Tuesday, 30 June 2020

HITLER AND NAZISM


                HITLER AND NAZISM



ஹிட்லர் வாழ்க்கை வரலாற்றை முகில் அண்ணனின் எழுத்தில் வாசித்து முடித்தேன். ஏற்கனவே பா.ராகவன் ஹிட்லர் பற்றி எழுதிய புத்தகம் பெரிய கவனம் பெற்றுவிட்ட பிறகு வருகிற புத்தகம் என்பதால் எதிர்பார்ப்போடு தான் நூலை எடுத்தேன். முகலாயர்கள் நூலில் என்னை ஏமாற்றிய அண்ணன் இதில் அதற்கும் சேர்த்து விருந்து வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஹிட்லரின் வாழ்க்கையைப் பற்றியும்,அவரை செதுக்கிய காரணங்கள்,சூழல்கள் மற்றும் குறிப்பாக அவரின் காதலிகள் பற்றியும் ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் என்பதை நீங்கள் வாசித்தால் உணரலாம். இன்னுமொரு கூடுதல் அம்சம் ஜெர்மனியின் ஆதிக்கால வரலாற்றில் துவங்கி விஸ்தாரமாக முதல் உலகப்போரை விவரிக்கும் பக்கங்கள் தான். ஹிட்லர் என்கிற சர்வாதிகாரி உருவாவதற்கான சூழல் எப்படி ஜெர்மனியில் இருந்தது என்பதைக் காட்டாமல் நூல் எழுதினால் திருப்தி தராது என்று எண்ணியோ என்னவோ அதற்கு என்று தனிக்கவனம் தந்திருக்கிறார்.
முதல் உலகப்போர் புதிய சந்தைகள்,காலனிகள் ஆகியவற்றைத் தேடிக்கொண்டு இருந்த ஜெர்மனி, முதலிய நாடுகளுக்கும் பழைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையே ஆன போராக வெடித்தது. போரின் இறுதியில் ஜெர்மனி தோற்று தலைகுனிந்து நின்றது. தங்கள் பக்கத்தைச் சொல்லவோ,பலரை பலிகொடுத்த சூழலில் மீண்டிடவோ எந்த வாய்ப்பும் அந்நாட்டுக்கு தரப்படவில்லை. “நீ தான் எல்லாத்துக்கும் காரணம் !” என்று குற்றஞ்சாட்டி வளம் நிறைந்த பகுதிகளை அபகரித்துக்கொண்டார்கள். பல மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதோடு நில்லாமல் ராணுவத்தை முடிந்த அளவுக்கு சுருக்கி அனுப்பி வைத்தார்கள். பிடித்திருந்த பகுதிகளையும் கேக் துண்டுகள் போல வெட்டிக்கொண்டார்கள். இந்தப் போரின் பொழுது ஜெர்மனியில் தொழிலாளர் போராட்டம் நடக்கிறது ; வட்டிக்கொடுத்து செழித்துக் கொண்டிருந்த யூதர்கள் அதற்கு பெருத்த ஆதரவு தருகிறார்கள்.

கொடுமைக்கார அப்பா,கனிவான அம்மாவிடம் வளர்ந்து ஓவியப்பள்ளியில் மாணவனாக சேர முயன்று,முயன்று தோற்றுப்போன ஹிட்லர் இந்த சம்பவங்களின் சூழலில் வளர்கிறார். கார்ல் மேவின் நூலும்,ஸ்டெஃபானியின் THE WORLD AS WILL AND REPRESENTATION நூலும் அவருக்குள் பலத்த தாக்கத்தை உண்டு செய்கின்றன. தன்னுடைய இனமே உயர்ந்தது என்கிற எண்ணமும்,மற்ற இனங்கள் குறிப்பாக எங்கேயும் தங்களின் அடையாளத்தை இழக்காத,லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் யூதர்கள் அழிய வேண்டும் என்றும் அவர் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறார். ஆனாலும்,ஹிட்லருக்கு நாய்களை வளர்ப்பதிலும் மிருகங்கள் மீதும் எல்லையற்ற அன்பு நிறைந்திருந்திருக்கிறது. முதல் உலகப்போரில் ஜெர்மனிக்காக போரிட்டு சாகசங்கள் சிலவற்றை அவர் செய்தார் என்பது பதிவு செய்யப்படுகிற அதே சமயம் பிரிட்டன் வரலாற்று ஆசிரியர்கள் அவர் டீ சர்வ் பண்ணுகிற வேலையைத் தான் உலகப்போரில் செய்தார் என்று சத்தியம் செய்கிறார்கள்.

பீர் ஹால்களில் பேச ஆரம்பித்த ஹிட்லர் அங்கே தான் பேச்சாளராக உருவம் பெறுகிறார்கள். ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் அவரைச்சேர அதை உருவாக்கிய ட்ரேக்ஸ்லர் அழைக்கிறார். இவர் அதில் இணைந்து உற்சாகம் நிறைந்த ஜெர்மனியை மீட்டெடுப்போம் பாணியிலான உரைகள் உசுப்பேற்றுகின்றன. எக்கார்ட் என்பவர் இவரை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் கட்சியின் தலைமைப்பதவியை தன் வசம் இழுக்கிறார் ஹிட்லர். ருஹ்ர் எனப்படும் வளம் மிகுந்த ஜெர்மனியின் பகுதியை பிரான்ஸ் நாட்டுக்கு கொடுக்க முடியாமல் போன கடனுக்காக அந்நாடு தன் வசப்படுத்திக்கொள்ள ஜெர்மனியில் பண வீக்கம் ஏற்பட்டு உணவுக்கும்,வேலைக்கும் மக்கள் அல்லாடுகிறார்கள். புரட்சி செய்து ஆட்சியை பிடிக்கிறேன் என்று முயன்று சிறைக்கு போகிறார் ஹிட்லர். உள்ளே இருந்தபடி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். சொன்னதையே திருப்பி திருப்பி அழுத்தி சொல்லும் அந்த நூல் அப்போதைக்கு ஹிட் அடிக்கவில்லை. மாடிசன் கிராண்டின் ‘THE PASSING OF THE GREAT RACE’ நூல் இன்னமும் தன்னுடைய இனமே உயர்ந்தது என்கிற எண்ணத்தை ஹிட்லரிடம் வளர்க்கிறது. வெளியே வந்ததும் தன்னுடைய கட்சியைத் தடை செய்திருப்பதை கண்டு பெருமூச்சு விடுகிறார்.

எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார். அமெரிக்கா டாவேஸ் மூலம் ஒரு திட்டத்தை கொண்டு வந்து ஜெர்மனிக்கு நிதியுதவி தந்து பொருளாதரத்தை முன்னேற்ற முயல்கிறது. நிலைமை சீரடைந்து ஜெர்மனி ஓரளவுக்கு நிமிர்வது போலத் தெரிய ஆரம்பித்தது. அமெரிக்காவின் கைக்கூலி ஆகிவிட்டது ஜெர்மனி என்று முழங்குகிறார் ஹிட்லர். உலகப் பொருளாதார பெருமந்தம் வந்து சேர்கிறது. அமெரிக்காவே நொடிந்து போகிறது. ஜெர்மனிக்கும் எண்பத்தி எட்டு மில்லியன் தங்க மார்க்கை படிப்படியாக கொடு என்று யங் திட்டத்தின் மூலம் குடைச்சல் கொடுக்க நிலைமை படுமோசம் ஆகிறது. கெப்பல்ஸ் வங்கிகள் திவாலாகும் என்று பிரசாரம் செய்து சாதிக்கிறார். தேர்தலுக்கு ஒரே ஒரு வாரமே நேரம் என்ற சூழலில் விமானங்களில் பறந்து பிரசாரம் செய்கிறார் ஹிட்லர். மார்னாஸ் என்கிற கம்யூனிஸ்ட் அனுதாபி நாடாளுமன்றத்தில் தீவைத்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையை வெல்கிறார்கள். ஹிட்லர் ஹிண்டன்பர்க் இறந்ததும் தலைமைப்பொறுப்புக்கு வருகிறார். ENABLING ACT மூலம் சர்வ அதிகாரமும் வருவதற்கு CENTRIST கள் எனப்படும் கிறிஸ்துவ நம்பிக்கை கொண்ட கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. உங்களின் மத விஷயங்களில் தலையிடவே மாட்டேன் என்று வாக்குறுதி தந்து ஜெர்மனியின் சகலமும் ஆகிறார்.

நாடாளுமன்றத்தை கலைக்கிறார். அவ்வபொழுது எஸ் நோ மூலம் தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்கிறார். புயல் படையின் மூலம் வேண்டாதவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள். ஜெர்மன் இனத்தை சேராதவர்கள் நான்கு லட்சம் பேருக்கு கட்டாயக் கருத்தடை நிகழ்த்தப்படுகிறது. இரண்டே முக்கால் லட்சம் வயதானவர்கள் ‘கருணைக்கொலை’ செய்யப்படுகிறார்கள். உயர்ந்த ஆரிய இனமான ஜெர்மானிய குழந்தைகளை பெற்றெடுக்க பல பெண்கள் சேர்க்கப்படுகிறார்க.ள். பல ஆண்களுடன் கூடி அவர்கள் பெற்ற பிள்ளைகள் உலகப்போருக்கு பின்னர் ANONYMOUS ARYAN CHILDREN என்று நடுத்தெருவுக்கு வருகிறார்கள்.

