Friday, 21 August 2020

SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22



SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22



“ஏழை என்றும் அடிமை என்று எவரும் இல்லை பாரினில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடிக்கொண்டே பாலு வந்தான். “என்ன பாட்டு பலமா இருக்கே?” என்று கேட்டார் ஞாநி மாமா.
''பள்ளிக்கூட நாடகத்தில் வருகிற பாட்டு. பயிற்சி செய்கிறேன்” என்றான் பாலு. ''எதைப் பற்றி நாடகம்?” என்று கேட்டார் மாமா. ''அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் பற்றி நாடகம்” என்றான் பாலு. ''அமெரிக்க லிங்கன் நாடகத்தில் இந்தியா பற்றி ஏன் வருகிறது?” என்று கேட்டேன். ''அதெல்லாம் ஸ்கூல் நாடகங்களில் எல்லாம் கலந்துதான் வரும்” என்று சிரித்தார் மாமா.
''லிங்கனுக்கு முன்பே அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எல்லாம் நடந்தது தெரியுமா?” என்று கேட்டார் மாமா. 'ஸ்பார்டகஸ்' கதையை சொல்லிற்று வாலு. ''கிரேக்க அடிமைகளில் எழுச்சியை ஏற்படுத்தியவன் ஸ்பார்டகஸ். அவனை வைத்து நிறைய புத்தகங்கள், நாடகங்கள், சினிமா எல்லாம் வந்திருக்கின்றன. ஆனாலும், ஸ்பார்டகஸ் போராட்டம் வெற்றி பெறாத போராட்டம். பகத்சிங், சே குவேரா மாதிரி வீழ்த்தப்பட்ட போராட்டக்காரன் ஸ்பார்டகஸ். ஆனால், பின்னால் வெற்றிபெறும் பல போராட்டங்களுக்கு அவர்கள் உத்வேகமாக அமைகிறார்கள்,” என்றார் மாமா.

''அடிமை முறை என்றால் மனிதர்களை விலை கொடுத்து வாங்குவார்களாமே, உண்மையா?” என்று கேட்டான் பாலு.

''ஆமாம், சந்தையில் மாடு ஆடுகளை நிற்கவைத்து, பார்த்து வாங்குகிற மாதிரி, மனிதர்களை நிறுத்திவைத்து விற்கிற வழக்கம் எல்லாம் இந்த உலகத்தில் இருந்திருக்கிறது. 18, 19ம் நூற்றாண்டுகளில்தான் இதெல்லாம் மாறத் தொடங்கியது,” என்றார் மாமா.
''எப்படி மாறத் தொடங்கியது?” என்று கேட்டேன்.
''அடிமைகளுக்கும் நான் ஏன் இப்படி அடிமையாக இருக்க வேண்டும் என்ற கேள்வி மனத்தில் தோன்ற ஆரம்பித்தால்தான், மாற்றத்தை நோக்கிப் போக முடியும். அப்படி மனத்தில் கேள்வி எழுப்ப, பல இலக்கியங்கள் உதவியிருக்கின்றன. இன்னொரு நாட்டில் நடந்த போராட்டம் பற்றிய செய்திகள் தூண்டுதலாக அமைந்திருக்கின்றன,” என்றார் மாமா.

''எல்லாரும் சூடாக காபி குடித்துக் கொண்டே பேசுங்கள்” என்று சொன்னபடி அம்மா காபி கோப்பைகளை எங்களுக்குக் கொடுத்தார். குடித்தோம்.

''இந்தக் காபிக்கு பின்னால் பெரிய அடிமைமுறை இருந்திருக்கிறது” என்றார் மாமா. “உலகம் முழுக்க காபி தோட்டங்கள், டீ தோட்டங்கள், கரும்புத் தோட்டங்கள் அமைப்பதற்கு அடிமைகளைத்தான் பயன்படுத்தி னார்கள். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் காபி கசக்கும். சர்க்கரை கூட இனிக்காது” என்றார் மாமா.
ஏன் அப்படி என்றேன். “காபி, டீ, கரும்பு எஸ்டேட் வேலைகள், கடும் உழைப்பு தேவைப்படக்கூடியவை. குறைந்த கூலிக்குக் கடும் உடல் உழைப்பைத் தரவைக்க அடிமை முறைதான் சிறந்தது என்று மனித மனம் நினைக்கிறது. அதுதான் பிரச்னை” என்றார் மாமா.
எங்கெல்லாம் இப்படி நடந்தது என்று கேட்டேன்.
''நடக்காத இடமே இல்லை” என்றார் மாமா. ''நம் நாட்டிலும் நடந்ததா?” என்றான் பாலு.

