Saturday, 2 June 2018

NARGIS ,THE LEGEND, BORN 1929 JUNE 1






NARGIS ,THE LEGEND,
BORN 1929 JUNE 1



ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட 
'உலக சினிமாவின் சரித்திரம்' என்ற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவை பொறுத்தமட்டில் எம்.ஜி.ஆர்., நர்கீஸ், சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய சினிமா வரலாற்றி

ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட 'உலக சினிமாவின் சரித்திரம்' என்ற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டு ள்ளது. அதில் இந்தியாவை பொறுத்தமட்டில் எம்.ஜி.ஆர்., நர்கீஸ், சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய சினிமா வரலாற்றில் நர்கீஸின் பங்களிப்புக்கு இந்த ஒரு சான்றே போதுமானது.

இந்தியா சுதந்திரம் பெறும் முன் வட இந்திய திரையுலகில் 1930-களில் பட்டொளி வீசிப்பறந்த நடிகை தேவிகா ராணி. இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1950-களில் திரைவானில் விடிவெள்ளியாக மின்னியவர் நர்கீஸ்.


நர்கீஸின் வாழ்க்கை அவரது தாயைப் பின்னிப்பிணைந்தது. நர்கீஸ் தாயார் பெயர் ஜட்டான்பாய். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடைபெறாத காலம். பஞ்சாபில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, அலாகாபாத்தில் வளர்ந்தவர் ஜட்டான்பாய். இவர் ஒரு அற்புதமான உருது பாடகி. பல தனவந்தர்கள் வீட்டில் பாடி அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்தார்.

அப்போது அலகாபாத்திலிருந்து ஒரு சிறு நாடகக்குழு, கொல்கத்தாவில் ஒரு இசை விழாவில் பங்கெடுத்தது. ஜட்டான்பாய் இக்குழுவுடன் சென்றார்.

இந்த பயணம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நடன, இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கே.எல்.சைகால் (சொந்தக்குரலில் பாடி நடித்த சினிமா நடிகர். வட இந்தியாவின் தியாகராஜ பாகவதராகக் கருதப்படுபவர்).

ஜட்டான்பாயின் இசையைக் கேட்ட அவர், அதில் இழைந்தோடிய கிராமிய இசையையும், நெஞ்சை வருடும் மென்மையையும் கண்டு பாராட்டினார்.
இங்குதான் மற்றொரு முக்கியமானவரின் சந்திப்பு நிகழ்ந்தது.

காதல்

கொல்கத்தா இசையில் பங்கேற்றவர்களில் ஒருவர் மோகன்பாபு. பெரிய செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. பிறப்பில் ஒரு பிராமணர். பஞ்சாபைச் சேர்ந்தவர்.
ஜட்டான்பாயின் அழகிலும் குரலிலும் மயங்கிய மோகன்பாபு, அவரைத் தீவிரமாக காதலித்தார். அவரை திருமணம் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

ஜட்டான்பாய் ஆரம்பத்தில் மறுத்தாலும், மோகன் பாபுவின் அபரிமிதமான காதல் அவர் உள்ளத்தில் ஆழமாக ஊடுருவி மோகன்பாபுவை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கச் செய்தது.

இதற்கு இரு பெரும் தடைகள் இருந்தன. முதலாவது ஒரு முஸ்லிம் பெண் ஒரு இந்து வாலிபனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்பது. இரண்டாவது முக்கியமானது. ஜட்டான்பாய்க்கு ஏற்கனவே திருமணமாகி அக்தர், அன்வர் என்ற இரு மகன்களும் இருந்தனர். எனினும் காதல் கடலில் மூழ்கிய மோகன்பாபுவுக்கு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. எப்படியும் ஜட்டான்பாயைத் திருமணம் செய்தே தீரவேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார்.

கணவனைத் துறந்தாலும் மதத்தைத் துறக்க ஜட்டான்பாய் தயாராக இல்லை. இவ்விஷயத்தில் மோகன்பாபு தயக்கம் காட்டவே இல்லை. உடனே முறைப்படி இஸ்லாமை ஏற்று முஸ்லிமாக மதம் மாறினார். தன் முதல் திருமணத்தை முறித்துக்கொள்ள ஜட்டான்பாய்க்கு தடங்கல் ஏதும் இல்லை.எனவே ஜட்டான்பாய்-மோகன்பாபு திருமணம் 1928-ல் நடந்தது.