யூதர்கள் பக்கம் திரும்புகிறான் ஹிட்லர். டிரைவிங் லைசன்ஸ் எல்லாம் காலி,வண்டிகள் வைத்துக்கொள்ள கூடாது என்று அறிவிக்கிறான். ஒலிம்பிக் போட்டிகள் முடிகிற வரை சற்றே நல்லவர் போல வேடம். பின்னர் மீண்டும் தனி அமைச்சரவை கொண்டு கொலைக்காட்சிகள் ஆரம்பம்.. சுட்டுக்கொன்று,குளிக்க அனுப்பி விஷ வாயு செலுத்தி,சுட்டுக்கொன்று,ஒரே ஒரு ரொட்டி கொடுத்து,பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பசியோடு இருக்க விட்டு கொன்றார்கள். இப்படி மட்டும் கிட்டத்தட்ட ஐரோப்பாவில் இருந்த யூதர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு பத்திரிக்கைகள்,சினிமாக்கள்,நாடகங்கள் எல்லாம் ஹிட்லர் புகழ் பாடும் வகையில் மாற்றப்பட்டன.

செக் மீது உரிமை கோரிய பொழுது பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து பேசிவிட்டு நீயே பார்த்துக்கோ என்று ஜெர்மனியை விட்டதில் துவங்கிய ஆட்டத்தை உலகப்போராக ஹிட்லர் மாற்றுகிறார். போலந்தை ஸ்டாலின் மற்றும் அவர் இருவரும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். ஹிட்லரை எதிர்க்க ஒன்று சேரலாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை அழைத்தும் அவர்கள் வராமல் போகவே ஸ்டாலின் இப்படியொரு முடிவை எடுக்கிறார். அப்படியே கிழக்கு ஐரோப்பாவின் நாடுகளை அள்ளிப் போட்டுக்கொள்கிறார் ஸ்டாலின். ஹிட்லர் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அள்ளி கொள்கிறார். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தை தாக்குவதாக பாவ்லா காட்டிவிட்டு பிரான்ஸ் தேசத்துக்குள் நுழைந்து அதிர வைக்கிறார். பாரீஸ் நகரை அழித்து விடாமல் கருணை காட்டி அதே போல பெர்லினை மாற்றச்சொல்கிறார் அவர்

சோவியத் ரஷ்யாவை ஒரு அடி போடலாம் என்று அதுவரை உலக வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய படையெடுப்பை நடத்துகிறார். ஆரம்ப கட்டத்தில் ஸ்டாலின் படைகள் திணறுவது போலத் தோன்றினாலும் பிறகு காட்சிகள் மாறின. மூன்று மடங்கு அதிக இழப்பு என்றாலும் ஜெர்மனிக்கு தோல்வியை பரிசளித்து இருந்தது ரஷ்யா. அதுவரை சரண்,தோல்வி என்றே கேள்விப்படாத ஹிட்லருக்கு அவை அனுதின செய்திகள் ஆயின. அட்லாண்டிக் சுவரில் இருந்த அரைகுறை இடைவெளியில் நார்மான்டிக்குள் நுழைந்து வென்றது எதிரிப்படைகள். ஜெர்மனி நோக்கி ஸ்டாலின் படைகள் விரைந்து கொண்டிருந்தன.

ஹிட்லர் தன்னுடைய காதலி ஈவாவை திருமணம் செய்துகொண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். அவரின் சாம்பல் கூட கிடைக்காமல் எரித்தார்கள். சுத்த சைவமான ஹிட்லர் பெரும்பாலும் மதுவைத் தொடவே மாட்டார். அடிக்கடி உலக உருண்டையோடு உட்கார்ந்து கொண்டு அவர் கனவுகள் கண்டதை சாப்ளின் கிண்டலடித்து நடித்த படத்தை நாட்டில் தடை செய்துவிட்டு தான் மட்டும் பார்த்து சாப்ளின் யூதர் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார். சுத்தமான நபராக ஹிட்லர் காட்டப்பட்டாலும் அவர் காலத்தில் ஜெர்மனியிலேயே அதிகபட்ச சொத்துக்கள்,வருமானம் மற்றும் சொகுசான வாழ்க்கை என்றே அவர் இருந்திருக்கிறார். நடுவிலேயே ஒரு நான்கு காதல்கள் நூலில் உண்டு. அதை நூலிலேயே வாசித்துக்கொள்ளுங்கள்.

கேட்டின் படுகொலை,ஸ்டாலின் செய்த அதிபயங்கர ஹோலோடோரோம் ஆகியனப் பற்றி பதியும் முதல் ஹிட்லர் வரலாறுப்புத்தகமாக தமிழில் இது அமைந்திருக்கிறது.
காதல் காட்சிகளை அருகிலிருந்தே பார்த்தது போன்ற துல்லியத்தோடு அண்ணன் எழுதியிருக்கிறார். ஹிட்லரின் கதை முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மொழி நடையில் அசுரப்பாய்ச்சல் பலம் என்றால்,நீளமான ஜெர்மனியின் முன்கதை மற்றும் உலகப்போர் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும். மற்றபடி ஹிட்லர் பிரமிக்கவே வைப்பார் !

No comments:

Post a Comment