''தமிழகத்தில் அடிமைமுறை என்று பேராசிரியர் சிவசுப்பிரமணியன் புத்தகமே எழுதியிருக்கிறார். என் நூலகத்தில் இருக்கிறது. அவசியம் எடுத்துப் படியுங்கள்” என்றார் மாமா.
நம் நாட்டில் இருந்த அடிமை வணிகம் பற்றி வாலு இன்னும் கொஞ்சம் தகவல்களை எடுத்துக்கொடுத்தது. இலங்கை, மலேயா, பிஜித் தீவுகளுக்கெல்லாம் இங்கிருந்து ஆயிரக்கணக்கில் ஆட்களை எஸ்டேட் வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குறைவான கூலிக்கு கடும்வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வம்சாவளியில் வந்தவர்கள் இன்னும்கூட சிரமங்களில் தான் இருக்கிறார்களாம்.
''உலகத்தில் மிக அதிகமாக அடிமைகளாக்க ப்பட்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தான். லட்சக்கணக்கானோர் தலைமுறை தலைமுறையாக வெள்ளையர் நாடுகளில் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள்” என்றார் மாமா.
''அடிமைகளை வைத்திருப்பவர்கள் சின்ன எண்ணிக்கைதானே. லட்சக்கணக்கான அடிமைகள் அவர்களை எதிர்த்துவிட முடியாதா?'' என்று கேட்டேன்.
''தன் உண்மையான பலம் என்ன என்று தெரியாதவரை அடிமைகளாகத்தான் இருப்பார்கள். கல்வியறிவு இல்லை. இதுதான் தன் விதி. தன் முன்ஜன்ம பாவம் என்றெல்லாம் தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொள்வது போன்ற மனநிலையில் அடிமைகளை வைத்திருப்பது தான் ஒடுக்குபவர்களின் தந்திரம்” என்றார் மாமா.
''எங்கேயாவது அடிமைகள் போராடி வெற்றி கண்ட வரலாறு இருக்கிறதா?” என்று கேட்டேன். ''ஒரே ஒரு நாடுதான் அப்படி விடுதலை அடைந்திருக்கிறது கரிபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுதான் அது” என்றார்.
ஹைட்டி தீவின் வரலாறையே எடுத்துக் கொடுத்தது வாலு. கொலம்பஸ் தான் முதலின் அந்தத் தீவைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவைத் தேடி வந்தவர், அதுதான் இந்தியா என நினைத்துக் கொண்டார். தீவைக் கண்டுபிடித்ததும் மேலைநாட்டுக்காரர்கள் செய்யும் வழக்கமான வேலையை செய்தார்கள். உள்ளூர் ஜனங்களை அழித்துவிட்டு, ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து குடியேற்றி கரும்புத் தோட்டங்களை அமைத்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்து ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹைட்டி தீவை தங்கள் அடிமை நாடாக வைத்திருக்கின்றன. 1791ல் தொடங்கிய அடிமைகளின் போராட்டம் 13 வருடம் நடந்திருக்கிறது. முடிவில் அடிமைகள் வென்றார்கள். இப்போது அங்கே 95 சதவீதம் கறுப்பர்கள்தான். மீதி கலப்பினத்தவர். 13 வருடமும் கடும் வன்முறைதான். இருபக்கமும் லட்சக்கணக்கா னோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
''அடிமைகளை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உலகத்தில் இருந்தது என்பதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றேன்.
''இருந்தது என்கிறாய். இப்போது இல்லை என்கிறாயா?' என்றார் மாமா. ''நம் நாட்டில் சாதி முறை அடிமைமுறையின் எச்சம்தானே. இன்னும் துப்புரவு, மலக்கழிவு எடுக்கும் வேலையை நாம் குறிப்பிட்ட சாதிக்கு என்றுதானே ஆக்கி வைத்திருக்கிறோம். வீட்டுவேலை செய்பவர்களை எத்தனை பேர் வீட்டில் சமமாக, கெளரவமாக நடத்துகிறோம்? இதையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” என்றார் மாமா. நானும் பாலுவும் ஆமாமென்றோம்.
''அடிமை முறையை பற்றி நல்ல சினிமா எடுக்க வேண்டும், அப்போதுதான் உறைக்கும்” என்றான் பாலு. 'எரியும் பனிக்காடு' என்று எஸ்டேட் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் இருக்கிறது. அதைப் படமாக்கினார்கள்.
''புத்தகத்தின் தாக்கத்தில் பாதிகூட கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன், உங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஜங்கிள் புக் படம் இருக்கிறது அல்லவா?” என்றார் மாமா.
அதற்கென்ன என்றேன். ''அந்தப் புத்தக்கத்தைப் படித்துப் பார். படம் வேறு, புத்தகம் வேறு என்பது புரியும்” என்றார் மாமா. படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கத்திலேயே புரிந்துவிட்டது.
வாலுபீடியா 1: உலகில் அடிமை முறையை ஒழித்ததைக் கொண்டாடும் நாள் ஆகஸ்ட் 22. 1791ல் அன்றுதான் ஹைட்டியில் அடிமைகள் போராடத் தொடங்கினார்கள்.
வாலுபீடியா 2: இன்று உலகத்தில் மிக அதிகமாக வெட்டிவேர் செடியை விளைச்சல் செய்து, ஏற்றுமதி செய்யும் நாடு ஹைட்டி. மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment