JULIAN CALENDAR INTRODUCED
BY JULIUS CAESAR , JANUARY 1, 45 B.C
கிமு 45 – ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.
வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.
20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது[1]. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது[2]. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment