிவித்தனர். அலி நாயகத்தை பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு, அண்ணலார் பள்ளிக்கு சென்றனர்.

அருமை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து மக்களை கூவி அழைக்குமாறு கூறினர். பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குரல் கணத்தில் மக்களை திரட்டிவிட்டது. அண்ணலார் மேடைமீதேறி அண்ணலார் அலி நாயகத்திற்கு தம் மகளை திருமணம் முடிக்கும் விசயத்தை அறிவித்தார்கள். மக்கள் அனைவரும் ஒருமித்துத் தம் இணக்கத்தைத் தெரிவித்தனர்.

மக்களின் இணக்கத்தைப் பெற்ற அண்ணலார் தம் மகளாரின் இணக்கம் பெற வீடு சென்றனர். அலி நாயகத்தை மணக்க மகளின் ஒப்புதல் கேட்டனர். தம் மௌனத்தால் பாத்திமா நாயகி அவர்கள் ஒப்புதல் கொடுத்தனர்.

அலி நாயகத்திடம் இருந்த குதிரை ஒன்றும், ஐந்து திர்ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கி ஒன்றும், வாள் ஒன்றும்,ஆட்டுத் தோல் ஒன்றும்போர்வை ஒன்றும் இருந்தது. இதில் இரும்பு அங்கியை விற்று திருமணச் செலவிற்குப் பணம் பெற விரும்பினர். அலி நாயகத்தின் வறிய நிலையை உணர்ந்த உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஐந்தே திர் ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கியை ஐந்நூறு திர்ஹம் விலை கொடுத்து வாங்கினர். அதன்பின் அந்த அங்கியை உதுமான் நாயகம் அவர்கள் திரும்ப அலி நாயகத்திற்கே அன்பளிப்பாக அளித்துவிட்டனர்.

ஐந்நூறு திர்ஹத்தை அண்ணலாரிடம் கொடுத்தனர் அலி நாயகம் அவர்கள். அதனை அவர்கள் பெற்றுக் கொண்டு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து திருமண விழாவிற்கான பொருட்கள் வாங்கி வரும்படி சொன்னார்கள். அதன்பிறகு இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது பாத்திமா நாயகிக்கு வயது பதினைந்தரை. திருமணம் முடிந்ததும் திருமண விருந்தாக ஒரு கூடையில் பேரீத்தபிம் கொண்டு வந்து வைக்கபட்டது. அனைவரும் தேவையானதை எடுத்துக் கொண்டனர்.

தம் மகளுக்கு சீதனமாய் மூங்கில் கட்டில் ஒன்றும், தோல் விரிப்பு ஒன்றும்> தோல் தலையணை ஒன்றும்> துருத்தி ஒன்றும், குவளை ஒன்றும், வெள்ளிக் கடகம் இரண்டும், மண்குடம் இரண்டும் அளித்து மகிழ்ந்தனர்.

மணவிழா முடிந்து மக்கள் கலைந்து சென்றதும் புதுமணப்பெண்ணாய் நாயகியார் வீட்டில் வீற்றிருக்கும் வேளையில், வீட்டின் வெளியே எவரே ஒரு ஏழை யாசகம் கேட்கும் குரல் அவர்களின் செவியில் விழுந்தது. உடனே அவர்கள் தம் தந்தையார் மணவிழாவிற்கென வாங்கித் தந்த புதிய ஆடையைக் களைந்து கையில் எடுத்துக் கொண்டு பீற்றல் நிறைந்த மற்றொரு ஆடையை உடுத்துகி கொண்டு வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த ஏழையிடம் தம் மண ஆடையை மகிழ்வுடன் அளித்து விட்டார்கள்.

சற்று நேரத்தில் தம் புதல்வியைக் காண வந்த நாயகம் அவர்கள், இது பற்றி விசாரித்தபோது, பிறருக்கு நீங்கள் வழங்கும்போது உங்களிடமுள்ள சிறப்பானதை வழங்குங்கள் என்று சொன்னீர்கள். அதனால்தான் என்னிடமுள்ள ஏற்றமான அந்த உடையை வழங்கினேன் என்று சொன்னார்கள். மகள் அளித்த பதில் அண்ணலாருக்கு எல்லையில்லா மகிழ்வைத் தந்தது.

திருமணம் நிகழ்ந்து ஒரு மாதம் வரை பாத்திமா நாயகியார் தந்தையாரின் இல்லத்திலேயே இருந்தார்கள். அலி நாயகம் அவர்கள் அவர்களை தமது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினர். நாயகம் அவர்களும் தம் வீட்டில் ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்தனர். ஏழை முஸ்லிம்கள் பல வயிறார உண்டு வாழ்த்தினர்.

