Friday, 12 June 2020

LEO TOLSTOY - VE . LENIN




LEO TOLSTOY - V.E . LENIN




லியோ டால்ஸ்டாய் மறைந்து விட்டார்.  ஒரு கலைஞர் என்ற முறையில் அவரது உலகளாவிய முக்கியத்துவமும், ஒரு சிந்தனையாளர், பிரச்சாரகர் என்ற முறையில் அவரது உலகப் புகழும் தமக்கே உரிய வழியில் ரஷியப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.
நாட்டின் அடிமை முறை ஆதிக்கம் செலுத்தி வந்தபொழுது எல்.என்.டால்ஸ்டாய் ஒரு மகத்தான கலைஞராகத் தோன்றினார். தமது இலக்கியச் செயல்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தில் அவர் படைத்தளித்த பல மாபெரும் நூல்களில் 1861-க்குப் பிறகும் அரை அடிமைத்தன அரசாக இருந்த பழைய புரட்சிக்கு முந்திய ரஷ்யாவை – நிலப்பிரபுவும் விவசாயியும் வாழ்ந்த கிராமிய ரஷ்யாவை – அவர் பிரதானமாயும் சித்தரித்தார்.


ரஷ்ய வரலாற்றின் இந்தக் காலகட்டத்தினைச் சித்தரிப்பதில் டால்ஸ்டாய் மிகப்பல பெரும் பிரச்சினைகளை எழுப்புவதில் வெற்றி கண்டார். கலை ஆற்றலில் மிகவும் உயர் சிகரத்தை எட்டுவதில் வெற்றி கண்டார். இதன் விளைவாக அவரது நூல்கள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்தவற்றிடையே அணி செய்கின்றன. அடிமை எஜமான்களின் காலடியில் கிடந்த நாடு ஒன்றில் புரட்சிக்குத் தயாரிப்புகள் செய்யும் சகாப்தம் எழுந்ததானது, டால்ஸ்டாய் கொடுத்த அற்புதமான ஒளியின் காரணமாக, மனிதகுலம் முழுவதன் கலைச்சிறப்பின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றப் படியாகியது.


டால்ஸ்டாய் ஒரு கலைஞர் என்ற முறையில் ரஷ்யாவிலுங்கூட மிக மிகச் சிறு பகுதியினரால் மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவரது படைப்புக்களை உண்மையிலயே அனைவரின் சொத்தாக ஆக்க வேண்டுமானால், கோடானு கோடி மக்களை அறியாமையிலும் சலிப்பூட்டும் வேலையிலும், வறுமையிலும் ஆழ்த்திவிடும் சமூக அமைப்பினை எதிர்த்துப் போராட்டம் துவக்கப்பட வேண்டும். ஒரு சோஷலிசப் புரட்சி சாதனையாக்கப்பட வேண்டும்.

படிக்க:
♦ ” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை!
♦ ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

வெகு ஜனங்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆதிக்கத்தைத் தூக்கி எறிந்து தமக்கே உரிய வாழ்வுக்கான மனித நிலைமைகளை உருவாக்கிக் கொண்ட பிறகு, படித்துப் பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. இன்றைய அமைப்பினால் ஒடுக்கப்பட்டுவரும் பெரும்பாலான வெகு ஜனங்களின் மனோநிலையினை அற்புதமான ஆற்றலுடன் விளக்குவதிலும், அவர்களது நிலைமையைச் சித்தரித்து, அவர்களிடை தானே எழும் கண்டன ஆக்குரோஷ உணர்வுகளை வெளியிடுவதிலும் அவர் வெற்றி கண்டார்.

பிரதானமாயும் 1861 – 1904 யுகத்தினைச் சேர்ந்தவராக இருந்த டால்ஸ்டாய் அவரது நூல்களில் ஒரு கலைஞர், ஒரு சிந்தனையாளர், போதகர் என்ற வகையிலும் – முதல் ரஷ்யப் புரட்சி முழுவதன் அதன் வலிமை, பலவீனம் இவற்றோடு கூடிய அதன் விசேஷ வரலாற்று அம்சங்களை அற்புதமான தெளிவுடன் உருவகப்படுத்திக் காட்டினார்.