குழந்தை பிறந்தது

இவர்களுக்கு 1.6.1929-ல் கொல்கத்தாவில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.முஸ்லிம் முறைப்படி குழந்தைக்கு பாத்திமா அப்துல் ரஷீத் என்று பெயரிட்டு அழைத்தனர். ஆனால் குழந்தையின் தந்தை மோகன்பாபு இஸ்லாமைத் தழுவிய போதும் வெளி உலகில் முஸ்லிமாகவும், உள்ளத்து உணர்வில் இந்துவாகவும் வாழ்ந்தார். தன் அருமை மகளை 'தேஜேஸ்வரி' என்றே அழைத்தார்.

1. நர்கீஸ்

2. 'தலேஷே ஹாக்' என்ற படத்தில் நர்கீசின் தாயார் ஜாட்டன் பாய் நடித்த போஸ்டர்.

3. நர்கீஸ் தனது இளம் வயதில் 'பேபி ராணி' என்ற பெயரில் 'தலேஷே ஹாக்' என்ற படத்தில் நடித்தார்.

உணர்வுகள் எப்படி இருந்த போதிலும், மோகன்பாபு முஸ்லிம் மதத்தை மதித்ததுடன் ஜட்டான்பாய் வாழ்க்கை முறையில் தலையிட்டதில்லை. தவிர ஜட்டானை அனுசரித்து, அவரது முன்னேற்றத்திற்கும் உதவியாக இருந்து ஒரு சிறந்த கணவனாகவே வாழ்ந்தார். மோகன்பாபு மகள் தேஜேஸ்வரியின் வளர்ப்பில் அக்கறைக் காட்டினார்.

தன் பெண் படித்து பட்டம் பெற்று பதவியும், புகழும் பெறவேண்டுமென்பது மோகன்பாபுவின் அடங்காத ஆசை. குழந்தை வளர ஆரம்பித்தாள். படிக்கவும் தொடங்கினாள். தந்தையார் குழந்தையை அக்காலத்தில் கொல்கத்தாவிலிருந்த 'குயின் மேரீஸ்' என்ற செல்வந்தர்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் தரமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். குழந்தையும் படித்து வளர்ந்து 'கேம்பிரிட்ஜ் சர்ட்டிபிகேட்' பெற்றது.

பெண்ணை மேல்படிப்பிற்காக கல்லூரியில் சேர்க்க தந்தை நடவடிக்கைகள் எடுத்தார். இதற்கிடையில் கணவரின் ஆதரவினாலும் செல்வாக்கினாலும் ஜட்டான்பாய் பெரிய பாடகியாக வளர்ந்தார். 'போட்டோ போன்' போன்ற அக்கால பிரபல கிராமபோன் கம்பெனிகளுக்காக அவர் பாடி பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டுகள் வெளிவந்து அமோக விற்பனையானது.

மகள் 'தேஜேஸ்வரி'க்கு படிப்புடன் இசை மீதும் தாயைப் போலவே நாட்டம் உண்டு. அதற்கேற்ப குரலும் இனிமையாக இருந்தது. தனவந்தர்கள் இல்லங்களில் தாயுடனும், தனித்தும் பாடி பாராட்டுப் பெற்றார்.

திரை உலகம்

இப்போது ஜட்டான்பாய்க்கு திரைப்படங்களில் பாடி நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இவர் முதலாவதாக முக்கிய கதாபாத்திரம் தாங்கி நடித்த 'சேவா சதனம்' என்ற இந்திப்படம் 1934-ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் ஜட்டான்பாயுடன் ஸீபேடா, ஹாஜுமொடாக், ஜபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதன்பின் திரைவாழ்க்கை தொடர ஜட்டான்பாய் தங்கள் குடும்பத்தாரோடு மும்பையில் மெரின் டிரைவ் பகுதியில் குடியேறினார். அங்கு சங்கீத் பிலிம்ஸ் தயாரித்த 'டாஸ்ஸி ஹாக்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 1935-ம் ஆண்டு வெளிவந்தது.

ஜட்டான்பாய் இப்படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.

இதனால், இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக திரைப்படத்திற்கு இசை அமைத்த பெண்மணி என்ற பெயர் பெற்றார்.

