C.V.RAJASUNDARAM ,CEYLON RADIO BROADCASTER DIED ON 2011,AUGUST 11
சி. வி. ராஜசுந்தரம் (1927 - ஆகத்து 11, 2011) இலங்கை வானொலியின் பழம்பெரும் ஒலிபரப்பாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்விச் சேவையில் தயாரிப்பாளராக இணைந்து ஒலிபரப்பு பயிற்சி நிலையத்தில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி பின்னர் 1971 முதல் 1977 வரை தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக உயர்ந்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
"சி. வி. ஆர்." என்று அழைக்கப்பட்ட சி. வி. ராஜசுந்தரம், 1927 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித் தெருவில் பிறந்தவர். சிறு வயது முதலே கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். தனது 20 வயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து கலைமாணிப் பட்டம் பெற்றவர். ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் மொழியில் பாண்டித்தியம் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் கொண்டவர். ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த இராஜசுந்தரம் பின்பு பத்திரிகை ஆசிரியராக பணி ஏற்றார்.
வானொலியில் இணைவு
1955 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் கல்விச் சேவைக்கு புதிய உதவியாளராகச் சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டு வானொலி நிலைய பயிற்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் பிபிசியிலிருந்து வந்து இலங்கை வானொலியில் பணியாற்றிய ஸ்டுவர்ட் வேவல் என்பவர் எழுதிய "The art of Radio“ என்ற நூலை ராஜசுந்தரம் “வானோசை' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்நூல் பல அறிவிப்பாளர்களுக்கு வழிகாட்டி நூலாக அமைந்தது.
சி. வி. ராஜசுந்தரம் இலங்கை வானொலியின் தேசிய சேவைக்கு வந்த போது முதலில் விவரண நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பான நிகழ்ச்சி உதவியாளராகவும், 1970 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் தமிழ்த் தேசிய சேவையின் மேலதிக பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1965 இல் பேராசியர் கா. சிவத்தம்பியால் எழுதப்பட்டு ராஜசுந்தரத்தால் தயாரிக்கப்பட்ட “இரவின் இதயம்' என்ற சித்திரம் நேயர்களிடையே புகழ் பெற்றது. இதே நிகழ்ச்சி ராஜசுந்தரத்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில சேவையிலும் ஒலிபரப்பானது.
இசை, நடனம், நாடகம் போன்றவற்றில் ஆழ்ந்த புலமை மிக்க சி. வி. ராஜசுந்தரம் “நல்லூர்', “மீனாட்சி கல்யாணம்', “ஊர்வசி', “பாவை பெற்ற பசு" போன்ற புகழ் பெற்ற பல இசைச்சித்திரங்களைத் தயாரித்து ஒலிபரப்பினார். பின்பு அவற்றில் சிலவற்றை நாட்டிய நாடகங்களாக உருவாக்கி நகரங்கள் தோறும் மேடையேற்றினார். “கலைக் கோலம்” என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் ஆரம்பித்தார்.
வானொலிப் பயிற்சிக் களங்கள்
இலங்கை மட்டுமல்லாமல், கனடா, செருமனி, நெதர்லாந்து, பப்புவா நியூ கினி, வியட்நாம், மாலைதீவு, பாக்கித்தான், மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளிலும் ஒலிபரப்புத்துறை சம்பந்தமான பயிற்சிக் களங்களை, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தினார். கனடாவில் ரொறன்ரோ றயேசன் பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் ஊடாக ஒலிபரப்புப் பணிகளை மேற்கொண்டார். ஒலிபரப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உலக நாடுகளில் சமர்ப்பித்து வந்தார்.
மறைவு
அரசியல் நெருக்கடி காரணமாக ஓய்வு பெற்று கனடாவில் குடியேறினார். இவர் 2011, ஆகத்து 11 இல் தனது 84 ஆவது அகவையில் ரொரன்ரோ நகரில் காலமானார்.
எழுதிய நூல்கள்
No comments:
Post a Comment