நமது புரட்சியின் பிரதான தனி அம்சங்களில் ஒன்று அது உலக முற்றிலும் முன்னேற்றமான முதலாளித்துவ வளர்ச்சியும், ரஷ்யாவில் ஓரளவுக்கு முன்னேற்றமான வளர்ச்சியும் உடைய யுகத்தில் நடைபெற்ற விவசாயி பூர்ஷ்வா (பூர்ஷ்வா – முதலாளிகள்) புரட்சி. இது பூர்ஷவா புரட்சி, காரணம் அதன் உடனடி நோக்கம் ஜாரின் எதேச்சாதிகாரத்தை ஜாரிச மன்னராட்சியையும் தூக்கி எறிவது, நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது, ஆனால் பூர்ஷ்வா ஆதிக்கத்தை ஒழிப்பதல்ல.

குறிப்பாக விவசாயிகளுக்கு இந்தப் பிந்திய நோக்கம் தெரியாது. அவர்கள் இந்த நோக்கத்திற்கும் போராட்டத்தின் நெருக்கமான உடனடியான கோரிக்கைகளுக்கு இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்திருக்கவில்லை. அது ஒரு விவசாயிகளின் பூர்ஷுவா புரட்சியாக இருந்தது . காரணம் எதார்த்த நிலைமைகள் விவசாயிகளின் வாழ்வின் அடிப்படை நிலைமைகளை மாற்றுவது, நிலவுடமையின் பழைய மத்திய கால அமைப்பினை உடைப்பது, முதலாளித்துவத்திற்கான “தளத்தைத் தயாரிப்பது” என்ற பிரச்சினையை முன்னணியில் வைத்தன. இந்த எதார்த்த நிலைமைகள் விவசாயப் பொதுமக்கள் ஏறத்தாழ சுதந்திரமான வரலாற்றுப் போராட்ட அரங்கில் தோற்றமளிப்பதற்குப் பொறுப்பாக இருந்தன.


டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.
டால்ஸ்டாயின் நூல்கள் குறிப்பாகவும் விவசாயிகள் வெகுஜன இயக்கத்தின் வலிமை, பலவீனம், ஆற்றல், குறைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. போலீசுடன் சேர்ந்து நின்ற அரசு அதிகாரபூர்வமான சமய குரு பீடத்தை எதிர்த்து அவரது காரசாரமான உணர்ச்சி பொங்கும் தாட்சண்யமற்ற கடும் கண்டனம், பழமையான விவசாயிகளிடையிலான ஜனநாயக வெகுஜனப் பகுதிகளின் உணர்ச்சிகளை வெளியிட்டன. அவர்களிடை பல நூற்றாண்டுகால அடிமைத்தனம், ஆட்சிக் கொடுங்கோல், கொள்ளை, மதபீடக் குருக்கள் ஆதிக்கம், ஏமாற்று உருட்டுப் புரட்டுகள் இவற்றின் விளைவாகக் கோபாவேசமும், பகைமையும் மலைபோல் குவிந்திருந்தன. நிலத்தில் தனியுடமையினை அவர் வளைந்து கொடாது எதிர்த்ததானது இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் விவசாய வெகுஜனங்களின் மனோதத்துவத்தினை எடுத்துக் காட்டியது.

அந்தக் கட்டத்தில் பழைய மத்தியக் காலம் நிலவுடைமை, எஸ்டேட்டுகள் வடிவிலும் அரசாங்க  “ஒதுக்கீடுகள்” வடிவிலும் நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாயும் சகிக்க முடியாது தடைக்கல்லாக இருந்தது. இந்தப் பழைய நிலவுடைமை முறை மிகவும் உடனடியாகவும் தாட்சண்யமின்றியும் தவிர்க்க முடியாத வகையில் அழிக்கப்படும் என்பது நிச்சயம். முதலாளித்துவத்தை எதிர்த்த அவரை இடைவிடாத குற்றச்சாட்டுக்கள் மிகவும் ஆழ்ந்த உணர்ச்சியோடும் மிகவும் ஆர்வம்நிறை ஆக்குரோஷத்துடனும் பரிணமித்த குற்றச்சாட்டுகள், நகரங்களிலிருந்தும் வெளிநாட்டின் எங்கிருந்தோ வந்த புரியாத கண்ணுக்குத் தெரியாத புதிய விரோதியின் வருகையால் தந்தைவழி  மரபு விவசாயிகள் அடைந்த பயங்கரம் அனைத்தையும் எடுத்துக் கூறின.