தவிர ஜட்டான்பாய் இப்படத்தில் சிறுமி தேஜேஸ்வரியின் பெயரை 'பேபி ராணி' என்று மாற்றி ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் வைத்தார். இதுதான் வருங்கால நர்கீஸ், நடித்த முதல் படம்.

திரைப்படங்களில் வெற்றி குவிந்தது. ஜட்டான்பாய் புகழ் பரவியது. அன்றைய சினிமா உலகம் அவரது வீட்டை முற்றுகையிட்டது. காலம் உருண்டோட சிறுமியாக இருந்த தேஜேஸ்வரி வளர்ந்து வனப்புமிக்க வனிதையானார்.

சினிமா நடிகையான போதிலும் ஜட்டான்பாய் தன் மகளை கண்டிப்புடன் வளர்த்தார். கல்லூரி செல்லும் காலத்துக்காக காத்திருந்தார் தேஜேஸ்வரி.

'அந்தாஸ்' படத்தில் நர்கீஸ்-ராஜ்கபூர்-திலீப் குமார்

ஏனெனில் அடிப்படையில் அவளுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லை. ஆனாலும் அவர் நடித்தார்.

மெஹ்பூப்கான்

அக்காலத்தில் வட இந்தியாவின் பிரபல படத்தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மெஹ்பூப்கான். இவர் ஓர் முஸ்லிம். சிறந்த கலா ரசிகர். தவிர ஆற்றல் மிக்கவர்.

இசை ரசிகராக மெஹ்பூப்கானுக்கு ஜட்டான்பாய் குடும்பத்தினரோடு தொடர்பு உண்டு. தேஜேஸ்வரியின் வளர்ச்சி, திறமை மெஹ்பூப்கானைக் கவர்ந்தது. திரையுலகில் அவளுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்குமென்று மெஹ்பூப்கான் கணித்தார். ஜட்டான்பாயிடம் பேசி தேஜேஸ்வரியை நடிக்க ஒப்புதல் வாங்கினார். மோகன்பாபுவும் அரைமனதாக சம்மதித்தார்.

பெயர் மாற்றம்

குழந்தை தேஜேஸ்வரியாக இருந்து சினிமாவில் 'பேபி ராணி' என்ற சிறுமியாக நடித்த இந்தப்பெண், இப்போது எழில் மங்கையாகத் திகழ்ந்தார். ஆகவே அவர் படத்தில் நடிப்பதற்கு சிறந்த பெயர் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 'ந' என்ற எழுத்து, அதிர்ஷ்டகரமானது என்பது மெஹ்பூப்கானின் நம்பிக்கை.

எனவே, பேபி ராணிக்கு 'ந'வை முதலெழுத்தாகக் கொண்டு 'நர்கீஸ்' என்ற புதிய பெயரைச் சூட்டினார். மெஹ்பூப்கான் தன்பெயரில் 'மெஹ்பூப் புரடெக்ஷன்ஸ்' என்ற ஒரு திரைப்படக் கம்பெனியைத் தொடங்கி இருந்தார். நர்கீஸைக் கொண்டு 'தக்தீர்' என்ற திரைப்படம் தயாரித்தார். இந்தப்படத்தில் நர்கீசுடன் அந்தகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய மோதிலால் மற்றும் சந்திரமோகன் என்ற இரண்டு கதாநாயகர்கள் நடித்தனர்.

'மதர் இந்தியா' படத்தில் நர்கீஸ், சுனில்தத், ராஜேந்திர குமார்.

நர்கீஸ் பண்பட்ட நடிகைபோல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக நடித்து ஸ்டூடியோவிலுள்ள அனைவரையும் வியக்கவைத்தார். அவரது நடிப்பில் புதுமை பொங்கியது.

1943-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்து வெளிவந்த 'தக்தீர்' மகத்தான வெற்றிபெற்றது. அடுத்து பஸ்லி சகோதரர்களின் 'இஸ்மெட்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 1944-ம் ஆண்டு வெளிவந்து போனதோடு சரி. மறுபடியும் மெஹ்பூப்கான் தயாரித்த 'ஹ¨மாயூன்' என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம்தான் நர்கீசின் நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்தியது.

இதன் பிறகு நர்கீஸ் ஈலான், ரோமியோ-ஜுலியட், மெஹந்தி போன்ற படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்த 'அனோக்கிபியார், மேளா, ஆக் மற்றும் அஞ்சுமான்' ஆகிய படங்கள் வெற்றியைத் தேடிதந்தன. இந்த நான்கு படங்களில் 'ஆக்' திரைப்படம் நர்கீஸ் வாழ்க்கையில் பெறும் மாற்றத்தை உருவாக்கியது. அது என்ன?

ராஜ்கபூர்

'ஆக்' திரைப்படத்தில்தான் முதன் முதலாக நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடி சேர்ந்தனர்.
ஏற்கனவே வெற்றி கதாநாயகர்களாக திகழ்ந்த மோதிலால், சந்திரமோகன் சகாப்தம் முடிவடைந்து, திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த் யுகம் தொடங்கியது. ஆனால் கதாநாயகியைப் பொறுத்தமட்டில் 1949-ல் நர்கீஸ் தான் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்தார்.

இந்த ஆண்டில் மெஹ்பூப்கான் தயாரித்த 'அந்தாஸ்' திரைப் படமும், ராஜ்கபூர் தயாரித்த 'பர்சாத்' திரைப்படமும் அப்படங்களில் கதாநாயகியாக நடித்த நர்கீசுக்கு பெரும் புகழ் அளித்தது. 'அந்தாஸ்' திரைப்படத்தின் இசை அமைப்பாளரான நவுஷாத் அலியும், 'பர்சாத்' திரைப்படத்தின் இசையமைப்பாளர்களான சங்கர்-ஜெய்கிஷ்னும் படத்தின் வெற்றிக்கு துணை நின்றனர். இந்த இசையமைப்பாளர்களின் இன்னிசையில், லதாமங்கேஷ்கரின் குரலிசையில் நர்கீசின் நடிப்பும் இணைய இந்தியா முழுவதும் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

ஒரு நேர்காணலில், திரைப்பட உலகின் ஜாம்பவான் நடிகர் அசோக்குமார், 'நர்கீஸ§க்கு கவர்ச்சி கிடையாது. ஆனால் ராஜ் கபூரோடு சேர்ந்து நடிக்கும்போது நம்மை முழுமையாக ஈர்த்துவிடுகிறார். அவர்களது காதல்கதை பிரசித்தி பெற்றது. திரையுலகை ஒளிரச் செய்தது' என்று கூறியுள்ளார்.

ஒரு முறை ராஜ்கபூர், 'நர்கீஸ் என்னை அறிவார். நானும் அவரை அறிவேன்' என்று தங்கள் நிலையை ரத்தினச் சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டார்.

நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. சினிமா உலகமும் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த ஜோடி தொடர்ந்து நடித்த படங்கள் ஆக், அந்தாஸ், பர்சாத், ப்யார், ஜான்பெஹஜான், ஆவாரா, அம்பர், பேவப்பா, அன்ஹோனி, ஆஸ்ஸியான், ஹா. தூன், பாப்பி, ஸ்ரீ420, சோரி சோரி, ஜக்தே ராஹோ.

இதில் ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோவைத் தவிர இதரத் தயாரிப்பாளர்களின் படங்களும் அடங்கும். 1950-ம் ஆண்டில் நர்கீஸ் நடித்து 'பீஷ்ம பிரதிக்ஞா' என்ற புராணப்படம் வெளிவந்தது. இதுவே நர்கீஸ் நடித்த முதலும் கடைசியுமான புராணப்படம்.

இதே ஆண்டில் நர்கீஸ் நடித்து வெளிவந்த சமூகச் சித்திரம் 'சோட்டி பாபி'. இப்படம் படித்த புதுமைப் பெண்களின் திறனை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டியது.

எதிர்ப்பில் வளர்ந்த காதல்

இப்போது ராஜ்கபூரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி சற்று அறியலாம். ராஜ்கபூரின் தந்தை பிருத்திவிராஜ் கபூர் மிகப் புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர். தன்னுடன் பிறந்த சகோதரியின் மகளான கிருஷ்ணா என்ற பெண்ணை ராஜ்கபூருக்கு 1946-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான பிறகு நான்கே மாதங்களில் ராஜ்கபூருக்கு நர்கீஸ் அறிமுகமானார். நர்கீஸ்-ராஜ்கபூர் தொடர்புக்கு தொடக்கத்திலேயே எதிர்ப்புக்குரல் எழுப்பியது ஜட்டான் பாய்தான். இந்த எதிர்ப்பு 'ஆக்', 'பர்சாத்' படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருக்கும் போதே எழுப்பப்பட்டதாகும்.

