Sunday, 26 July 2020

RAILWAYS STARTED 1837 IN MADRAS ,RUN OVER 1853 IN POONA -DHANE



RAILWAYS STARTED 
1837 IN MADRAS ,RUN OVER 
1853 IN POONA -DHANE


சென்னப்பட்டணமெனுங் கெடிஸ்தலத்தில்
தன்னாலேரெயில்போட ராயபுரத்தில் (நன்னே)
ராயபுரத்தில் ெரயில்ரோட்டுபோட
நவாப்புகவர்னர் ஜெனரல்மேஜருங் கூட (நன்னே)
கர்னல்துரைசிப்பாயி துருப்புதானே
சேர்ந்தார்போலீசுதுரை சேவகனுடனே (நன்னே)
வேட்டுகள்போட்டார்கள் இருபத்தொண்ணு
பட்டாளம்துருப்பு ரயிட்செய்தார்நிண்ணு...



- இப்படி ராயபுரம் நிலையத்திலிருந்து மெட்ராஸின் முதல் ரயில் புறப்பட்ட அழகை வர்ணிக்கிறது அன்றைய கடைக்கால் கும்மி பாடல் ஒன்று.

இன்று சென்னையின் மூன்று போக்குவரத்துகளும் அதிநவீன வளர்ச்சியில் பயணிப்பதைப் பார்க்கிறோம். நகரின் எந்த மூலைக்குப் போய் வரவும் பஸ் வசதிகள் உள்ளன. புறநகர், மெட்ரோ, பறக்கும் ரயில் என ரயில் போக்குவரத்தும் பல பாதைகளில் பரபரக்கிறது. ஆனால், அன்று நிலைமை அப்படியிருக்கவில்லை. பாமர மக்கள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் சென்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோ போய் வந்தனர். மன்னர், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் பல்லக்கில் பயணப்பட்டனர்.

இங்கே ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டன. அதுவும் ராணுவத்தினருக்காகவே அந்தச் சாலைகள் போடப்பட்டன. அதன் பராமரிப்பும் ராணுவ முக்கியத்துவத்தைப் பொறுத்தே அமைந்திருந்தன. இன்று சென்னையை இணைக்கும் டிரங்க் ரோடு எனப்படும் சாலைகள் எல்லாம் இப்படி உருவானவைதான். 18ம் நூற்றாண்டு பெரும்பாலும் போர்களிலேயே கழிந்து போனதால் போக்குவரத்து பற்றி கிழக்கிந்தியக் கம்பெனி பெரிதாகச் சிந்திக்கவில்லை.

19ம் நூற்றாண்டுதான் வளர்ச்சிப் பாதையை நோக்கி அவர்களைப் பயணிக்க வைத்தது. 1825ல் இங்கிலாந்தின் ஸ்டாக்டனுக்கும் டார்லிங்டனுக்கும் இடையில் உலகின் முதல் ரயில் ஓடியதைத் தொடர்ந்து மெட்ராஸிலும் அந்தச் சிந்தனை படர்ந்தது. 1836ல் சிந்தாத‘றி’ப்பேட்டை பாலம் அருகே ஒரு ரயில் லைன் அமைக்கப்பட்டு சிறிய சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதை அன்றைய ‘மெட்ராஸ் கெஜட்’ அறிக்கை, ‘இங்கிலாந்து போய் ரயில் பார்க்காத இந்த அருமையான மக்களால் நேர்த்தியாக ரயில்பாதை அமைக்கப்பட்டது’ எனப் பாராட்டுகிறது. இந்த ரயில் கேரெஜ்கள் குதிரை வண்டிகளைக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டன.  

இதன்பிறகு, அப்போதைய சிவில் எஞ்சினியர் கேப்டன் ஏ.பி.காட்டன், ஓர் ஆய்வை மேற்கொண்டு செங்குன்றத்துக்கும், சின்னமலை அருகிலுள்ள கல்குவாரிகளுக்கும் மெட்ராஸிலிருந்து பாதை அமைத்தால் சில செலவுகள் குறையும் என்றார். ஏனெனில், கட்டுமானத்துக்குத் தேவையான கற்களை எளிதாகக் கொண்டு போக முடியும் என்பது அவர் கணக்கு. இதன்பிறகு, 1837ம் ஆண்டு செங்குன்றமும், சின்னமலையும் ரயில் லைனில் மெட்ராஸுடன் இணைக்கப்பட்டன. இதன்படி பார்த்தால் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் இருப்புப்பாதை மெட்ராஸ்தான்.

இந்தியாவில் முதல்முதலாக ரயில்பாதை அமைக்கும் திட்டம் 1830களிலேயே தொடங்கி விட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் இரு அவையும் சேர்ந்து ஒரு குழுவை அமைத்து கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக பரிவர்த்தனைகளை விசாரித்தது. மெட்ராஸ் மாகாணத்தில் ரயில், சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அறிக்கையையும் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கேட்டது.

அப்படித் தயாரான அறிக்கை, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருவழியில் ரயில் பாதை அமைக்க மைல் ஒன்றுக்கு 8 ஆயிரத்து 750 ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. இப்படியாகவே சிந்தாத‘றி’ப்பேட்டையில் ஒரு சிறிய இருப்புப்பாதை சோதனை ஓட்டம் நடந்தது. பின்னர், 1837ல் மெட்ராஸ் மாகாண அரசு, பீரங்கிப் படையின் கேப்டனாக இருந்த வொர்ஸ்டர் என்பவரிடம் மெட்ராஸிலிருந்து வாலாஜா நகருக்கு ரயில் லைன் அமைப்பது பற்றி சர்வே எடுக்க உத்தரவிட்டது.

காரணம், அன்று ராணுவம் மற்றும் வர்த்தக நகராக வாலாஜா நகர் திகழ்ந்ததுதான். இது மெட்ராஸிலிருந்து 103 கிமீ தொலைவில் இருந்தது. அவர், இரண்டு நகரங்களுக்கும் இடையேயான வர்த்தகம் வருடத்துக்கு 30 ஆயிரம் டன் என்றும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணிப்பர் என்றும் அறிக்கை அளித்தார். உடனே, மெட்ராஸ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியின் லண்டன் தலைமையகத்துக்கு அந்த அறிக்கையை அளித்து ெசயல்படுத்தும்படி கேட்டது. ஆனால், நிதிக் காரணங்களால் கிடப்பில் போனது அந்த அறிக்கை.

இந்நிலையில், 1845ம் வருடம் லண்டனில் ‘தி மெட்ராஸ் ரயில் கம்பெனி’ தொடங்கப்பட்டது. இதே நேரத்தில் கிழக்கிந்தியன் ரயில்வே கம்பெனி, கிரேட் இந்தியன் பெனின்சூலர் ரயில்வே கம்பெனி என இரண்டு கம்பெனிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால்தானோ என்னவோ பிரிட்டிஷ் அரசு 1847ல் மெட்ராஸ் ரயில் கம்பெனியை வேண்டாமென நிராகரித்து கலைத்துவிட்டது. பிறகு, 1848 முதல் 56 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு டல்ஹவுசியின் காலத்தில் ரயில்வே பாலிசி உருவாக்கப்பட்டு கட்டுமான வேலைகள் வேகமெடுத்தன.

ரயில்வே ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்களாக லார்டு டல்ஹவுசி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இவ்வாறு எழுதினார். ‘பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இராணுவ அதிகாரத்தை அதிகரிக்கவும், இந்தியாவுக்கு ஆங்கிலேய மூலதனம் மற்றும் நிறுவனங்களைக் கொண்டு வரவும், இந்தியாவில் வர்த்தக மற்றும் சமூக நலன்களைப் பாதுகாக்கவும்’ இந்த ரயில் போக்கு வரத்து அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆக, ராணுவம் மற்றும் வர்த்தகத்துக்காகவே ரயில்வே தொடங்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனி மெட்ராஸில் ரயில்நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இப்படியாக இந்தியாவில் முதல் பயணிகள் ரயில், 1853ம் வருடம் 14 ரயில் கேரேஜ்கள், 400 பயணிகளுடன் போர்பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஓடியது. இச்சமயம், மெட்ராஸ் ரயில் கம்பெனி எனப் பழைய பெயரில் ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்கு கிழக்கிந்தியக் கம்பெனி அங்கீகாரம் வழங்கியது. இந்நிறுவனம் மூலம் தென்னிந்தியாவில் முதன்முதலாக 1856ம் வருடம் மே 28ம் தேதி ராயபுரத்திலிருந்து ஆற்காட்டுக்கு நீராவி எஞ்சின் மூலம் ரயில் இயக்கப்பட்டது. இந்த முதல் ரயிலின் கேரேஜ்களை அன்று முன்னணி கோச் கட்டுமான நிறுவனமாக இருந்த சிம்சன் அண்ட் கம்பெனி தயாரித்தது.