அந்த விரோதி கிராமிய வாழ்க்கையின் தூண்கள் எல்லாவற்றையும் அழித்து, தன்னுடன் முன் என்றும் கண்டிரா வகையில் நாசம், வறுமை, பட்டனி, காட்டுமிராண்டித்தனம், வேசத்தனம், மேகநோய் போன்ற “ஆதிகால சேகரிப்பு சகாப்தத்தின்” தொடர்ந்த எல்லாத் தீம்புகளையும் கொண்டு வந்தன. சர்வ வல்லமை பெற்ற கனவான் கூப்பனின்48 விரித்துரைக்கப்பட்ட மிகவும் நவீனமான கொள்ளை முறைகள் ரஷ்ய மண்ணில் நடவு செய்யப்பட்டதால் இவை நூறுமடங்கு உக்ரமடைந்தன.

ஆனால் இந்த ஆவேசமான கண்டனக்காரர், உணர்ச்சிமிகு குற்றச் சாட்டாளர், மாபெரும் விமர்சகர்;  அதே பொழுதில் தமது நூல்களில் ரஷ்யாவை அச்சுறுத்தி வரும் நெருக்கடியின் காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டார். இது தந்தைவழி மரபு அப்பாவி விவசாயியின் தனி இயல்பாக இருக்கலாம். ஐரோப்பியக் கல்வி பெற்ற ஓர் எழுத்தாளருக்கு உரியதன்று.

நிலப்பிரபுத்துவப் போலீஸ் ஆட்சியை எதிர்த்தும், மன்னராட்சியினை எதிர்த்தும் அவர் நடத்திய போராட்டம், அரசியலையே மறுப்பதாக மாறியது, “தீமையை எதிர்க்காதே” என்ற சித்தாந்தத்திற்கு அழைத்துச் சென்றது; 1905-07-லான மக்களின் புரட்சிகரப் போராட்டத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தியது. அதிகார பூர்வமான சமய குருபீடத்திற்கு எதிரான போராட்டம் ஒரு புதிய சுத்தப்படுத்தப் பெற்ற சமய போதனையுடன் சேர்ந்து நடைபெற்றது. அதாவது ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஒரு புதிய சுத்திகரிக்கப்பட்ட நயமான விஷமாக இருந்தது.


நிலத்திலான தனியுடைமைபாலான எதிர்ப்பு, உண்மை விரோதியான -நிலப்பிரபுத்துவம், அதன் அதிகாரத்தின் அரசியல் கருவியான அதாவது மன்னராட்சிக்கு எதிரான போராட்டமாக ஒருமுகப்படுத்தப்படவில்லை. மாறாகக் கனவு போன்ற, கலைவுற்ற, ஆண்மையற்ற ஒப்பாரிகளாகக் காட்சியளித்தன. முதலாளித்துவத்தையும் அது வெகுஜனங்கள் மீது விளைக்கும் தீம்புகளையும் அம்பலப்படுத்துவதானது, சர்வதேச சோஷலிசத் தொழிலாளி வர்க்கம் நடத்தி வரும் உலகு தழுவிய விடுதலைப் போராட்டத்தின்பாலான ஒரு முற்றிலும் உறக்க மனப்பான்மையுடன் இணைந்திருந்தது.

படிக்க :
♦ மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !
♦ இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

டால்ஸ்டாயின் கருத்துகளிலான முரண்பாடுகள் அவரது சொந்தக் கருத்துகளில் உள்ளார்ந்து கிடக்கும் முரண்பாடுகள் மட்டுமல்ல, மாறாகச் சீர்த்திருத்தத்திற்குப் பிந்திய ஆனால் புரட்சிக்கு முந்தியதான ரஷ்ய சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்கள், பல்வேறு பகுதிகளின் மனோதத்துவத்தை நிர்ணயித்த மிக மிகச் சிக்கலான, முரண்பாடான நிலைமைகள் சமுதாயச் செல்வாக்குகள், வரலாற்று மரபுகள் இவற்றின் பிரதிபலிப்பேயாகும்.

இதனால்தான் தனது அரசியல் பாத்திரத்தால் இந்த முரண்பாடுகளின் முதல் இறுதி விளக்கமானது புரட்சி சமயத்தில், மக்களின் விடுதலைக்கும் சுரண்டலிருந்து பொதுமக்களை விடுதலை செய்யவுமான போராட்டத்தில் தலைவனாக விளங்கும் வாய்ப்பினைப் பெற்ற வர்க்கத்தின் கருத்தோட்டத்திலிருந்து மட்டுமே டால்ஸ்டாய் பற்றிய சரியான மதிப்பீடு செய்தல் முடியும். இந்த வர்க்கம் ஜனநாயக லட்சியத்திற்குத் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. (விவசாயி உள்ளிட்ட) பூர்ஷூவா ஜனநாயகத்தின் குறைகளையும் முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் நிரூபித்துள்ளது. அத்தகைய மதிப்பீடு சமூக – ஜனநாயகத் தொழிலாளி வர்க்கத்திடமிருந்தே சாத்தியமாகும்.

அரசாங்கச் செய்திப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீட்டைப் பாருங்கள். இந்த “மாபெரும் எழுத்தாளருக்கு தமது மரியாதையைக் காட்டுவதாகப் பாவனை செய்தபடியே “புனித” சமய பீடத்தினையும்49 ஆதரித்து முதலைக் கண்ணீர் படிக்கின்றன. இவை புனித பாதிரிகளைப் பொருத்தவரை அவர்கள் குறிப்பாகவும் ஒரு கொடிய தீம்பை இழைத்துள்ளனர். மரணத் தருவாயிலிருந்த கிழவரிடம் புரோகிதர்களை அனுப்பி மக்களை ஏமாற்றி டால்ஸ்டாய் “குற்ற மன்னிப்புக்” கோரியதாகக் கூறுகிறார்கள். புனிதத் திருச்சபை டால்ஸ்டாயைப் பிரஷ்டம் செய்தது. அதுவரையில் நல்லதே;  கிருஸ்துவிலுள்ள இந்த வஞ்சகக் கடுமுறைமையாளர் ஜாரின் கருப்பு நூற்றுவர்50 கும்பலின் யூத எதிர்ப்பு, கொலைச்செயல்களையும் இதர சாதனைகளையும் ஆதரித்து அங்கி தரித்த  இந்த அதிகாரிகளுடன் மக்கள் கணக்குத் தீர்க்கும் நேரம் வரும்போது இந்த வெற்றிச் சாகசம் பற்றி நினைவு கூரப்படும்.

மிதவாதப் பத்திரிகைகள் டால்ஸ்டாய் பற்றிச் செய்துள்ள மதிப்பீடுகளைப் பார்ப்போம். பூர்ஷ்வா விஞ்ஞானத்தை டால்ஸ்டாய் கண்டித்துள்ள, நியாயமாகவே கண்டித்திருக்கிற “நாகரிக மனிதகுலத்தின் குரல்”  “உலகின் ஒருமுகமான பிரதிபலிப்பு” “உண்மை நன்மைக் கருத்துகள்” போன்ற ஆழமற்ற அதிகாரபூர்வ – மிதவாத பழமைப்பட்ட ஆசிரிய பாணி சொற்றொடர்கள் அளவில் நின்று விடுகின்றன.

அரசு, சமய அமைப்பு, நிலத்தில் தனியுடைமை, முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் கருத்துகள் பற்றித் தமது கருத்துகளை சாதாரணமாயும் தெளிவாகவும் அவர்களால் வெளியிட முடியாது. தணிக்கை அவர்களைத் தடை செய்வதாலன்று. மாறாகத் தணிக்கைமுறை அவர்களைச் சங்கடமான நிலையிலிருந்து தப்ப உதவுகிறது! – இதற்குக் காரணம் டால்ஸ்டாயின் விமரிசனத்தின் ஒவ்வொரு வாத முகமும் பூர்ஷூவா மிதவாதத்தின் முகத்தில் அடித்த அடியாகும்.

டால்ஸ்டாய் நமது காலத்தின் ஆறாத புண்ணாகிவிட்ட, மிகவும் சிக்கலான பிரச்சினைகளை அச்சமின்றி அப்பட்டமாயும் தாட்சாண்யமின்றியும் முன்வைப்பது நமது மிதவாதிகளின் (மிதவாத நரோத்னிக்களின்) மாமூல் சொற்றொடர்கள், பழகிப்போன சிலேடைகள் தப்பிலித்தனமான “நாகரிகப்” பொய்கள் இவற்றுக்கு உரிய பதிலடியாகும். மிதவாதிகள் அனைவரும் டால்ஸ்டாயை ஆதரிக்கிறார்கள். எல்லோரும் திருச்சபைக்கு எதிராக உள்ளனர். – ஆனால் அதே சமயம் அவர்கள் வெகிஸ்டுகளை51 ஆதரிக்கிறார்கள். அவர்களுடன் “மாறுபடுவது சாத்தியம்.” ஆனால் ஒரே காட்சியில் இசைவுடன் வாழ வேண்டுவது  “அவசியம்”,  இலக்கியம் அரசியல் இவற்றில் சேர்ந்து வேலை செய்ய வேண்டுவது “அவசியம்” எனக் கருதுகிறார்கள். எனினும் வெகிஸ்டுகளை முத்தமீந்து வரவேற்கிறார் வோல்ஹினியா பிஷப் அந்தோனி.

டால்ஸ்டாய் ஒரு “மாபெரும் மனச்சாட்சி” என்று மிதவாதிகள் முன்னணியில் வைத்தார்கள். நொவோயி விரேமியா52வாலும் இதுபோன்ற செய்தித் தாள்கள் அனைத்தாலும் ஓராயிரம் விதமாகத் திரும்பத் திரும்பக் கூறப்படுகிற ஆழமற்ற சொற்றொடர் அல்லவா இது? டால்ஸ்டாய் முன்வைத்த ஜனநாயகம், சோஷலிசம் இவற்றின் ஸ்தூலமான பிரச்சினைகளிலிருந்து தப்புவதல்லவா ? டால்ஸ்டாயின் அறிவு தீட்சண்யத்தை விட்டு அவரது வெறுப்புகளையும் எதிர்கால அம்சத்தை விட்டுப் பழம்பகுதியையும், அனைத்து வர்க்க ஆதிக்கத்தையும் எதிர்த்து அவரது கடும் கண்டனத்தை விட்டு விட்டு அவர் அரசியலை மறுத்ததையும் தார்மீகச் சுய அனுபூதி பற்றிய போதனையையும் வெளிப்படுத்தும் அம்சத்தை முன்னணியில் வைப்பதல்லவா இது ?

டால்ஸ்டாய் மரணமடைந்தார். அவரது தத்துவத்தின் வெளியீடாகி இந்த மாபெரும் கலைஞரால் தமது  நூல்களில் சித்தரிக்கப்பட்டதான பலவீனமான ஆண்மையற்ற, புரட்சிக்கு முந்தியதான, ரஷ்யா இறந்த காலமாகிவிட்டது. ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள பிதுராஜ்யத்தில் பழமையாகிவிட்ட கூறுகளின்றி எதிர்காலத்திற்குரியவையும் உட்படும். இந்தப் பிதுராஜ்யத்தை ஏற்று அதன் மீது பணியாற்றுகிறது ரஷ்யத் தொழிலாளி வர்க்கம்.

உழைப்பாளி வெகுஜனங்களுக்கும் சுரண்டப்பட்டவர்களுக்கும் அரசு, சமய பீடம், நிலத்தில் தனியுடைமை பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தின் பொருளை விளக்கிக் கூறும். எதற்காக? பொது மக்கள் சுய பூர்ணத்துவம், தெய்வீக வாழ்வில் ஆர்வம் இவற்றுடன் நிறுத்திக் கொள்வதற்காக அல்ல. மாறாக அவர்கள் எழுச்சியுற்று 1905-இல் சற்றே அழிவடைந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஜாரிச மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ அமைப்பையும் எதிர்த்துப் புதிய தாக்குதல் தொடுக்குமாறு கோரும், ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவம் பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனத்தைப் பொது மக்களுக்கு, விளக்கிக் கூறும்.

