Sunday, 16 August 2020

VIRUPPATCHI GOPALNAICKER BRAVE HISTORY




VIRUPPATCHI GOPALNAICKER BRAVE HISTORY


கோபால் நாயக்கர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் திண்டுக்கல்-பழநிக்கு நடுவே உள்ள விருப்பாச்சி என்ற ஊரை அன்றைய நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர்.

ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாச்சி பகுதியில் அமைந்துள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு
இன்றைய திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் - பழநிக்கு செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரில் கி.பி.1725 இல் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரய்யா நாயக்கர் - காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் இவர் இயற்பெயர் (திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர்) அல்லது திருமலை கோபால சின்னய்யா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையப்பட்டுகளில் ஒன்றான விருப்பாச்சியின், 19 ஆவது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்.

குடும்பம்
கோபால் நாயக்கருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும் முத்துவேல் நாயக்கர், பொன்னப்பா நாயக்கர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

விருப்பாச்சி பெயர் காரணம்
நங்காஞ்சிப் பகுதிக்கு வந்த விசய நகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் அப்பகுதி மக்களின் வீரத்தைப் பாராட்டி தனது மனைவியின் பெயரான ’விருப்பாச்சி’யை அவ்வூரின் பெயராக வைத்தார். அது முதல் நங்காஞ்சி என்ற ஊர் விருப்பாச்சி என மாறியது.

கூட்டமைப்பு
விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில், புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர். மருதுபாண்டியருடனும் (அண்டை தேசத்து) கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்பு என்றழைக்கப்பட்டது, மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச் சீமையும், அதேபோல் கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூந்தாசிவாக்கும் கிருட்டிணப்பநாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் கூட்டுப்படை மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் கூட்டுபடையினர் இயங்கினர். ஈரோட்டு மூதார்சின்னனும், கானிசாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லட்சுமி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தங்களது போர் வீரர்களைக் கோபால நாயக்கருக்குக் கொடுத்து உதவி வந்து உள்ளனர் . பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டமைப்பு தலைமையில் மக்கள் திரளாகப் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது.

முதல் போர்
கி.பி.1799 மார்ச்சில் கோபால்நாயக்கர் வழி காட்டுதலின் படி மணப்பாறை லட்சுமிநாயக்கர், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர்,மணப்பாறை ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.இந்த சமயம் திப்பு சுல்தானை அடக்க மாபெரும் சேனை தெற்கு பாளைய சிப்பாய்கள் சென்றிருப்பதை அறிந்தே இந்த நாளில் கைப்பற்றினர் . 

ஆங்கிலேயர் எச்சரிக்கை

செப்புப் பட்டயம்
கி.பி.1799 அக்டோபரில் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட பின் விருப்பாச்சி அரண்மனைக்கு மேஜர் ஐ. ஏ. பானர்மேன் எச்சரிக்கை செப்புப் பட்டயம் ஒன்றை அனுப்பினார். அதில் "கும்பனியருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல் தூக்கிலிட்டு கொல்லப்படுவர்" என்ற செய்தி இருந்தது. தற்போது இடையகோட்டை ஜமீன் அரண்மனையில் இச்செப்புப் பட்டயம் பாதுகாப்பாக உள்ளது.

ஆங்கிலேயரை எதிர்த்தார்
ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார். கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதால் போர் வீரர்கள் 
தங்கள் இடங்களுக்கு திரும்பி சென்று விட்டனர் .எனவே 
எளிதில் ஆங்கிலேயர் படை திரட்டி ,கோவை கோட்டையை 
காப்பாற்ற முடிந்தது .மேலும் பீரங்கி.தாக்குதலுக்கு எதிரிகள் 
இறையாயினர் 

கோவைத் தாக்குதல்
கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர். இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணித் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டார்.

இறுதிப் போர்

சத்திரப்பட்டி அரண்மனை
கோவை தாக்குதலுக்குப் பின் கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை முற்றுகையிட்டான். விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச்சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரபட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில் கி.பி.1816 வரை சிறைவைத்தனர். கோபால்நாயக்கர் தலைக்கு அந்த காலத்திலேயே 20,000 ரூபாய் என அறிவித்தனர். பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி.1801செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபாலநாயக்கர் சமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றும் உள்ளது.[1]

கோபால்நாயக்கர் அரண்மனை

இடிந்த அரண்மனை
கோபால்நாயக்கரின் அரண்மனையையும், அவரது மனைவிக்காக கட்டிய அந்தப்புரத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். அரண்மனையின் சுவர்களின் அடித்தளம் 45 அடி நீளமுள்ளது மட்டும் இன்றும் உள்ளது. அரண்மனை முன்பு யானை கட்டும் நடு கல், குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கருங்கல் தொட்டி, இன்றும் காணமுடிகிறது.

கள ஆய்வு
கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

நினைவிடம்

மணிமண்டபம்
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாச்சியார்க்கும், ஊமைத்துரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் ,என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட திருமலை கோபால சின்னப்பா நாயக்கருக்குத் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது[2][3][4][5]




இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. அதிலும் வட இந்தியாவின் அரசர்கள் ஒருங்கிணைந்து போர்க்கொடி தூக்குவதற்கு முன்னரே, தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். இதில் பங்குபெற்ற பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வீரமங்கை வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் போன்ற பெயர்கள் நாம் நன்கு அறிந்தவை. இவர்களோடு இணைந்து பிரிட்டிஷருக்கு எதிரான போரில் செயல்பட்டவரும், அதன் மூளையாக விளங்கியவருமான கோபால நாயக்கர் அதிகம் அறியப்படாத ஒருவர்.

நாயக்கர்கள் ஆட்சியின் ஆரம்பத்தில், தளவாய் அரியநாத முதலியாரால் பிரிக்கப்பட்ட எழுபத்தியிரண்டு பாளையங்களில் ஒன்றுதான், திண்டுக்கல்லுக்கு அருகில் இருக்கும் விருப்பாச்சி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, இயற்கையாகவே நன்கு பாதுகாப்பான இடம். நாயக்கர்களோடு தமிழகம் வந்த ஒரு பிரிவினரால் ஆளப்பட்டது விருப்பாச்சி. இவர்கள் ராஜகம்பளம் என்னும் நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள். சிறந்த வீரர்கள். இந்த வம்சத்தில் பொயு 1725ம் ஆண்டு பிறந்தவர் கோபால் நாயக்கர் என்று அழைக்கப்பட்ட திருமலை கோபால சின்னப்ப நாயக்கர். இவர் தந்தையின் பெயர் வீரையா நாயக்கர், தாயார் காமாட்சி அம்மாள்.


கோபால் நாயக்கர் பாளையத்தின் 19வது ஆட்சியாளராகப் பொறுப்பேற்றபோது, தமிழகம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. சந்தாசகேப்பை வீழ்த்தி ஆற்காட்டு நவாப்பாக மீண்டும் முகமது அலி பதவியேற்றிருந்தார். இந்தப் போரில் தமக்கு உதவியதற்காக பிரிட்டிஷாருக்கு தமிழகத்தின் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் பொறுப்பையும் விட்டுத் தந்திருந்தார். இதைச் சாக்கிட்டு பாளையக்காரர்களை பிரிட்டிஷார் நெருக்கத் தொடங்கியிருந்தனர். இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராகப் போர்முழக்கம் எழுப்பிய ஹைதர் அலி தமிழகத்தின் சில பகுதிகளை வெற்றிகொண்டு திண்டுக்கல்லையும் பிடித்து அங்கே தங்கியிருந்தார். பாளையக்காரர் ஆட்சிக்கு பிரிட்டிஷாரால் ஆபத்து கட்டாயம் விளையும் என்பதை உணர்ந்த கோபால் நாயக்கர் ஹைதர் அலியுடன் சேர்ந்துகொண்டார்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர்களை அடக்குவதற்காக கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரானின் தலைமையில் புறப்பட்ட படை, முகமது யூசூப் கான் என்ற மருதநாயகத்தோடு இணைந்து எதிர்ப்பாளர்களைக் கொன்று குவித்தது. பிரிட்டிஷாரை எதிர்த்த சிவகங்கை அரசர் முத்து வடுகத்தேவர் யூசூப்கானின் படையால் கொல்லப்பட்ட பிறகு அரசி வேலுநாச்சியாரும் தளபதிகளான மருது சகோதரர்களும் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தனர். திண்டுக்கல்லில் தங்கியிருந்த ஹைதர் அலியைச் சந்தித்த வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க அவரிடம் உதவி கோரினார். தம்மிடம் அடைக்கலமாக வந்த வேலுநாச்சியாரையும் மருது சகோதரர்களையும் விருப்பாச்சியில் ஹைதர் அலி தங்க வைத்தார். கோபால் நாயக்கரும் மருது சகோதரர்களும் நெருங்கிய நண்பர்களாக உருவெடுக்க இந்தச் சந்தர்ப்பம் உதவியது. சிவகங்கையை மீட்க ஒரு படையைத் திரட்டவும் கோபால் நாயக்கர் உதவி செய்தார். இப்படித் திரட்டப்பட்ட படையுடன் ஹைதர் அலி அளித்த படையையும் சேர்த்துகொண்டு மீண்டும் சிவகங்கையைத் தாக்கி அதைக் கைப்பற்றினார் வேலுநாச்சியார். அதன்பின் வேலு நாச்சியாருக்கு உடல்நலன் குன்றிய தருணத்தில், மருது சகோதரர்கள் அவரைத் தம் நண்பரான கோபால் நாயக்கரின் பாதுகாப்பில் இருக்கும் வகையில் மீண்டும் விருப்பாச்சிக்கே அனுப்பி வைத்தனர். இப்படி சிவகங்கை அரசும் விருப்பாச்சியும் நெருங்கி வந்தன.

முதல் முயற்சி

சிவகங்கையில் பின்னடைவைச் சந்தித்தாலும், பாளையக்காரர்களுக்கு எதிரான போர்களை பிரிட்டிஷ் படை தொடர்ந்தது. நெற்கட்டான்செவல், பாளையங்குறிச்சி, எட்டயபுரம் ஆகிய இடங்களில் கடுமையான போர்கள் நடைபெற்றன. பாளையக்காரர்களின் இருபத்தொன்பது கோட்டைகள் அழிக்கப்பட்டன. 1763ம் ஆண்டிற்கும் 1767ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் டொனால்ட் காம்ப்பெல், மேஜர் வில்லியம் ஃப்ளிண்ட், மேஜர் ப்ரஸ்டன், காப்டன் ரும்லி ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாகப் பாளையங்களை வெற்றிகொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். நாட்டில் பிரிட்டிஷாரின் கை ஓங்குவதைக் கண்ட கோபால் நாயக்கர், வலிமையான பிரிட்டிஷ் படையை எதிர்க்க, பிரிந்து கிடக்கும் பாளையக்காரர்களால் இயலாது என்று கணித்தார். இருப்பினும் கர்னல் ஃபுல்லர்ட்டனின் தலைமையில் திண்டுக்கல்லைத் தாக்கவந்த படையோடு 1792ம் ஆண்டு மோதினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. திண்டுக்கல் பகுதி மைசூர் ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது. இனிமேலும் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் பிரிட்டிஷாரை எதிர்ப்பது முட்டாள்தனமானது என்று கருதிய கோபால் நாயக்கர், அவர்களோடு சமாதானமும் செய்துகொண்டு முறையாக வரி செலுத்த ஆரம்பித்தார்.

அதே சமயம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டமைப்பு உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆங்கிலேயரோடு நிகழ்ந்த போர்களில் தோல்வியுற்றுத் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை அவர்களிடம் இழந்தவர்கள், அவர்களின் கடுமையான வரிவசூலிப்பு முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைத் திரட்ட ஆரம்பித்தார். திண்டுக்கல், மணப்பாறை, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்குத் தமது தூதர்களை அனுப்பி அங்கு ஆட்சி செய்த பாளையக்காரர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களுக்கிடையே மண உறவுகள் ஏற்படவும் உதவி செய்தார்.

மணப்பாறையின் லக்ஷ்மி நாயக்கர், ஆனைமலையின் அருகில் இருந்த டெல்லிக்கோட்டையின் யதுல் நாயக்கர், தேவதானப்பட்டியின் பூஜாரி நாயக்கர், கன்னிவாடியின் பாளையக்காரர், ரத்னகிரி, நத்தம் ஆகிய இடங்களின் தலையாரி ஆகியோர் இந்தக் கூட்டணியில் முக்கியப்பங்கு வகித்தனர். திண்டுக்கல்லுக்குத் தென்பகுதியில் மதுரையைச் சுற்றி இருந்த பகுதிகளின் தலைவர்களாக இருந்த கள்ளர் தலைவர்களோடும் கோபால் நாயக்கர் பேச்சு நடத்தினார். கல்யாணித் தேவர், பெருமாள் சாமி போன்ற கள்ளர் தலைவர்கள் திண்டுக்கல் வந்து இந்தக் கூட்டணியில் சேரச் சம்மதம் தெரிவித்தனர். தலைவர்களோடு மட்டும் நின்றுவிடாமல் நாட்டின் குடிமக்களோடும் உள்ளூர்த் தலைவர்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடைய ஆதரவையும் பெற்றார் நாயக்கர்.

விருப்பாச்சியின் அருகில் இருந்த அடர்ந்த மலைக்காடுகளில் கூட்டணித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த ரகசிய ஆலோசனைகள் பற்றி பிரிட்டிஷ் ஒற்றர்களால் அதிகம் அறிய முடியாமலிருந்தது ஒரு பெரிய அனுகூலமாக இருந்தது. 1799ம் ஆண்டு ஆரம்பத்தில் லக்ஷ்மி நாயக்கரும் மற்ற தலைவர்களும் விருப்பாச்சி வந்து சேர்ந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எதிராக பிரிட்டிஷார் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தருணம் அது. கட்டபொம்மனும் ராஜகம்பள நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் கட்டபொம்மனுக்குத் தேவையான உதவிகள் அனுப்புவதென்றும், கூட்டணிக்கு மேலும் வலுச்சேர்க்க திப்பு சுல்தானுக்குத் தூது அனுப்புவதென்றும் முடிவு செய்யப்பட்டது. திப்புவிடம் லக்ஷ்மி நாயக்கரே தூது சென்றார். பிரிட்டிஷாருக்கு எதிராக திப்பு பெற்ற வெற்றிகளும், அவரது படை வலிமையும் அவரோடு கூட்டுச்சேர தமிழகத் தலைவர்களைத் தூண்டின. ஆனால் இது ஒரு ‘போக்குக் காட்டும் விஷயம் மட்டுமே, திண்டுக்கல் கூட்டணிக்கு அவரைத் தலைவராக்கவோ அல்லது அதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பவராகவோ ஆக்க கூட்டணித் தலைவர்கள் விரும்பவில்லை’ என்று திண்டுக்கல்லின் கலெக்டராக இருந்த ஹர்டிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