அடுத்த மாதமே ராயபுரம் ரயில்நிலையத்தை அப்போதைய கவர்னர் லார்டு ஹாரிஸ் திறந்து வைத்தார். திறப்பு நாளில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. ஒன்றில் கவர்னரும், 300 ஐரோப்பியர்களும் இருந்தனர். மற்றொரு ரயிலில் விழாவுக்கு அழைக்கப்பட்ட இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். முதல் வகுப்பில் ஒரு மைல் தூரம் பயணிக்க ஒருவருக்கு ஒரு அணாவும், 6 பைசாவும் வசூலிக்கப்பட்டது. அதேபோல், இரண்டு, மூன்றாம் வகுப்புகளுக்கு 9 பைசா வசூலிக்கப்பட்டன. ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அந்தாண்டு டிசம்பர் வரை நாளொன்றுக்கு மெட்ராஸில் இருந்து சுமார் 165 பேர் பயணித்தனர். போலவே 133 பேர் வரை மெட்ராஸிற்கு வந்தனர். மூன்றாம் வகுப்பில் மட்டும் அந்தாண்டு 71 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர்.

இதற்கிடையே பயணிகள் போக்குவரத்து அதிகரிக்க புதிய ரயில்நிலையம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் 1868ல் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1873ம் வருடம் திறக்கப்பட்டது. இதனை ஜார்ஜ் ஹோர்டிங் என்பவர் நான்கு பிளாட்பார்ம்களுடன் வடிவமைத்துக் கொடுத்தார். வடக்கு மற்றும் தென்மேற்காகச் செல்லும் ரயில் லைன்கள் இங்கே கையாளப்பட்டன.

பின்னர் ராபர்ட் சிஸ்ஹோம் என்பவர் கடிகார டவர் உள்ளிட்ட ஐந்து கோபுரங்களையும் வடிவமைத்தார். இந்தக் கட்டட வேலை 1906ல் முடிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ரயில் போக்குவரத்து அதிகரிக்க 1907ம் வருடம் ரயில் சர்வீஸ்கள் எல்லாம் ராயபுரம் நிலையத்திலிருந்து சென்ட்ரல் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இன்று, பழைமையான எச்சங்களைத் தாங்கியபடி அமைதி யாகச் செயல்பட்டு வருகிறது இந்த முதல் எவர்கிரீன் ரயில்நிலையம்!                 
    
-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
ஓவியம்: ராஜா


ரயில்வே வளர்ச்சி

* ஆற்காடு வேலை முடிந்ததும் அடுத்த இரண்டு வருடங்களில் குடியாத்தம் வரை ரயில் லைன் நீட்டப்பட்டது.
* இங்கிருந்து 178 கிமீ தூரமுள்ள சேலம் வரை லைன் அமைத்தவர்கள் பிறகு கேரளாவிலுள்ள பேபூர் வரை நீட்டினர்.
* அப்போது கிரேட் சௌத் இந்தியன் ரயில்வே மற்றும் கர்நாடிக் ரயில்வே என இரண்டு கம்பெனிகள் தென்னக ரயில்வே பணிகளில் கோலோச்சி வந்தன. இவை 1874ல் ஒன்று சேர்ந்து தென் இந்திய ரயில்வே என பெயர் மாற்றம் அடைந்தன.
* இந்த ரயில்வேதான் 1878ல் மெட்ராஸ் டூ தூத்துக்குடிக்கு தஞ்சாவூர், மதுரை வழியாக மீட்டர் கேஜ் பாதை அமைத்தது. பிறகு, இந்த ரயில்வேயை 1891ல் அரசே வாங்கியது.
* 1928ம் ஆண்டு தாம்பரத்துடன் துறைமுகத்தை இணைக்கும் இரண்டு மீட்டர் கேஜ் பாதைகளின் கட்டுமானம் தொடங்கியது.
* 1930களின் ஆரம்பத்தில் இதனை மின்சார ரயில் பாதையாக மாற்ற முடிவெடுத்து, எழும்பூரிலிருந்து பீச் வரை ஒரு புதிய பாதை அமைக்கப்பட்டதுடன் எழும்பூர் - தாம்பரம் பாதைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.
* 1944ல் எல்லா ரயில்வே நிறுவனங்களையும் அரசு கையகப்படுத்தியது.
* சுதந்திரத்திற்குப் பிறகு 1951ம் வருடம் மெட்ராஸ், தென்னக மராத்தா, தென் இந்தியா, மைசூர் மாநில ரயில்வே எனப் பிரிந்திருந்த ரயில்வே நிர்வாகம் ஒன்றிணைக்கபட்டு தென்னக ரயில்வே என உருவாக்கப்பட்டது.  
* பிறகு, இவை நிர்வாகக் காரணங்களுக்காக தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே என பிரிக்கப்பட்டன. இன்று தென்னக ரயில்வே தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி முழுவதும் கொண்ட பகுதிகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவி லுள்ள சிறு பகுதிகளுடனும் இயங்கி வருகிறது.
* மொத்த ரூட்களின் தூரம்  5080 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment