Sunday, 7 June 2020

JINNA HOUSE IN MUMBAI




JINNA HOUSE IN MUMBAI 


இதெல்லாம் நடக்குற காரியமா?

வேற வேலையை பாருங்கடே !!

மும்பையில் உள்ள, ஜின்னா வீட்டை, பாகிஸ்தான் உரிமை கோரி வருகிறது; கொடுக்க மறுக்கிறது, இந்தியா; சர்ச்சை சூடு பறக்கிறது.
மும்பையில் பிறந்து, பாகிஸ்தான் கவர்னர் ஜெனராக இருந்தவர், முகமது அலி ஜின்னா. வக்கீல் தொழிலில் நல்ல வருமானம் வரத் துவங்கியதும், மும்பையில், பணக்காரர்கள் வாழும் பகுதியான, மலபார் ஹில்சில் இடம் வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்தார்.
விசாலமான வராண்டா, ஆறு படுக்கை அறைகள், வெளியில் தோட்டம், இவற்றையெல்லாம் கட்டி முடிக்க, அக்காலத்தில், 2 லட்சம் ரூபாய் பிடித்தது.
ஜன., 1939ல், புதிய வீட்டிற்கு குடிபுகுந்தார், ஜின்னா. மும்பையில், அவருக்கு, மேலும் ஆறு வீடுகள் இருந்தன. ஆனால், புதிய வீட்டை தான் அதிகமாக விரும்பினார்.
காந்திஜி - ஜின்னா பேச்சுவார்த்தை, 1944ல், இந்த வீட்டில் தான் நடைபெற்றது. கதர் அணிந்து, தன் இல்லத்திற்கு வந்த, காந்திஜியை, ஐரோப்பிய ஆடை அணிந்து வரவேற்றார், ஜின்னா.
பாகிஸ்தான், தனி நாடாகி, அங்கு சென்று விட்டார்.
'ஜின்னாவின் மும்பை வீட்டை என்ன செய்வது... அதை ஜின்னாவிடமிருந்து விலைக்கு வாங்கி, அரசுடைமை ஆக்கி விடலாமா...' என்று யோசித்தார், நேரு. அப்போது, பாகிஸ்தானில், இந்திய துாதராக இருந்த, ஸ்ரீபிரகாசாவிடம், ஜின்னாவை சந்தித்து, இதுபற்றி பேசுமாறு கேட்டுக் கொண்டார்.
ஜின்னாவிடம், ஸ்ரீபிரகாசா, நேருவின் கருத்தை சொன்னார். அப்போது, உணர்ச்சிவசப்பட்டு, 'என் இதயத்தை பிளக்காதீர்கள்... மும்பையில் நான், அந்த வீட்டை எவ்வளவு ஆசையோடு, எப்படி பார்த்து பார்த்து கட்டினேன் என்று, அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் சொல்லும். அதை, நான் இந்திய அரசுக்கு விற்க விரும்பவில்லை...' என்றார்.
'இதை, நான் பிரதமருக்கு தெரியப்படுத்தலாமா?'
'செய்யுங்கள்...'

பிறகு, ஜின்னாவின் வீடு, வாடகைக்கு கேட்கப்பட்டது. மாதம், 3,000 ரூபாய் கேட்டார், ஜின்னா. அது ஏற்கப்பட்டது. மும்பையில் உள்ள, இங்கிலாந்து துாதர் தங்க, அது வாடகைக்கு விடப்பட்டது.
கடந்த, 1981ல், ஜின்னா வீட்டை காலி செய்தது, இங்கிலாந்து துாதரகம்.
அந்த வீட்டை தன்னிடம் வாடகைக்கு விட வேண்டும் என்று கோரியது, பாகிஸ்தான். ஆரம்பத்தில் அதன் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், 'பாகிஸ்தானுக்கு, ஜின்னா வீட்டை, வாடகைக்கு தர இயலாது...' என்று அறிவித்து விட்டார், அப்போதைய, இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர்.
இப்போது, 'ஜின்னா வீடு, எங்களுக்கு வேண்டும். அது, வெறும் வீடு அல்ல; அது, நம்முடைய அரசியல் வரலாற்றின் மகத்தான சின்னம்...' என்ற கோஷத்தை எழுப்பி, ஜின்னா வீட்டை, உரிமை கோரி, போர்க்கொடி துாக்கியுள்ளது, பாகிஸ்தான்.

No comments:

Post a Comment