எது எப்படியிருந்தாலும் லக்ஷ்மி நாயக்கரின் தூது பலனளித்தது. திப்பு தன்னுடைய படைத் தலைவர்களில் ஒருவரான ஹாஜி கானை கூட்டணித் தலைவர்களுக்கு உதவும் வண்ணம், மைசூரின் தென்பகுதி எல்லையான பள்ளிப்பட்டிக்கு அனுப்பி வைத்தார். அவரோடு பேச்சுவார்த்தை நடத்த கள்ளர் தலைவர்களான கல்யாணி நாயக்கரையும், பெருமாள் சாமியையும் கோபால் நாயக்கர் அனுப்பி இருந்தார். இருவரையும் வரவேற்றுக் கௌரவித்த ஹாஜி கான், தகுந்த சமயத்தில் தாக்குதல் நடத்த தம் படைகள் தயாராக இருப்பதாகக் கடிதம் ஒன்றை கோபால் நாயக்கருக்கு அனுப்பினார். தவிர பிரிட்டிஷ் படையை ஊடுருவி அவர்கள் முகாமில் இருந்து துப்பாக்கிகள், குதிரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றுமாறு கூட்டணித் தலைவர்களுக்கு அந்தக் கடிதம் அறிவுறுத்தியது. இந்த முயற்சிகளைப் பற்றி அறிந்து கொண்ட பிரிட்டிஷ் கலெக்டர் ஹர்டிஸ் போர்ட் ஆஃப் ரெவென்யூவிற்கு மார்ச் 18, 1979ல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

‘லக்ஷ்மி நாயக்கரும் ஹாஜி கானும் கூட்டணித் தலைவர்களை ஒரு தாக்குதலுக்குச் சம்மதிக்க வைத்துவிட்டனர். கம்பெனியின் பகுதிகளை, குறிப்பாக மாம்பாறை, எர்ரக்கோட்டை போன்ற தகுதிகளை தாக்கிக் கைப்பற்றுவது அவர்கள் திட்டம். இந்தத் தாக்குதலைச் சமாளிப்பதற்கு போதுமான வசதிகள் இங்கே இல்லை. இதை நீடிக்கவிட்டால் இந்தப் பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.’

இந்தத் தருணத்தில் தொடங்கிய நான்காம் மைசூர்ப்போர் கம்பெனியின் பிரச்சினைகளை அதிகமாக்கியது. தங்களுக்குத் திறை செலுத்திய பாளையக்காரர்களுக்கு, அப்போரில் தங்களுக்கு உதவுமாறு பிரிட்டிஷ் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய கோபால் நாயக்கர் அந்த வேண்டுகோளுக்குச் செவிமடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் தளங்களுக்கு எதிராகப் பலமுனைத் தாக்குதலில் இறங்கினார். திண்டுக்கல் படைகள் தாராபுரம், எர்ரக்கோட்டை ஆகிய இடங்களில் தாக்குதல் நிகழ்த்தின.

இச்சமயத்தில் தென்தமிழகத்தில் கட்டபொம்மனின் படை பிரிட்டிஷாரிடம் தோல்வியடைந்து, கட்டபொம்மன் ஆங்கிலேயரால் வேட்டையாடப்பட்டு வந்தார். சிவகங்கையிலும் மருது சகோதரர்கள் வெளிப்படையாக பிரிட்டிஷாரை எதிர்க்க ஆரம்பிக்கவில்லை. மைசூர்ப்போரில் திப்பு தோல்வியடைந்த செய்தியும் கோபால் நாயக்கரை வந்தடைந்தது. இந்நிலையில் பிரிட்டிஷாரோடு பெரும் போர் ஒன்றைத் துவக்குவது அபாயகரமானது என்று முடிவு செய்த கோபால் நாயக்கர் தாக்குதல்களை அளவோடு நிறுத்திக்கொண்டார்.

கோபால் நாயக்கர் அமைத்த கூட்டணி பற்றியும் அதன் வலிமை பற்றியும் அறிந்திருந்த பிரிட்டிஷ்காரர்களும் அவரோடு போரில் ஈடுபட விரும்பவில்லை. இருப்பினும் இந்தத் தாக்குதல்களைப் பற்றிக் காரணம் கேட்க அவரை விசாரணைக்கு அக்டோபர் 1799ம் ஆண்டு அழைத்தனர். ஆனால் கோபால் நாயக்கர் அதை மதிக்கவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மன் பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டு கயத்தாறில் நவம்பர் 1799ல் தூக்கிலிடப்பட்டார். தங்கள் அழைப்பை கோபால் நாயக்கர் ஏற்காததால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷார், கட்டபொம்மனை முறியடித்த மேஜர் பானர்மானை விட்டு கோபால் நாயக்கருக்கு எச்சரிக்கைச் செய்தி ஒன்றை செப்புப் பட்டயம் ஒன்றில் அனுப்பினர். அதில் கம்பெனிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டால் கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. (தற்போது இடையக்கோட்டை ஜமீனில் இந்தப் பட்டயம் உள்ளது.) இம்முறையும் கோபால் நாயக்கர் இந்த ஆணைக்குப் பணிய மறுத்தார். ஆனாலும் அவரோடு தாக்குதலில் இறங்க பிரிட்டிஷார் விரும்பவில்லை. அவரை எச்சரிக்கை மட்டும் செய்யுமாறு கலெக்டர் ஹூர்டிஸுக்கு சென்னை கம்பெனியார் அறிவுறுத்தினர்.

இரண்டாம் முயற்சி

பாஞ்சாலங்குறிச்சிப் படைகள் தோல்வியடைந்ததும், மைசூரில் திப்புவை பிரிட்டிஷார் வீழ்த்தியதும், தமிழகத்தில் பாளையக்காரர்களுக்குத் தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. பொயு 1800ம் ஆண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தத் தொய்வை நீட்டிக்க கோபால் நாயக்கர் விரும்பவில்லை. கூட்டணித் தலைவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் பிரிட்டிஷாருக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவக்கினார். அச்சமயம் அவருக்கு வயது 75. வயது முதிர்ந்தாலும் தீரம் குறையாத அவர், மதுரையிலும் திண்டுக்கல்லிலும் ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க ஒரு வித்தியாசமான முறை பின்பற்றப்பட்டது. வெற்றிலையில் நகக்குறி இட்டு அதன் மூலம் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இந்த ஓலையைக் கண்டவர்கள் அதை ஒரு அவசர அழைப்புக்கான செய்தியாக உணர்ந்துகொண்டனர். பாஞ்சாலங்குறிச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பிகளான செவத்தையாவுடனும் ஊமைத்துரையுடனும் தொடர்பை அவர் ஏற்படுத்திக்கொண்டார். சிறையிலிருந்து எப்படியாவது தப்பித்து திண்டுக்கல் வந்து விடுமாறும் தாம் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தார் அவர். பிரிட்டிஷ் படைகளுடன் மோத மீண்டும் ஒரு நல்ல தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் கோபால் நாயக்கர்.

அந்தத் தருணத்தைக் காலம் அவருக்கு அளித்தது. திப்பு சுல்தான் தோல்வியடைந்தாலும், கன்னடப்பகுதிகளில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்ச்சி நெருப்பு அணையாமல் இருந்தது. அந்தப் பகுதிகளில் இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களை கிருஷ்ணப்ப நாயக்கரும் துந்தோஜி வாக் என்று அழைக்கப்பட்ட துந்தியா வாக்கும் ஒன்றிணைத்தனர். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக சில வெற்றிகளையும் பெற்றனர். இது தமிழகக் கூட்டணித் தலைவர்களுக்கு புதிய உத்வேகம் ஒன்றை அளித்தது. வாய்ப்பை நழுவ விடாமல் கோபால் நாயக்கர் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தூதுக் குழுக்களை துந்தோஜியிடம் அனுப்பினார். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர் தொடுக்கப்போகும் தமிழகத் தலைவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்குமாறு அந்தத் தூதுக் குழுக்கள் துந்தோஜியிடம் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்ற துந்தோஜி, பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஒரு கட்டத்தை அடைந்தவுடன், தமது குதிரைப்படைகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தார். இந்தச் செய்தியைத் தாங்கிவந்த கடிதத்துடன் கோபால் நாயக்கரைத் தூதுவர்கள் விருப்பாச்சியில் சந்தித்தனர். அதைக் கண்டு மகிழ்ந்த கோபால் நாயக்கர் இந்த நல்ல செய்தியை மற்ற பாளையத் தலைவர்களுக்கு அளிக்க பல குழுக்களை அனுப்பி வைத்தார்.

அதே தருணத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர்கள் அங்கிருந்து தப்பியிருந்தனர். மருது பாண்டியர்களிடம் ஊமைத்துரை அடைக்கலம் கோரியதை அடுத்து, பிரிட்டிஷருக்கு எதிரான போரில் வெளிப்படையாக மருது பாண்டியர்கள் இறங்க நேரிட்டது. இதைக் கண்ட கோபால் நாயக்கர், தமது பழைய நண்பர்களான மருது சகோதரர்களிடமும் தூதுக்குழுக்களை அனுப்பி, காவிரிக்கரைக்கு தெற்கில் உள்ள புரட்சிப் படைகளுக்கு அவர்களைத் தலைமை தாங்கக் கேட்டுக்கொண்டார். காவிரியின் வடபகுதியில் துந்தாஜியின் படைகளும் கிருஷ்ணப்ப நாயக்கரின் படைகளும் ஒன்றிணைந்தன.

கேரளாவின் மலபார் பகுதியில் அதன் ஆட்சியாளர் கேரள வர்மா பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அவரும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டார். ரகசியமாகக் கூட்டங்கள் நடைபெற்றன, படைகள் திரட்டப்பட்டன. எதிரிகள் அறியாவண்ணம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பின் மையமாக கோபால் நாயக்கர் இருந்தார். ஏப்ரல் 29, 1800ம் ஆண்டு அவர் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போருக்கான தேதி குறிக்கப்பட்டது. முதலில் கோயம்புத்தூர்க் கோட்டையைத் தாக்குவதென்றும் அதற்கு கோபால் நாயக்கர் தமது படைகளை அனுப்பி வைப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தாக்குதலுக்கு உதவியாக தமது குதிரைப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பி வைப்பதாக துந்தோஜி வாக் உறுதியளித்தார். குதிரைப்படை வந்தவுடன் மருது பாண்டியர் தென்பகுதியில் தங்கள் தாக்குதலைத் துவங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முதல் தாக்குதலுக்கு கோவையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அது ஒரு கேந்திரமான இடம் என்பதால்தான். தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் மையமாக அமைந்த இடம் கோவை. அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டால், இந்த மூன்று இடங்களுக்கும் தகவல் அனுப்புவது எளிது. 1800ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் கோவையில் இருந்த பிரிட்டிஷ் படையைத் தாக்குவது என்ற திட்டத்துடன் கூட்டம் கலைந்தது. ஆனால், அதற்குள் கர்நாடகாவில் பல திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன. எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளினால் பொறுமையிழந்த கம்பெனி நிர்வாகம் கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையில் கிருஷ்ணப்ப நாயக்கரை எதிர்த்துப் போரைத் துவக்கியது. இதனால் துந்தோஜியும் அந்தப் போரில் இழுக்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக இப்படித் துவங்கிய தாக்குதல்களினால், தமிழகத்திலும் கோவையை நோக்கிச் சென்ற படை, திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே கோவையை நோக்கிச் செல்லவேண்டியிருந்தது.