நர்கீஸ்-ராஜ்கபூருடன் படப் பிடிப்புக்காக வெளியூர் செல்லும் போதெல்லாம் ஜட்டான் பாயும், சகோதரர் அக்தரும் உடன் சென்றனர்.

ஆனால், நர்கீசின் தந்தை மோகன்பாபு 1948-ல் காலமாகிவிட்டார்.

ஜட்டான்பாயும் 1950-ல் இறந்துவிட்டார். இந்த எதிர்ப்பாளர்கள் மறைவினால் நர்கீஸ்-ராஜ்கபூர் காதல் வெளிப் படையாகத் தெரிய ஆரம்பித்தது. நர்கீசை பொறுத்தமட்டில் தடை நீங்கிவிட்டாலும் ராஜ்கபூர் தரப்பில் அவரது குடும்பம் இந்தக் காதலை கடுமையாக எதிர்த்தது.

ராஜ்கபூரின் இளம் மனைவி கண்ணீரால் கரைந்தார். தற்கொலைக்கும் முயன்றார்.

எனினும் தன் குழந்தைகளுக்காகவாவது கிருஷ்ணா வாழ வேண்டிய அவசியம் இருந்தது. பிருத்திவிராஜ் எவ்வளவு புத்திமதி கூறியும், ராஜ்-நர்கீஸ் காதல் நீடித்தது.

நர்கீஸ்-ராஜ்கபூர் காதலை குடும்ப நண்பர்களும் ரசிகர்களும் ஆதரித்தனர். பிறவியிலேயே நர்கீஸ் அபார தைரியமும், அயராத முயற்சியும் கொண்டவர். அப்போது மும்பையைச் சேர்ந்த மொரார்ஜ்தேசாய் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். மொரார்ஜ் தேசாய் ஏற்கனவே இந்துக்கள் திருமணச் சட்டத்தில் முற்போக்குத் திருத்தங்கள் செய்ய முயன்று வந்தார்.

இதைக் கருத்தில் கொண்டு தேசாயின் உதவியை பெறலாமென எண்ணி நர்கீஸ் அவரை சந்தித்து, 'நான் ராஜ்கபூரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறேன்' என்று தயங்கியவாரே சொன்னார். தேசாய் கோபப்பட்டு நர்கீசை அறையை விட்டு உடனடியாக வெளியேறச் சொல்லிவிட்டார். எனினும் நர்கீஸ் மனம் மாறவில்லை.


மஞ்சள் கயிறு

31.12.1949 நள்ளிரவு முடிந்து 1950-ம் ஆண்டு பிறந்தது. அன்று நர்கீஸ்-ராஜ்கபூர் சந்திப்பு நிகழ்கிறது. நர்கீசின் வற்புறுத்தலின் பேரில், 'ராக்கி' யாக கையில் கட்ட வேண்டிய மஞ்சள் கயிற்றை ராஜ்கபூர் நர்கீசின் கழுத்தில் கட்டினார். 'நான் ராஜ்கபூரின் மனைவியாகிவிட்டேன்' என்று ஆனந்தத்தில் நர்கீஸ் குதித்தார்.

நர்கீஸ் மனோரீதியில் ராஜ்கபூரின் உண்மையான காதலி. ஆனால், ராஜ்கபூரோ எதையும் எளிதாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் ஒரு 'ஷோ மேன்'. ஆகவே, ராஜ்கபூர் தன் மனைவி கிருஷ்ணாவை துறக்க விரும்பவில்லை.

நர்கீசுடன் ராஜ்கபூர் உறவு தொடர்ந்ததற்கு காதலைத் தவிர மற்றுமொரு முக்கிய காரணம் இருந்தது. அதுதான் நர்கீஸ்-ராஜ்கபூர் ஜோடிக்கு மக்களிடையே இருந்த மவுசு. அதனால் திரைப் படங்கள் அடைந்த வெற்றி.ஆனால் இப்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. ராஜ்கபூரின் கவனம் தென்னிந்திய நடிகைகளான வைஜயந்திமாலா, பத்மினி முதலானோர் பக்கம் திரும்பியது. ராஜ்கபூரின் புதிய ஜோடி வைஜயந்திமாலாவுக்கு இந்திப்படங்களில் வரவேற்பிருந்தது. இது ராஜ்கபூரின் எண்ணம் திசைமாறியதற்கு ஒரு காரணமாயிருந்தது.

தவிர தனது திரையுலக போட்டியாளரான திலீப்குமாருடன் நர்கீசை ஜோடி சேர்த்து 'மொகல்-ஏ-ஆஸாம்' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர் கே.ஆசிப் முடிவு செய்திருந்தது ராஜ்கபூருக்கு தெரியவந்தது. உடனே அதில் தலையிட்டு, நர்கீஸ் அப்படத்தில் நடிப்பதை நிறுத்தினார். பிரமாண்டமான இப்படம் கை நழுவிப் போனது நர்கீசுக்கு பெரும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியது.

போதாததற்கு நர்கீசின் குடும்ப நண்பரான மெஹ்பூப்கான் தான் திலீப்குமாரை வைத்து தயாரித்து வரும் முழு நீள கலர் படமான 'ஆன்' திரைப்படத்தில் கால்ஷீட் பிரச்சினை ஏற்படுமெனக்கருதி, நர்கீசை நீக்கி அதற்கு பதிலாக 'நிம்மி'யை நடிக்க வைத்து படம் எடுத்தார். இது இடிமேல் இடியாக நர்கீஸின் தலையில் விழுந்தது.

நர்கீசுக்கு உண்மைகள் புலர ஆரம்பித்தன. ராஜ்கபூர் தன்னை சினிமாவில் நடிக்க பயன்படுத்திக் கொண்டாரே தவிர வாழ்க்கையில் இல்லை என்பதை நர்கீஸ் புரிந்து கொள்ளத் தொடங்கினார்.

எனவே ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். முடிவில் ராஜ்கபூருடனான உறவையும் முறித்துக் கொண்டார்.

இதன்பின் 'அதாலத்', 'கர்ஸன்ஸார்', 'லஜ்வந்தி' ஆகிய படங் களில் பிற கதாநாயகர்களுடன் நடித்தார். அப்படங்களும் வெற்றிகரமாக ஓடின.
நர்கீஸின் நிலைமை சீர் அடைந்ததால் குடும்ப நண்பர் மெஹ்பூப்கான் தான் தயாரிக்கும் 'மதர் இந்தியா' என்ற படத்தில் நர்கீசுக்கு முக்கிய பாத்திரம் அளிக்க முடிவு செய்தார்.

தயாரிப்பாளர் மெஹ்பூப் கான், சர்தார் அக்தர் என்ற நடிகையைக்கொண்டு 1940-ம் ஆண்டில் 'அவுரத்' (பெண்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டார். இப் படத்தின் மறுபதிப்பே அவர் தயாரிக்க முயன்ற 'மதர் இந்தியா' திரைப்படமாகும். சர்தார் அக்தரின் பாத்திரமே நர்கீஸ் ஏற்றது. ஆனால் அது வயது முதிர்ந்த தாயார் கதாபாத்திரம். இந்த பாத்திரத்தை நர்கீஸ் ஒரு சவாலாக ஏற்று நடித்தார்.

இந்தியாவின் கலாசாரப் பண்பாட்டைக் காக்க வயது முதிர்ந்த ஒரு இந்தியப் பெண்மணி அனுபவிக்கும் கொடுமைகளையும், செய்யும் தியாகத்தையும் சித்தரிப்பதே 'மதர் இந்தியா' திரைப்படத்தின் கதைக்கரு. திரைப்படத்திற்கு தந்தை, பிள்ளைகள் பாத்திரத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்வதில் மெஹ்பூப்கானுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இறுதியாக நர்கீசின் கணவனாக நடிக்க ராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நர்கீசின் ஒரு மகன் பாத்திரத்திற்கு நடிகர் ராஜேந்திரகுமார் தேர்வு செய்யப்பட்டார். நர்கீசின் மற்றொரு மகனாக நடிக்க நடிகரை தேர்வு செய்வது சிக்கலாக இருந்தது. கடைசியில் நர்கீஸைவிட ஒரு வயது குறைவான வாலிபனாயிருந்த சுனில்தத் தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக மெஹ்பூப், தன் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கிடையே பரஸ்பர நட்பு இருந்தால்தான் நடிப்பில் கூட்டு முயற்சி இயல்பாகவும் சிறப்பாகவும் அமையும் என்று கருதுபவர். அதனால் பெரும்பாலும் படப்பிடிப்பை வெளியூர்களில் நடத்துவார். படப்பிடிப்பிற்கிடையேவும், முடிந்த பின்னும் நடிக-நடிகைகள் கலந்து பேச அதிக வாய்ப்பு கிடைத்தது.


தாயாக நர்கீசும், மகனாக சுனில்தத்தும் உணர்ந்து நடித்தனர், உருகி நடித்தனர். 1957-ம் ஆண்டில் வெளிவந்த 'மதர் இந்தியா' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

ஒரு சமயம் சுனில்தத்தின் சகோதரியின் மகள் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். நர்கீஸ் அந்தப் பெண்ணை தன் வீட்டுக்கு கொண்டுவந்து, மருத்துவ சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். அது முதல் இரு குடும்பத்தின ருக்கும் இடையே பாசமும், நேசமும் வளர்ந்தது.

சுனில்தத்தின் சகோதரியான ராணியின் வீட்டுக்கு நர்கீஸ் அடிக்கடி சென்றார். ஒருநாள் ராணியின் வீட்டிலிருந்து நர்கீஸை காரில் அழைத்துப்போன சுனில், வழியில் தான் அவரை மணக்க விரும்புவதாகச் சொன்னார். பதிலேதும் சொல்லாமல் நர்கீஸ் தன் வீடு சென்றார்.

மறுதினம் ராணியைக் கலந்தாலோசித்து சுனிலைத் திருமணம் செய்துகொள்ள நர்கீஸ் சம்மதம் தெரிவித்தார். இந்த திருமணத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுனில்தத்தின் தாயார் சற்று பிற்போக்குவாதி. அவர் முஸ்லிமான நர்கீஸை ஏற்பாரோ என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு இருந்தது. மாறாக நர்கீசின் முகம் பார்த்து, சுனிலின் தாயார் திருப்தியடைந்தார்.

'என் மகனை இவள் நன்றாகப் பார்த்துக் கொள்வாள்' என்று தன் திருப்தியை வெளிப்படுத்தினார்.


காதலித்த ராஜ்கபூர் கைவிட்ட போதிலும் தன்னிலும் வயதில் சிறியவரும், சினிமாவில் தனக்கு மகனாக நடித்தவருமான சுனில்தத்தை நர்கீஸ், 11.3.1958-ல் மும்பை சாந்தாகுரூஷ் பகுதியிலிருந்த ஆர்யசமாஜம் ஹாலில் திருமணம் செய்து கொண்டார். சுற்றமும், நட்பும் சூழ வந்து வாழ்த்தி இனிதே திருமணத்தை நடத்தி வைத்தனர்.

நர்கீஸ்-சுனில்தத் இனிய இல்லறத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். மும்பையின் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவரும், பின்னர் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி 6 ஆண்டு சிறைதண்டனை அடைந்தவருமான சஞ்சய் தத், இவர்களது மகன்தான்.

நெருப்பில் இருந்து காப்பாற்றினார்


'மதர் இந்தியா' படப்பிடிப்பின் போது நெருப்பு பற்றிக்கொள்ளும் காட்சி ஒன்றில் நர்கீஸ் நடித்தார். அப்போது அவர் நெருப்புக்குள் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் சுனில் தத் தைரியமாக நெருப்புக்குள் பாய்ந்து சென்று நர்கீசை காப்பாற்றினார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சுனில் தத் மீது நர்கீசுக்கு காதல் பிறந்தது.
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் 'டார்லிங் ஜி' என்று அழைத்துக்கொள்வார்கள்.

தற்கொலை திட்டம்

நடிகர் ராஜ்கபூருடன் ஏற்பட்ட காதல் முறிந்ததைத்தொடர்ந்து நர்கீஸ் சோகத்துடன் இருந்தார். இந்த காதல் தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளவும் அவர் முடிவு செய்திருந்தார். அந்த நேரத்தில் தான் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்த சுனில்தத்திடம் இதை நர்கீஸ் கூறினார். அப்போது சுனில்தத், 'நீ வாழவேண்டும்' என்று தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறினார். இதன் மூலம் மனமாற்றம் ஏற்பட்டு தற்கொலை முடிவை கைவிட்டதாக நர்கீஸ் தனது டைரியில் எழுதி இருக்கிறார்.

No comments:

Post a Comment