அதன்பிறகு அருமை மனைவியார் உம்முசல்மா நாயகியை அழைத்து பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து வரச் செய்து அறிவுரைகள் கூறி அலி நாயகத்துடன் அனுப்பி வைத்தார்கள்.

தம் அருமை மருமகள் பாத்திமா நாயகியை பின்தே அசத் அவர்கள் பொன்போல் போற்றிப் வந்தார்கள். முதிர்ந்து மூதாட்டியாக இருந்த பின்தே அசத் அவர்களை பாத்திமா நாயகியார் அசையக் கூட விடவில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களே செய்தார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார்கள்.

இதனால்தான் ‘என் அன்னையரும்> மனைவியும் தாயும் மகளும் போல் வாழ்கிறார்கள்’ என்று அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

இதனால் வாழ்வு மகிழ்ச்சிகரமாக சென்றது. ஆனால் எல்லாவித வசதிகளும்> சௌகரியங்களும் பெற்றிருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. வறுமை வருத்தினாலும் அலி அவர்களும்> பாத்திமா அவர்களும் எளிய உணவுடனும்> இற்ற உடைகளுடனும் பூரணத் திருப்தியுற்றனர். திருகையில் மாவரைப்பது> வீட்டைக் கூட்டிப் பெருக்குவது> துணிமணிகளைத் துவைப்பது> கிழிந்த ஆடைகளைத் தைப்பது> முதிர்ந்த மாமியாருக்கு உதவுவது> அன்புக் கணவருக்கு பணிவிடை செய்வது ஆகிய இத்தனை வேலைகளையும் பசியுடனும்> பட்டினியுடனும் பாத்திமா நாயகி அவர்கள்தாம் செய்தனர். இத்துணை வேலைகள் செய்ததும் நாயகியார் களைத்துப் போயினர். அதைக் கண்டு அலி நாயகம் அவர்களும் உதவி புரிவார்கள். சில சமயங்களில் பாத்திமா நாயகி அவர்களின் வீட்டு வேலைகளில் தந்தையாரும் பங்கு பெறுவது உண்டு.

ஒவ்வொரு நாளும் அதிகாலை பள்ளிவாசலுக்குச் செல்ல முன்னர் பாத்திமாவின் வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குத் திருப் பணிபுரிந்த ஒருவர் கூறுகிறார். “நபியவர்கள் எப்போதாவது பிரயாணம் செய்யப் புறப்பட்டால் இறுதியாக விடைபெறுவது பாத்திமாவிடமே. அவ்வாறே பிரயாணம் முடிந்து திரும்பி வரும் போது முதலில் சென்று சந்திப்பதும் பாத்திமாவையே.”

இதனால் தமக்கு உதவ ஒரு பணிப்பெண் வேண்டும் என்று தம் தந்தையிடம் கேட்க எண்ணினார்கள். இதற்காக அவர்கள் தம் தந்தையை சந்திக்க சென்றபோது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நாயகி அவர்கள் திரும்பி விட்டார்கள். பிறகு வீட்டிற்கு சென்றார்கள். என்னசொல்வார்களோ என்று எண்ணி தயங்கிக்கொண்டிருக்கும்போது, அலி நாயகம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தம் மகளுக்கு பணிப்பெண் அமர்த்தும்படி கேட்டார்கள்.

அதற்கு அண்ணல் நபி அவர்கள் தம் தோழர்களில் பலர் உண்ண உணவுகூட இல்லாமல் வாடும்போது உங்களுக்கு பணிப்பெண் எதற்கு? தோழர்களின் நிலை சீராகும் வரை எம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள். எனினும் சில நாட்களில் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணிப்பெண்ணை அன்புடன் நடத்த வேண்டும் என்றும்> இருக்கும் வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்றும் மகளாருக்கு அறிவுரை சொன்னார்கள்.

உண்மையிலேயே பாத்திமா நாயகி அவர்களுக்கு இயல்பிலேயே ஈர நெஞ்சமும், இரக்க குணமும் இருந்தது. தம் பணிப்பெண்ணை அன்புடன் நடத்தினார்கள். ஒரு நாள் பணிப்பெண் மாவு அரைத்தால், மறுநாள் திரிகை பிடிக்க வேண்டியது பாத்திமா நாயகி அவர்கள்தான். ஒரு நாள் பணிப்பெண் வீட்பை; பெருக்கினால், மறுநாள் நாயகி அவர்கள் பெருக்குவார்கள். இதனால் பணிப்பெண் பாத்திமா நாயகி மீது அளவற்ற அன்பு வைத்திருந்தாள். பாத்திமா நாயகி நோயுற்றால் அந்தப் பணிப்பெண் படும்பாடு சொல்ல முடியாது. பாத்திமா நாயகியை விட்டு அகலவே மாட்டாள்.

அதேபோல் பாத்திமா நாயகி அவர்களுக்கும் அவள் மீது அன்பு இருந்தது. சாமான்கள் வாங்கி வரும்போதெல்லாம் அவளுக்கென்று ஏதாவது ஒன்று வாங்கிவர அவர்கள் தவறுவதேயில்லை. ஏதேனும் அவள் தவறிழைத்துவிட்டால் அதைக் கண்டிப்பதும் இல்லை. தவறு நேராது ஒழுங்காக செய்யும் முறையை மட்டும் விளக்குவார்கள். கடும் சொல்லோ> சுடுச் சொல்லோ அவர்களின் வாயிலிருந்து வந்ததே இல்லை.

உஹது போரில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி பாத்திமா நாயகி அவர்களுக்கு கிடைத்ததும், உடனே போர்க்களம் விரைந்தார்கள். அங்கு அவர்கள் வந்ததை அறிந்த அலி நாயகம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்று காட்டியதும்தான் நிம்மதி அடைந்தார்கள். அண்ணலாரின் பற்கள் ஷஹீதாக்கப்பட்டு காயம் ஏற்பட்டு இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. தம்முடைய ஆடையைக் கிழித்து அதை எரித்து அதிலிருந்து வந்த சாம்பலை நாயகத்தின் காயத்தின் மேல் வைத்ததும்தான் இரத்தம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது.

அதேபோல் அகழி யுத்தத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல நாட்கள் பசித்திருந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் போது, பாத்திமா நாயகியார் தம்மிடமிருந்த அனைத்து உணவுகளையும் கட்டிக் கொண்டு பெருமானாரிடம் சென்று சாப்பிடச் சொன்னார்கள். மகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாம் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு மீதத்தை பசித்திருந்த தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்கள். மேலும் அபாயமான இத்தருணத்தில் இங்கு வரக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பினார்கள்.

இதன்பின்> அலி நாயகம் அபூஜஹல் மகளை மணக்கப் போகிறாராம் என்ற செய்தி மதீனத்து நகர் பெண்களிடம் பரவி பாத்திமா நாயகி அவர்களுக்கும் தெரியவந்தது. அதனால் மிகவும் கவலையுற்று, வேதனையுற்று தம் தந்தையிடம் சொன்னார்கள். தந்தையாரும் அலி நாயகத்திடம் சென்று கேட்டு வருவோம் என்றுசொல்லி தம் புதல்வியருடன் சென்று அலீ நாயகத்தை கண்டு, ‘பாத்திமாவைத் துன்புறுத்தியவர் என்னைத் துன்புறுத்தியவர். என்னைப் பயமுறுத்தியவராவார் என்பதை நீர் அறிவீர்களா?’ என்று வினவினார்கள்.

சினத்துடன் நாயகம் அவர்களின் இச்சொல் கேட்டு அலி நாயகம் அவர்கள் துடித்துப் போனார்கள். அதனை நான் நன்கு அறிவேன் நாயகமே! என்று அலி நாயகம் அவர்கள் மறுமொழி பகிர்ந்தனர்.

அவ்வாறாயின் நீர் அபூஜஹலின் மகளை மணக்கத் துணிந்தீர்? என்று அண்ணல் நபி அவர்கள் கேட்டார்கள். ‘நீர் அபூஜஹலின் மகளை மணப்பதாயிருப்பின் பாத்திமாவை மணவிலக்கு செய்துவிட்டுத்தான் மணக்கலாம்’ என்று சொன்னார்கள். வியப்பும் வேதனையும் கொண்டவர்களாய் அலி நாயகம் அவர்கள் தமக்கு அவ்வித எண்ணம் இருந்ததே இல்லை என்று சொன்னார்கள். வீண் கட்டுக்கதையை நம்பி தலைகவிழ்ந்திருந்த தம் மனைவியை ஆறுதல் படுத்தி தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தமக்கிருந்த அன்பை அலி நாயகம் விரித்துக் கூறினர்.

அண்ணலார் கூறினார்கள்: ‘எவர் பாத்திமாவை மகிழ்விக்கிறாரோ அவர் என்னை மகிழ்விக்கிறார். எவர் என்னை மகிழ்விக்கிறாரோ அவர் இறைவனை மகிழ்விக்கிறார்’ என்று.

பாத்திமா நாயகி அவர்களை அடிக்கடி காண வேண்டும் என்று என்று அண்ணலார் விரும்பினார்கள். ஆனால் அவர்களின் இல்லாம் தொலைவிலிருந்தது. எனவே ஒரு நாள் தம் புதல்வியரிடம் ‘நீ என் வீட்டின் அருகிலேயே குடியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’என்றார்கள்.

நாயகத்தின் வீட்டினருகே ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பல வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தாங்கள் கேட்டால் கிடைக்கும் என்று மகள் கூறினார்கள்.

‘ஹாhஸா அவர்கள் எனக்காக எத்தனையோ வீடுகள் விட்டுள்ளார். எனவே மீண்டும் அவரிடம் வேறொரு வீடு தருமாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டார்கள்.

இதையறிந்த ஹாரிஸா அவர்கள் அண்ணலாரின் அருகிலுள்ள வீட்டை பாத்திமா நாயகிக்கு காலி செய்து கொடுத்து விட்டார்.

பாத்திமா நாயகிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு அலி அவர்கள் இட்ட பெயரான ஹர்ப் என்ற பெயரை மாற்றி ஹஸன் என்று பெயரிட்டு அகமகிழ்ந்தனர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஹஸன் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு பிறந்தார்கள். அவர் அமைப்பில் அருமைப் பாட்டனாரைப் போலவே இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு இரு பேரர்களின் மீதும் எல்லையில்லா அன்பிருந்தது. தம்முடைய பேரர்களுடன் அதிக நேரம் வைத்துக் கொள்வதையே விரும்பினார்கள்.

எந்தத் துன்பத்தையும் தந்தையாரிடம் கூறி ஆறுதல் பெறுவது பாத்திமா நாயகி அவர்களின் வழக்கமாகும். ஒருநாள் தந்தையாரின் மனைவியார் ஆயிஷா பிராட்டி கூறிய ஒரு சொல் பாத்திமா அவர்களின் நெஞ்சை முள்போல் குத்திக் கொண்டே இருந்தது.

தந்தையாரிடம் சென்று இதுபற்றி சொன்னார்கள். ஆயிஷா நாயகியார் என்னை விதவைத் தாய்க்குப் பிறந்தவர் என்கிறார்கள் என்றார்கள். கூறும்போதே குரல் கரகரத்தது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். இதற்காகவா துக்கப்படுகிறீர்கள்.? என் தாயார் விதவை என்பது உண்மைதான். ஆனால் தாங்கள் யாரை மணந்தீர்கள்? என் அன்னையார் கட்டிக் கழித்தவர்களைத்தாமே என்று நீர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறி இருக்க வேண்டாமா! என்று கேட்டார்கள். இந்த பதிலைக் கேட்டதும் பாத்திமா நாயகி அவர்கள் தம் துன்பத்தையெல்லாம் மறந்து விட்டார்கள்.

ஒருமுறை பாத்திமா நாயகி அவர்கள் நோயுற்று வருந்துவதை அறிந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதல்வியாரைக் காண வந்தார்கள். அப்போது நலம் விசாரித்தார்கள். பாத்திமா நாயகி அவர்கள் தமக்கு நோய் கடுமையாக இருப்பதாகவும் அதைப் பொறுத்துக் கொள்ள முயலுவதாகவும் கூறினர்.

அண்ணலார், ‘ஆம் மகளே! நீர் அகிலத்து மாதர்களுக்கோர் அரசி ஆவீர். அறிந்து மகிழ்வீர்’ என்று புகழந்துரைத்தார்கள். எனவேதான் இவர்களுக்கு ஸையிதத்துன்னிஸா என்றும்> பெண்களில் உயர்ந்தவர் என்ற பொருள் தரும் அப்ளலுன்னிசா என்ற பெயரும், பூவையரில் மேலானவர் என்று பொருள்தரும் கைருன்னிசா என்னும் பெயரும் அவர்களை அணி சேர்த்தன.

ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்த அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொல்லப்படும் நிலைக்குள்ளாகத் தம்முடைய ஒரே குழந்தையைத்தான் விட்டிருந்தார்கள். ஆனால் பாத்திமா நாயகியோ தமது இரு புதல்வரையுமே இறைவன் பேரில் அர்ப்பணித்து விட்டார்கள். எனவேதான் அவர்கள் பெரிய மர்யம் எனப் பொருள்படும் ‘மரியமே குப்ரா’ என்று குறிப்பிட்டார்கள்.

பாத்திமா நாயகி அவர்கள் கொடிய வறுமை வாழ்வை ஏற்று அதில் இன்பம் கண்டார்கள். வறுமையைத் தந்து தம்மை வருத்தும் இறைவனை அவர்கள் விரும்பினார்கள். நேசித்தார்கள். வழுத்தி வணங்கினார்கள்.

எந்நேரமும் மலர்ந்திருக்கும் முகமும், நிறைந்த உளமும், ஈரம் மாறா நெஞ்சமும் பாத்திமா நாயகி அவர்களை அணி செய்திருந்தன. ஒப்பற்ற உயரிய குணங்கள் பெற்றிருந்த பாத்திமா நாயகி அவர்கள் அழகிய துணிமணிகளையோ அலங்கார ஆடைகளையோ அணிந்ததே இல்லை. கிழிந்த ஆடைகளைக் கொண்டே அவர்கள் அளவற்ற திருப்தி அடைந்தார்கள்.

கணவருக்கும், குழந்தைகளுக்கும் துணி வாங்கும்போது கூட தமக்கென்று எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒட்டுப் போட்ட இற்ற ஆடைகளே தமக்குப் போதும் என்று அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். தடித்த துணியால் ஆன ஆடையையே அவர்கள் விரும்பி அணிவார்கள். யாராவது உயர்தர ஆடைகளை கொடுத்தால் அவற்றை பாத்திமா நாயகி அவர்கள் ஏற்க மறுத்து விடுவார்கள். நான் வழக்கமாய் அணியும் துணிதான் எனக்குப் பிடித்தமானது என்று கூறிவிடுவார்கள்.

ஒருநாள் புதல்வியார் நோயுற்றிருக்கிறார் என்று கேள்விப்பட்டு நலம் விசாரிக்க அண்ணலார் தம்தோழர் ஒருவருடன் புதல்வியாரின் வீட்டிற்குப் புறப்பட்டனர். வீட்டை அடைந்ததும் தம் வழக்கப்படி வாயிலில் நின்றவாறு உள்ளே வர அனுமதி கேட்டார்கள்.

நோய்ப்படுக்கையில் கிடந்த மகளாரின் குரல் கேட்டது. ‘ யாரஸூலல்லாஹ்! என்னிடம் உள்ள ஆடையோ சிறியதாயிருக்கிறது. இந்நிலையில் அன்னியரை நான் எவ்வாறு வரவேற்பது?’ என்றார்கள்.

‘கண்மணியே! உம் உடலை நன்கு போர்த்திக் கொள்ளும். வாயிலில் நின்ற தந்தையார் கூறினார்கள்.

‘யாரஸூலல்லாஹ்! நானும் போர்த்தத்தான் பார்க்கிறேன். போர்வையோ பற்றவில்லை. தலையை மூடினால் கால் தெரிகிறது. காலை மூடினால் தலை தெரிகிறது’ என்று பாத்திமா நாயகி அவர்கள் சொன்னார்கள். ஆற்றாமையைப் புரிந்து கொண்டு தம் போர்வையை உள்ளே வீசியெறிந்து ‘இதைக் கொண்டு உம் உடலை நன்கு போர்த்திக் கொள்ளும்’ என்று நவின்றார்கள். அதன்பின்னர்தான் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு முறை குளிர் அதிகமாக இருந்ததால் கடுங்குளிரில் நடுங்குவதைக் கண்ட ஜைனப் பின்தெ அதபா அவர்கள் போர்வை ஒன்றைக் கொடுத்த போது அன்புடன் அதனை மறுத்த பாத்திமா நாயகி அவர்கள் என் கணவர் தந்த போர்வையே எனக்குப் போதும் என்று கூறி அலி நாயகம் அவர்கள் வாங்கித் தந்த பழைய போர்வையைக் காட்டினார்கள்.

ஒருநாள் அண்ணலார் உணவின்றி பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த பாத்திமா நாயகி அவர்கள் தம்மிடமிருந்த மாவில் ரொட்டி சமைத்துத் தந்தையாருக்கு கொண்டு சென்றார்கள். தந்தையார் ‘ஏது இவை?’ என்று வினவினார்கள்.

இரு பசி வேளைளகளுக்குப் பின் இது எங்களுக்கு; கிடைத்தது. தங்களின் நினைவும் கூடவே வந்தது. கொண்டு வந்தேன்’ என்றார்கள் பாத்திமா நாயகி அவர்கள். உடனே ‘ உம் தந்தையின் நாலாவது பசி வேளைகளுக்குப் பின் இது கிடைத்திருக்கிறது’ எனக் கூறினார்கள்.

அஸ்மா என்பவர்கள் அடிக்கடி பாத்திமா நாயகி அவர்களை வந்து காண்பது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அவர் சென்றபோது பாத்திமா நாயகி அவர்கள் சோளரொட்டியைத் தண்ணீரில் நனைத்து அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

பாத்திமா அவர்கள் மென்மையான படுக்கையில் படுப்பதை என்றும் விரும்பியதில்லை. மண்தரையில்தான் படுப்பார்கள். அதில் இன்பம் கண்டார்கள்.

ஒருநாள் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அலீ நாயகம் அவர்கள் பசித்ததால் சாப்பிட ஏதும் இருக்கிறதா? என்று நாயகி அவர்களிடம் கேட்டார்கள். ஒரு கோதுமை மணி கூட இல்லை. மூன்று நாட்களாக இதே நிலைதான் என்று சொன்னார்கள்.

ஏன் என்னிடம் கூறவில்லை? என்று சொன்னார்கள். தங்களிடம் எதையும் கேட்டு தொந்திரவு செய்யக் கூடாது என்றும், தங்களை வெட்கமடையச் செய்யக் கூடாது என்றும் எனது தந்தையார் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பாத்திமா நாயகி அவர்கள் சொன்னார்கள். மனைவியாரின் மறுமொழி அலி நாயகத்தின் உள்ளத்தை குளிரச் செய்தது. பசியை மறக்கச் செய்தது.

செல்வ வீட்டுப் பெண் ஒருவர் பாத்திமா நாயகி அவர்களிடம் தங்களுக்கு ஏதும் தேவைப்படின் என்னிடம் கூறுங்கள். நான் தருகிறேன் என்றார்கள். அதற்கு பாத்திமா நாயகி அவர்கள் இப்பொழுது எனக்கு எதுவும் தேவையில்லை. தேவைப்படும் ஏழைகளுக்கு வழங்குங்கள். எப்பொழுதுமே மேல் கையானது கீழ்கையை விட மேலானது’.

ஒருநாள் அண்ணலார் ஓர் ஏழையை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அனுப்பி தம் மகளாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஏதாவது வாங்கிக் கொடுக்குமாறு கூறினார்கள். அப்பொழுது பாத்திமா நாயகி அவர்கள் மூன்று நாட்கள் பட்டினியுடன் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.

எளியவரை அழைத்துக் கொண்டுவந்த பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நாயகி அவர்களிடம் கூறினார்கள். அதற்குள் அந்த எளியவர் முந்திக் கொண்டு தாம் உணவருந்தி இரு நாட்களுக்கு மேலாகின்றன என்றும் நடுங்கும் குளிரில் உடலைப் போர்த்தக் கூடத் தம்மிடம் எதுவுமில்லை என்று கூறினார்கள்.

அவரின் துயர நிலை அறிந்த பாத்திமா நாயகி அவர்களின் கண்கள் கலங்கி விட்டது. மறுகணம் தம்மிடம் இருந்த குழந்தைக்கு போர்த்தக் கூடிய ஒரே போர்வையை எடுத்;து கொடுத்து விட்டார்கள். பசிக்கு ஏதாவது தாருங்கள் என்று அந்த எளியவர் கூறியதும்> தாம் பிரியத்துடன் பாதுகாத்து வந்த தம் தாயின் கழுத்தணியை எடுத்து கொடுத்து இதை விற்று உணவுப் பொருள் பெற்று வருவீர் என்று கொடுத்தார்கள்.

அவர்அதனை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் வந்து நடந்ததைக் கூறினார். தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அண்ணலார் தம் மகளின் ஈகையை நினைத்து உள்ளம் பூரித்தார்கள். அதனை ஒருவர் அந்த அணிகலன்களை விலைக்கு வாங்கினார். பொன் கொடுத்து வாங்கிய அவர் அதனையும் ஒரு அடிமையையும் பாத்திமா நாயகி அவர்களுக்கு கொடுத்து அனுப்பினார்கள். அன்பளிப்பாய் வந்த அடிமையை உடனே விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அணிகலனை மட்டும் அணிந்து கொண்டார்கள்.

பாத்திமா நாயகியாரின் மகனார்கள் கடும் நோயால் அவதிப்பட்டனர். எல்லாவித வைத்தியமும் செய்தும் குணமடையவில்லை. இதனால் பெற்றோர்கள் மனம் கலங்கினர். அவர்கள் இருவரும் இறைவனிடம் தங்கள் பிள்ளைகள் குணமடைந்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக வேண்டிக் கொண்டனர்.

அதன்பின் சில நாட்களுக்குள் புதல்வர்கள் இருவரும் நலம் பெற்று வந்தனர். உடனே பெற்றோர் இருவரும் நோன்பிருக்க தீர்மானித்தனர். சிறிதளவு உணவு உண்டு நோன்பு நோற்றனர். நோன்பு திறக்கும் நேரமும் வந்தது. நீர் அருந்தி நோன்பு திறந்தனர். பார்லி ரொட்டி முன் அமர்ந்து ரொட்டியை கைகள் தொட்டதும் வாயிலில் ஒரு குரல் கேட்டது: ‘ நான் பசித்தவன்.ஆண்டவனுக்காக என் பசியைத் தணியுங்கள். பசியால் இறந்து கொண்டிருக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று.

அடுத்தவர் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்ற அண்ணல் நபியின் வாக்கு அவர்கள் முன் தென்பட்டது. உடனே அந்த ரொட்டி முழுவதையும் அந்த ஏழைக்கே கொடுத்துவிட்டார்கள்.

அதேபோல் மற்ற இரண்டு நாட்களும் வாயிலில் உணவு வேண்டி குரல் கேட்கவே, தங்களுக்கு இல்லாமலேயே இருந்த உணவுகளை கேட்ட அந்த எளியவர்களுக்கே அளித்து மனத்திருப்தி கொண்டனர்.

அல்லாஹ்வும் வஹீ மூலம் அண்ணல் நபி அவர்களுக்கு அறிவித்தான்: ‘ இவர்கள் (தாங்கள் செய்து கொண்ட பிரமாணத்தை) நேர்ச்சையை, நிறைவேற்றி வைத்தனர். நீண்ட தண்டனையுடைய நாளைப் பயந்து கொண்டிருந்தனர். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பால் ஏழைகளுக்கும்> அனாதைகளுக்கும் சிறைப்பட்டோருக்கும் உணவளித்து வந்தனர்.(தானம் பெறுவோரிடம்) நாம் உங்களுக்கு ஆகாரம் அளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்கேவாகும். உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் எங்களுக்கு) நன்றி கூறுவதையோ விரும்பவில்லை. மேலும் நிச்சயமாக நாம் எமது இறைவனின் ஒரு நாளை பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டிப் போய்விடும்.(என்றே கூறி வந்தனர்)’

நாணமும்> அடக்கமும் கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்வார்கள். பிற ஆண்களைப் பார்ப்பதை விரும்புவதில்லை. அதேபோல் தம்மை பிற ஆண்கள் பார்க்கவும் விடுவதில்லை. வாரத்தில் வியாழன், சனிகளில் மட்டும்தான் வெளியே செல்வார்கள். இந்நாட்களில் ஷுஹதாக்களின் கப்ருகளுக்கு சென்று ஜியாரத் சென்று வருவார்கள்.

தம் வேலைகளைத் தாமே செய்வார்கள். துணி தைப்பார்கள். திரிகையில் மாவரைப்பார்கள். தோல் பையில் நீர் கொணர்வார்கள். நீர் நிறைந்த கனக்கும் பை அவர்களின் மேனியில் தழும்பு உண்டு பண்ணும். திரிகையில் மாவரைக்கும் போது களைப்பால் அதன் மேலேயே சாய்ந்து விடுவார்கள். தம் குழந்தைகளுக்கும் அருள்போதம் வழங்கத் தவறுவதில்லை. தம்மிடம் கல்வி கற்க வருபவர்களுக்கு இன்முகம் காட்டி அல்லாஹ்வின் மறையும்> அவன் தூதரின் வழிமுறைகளையும் அவர்களுக்கு அழகாகக் கூறுவார்கள்.

இன்குரல் பெற்றிருந்த அவர்கள் உரத்துப் பேசியோ> சிரித்தோ அறியார்கள். பிறர் முன் மிகவும் அடக்கத்தோடு அமர்ந்திருப்பார்கள். உரையாடல்களில் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருந்தவாறே நிகழ்வனைத்தையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். குறுக்கே ஏதும் கூற மாட்டார்கள். நுண்ணிய அறிவும்> நினைவாற்றலும் பெற்றிருந்த அவர்கள் பேசத் தொடங்கினால் எல்லோர் கவனமும் அவர்களின் பக்கமே திரும்பும். ஆண்கள் முன்னால் மிக அடக்கத்துடனும்> முகம்> உடல் முழுவதும் திரை போர்த்தி தலை தாழ்த்தியே அமர்ந்திருப்பார்கள். மிக நெருங்கிய உறவினர் முன்னிலையிலும் கூட அவர்கள் முகத்திரையை விலக்குவதில்லை.

பெருநாட்களின் போது மக்கள் திரளில் பாத்திமா நாயகியைக் காணவே இயலாது. எங்காவது ஒரு மூலையில் எவர்க்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார்கள். வயதில் பெரியவர்களைக் கண்டால் அதிக மரியாதை செய்வார்கள். ஊனமுற்றோர்களுக்கு பரிவுடன் உதவிடுவார்கள்.

இறைவனை வணங்குதில் கொஞ்சம் கூட சளைக்காதவர்கள். இரவு முழுவதும் கடுமையான வணக்கத்தில் ஈடுபடுவார்கள். சுன்னத்தான நோன்புகளை பிடிக்கத் தவறுவதில்லை. அவர்கள் வாயிலிருந்து பொய் என்றும் வெளிவந்ததில்லை.

ஒருமுறை வீட்டுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணலார் அழைக்கிறார்கள் என்று ஒரு ஆள் வந்து கூறிவிட்டுச் சென்றதும்> உடனே பாத்திமா நாயகி அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். அங்கு தமது தந்தையார் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். காரணம் வினவியபோது, அன்று இறைவனிடமிருந்து இறங்கிய வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். அதைக் கேட்ட பாத்திமா நாயகி அவர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

இந்தக்காலகட்டத்தில் பாத்திமா நாயகிக்கு முஹ்ஸின் என்னும் ஆண் குழந்தையும், ஜைனப், உம்முகுல்தூம், ருகையா என்னும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. முஹ்ஸின் இளம்பருவத்திலேயே மறைந்துவிட்டார்கள்.

இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி வந்த அண்ணலார் நோயுற்றார்கள். அதையறிந்த மகளார் ஆறாத் துயரில் ஆழ்ந்தார்கள். அருகிலிருந்து பணிவிடைகள் செய்து வந்தார்கள். நோய் ஏற்பட்டு இருவாரங்கள் ஆகிவிட்டன. நோய் குறைந்தபாடில்லை.இறுதியில் தமது இறுதிநிலை எய்திவிட்டது என்பதை உணர்ந்த அண்ணலார் அழுது கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்களை அருகே அழைத்தார்கள்.அவர்களின் செவிகளில் யாதோ கூறினார்கள். அண்ணல் அவர்களின் செய்தி கேட்டு பாத்திமா நாயகி அவர்களின் விழிகள் கண்ணீரைச் சிந்தின. உடனே அவர்கள் மீண்டும் மகளார் செவியில் மறைவாய் யாதோ சொன்னார்கள். அதனைக் காதுற்ற பாத்திமா நாயகி அவர்களின் வதனம் சிறிதே நிம்மதியடைந்தது.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷா பிராட்டியார் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.பிறகு இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது> ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முதலில் என்னிடம் தாம் மறையப் போகும் செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்டு நான் கண்ணீர் சிந்தினேன். மறுகணம் என்னிடம்> நீர் தாம் முதலில் என்னை சுவர்க்கத்தில் சந்திப்பீர்’ என்றார்கள். அதைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்’ என்றார்கள்.

சிறிது நேரத்தில் அண்ணலாரின் உயிர் பிரிந்தது. அண்ணலாரை அடக்கம் செய்து விட்டு திரும்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து> ‘உங்களுக்கு இறைவனின் திருத்தூதர் மீது மண்ணைத் தள்ள எவ்வாறு மனம் வந்தது?என்று வருத்தத்துடன் கேட்டார்கள். அவர்களின் துக்கத்தால் அவர்கள் வீரிட்டார்கள். இந்த சப்தம் கேட்டு மெய்சிலிர்த்த அனஸ் நாயகம் அவர்கள்> இறைவனின் விருப்பத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்று இதமாக ஆறுதல் கூறினார்கள்.

பலபேர்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்கள். அப்படியும் அவர்களின் துயரத்தை குறைக்க முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் அந்தளவு துக்கம் ஆழமாக படிந்து விட்டது. மனைவியாரின் கவலையை போக்க முயன்ற அலி நாயகம் அவர்களும் தம் முயற்சியில் தோற்றே விட்டார்கள் என்று சொல்லலாம்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு வயது 29. அன்று ரமலான் மாதம் பிறை 3. தம் புதல்வர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தம் தந்தையாரின் ரவ்லாவிற்கு சென்றார்கள். அங்கு துஆ இறைஞ்சினார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். பிறகு குளித்து தூய உடை அணிந்தார்கள். ஜஃபர் அவர்களின் மனைவி அஸ்மா அவர்களிடம் எங்கும் சென்றிட வேண்டாம் என்று வேண்டியபின் படுக்கச் சென்றார்கள்.

சற்று நேரம் சென்றபின் அஸ்மா நாயகி அவர்கள் பாத்திமா நாயகியை வெளியிலிருந்தே அழைத்தார்கள். பதில் வராததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பதற வைத்ததது. ஆம். உலகை உய்விக்க வந்த உத்தம தூதரின் இதயக் கனி அன்னை பாத்திமா நாயகி அவர்கள் நீங்காத் துயில் கொண்டிருந்தனர்.

ஆறு மாதமே ஆவதற்குள் அடைந்த புண் ஆறுவதற்குள் விழுந்த துயரிலிருந்து மீளுவதற்குள் மற்றொரு பெரும் துயரம் நேர்ந்தது மக்களை நைத்தது.

அல்லாஹ்வின் தூதர் மறைவை நம்மிடையே பாத்திமா இருந்ததால் மறந்திருந்தோம். உம்முடைய முகத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் முகத்தை இனி நாங்கள் காண இயலுமா?’ என்று அலி நாயகம் பெரும்துயரத்துடன் அரற்றினார்கள்.

அளவற்ற நாணம் கொண்டிருந்ததால் பாத்திமா நாயகி அவர்களின் திருவுடல் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க. அன்னாரின் விருப்பப்படி இரவில் மதீனா நகர் வழியே எடுத்துச் செல்லப்பட்டது. அலி நாயகம் ஜனாஸா தொழுகை நடத்தினர். இறுதியில் பாத்திமா நாயகி அவர்களில் திருவுடலம் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் வழி வாழ்வோம்.
.

No comments:

Post a Comment