வடக்கில் மும்முரமாகப் போரில் ஈடுபட்டிருந்த கன்னடப் படைகள் அதன் உதவிக்கு வர இயலவில்லை. கோவையைத் தாக்க இந்தப் படைகள் வருகின்ற செய்தியும் துரோகிகள் சிலரின் மூலமாக பிரிட்டிஷாரை எட்டிவிட்டது. கோட்டைக்கு வெளியில் வந்து தமிழகப் படைகளை எதிர்க்க சகல முன்னேற்பாடுகளுடன் பிரிட்டிஷ் படை தயாராக இருந்தது. அளவிலும் வலுவிலும் குறைந்த படைகளுக்கு ரகசியத் தாக்குதலே பெரும் பலம். அந்த ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் பாளையக்காரர்களின் படை பின்வாங்க நேரிட்டது. இருப்பினும் சத்யமங்கலம், தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பிரிட்டிஷ் படைப்பிரிவுகளைத் தாக்கிய பின்னரே இந்தப் படை மீண்டது.


போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. சின்னமலையின் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.


இந்தப் பின்னடைவால் மட்டுமின்றி, கர்நாடகாவில் துந்தோஜி, கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் பிரிட்டிஷாரிடம் தோல்வியைத் தழுவியதும், அதனால் அவர்களிடம் உதவி கிடைக்காமல் போனதும், தமிழகப் படைகளுக்கு சோர்வைத் தந்தன. இதனால் டிசம்பர் 1800 வரை பாளையக்காரர்கள் அமைதி காத்தனர்.

மூன்றாம் முயற்சி

இந்த அமைதியைக் கலைத்து பிரிட்டிஷாருக்கு எதிராக மீண்டுமொரு முயற்சியைத் துவக்கினார் கோபால் நாயக்கர். ஜனவரி 1801ல், யதுல் நாயக்குடன் சேர்ந்து, பிரிந்து கிடந்த படைப்பிரிவுகளை ஒன்றிணைத்தார். பிரிட்டிஷருக்கு வரியோ அல்லது எந்த ஒரு நிதியுதவியோ செய்யக்கூடாது என்று குடிமக்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர். விருப்பாச்சியிலிருந்து கிளம்பிய பாளையக்காரர்களின் படை, மணப்பாறையில் இருந்த பிரிட்டிஷ் படைப்பிரிவைத் தாக்கி வெற்றிகொண்டது. அந்தப் பகுதியில் இருந்த மற்ற பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

நிலைமை கட்டுமீறிப்போவதைக் கண்ட கம்பெனியார், லெப்டினண்ட் கர்னல் இன்னிஸ் தலைமையில் ஒரு வலுவான படைப்பிரிவை விருப்பாச்சியை நோக்கி அனுப்பிவைத்தனர். இன்னிஸ் ஒரு பெரும் வீரர். மலபாரில் நடைபெற்ற பல போர்களில் வெற்றி கண்டவர். 1801ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படை விருப்பாச்சியை வந்தடைந்தது. இதைக் கேள்விப்பட்ட கூட்டணிப் படையினர், அருகிலுள்ள காடுகளில் முகாமிட்டனர். கோபால் நாயக்கரை உடனடியாகச் சரணடையுமாறு இன்னிஸ் எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார். இதை சட்டை செய்யாத கோபால் நாயக்கரை, பிரிட்டிஷ் அரசின் எதிரி என்று இன்னிஸ் பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் படைகளுக்கும் பாளையக்காரர் படைகளுக்கும் இடையே கடுமையான போர் துவங்கியது.

மலைப்பகுதிகளில் இருந்த வலுவான பிரிட்டிஷ் படையை கூட்டணிப் படையினர் எதிர்த்து நின்று சளைக்காமல் போர் புரிந்தனர். கோபால் நாயக்கர் தாமே களத்தில் இறங்கி பாச்சலூரில் 700 பேர் கொண்ட படைப்பிரிவுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் படைகளுக்குப் போதுமான உதவிகள் கிடைத்துக்கொண்டேயிருந்தன. இதனால் சளைத்த பாளையக்காரர் படை, ஒரு கட்டத்தில் ஆனைமலைக் காடுகளுக்குள் பின்வாங்க ஆரம்பித்தது.

தமது ஆதரவாளர்களுடன் கோபால் நாயக்கர் டெல்லிக்கோட்டையை அடைந்தார். அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு டெல்லிக்கோட்டையின் தலைவரான யதுல் நாயக்கருக்கு இன்னிஸ் செய்தி அனுப்பினார். ஆனால் யதுல் நாயக்கர் இதற்குச் சம்மதிக்கவில்லை. உடனே இன்னிஸ், “கீழ்ப்படிவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்க இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. இல்லாவிடில் பெரும் துன்பங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்ற எச்சரிக்கையை யதுல் நாயக்கருக்கு அனுப்பி வைத்தார். இதற்கும் யதுல் மசியாததால், ஏப்ரல் 13ம் தேதி பிரிட்டிஷ் படைகள் டெல்லிக்கோட்டையைத் தாக்கின. தீரத்துடன் போர் புரிந்தாலும், பாளையக்காரர்கள் முடிவில் பின்வாங்க நேரிட்டது.

மலைகளுக்குள் கூட்டணிப்படையினர் பதுங்கிவிட, டெல்லிக்கோட்டையை பிரிட்டிஷார் பிடித்துக்கொண்டனர். கோபால் நாயக்கரை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் கர்னல் இன்னஸ் மும்முனைத் தாக்குதல் ஒன்றைத் துவங்கினார். காப்டன் விட்டில், லெப்டினண்ட் ஹாட்ஸன் ஆகியோரின் தலைமையிலான படைப்பிரிவுகள் காடுகளுக்குள் புகுந்தன. இடைவிடாத பிரிட்டிஷ் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கூட்டணிப்படைத் தலைவர்கள் அடர்ந்த காடுகளுக்குள் செல்ல நேரிட்டது. அப்போது ஏற்பட்ட காய்ச்சலில் யதுல் நாயக்கர் உயிரிழந்தார்.

கோபால நாயக்கர் ஆனையூர் நாடு என்ற இடத்திற்குத் தப்பிச்சென்றார். கள்ளப்பட்டியைச் சேர்ந்த பொன்னித்தேவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படை திரட்டித் தாக்குதலில் இறங்க முயன்றார். ஆனால் இன்னிஸ் இதை எதிர்பார்த்து பழனி, ஜல்லிப்பட்டி, விருபாட்சி ஆகிய இடங்களில் படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தால் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. கோபால நாயக்கரைப் பிடித்துத் தருவோருக்கு இரண்டாயிரம் ரூபாயும், மற்றவர்களுக்கு ஐந்நூறு ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் படையிலேயே இருந்த ஒருவர் காட்டிக்கொடுத்ததால், கோபால் நாயக்கர் 1801ம் ஆண்டு மே மாதம் சிறைபிடிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

அதன்பின் விருபாட்சிப் படைகளுக்கு ஊமைத்துரை தலைமையேற்றதும் மருது பாண்டியர்களும் அவரும் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வீரப்போர் புரிந்ததும் வரலாறு. கோபால் நாயக்கருக்குத் தூக்குத்தண்டனை விதித்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1801ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் ஒரு ஏரிக்கரையில் ஒரு புளிய மரத்தில் அந்தத் தண்டனையை நிறைவேற்றியது. அந்த ஏரி இப்போது கோபாலசமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் விருப்பாச்சியில் அவரது அரண்மனையின் இடிந்த பாகங்கள் காணக்கிடைக்கின்றன. அண்மையில் தமிழக அரசு திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் அவருக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பியிருக்கிறது.


 தமிழக முதல் விடுதலைப் போரில் பூலித்தேவரின் துணிச்சல், கட்டபொம்மனின் ஆக்ரோஷம், ஊமைத்துரையின் துணிச்சல், மருது பாண்டியர்களின் வீரம் ஆகியவற்றோடு கோபால் நாயக்கரின் ராஜதந்திரம் இணைத்துப் பேசப்படவேண்டிய ஒன்று. அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததன் முக்கிய காரணம் ஒற்றுமையின்மையும் துரோகங்களும்தான். வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு அளிக்கும் பாடம் நமது எதிரிகள் வெளியிலிருந்து வருவதில்லை என்பதுதான். நம்மிடையே இருந்து துரோகம் இழைத்தவர்களால்தான் பல்வேறு காலகட்டங்களில் வீழ்ச்சியடைந்திருக்கிறோம். ஆனால், எந்த அளவிற்கு அந்நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம்?





பழநி: சுதந்திர போராட்ட வீரர் விருப்பாச்சி கோபாலநாயக்கர் அரண்மனை வளாகம் குறித்து களஆய்வு செய்யப்பட்டது. பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரி இந்திய பண்பாட்டுத் துறை தலைவர் வைரவேல் தலைமையில், முனைவர் செல்வக்குமார், கோபாலகிருஷ்ணன், ஸ்ரீராஜா, பழனிச்சாமி, மகேஷ்குமார், அசோகன், பாலசுப்ரமணியன், ஆய்வு மாணவர் ரகுநாதன், டில்லி பல்கலை மானியக் குழு ஆராய்ச்சியாளர்கள் சுப்ரமணியன், முத்தையா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.  சுதந்திர போராட்ட வீரரும், விருப்பாச்சி குறுநில மன்னருமான கோபாலநாயக்கர் என அழைக்கப்பட்ட திருமலை கோபால சின்னப்ப நாயக்கர் விருப்பாச்சி பாளையப்பட்டை 19வது பாளையக்காரராக ஆட்சி புரிந்து வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார். இப்போரில் வெள்ளையர்கள், விருப்பாச்சி நாயக்கரை கைது செய்து தூக்கிலிட்டனர். இவரது அரண்மனையையும் தரைமட்டமாக்கினர். கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.






சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

பழனி சதித் திட்டம் 
               ----
1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி...

திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டம்.

இந்திய , உலக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முன்பாக 55 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை இம் மண்ணிலிருந்து அகற்ற திட்டமிடுவதற்காக கூடியது.

கூட்டத்தை கூட்டியது விருப்பாச்சி கோபாலநாயக்கர்.

கட்டபொம்மன் தம்பி ஊமத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, பெருந்துரை சின்னண்ண கவுண்டர் , பரமத்தி அப்பாவு என ஆங்கிலேய எதிர்ப்பு தலைவர்கள் அந்த கூட்டத்தில்.

அந்த கூட்டம் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தென்னிந்திய மன்னர்கள் சிலரை இணைத்து கோவையில் உள்ள வெள்ளையர் கோட்டையை தகர்த்து அழிக்க முடிவு செய்யப்படுகிறது.

இன்றைய கருனாடக மராத்திய பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த துந்தாஜி வாக், மலபார் மன்னன்  கேரள வர்மன் ஆகியோரை ஒன்றிணைத்தது இந்த குழு.

1800 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி கோயமுத்தூர் கோட்டையை தாக்க திட்டம்.

துந்தாஜி வாக் தன் குதிரை படையோடு வர அவர்களோடு மருது சகோதரரகள் இணைய வேண்டும்.

இதற்கு தலைமை விருப்பாச்சி கோபாலநாயக்கர்.

அனைத்து பாளையகாரர்களையும் இணைத்து படைகள் திண்டுக்கல், தாராபுரம் பகுதிகளில் இருந்து மே மாதம் புறப்பட்டது.

கோவையிலே ஷேக்ஹுசைன் என்கிற புரட்சிக்காரன் தலைமையிலே நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பதுங்கி இருக்க தக்குதலுக்கான நாள் வந்தது.

மராட்டிய கருனாடக பகுதியில் இருந்து வந்த படையினை வெள்ளைப்படை மறித்துவிட மருது சகோதரர்களுடன் அவர்கள் இணையும் திட்டம் முறிந்து போக...

கோயமுத்தூர் தாசில்தாருக்கு படையெடுப்பின் ரகசியம் தெரிந்து மாவட்ட ஆட்சியருக்கு சொல்ல எதிர்பார்த்தவாறு இல்லாமல் போர் துவங்கியது.

உக்கிரமாக நடந்த போர்...

இரண்டாயிரம் புரட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள்.

பரமத்தி அப்பாவு கவுண்டர் உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டு சத்தியமங்களம், தாராபுரம் கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் தூக்கிலிடப்பட்டார்கள்...

தூக்கிலிடப்பட்ட உடல்களை இரண்டு நாட்கள் வெள்ளையர்கள் எடுக்கவே இல்லை.

இதில் தப்பித்த மருது சகோதரர்கள் திருச்சி பிரகடனத்தை வெளியிட்டார்கள்...

கட்டபொம்மன் தம்பி ஊமத்துரை தப்பிப்போய் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கட்டி எழுப்பி, போரிட்டு கைதாகி, செவத்தையாவுடன் சேர்ந்து தூக்கிலிடப்படுகிறான்.

மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்படுகிறார்கள்...

துந்தாஜி போர்களத்தில் மகனுடன் கொல்லப்படுகிறார்...

 கோவை புரட்சிக்கு முன்னும் பின்னுமாக ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

இறுதியாக பழனி சதி வழக்கில் தலைமையேற்ற விருப்பாச்சி கோபால் நாயக்கர் வத்தலகுண்டு அருகே நடைபெற்ற போரில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல்லில் தூக்கிலிடப்படுகிறார்.

அவர் தூக்கிலிடப்படும் போது வயது 72.

 வரலாற்றாசிரியர்கள் சொல்லும் முதல் இந்திய சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மாபெரும் புரட்சி பழனி சதி என வெள்ளையன் குறிப்பிட்ட கோவை புரட்சி.

விடுதலை போர் தியாகிகள் என்றதும் காந்தியை , நேருவை, நேதாஜியை என நினைவுகூறும் நாம், நம் மண்ணில் பிறந்து போராடியவர்களையும் நினைவுகூற வேண்டாமா?

தனது 72 வயதிலும் வெள்ளையனை எதிர்த்து வீரச்சமர் செய்த விருப்பாச்சி கோபால்நாயக்கரை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்.

திண்டுக்கல்- பழனி சாலையில் விருப்பாச்சி மேட்டில் கோபால்நாயக்கருக்கு மணிமண்டபம் உள்ளது...

வாய்ப்பிருந்தால் அந்த வீரனுக்கு ஒருமுறை அஞ்சலி செலுத்துங்கள்...

விடுதலைப்போர் வீரர்களை பேசுகையில் இந்தக் கிழவனையும் ஒருமுறை நினைவுகூறுங்கள்.


74 ஆவது சுதந்திர தின வாழ்த்துகளுடன்.






No comments:

Post a Comment