எதற்காக? முதலாளித்துவத்திற்கும் பண ஆட்சிக்கும் எதிராக பழித்துரைகளை வீசுவதற்கு மட்டுமல்ல. மாறாகத் தமது வாழ்க்கையின் தமது போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப சமூக சாதனைகளைப் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்தி மக்கள் வறுமைக்கு இரையாகாத, மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு புதிய சமூகத்தைப் படைப் பதற்கான லட்சோப லட்சம் சோஷலிசப் போராட்ட வீரர்களின் படையாகத் தம்மைத் தாமே இணைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும்.

– லெனின்

அடிக்குறிப்புகள்:

48: எம்.கூபன்- பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதாம், தொண்ணாறாம் ஆண்டுகளின் இலக்கியத்தில் மூலதனத்திற்கு அல்லது முதலாளிகளுக்கு இடப்பட்ட ஓர் உருவகப் பெயர். இது ரஷ்ய எழுத்தாளர் கிளேப் உஸ்பென்ஸ்கியினால் “பயங்கரமான பாவங்கள்” என்னும் அவரது குறிப்புகளில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

49: சினட் – ரஷ்ய வைதீக குருபீடத்தின் உயர் நிர்வாக அமைப்பு இது.

50: கருப்பு நூற்றுவர்: புரட்சிகர இயக்கத்தை எதிர்ப்பதற்காக ஜார் போலீசால் உருவாக்கப்பட்ட முடியாட்சிக் கும்பல். இவர்கள் புரட்சிவாதிகளைப் படுகொலை செய்தனர். முற்போக்கு அறிவுத் துறையினரைத் தாக்கினர். யூத எதிர்ப்பு கலகங்களைத் தூண்டினர்.

51: வெக்கி (சிறப்புக் கட்டங்கள்) -பல எதிர்ப்புரட்சி மிதவாத – பூர்ஷ்வாக்களின் பிரதிநிதிகளின் ஒரு கேடட் கட்டுரைகள் தொகுப்பு. இது 1909 வசந்த காலத்தில் மாஸ்கோவில் வெளியிடப் பெற்றது. பெலின்ஸ்கி, செர்னிஷெவிஸ்கி உட்பட ரஷ்ய மக்களின் புரட்சிகர ஜனநாயக மரபுகளின் மிகச் சிறந்த பிரதிநிகளை ரஷ்ய அறிவுத் துறையினர் பற்றிய கட்டுரைகளில் இந்த எழுத்தாளர்கள் இழிவுபடுத்த முயன்றனர்; 1905 புரட்சிகர இயக்கத்தை அவதூறு செய்தனர்; “தனது துப்பாக்கிச் சனியன்கள், சிறைகள் மூலமாக “பொதுமக்களின் கோபாவேசத்திலிருந்து” பூர்ஷாவாக்களைக் காப்பாற்றியதற்காக ஜார் சர்க்காருக்கு நன்றி தெரிவித்தனர். எதேச்சதிகாரத்தின் நலன்களுக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

52: நோவயே விரெம்யா (நியூடைம்ஸ்) – 1868-லிருந்து 1917 அக்டோபர் வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த ஒரு செய்திப் பத்திரிகை. முதலில் இது ஓரளவு மிதவாதப் பத்திரிகையாக இருந்தது. ஆனால் 1876-லிருந்து மேட்டுக் குடியினர், அதிகார வர்க்கத்தினரிடையேயான பிற்போக்கு வட்டாரங்களின் பத்திரிகையாக மாறிற்று.

சோஷியல்-டொமாகிராட் எண். 18
நவம்பர் 18 (29) 1910
(லெனின் தொகுப்பு நூல்கள் பக்கம் 16, பக் 323-27)

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்

No comments:

Post a Comment