WRITER KURAMAGAL BORN 1933 JANUARY 9
எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அமரரானார்!
Saturday, 17 September 2016 00:43 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம் E-mail Print PDF
குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரிவர். குறிப்பாக ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்ந்த ஆரம்பகாலப்பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் இவர்.இறுதிவரை சளைக்காது இலக்கியப்பங்களிப்பு செய்து வந்தவர்.
இத்தருணத்தில் இளவாலை ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த பொதிகை (கனடா) சஞ்சிகைக்காக இவருடனான நேர்காணலுக்காக இவரைச்சந்தித்திருந்ததை நினைவுகூர்கின்றேன்.
எழுத்தாளர் எஸ்.பொ. கனடா வந்திருந்தபோது அவருடனான உரையாடலின்போது அவர் இவரைப்பற்றிப்பெருமையாகக் கூறிய பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. இவருடன் இணைந்து மேலும் மூவருடன் சேர்ந்து 'மத்தாப்பு' என்னுமொரு குறுநாவலை வீரகேசரியில் எழுதியதை அவர் அப்பொழுது நினைவு கூர்ந்திருந்தார்.
மேலுமவர் கூறிய இன்னுமொரு விடயமும் நினைவிலுள்ளது. அக்காலத்தில் பெண்கள் இலக்கியம், இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் செல்வது மிகவும் அரிதாகவிருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் குறமகள் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவ்விதமான இலக்கியக்கூட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்தார் என்பதையும், அவ்விதமான சமயங்களில் கூட்டம் முடிந்ததும் தாங்கள் அவருக்குத்துணையாகச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு வருவது வழக்கமென்றும் குறிப்பிட்டதைத்தான் கூறுகின்றேன்.
இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு, முக்கியமாக ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பே. இவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.
அமரர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்களுடன் 'பொதிகை' (கனடா) சஞ்சிகைக்காக நேர்காணலொன்றில் கலந்துகொண்டிருந்தேன். அந்நேர்காணலில் குறமகள் அவர்கள் கூறியதை முன்பு முகநூலிலும், 'பதிவுகள்' இணைய இதழிலும் பதிவு செய்திருந்தேன். அதனை இத்தருணத்தில் மீண்டும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாகவிருக்குமென்பதால் மீள்பதிவு செய்கின்றேன்.
'பொதிகை': குறமகளுடன் ஒரு நேர்காணல்!
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். பல வருடங்களாகக் கனடாவில் வசித்து வரும் இவரது 'குறமகள் கதைகள்', 'உள்ளக் கமலமடி' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'டொராண்டோ' கனடாவில் இளவாலை எஸ்.ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு 'பொதிகை' என்றொரு மாத சஞ்சிகை வெளியாகிக்கொண்டிருந்தது. அது பின்னர் நிரூபா தங்கவேற்பிள்ளையை ஆசிரியராகக்கொண்டு சிறிது காலம் சஞ்சிகையாகவும் , பத்திரிகையாகவும் வெளிவந்து தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது. ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு பொதிகை வெளிவந்த சமயம், அதனது 14 மே/யூன் 1993 இதழில் வெளியான நேர்காணல் எனக்கும் , இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் முன்னோடிகளிலொருவரான திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்களுக்குமிடையில் நடைபெற்றதாக அமைந்திருந்தது. அக்காலகட்டத்தில் மணிவாணன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள், நாவலொன்று ('கணங்களும், குணங்களும்) தாயகத்தில் எழுதியிருந்தேன். நேர்காணலில் மணிவாணன் என்ற எனது புனைபெயரை ' மணிவண்ணன்' என்று தவறுதலாகப் பிரசுரித்து விட்டார்கள்.
பொதுவாக நான் இவ்விதமான நேர்காணல்களைத் தவிர்ப்பவன். ஆனால் நேர்காணல் குறமகள் அவருடன் என்பதால் தவிர்ப்பதைத் தவிர்த்துவிட்டுப் பங்குபற்றினேன். அந்த நேர்காணல் வந்த 'பொதிகை' சஞ்சிகையின் பக்கங்களில் 'போட்டோ'ப் பிரதியொன்றும் அந்நேர்காணலில் 'குறமகள்' அவர்கள் கூறிய பல்வேறு விடயங்களைப் பற்றிய கருத்துகளும் ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றன.
அக்கலந்துரையாடலில் குறமகள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றைப் பதிவுகளில் ,பேச்சுத் தமிழிலேயே, பொதிகையில் வந்தமாதிரியே பதிவு செய்கின்றேன் காலத்தின் தேவை கருதி.
நான் சிறுவனாக இருந்த பொழுதிலிருந்து ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருந்த குறமகளைச் சந்தித்தது நல்லதோர் அனுபவம். இது போல் எஸ்.பொ.வினையும் அவர் அண்மையில் கனடா வந்திருந்த பொழுது சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் மனம் விட்டுக் கலந்துரையாடினார். இவர்கள் இருவரும் மேலும் மூவருடன் இணைந்து எழுதிய 'மத்தாப்பு' என்னும் குறுநாவலும் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் குறமகள் கூறியவை....
பொதிகை நேர்காணல்: குறமகளுடன்அக்கலந்துரையாடலில் குறமகள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றைப் பதிவுகளில் ,பேச்சுத் தமிழிலேயே, பொதிகையில் வந்தமாதிரியே பதிவு செய்கின்றேன் காலத்தின் தேவை கருதி.
நான் சிறுவனாக இருந்த பொழுதிலிருந்து ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருந்த குறமகளைச் சந்தித்தது நல்லதொரு அனுபவம். இது போல் எஸ்.பொ.வினையும் அவர் அண்மையில் கனடா வந்திருந்த பொழுது சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் மனம் விட்டுக் கலந்துரையாடினார். இவர்கள் இருவரும் மேலும் மூவருடன் இணைந்து எழுதிய 'மத்தாப்பு' என்னும் குறுநாவலும் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
என் ஆரம்பகாலத்தில்...
நான் 1956க்குப் பின்னால் வந்த ஆள். பழைய எழுத்துகள், பழைய எழுத்தாளர்கள்..அனாதியிலெல்லாம் மிகவும் பண்டிதத்தனம் இருந்து வந்தது. ஆனா பிறகு எங்கட காலகட்டத்தில..பாரதி, மு.வரதராசனார், தி.மு.க நூல்களின் ஆட்சி ஆகியன எங்களுடைய எழுத்துகளில் பரிணமித்தது. ஒரு முற்போக்கான எழுத்தோட்டம் என்னிடமும் சக எழுத்தாளர்களிடையேயும் காணப்பட்டு வந்தது...டொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொ, கனக செந்திநாதன், செ.கணேசலிங்கன், எல்லோரும் எனது நண்பர்கள். நான் மற்றவரை விமர்சித்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவரவர் தங்களுக்கேற்றபடி தங்களுக்கு விருப்பமானவற்றை எழுதுகின்றார்கள். எங்களுக்கு அடுத்த தலைமுறையில் வந்த அன்னலட்சுமி ராஜதுரை, யோகா பாலச்சந்திரன், ஜேசுராசா, சாந்தன், சிறுகதையில் துலங்கினார்கள். எடுத்துக் கொண்டதைக் கவரக் கூடிய வகையில் கொடுப்பதுதான் சிறந்தது என்பது என் கருத்து.
எழுத்தாளர் சங்கங்கள்....
தமிழ் எழுத்தாளர் சங்கம்,, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ் இலக்கிய வட்டம், நற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவையெல்லாம் மறுமலர்ச்சி எழுத்தாளர் சங்கத்தின் பின் வந்தவை.
எஸ்.பொ. ஒரு முற்போக்குவாதி....
எஸ்.பொ. முற்போக்குக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. அவர் ஒரு முற்போக்கான ஆள். ஆனால் தமிழ் எழுத்தாளர் சங்கத்திலே இருந்து பிரிந்தவர்கள் தங்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனப் பெயர் வைத்ததாலே அவர் கேட்டார் மற்றவர்கள் எல்லாம் பிற்போக்கு எழுத்தாளர்களா என்று...ஆனா உண்மையாகவே அவர் வலு முற்போக்கு வாதி...சங்கங்களின்ற பெயரை வைச்சுக் கொண்டு இவர் முற்போக்குவாதி அவர் பிற்போக்கு வாதி என இனம் பிரிக்கக் கூடாது.
எழுத்து பற்றி...
எழுத்தாளர்களுடைய எழுத்தை வாசிக்கின்றபோது அதில ஒரு சக்தி ஆவேசம்.....ஒரு தார்மீகக் கொள்கை....எழுத்தில ஒரு வன்மை..போன்றவற்றைக் காணும் போது...எந்த எழுத்தாளராயினும் சரி..எங்களை அறியாமலேயே ஓர் ஈடுபாடு அந்த எழுத்துடன் ஏற்படுகிறது. ஆகவே நாங்கள் எழுத்தாற்றலையும் எப்படி சமூகத்துக்குப் பிரயோசனப் படுகிறது என்பதையும் பார்க்க வேண்டுமே தவிர எங்களுடைய கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைக் கண்டவுடனே ..உவன் எழுத மாட்டான் என்று தூக்கி எறிய முடியாது...
பால்யகாலத்தில்...
எனது சித்தப்பா ஒருவர் தலைமை ஆசிரியராக இருந்தார். எனது அத்தான் ஒருவர் ஈழகேசரியில வேலை செய்தார். அவர்கள் நிறைய புத்தகங்களை எனக்குத் தந்து வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள். எனது பன்னிரண்டாவது வயதில் எனது முதலாவது கட்டுரை அச்சில் வந்தது எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.
பெண் எழுத்தாளர்கள்....
என் சிறுவயதில் பெண் எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. நானும் பத்மா சோமகாந்தனும்தான் அப்போது எழுதினோம். பின்னர் யோகா பாலச்சந்திரன், அன்னலட்சுமி ராஜதுரை, பவானி ஆழ்வார்ப்பிள்ளை, நா.பாலேஸ்வரி,..75க்குப் பின்னர் கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா போன்ற பலர் எழுத ஆரம்பித்தனர். அவர்களிடம் பெண்விடுதலை,பெண் சமத்துவம் போன்ற கருத்துகள் நிறையக் காணப்படுகின்றன.கனடாவில் பெண் எழுத்தாளர்கள் இருக்கும் சட்டதிட்டங்களுக்கேற்ப எழுதத் தெண்டிக்கின்றார்கள். என்னுடைய முதலாவது கதையுட்பட அநேகமான கதைகள் பெண்களின் முன்னேற்றம் பற்றியவைதான். குடும்ப ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.இங்கு சிலர் கனடா அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு பிரிவினைக்கு இலகுவாக வழிகாட்டுகின்றார்கள். அது தவறு என்றே எனக்குப் படுகிறது.
சிறுகதை இலக்கணம்...
சிறுகதைக்கென்று இலக்கணம் எல்லாம் வகுத்து அதன்படி நடக்க வேண்டும் என்று சொல்வதை நான் வரவேற்பதில்லை. ஹெமிங்வே போன்றவர்களின் ஒரு புத்தகமே ஒரு நாவலைப் போல, சிறுகதையாக எழுதியுள்ளனர். நாங்கள் என்னத்தைச் சமுதாயத்துக்குச் சொல்ல வருகின்றோம். அதை எப்படிச் சொல்ல வருகின்றோம்..என்று சொல்லி அதற்கான உருவ அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்...எழுதிய விதம் சுவாரசியமாக இருந்தால்..மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால்... அது வரவேற்புப் பெறும்.
காலம் மாறுகிறது...
காலமாற்றத்திற்கேற்ப நாங்களும் மாறிக்கொண்டு வரவேண்டும். பண்டைக் காலத்தில் நீண்டதாக எழுதினார்கள். அப்ப நேரமும் அவகாசமும் தாராளமாகக் கிடைத்தன. இந்தக் காலத்திலை அவை ஒத்து வரமாட்டா.. எனவே இதற்கு உகந்த இலக்கியம் தான் நமக்குத் தேவை.
எழுத்தாளர்களின் நோக்கம்..
எழுத்தாளர்களுடைய முக்கிய நோக்கம் வந்து, சமுதாயத்தில் இருக்கிற சில முக்கிய விடயங்களை..இப்படித்தான் சமுதாயம் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு..வழிகாட்டிக் கொண்டு போகவேண்டுமே தவிர..தனது வித்துவத்தைக் காட்ட நினைத்துப் பண்டிதத் தமிழைக் கொட்டித் தீர்க்கக் கூடாது.....சங்ககாலப் பாடல்களை எங்களால் வாசிக்க முடியாது. தமிழ் கொஞ்சம் கடுமையாக இருந்தது. காலத்துக்கு ஏற்ப தமிழும் மாற்றமடைகின்றது. சிலவேளை எதிர்காலத் தமிழர் நிகழ்காலத் தமிழைக் கடுமையானது எனக் குற்றஞ் சாட்டவும் கூடும்.
இன்னுமொரு எழுத்தாள வர்க்கம்....
இன்னுமொரு எழுத்தாள வர்க்கம் இருக்கிறது..சமூகத்தில் எங்காவது அடித்தளத்தில் நடக்கும் அலங்கோலங்களை மிகைபட எடுத்துக்காட்டி இப்படியான இழிந்த சமுதாயத்தில்தான் நாம் வாழுகின்றோம் என்றொரு பிரமையை ஏற்படுத்துகின்றனர். அதிலும் எனக்கு உடன்பாடில்லை. அவர்கள் அலங்கோலத்தை மிகைப்படுத்தாமல் நுட்பமாக எடுத்துக் காட்டி சமுதாயத்தைச் சீர்திருத்த வழிகாட்டுவதே மிகவும் உகந்ததும் சிறந்ததுமாகும்.
கவிதைகள் பற்றி...
நவீன கவிதைகளைப் பற்றி... எதுவும் எந்த ரூபத்தில் வந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது வரவேற்கத்தக்கதே. கவிதைகளில் மிக உயர்ந்த ரசனையையுடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. ஹைகூக் கவிதைகளிலேயே திறமையைப் பார்க்கமுடிகிறது. புதுக் கவிதை என்று சொன்னாலும் எத்தனையோவற்றில் நல்ல அர்த்தம் இருக்கிறது. ....கண்ணதாசன் கவிதைகள் அநேகமாக எல்லாம் சங்ககாலக் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டு , எளிமைப்படுத்தப் பட்டனவே. பழசுகளைப் பயின்று வரும்பொழுது..அது ..ஒரு விளைநிலமாக அமைகிறது...
ngiri2704@rogers.com
குறமகள் என்ற பெயரில் எழுதி வந்த வள்ளிநாயகி இராமலிங்கம் (சனவரி 9, 1933 - செப்டம்பர் 15, 2016) ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்.[1]
இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வள்ளிநாயகி இராமலிங்கம், காங்கேசன்துறையில் பிறந்தவர். காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.[2] 27 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' ஈழகேசரியில் பிரசுரமானது. இவரது கதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர். இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வந்துள்ளன. சிறுகதைகள் மட்டுமன்றி கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றிலும் தம் ஆளுமையைக் காட்டியுள்ளார். ஐவருடன் சேர்ந்து "மத்தாப்பு" என்ற குறுநாவலில் மஞ்சள் வர்ணத்தை வைத்து ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார். மாணிக்கம் இதழில் பிரபல எழுத்தாளர்கள் சிலருடன் சேர்ந்து "கடல் தாரகை" என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இவர் சிறந்த சொற்பொழிவாளர். பல இலக்கிய வெளியீடுகளில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
1954-ம் ஆண்டிலிருந்து சிறுகதை, கட்டுரை, கவிதை என இவரின் ஆக்கங்கள் தொடங்கின. இவர் எழுதிய சிறுகதைகளுள் பிரபலமான சில:
வாழ்வைத் தேடு.
பிரிவும் இன்பம் தரும்.
ஆளுமைகள் அழிகின்றன.
ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது.
அவள் கொடுத்த விலை.
வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும்.
இவருடைய ஆக்கங்கள்[மூலத்தைத் தொகு]
குறமகள் கதைகள் - (2000)
உள்ளக்கமலமடி - (2001)
இராமபாணம் (கட்டுரைகள்)
ஈழத்து றோஜா
குருமோகன் பாலர் பாடல்கள்
மாலை சூட்டும் நாள் (கவிதைகள்)
No comments:
Post a Comment