Wednesday, 1 July 2020

EMERGENCY -OPPOSED BY POLITICIANS




          EMERGENCY -OPPOSED BY POLITICIANS 




மிசா சட்டம் -மக்களுக்கு எதிரானது

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25, 1975 அன்று தமிழகத்தில் இருந்த நிலை வேறு; திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31 அன்று திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின் தமிழகத்தில் இருந்த நிலை வேறு. உண்மையில் தமிழகத்தில் நெருக்கடி நிலை திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்தான் தொடங்கியது என்றுகூடச் சொல்லலாம்.

ஏனென்றால், வெளி மாநிலங்களிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கும் முகாம் தந்த களமாகத் தமிழகம் இருந்தது. மத்திய அரசால் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை, ‘‘என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் நெருக்கடி நிலையை எதிர்த்துக் கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்த முடிந்தது. அதற்குக் காரணம், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இருந்ததுதான்” என்று சொன்னது ஒரு சான்று. சஞ்சீவ ரெட்டி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பல தலைவர்கள் அந்நாட்களில் தமிழகத்தில் தங்கியிருந்தார்கள். இந்திரா காந்தியின் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், “இந்தியாவில் இரண்டு தீவுகள். ஒன்று, திமுக தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு. மற்றொன்று, ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத்.” அப்படித்தான் இருந்தது தமிழகம். ஆனால், ஆட்சி கலைக்கப்பட்டதும் எல்லாம் மாறியது.

திமுகவின் முன்னணித் தலைவர்கள் முரசொலிமாறன், மு.க.ஸ்டாலின், வைகோ, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என்று பலரும் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் மூன்று அதிகாரிகளின் செயல்பாடுகள் வரலாற்றில் மறக்க முடியாதது.

ஆர்.வி.சுப்ரமணியம்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954 1971) இருந்தவர் மோகன்லால் சுகாதியா. ராஜஸ்தான் மாநிலத்தின் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். 1976-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர். அன்றைக்கு மோகன்லால் சுகாதியா ஆளுநராகச் செயல்பட்டபோது அவருக்கு ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம் மற்றும் தவே ஆகிய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களில் ஆர்.வி.சுப்ரமணியம் கேரளாவில் பிறந்த தமிழர். 1947-ல் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டெல்லியில் பணிபுரிந்தாலும் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நன்கு அறிந்தவர். நெருக்கடி நிலைக் காலங்களில் மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளைச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டவர். தமிழ்நாட்டு நலன் சார்ந்த முறையீடுகளை ஏற்றுக்கொண்டு பலருக்கு உதவியும் செய்தார். மக்கள் நலவிரும்பியாகத் திகழ்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமியுடன் கோவில்பட்டி விருந்தினர் விடுதியில் ஆர்.வி. சுப்ரமணியத்தைச் சந்தித்து விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான ஜப்தி நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போதைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த நாராயணனை அழைத்த அவர், விவசாயிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கூறி நடவடிக்கையை முடுக்கிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் நெல்லை மாவட்டம் முழுக்க வறட்சி நிலவியது. அப்போதுதான் மக்காச்சோளம் பயிர்செய்யப்படத் தொடங்கியது. உணவு தானியங்கள் இல்லாமல் மக்காச்சோளத்தை மக்கள் உணவாக உட்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னதும் விவசாயிகளின் உடமைகளையோ, அவர்கள் வீட்டு நிலைக் கதவுகளையோ பறிமுதல் செய்யும் ஜப்தி நடவடிக்கைகளை கைவிடச் செய்தார் ஆர்.வி.சுப்ரமணியம்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் கோட்டையில் அவரைச் சந்தித்து மனுக்கள் வழங்க முடிந்தது. அவரது மேஜைக்குச் சென்ற மனுக்கள் அவ்வப்போது பைசல் செய்யப்பட்டன. திமுக அரசின் மீது அவருக்கு எந்தவித வன்மமும் இருந்ததாகத் தெரியவில்லை. இவருக்கு நேர் எதிரானவர்கள் மற்ற இருவரும்; அதாவது, தவேவும் வித்யாசாகரும்.
தவே

தவே போன்ற ஆலோசகரை யாரும் எளிதில் நெருங்குவது என்பதே முடியாத காரியமாக இருந்தது. கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சுப்பையா முதலியாரோடு குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடந்த நிகழ்வில் தவேயைச் சந்திக்க முயன்று, நதிநீர் இணைப்பு சம்பந்தமாகவும், பாசன வசதிகளுக்காகக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு வழங்கினோம். அந்த மனுவைக்கூட திரும்பிப் பார்க்காமல், “என்ன விஷயம்?” என்று கேட்டுவிட்டு கண்ணியமற்ற முறையில் எங்களை நடத்தினார் தவே. திமுக-வைச் சேர்ந்த அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.மத்திய இணை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவுக்கு வேண்டப்பட்டவர் தவே.

அவர் ஒருபோதும் மக்களைச் சந்தித்ததோ அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டதோ இல்லை. ஒன்று, சுற்றுப்பயணத்தில் இருப்பார். அல்லது மோகன்லால் சுகாதியாவோடு ஆளுநர் மாளிகையில் இருப்பார்.

வித்யாசாகர்

நெருக்கடி நிலையில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட சிறையதிகாரி வித்யாசாகர். மிசா கைதிகள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் அவர்களை மிரட்டுவது, அடித்து உதைப்பது, துன்புறுத்துவது என்று காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டார். அதில் ஒரு இன்பத்தைக் கண்டார் எனலாம். சென்னை மத்தியச் சிறையில் அன்றைக்குச் சிறைக்காவல் அதிகாரியாக அவர்தான் இருந்தார். முரசொலி மாறன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றோரைக் கடுமை யாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக சிட்டிபாபு உயிரிழந்ததும் வேதனையான செய்திகள். இவற்றை முழுமையாக சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரிக் குறிப்பில் எழுதியுள்ளார். நெருக்கடி நிலையின்போது மதுரைச் சிறையில் திமுக-வைச் சேர்ந்த சாத்தூர் பாலகிருஷ்ணனும் போலீஸ் வன்முறை காரணமாக உயிரிழந்தார்.

ஆளுநரின் ஆலோசகர்களாக இருந்த ஆர்.வி.சுப்பிர மணியம், தவே ஆகியோருடன் சிறைத்துறை வித்யாசாகரும் நெருக்கடி காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த மூவரில் ஆர்.வி. சுப்ரமணியம் மட்டுமே மக்கள் நலம் சார்ந்து நடுநிலையாளராக விளங்கினார்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

தொடர்புக்கு : rkkurunji@gmail.com

No comments:

Post a Comment