Thursday, 29 July 2021

STORY OF INDIA , HOW THE EUROPEANS FOUND

 


STORY OF INDIA , HOW THE EUROPEANS FOUND



‘இந்தியர்கள் எல்லாவற்றிலும் ஒருவித ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒழுங்கின்மையை வெறுக்கிறார்கள். சிக்கனமாக வாழ்கிறார்கள். மிக மிக அரிதாகவே திருட்டு நடக்கிறது. இத்தனைக்கும் அவர்களிடம் எழுதப்பட்ட சட்டங்கள் என்று எதுவுமே இல்லை. அப்படி எதுவும் தேவையுமில்லை. ஏனெனில், அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ வராது. அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படுவதையெல்லாம் மனனம் செய்துவைத்துக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் நம்புகிறார்கள். போரிடுவதிலும் நாட்டமிருப்பதுபோல் தெரியவில்லை. அதிகம் மது அருந்துவதுகூட இல்லை. வீட்டைப் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழ்கிறார்கள்.’
கிட்டத்தட்ட 2,400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த கிரேக்கப் பயணியான மெகஸ்தனிஸின் குறிப்புகள் இவை. `அடடா, இதுவல்லவா தேவலோகம்’ என்று முதுகுப் பையோடு அடுத்தடுத்து பலர் இந்தியாவை நோக்கி நடைபோடத் தொடங்கினர். மெகஸ்தனிஸ் கண்ட அதே இந்தியாவை, அதே இந்தியர்களை அவர்களும் கண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியா வந்த ஒவ்வொருவரும் ஆளுக்கொரு இந்தியாவைக் கண்டடைந்தார்கள்.

#இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 1
🌷ஒரு தரப்பினருக்கு அதிசய பூமியாகவும், வண்ணமயமான அனுபவங்களை வாரி வழங்கும் காமதேனுவாகவும் இந்தியா இருந்ததென்றால், இன்னொரு தரப்புக்கோ கடும் நரகமாகவும் கொடுங்கனவாகவும் தோற்றமளித்தது. `இரண்டுமே அல்ல, இயல்பான இன்னொரு நாடு அவ்வளவுதான்’ என்று வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சிலர் முயன்றனர். `இல்லை, யார் சொல்வதையும் நம்பாதீர்கள். இந்தியா ஒருவராலும் விளங்கிக்கொள்ள முடியாத மர்மம்’ என்று ஒரு புதிய தேடல் அலையை இன்னொரு குழு தொடங்கிவைத்தது.

🌷பதிவுகள் பெருகப் பெருகப் பயணிகள் பெருகினர். பயணிகளோடு சேர்ந்து பதிவுகளும் வளர்ந்தன. இந்தியா குறித்து வெவ்வேறு மனச்சித்திரங்களை உலகம் உருவாக்கிக்கொண்டதற்கு இந்தப் பதிவுக் குவியலே முதன்மையான காரணம். இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைக்காமலேயே ஒரு பெருங்கூட்டம் இந்தியாவை எழுத்துகளின் வாயிலாக தரிசித்தது. வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் வரலாற்றை எங்கிருந்தெல்லாமோ கட்டமைக்கத் தொடங்கினார்கள். வணிகர்கள் இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்பே, இந்தியா குறித்த கனவுகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். இந்தியாவின் காற்றை ஒரு முறைகூடச் சுவாசிக்காமலேயே உலகக் கவிஞர்கள் இந்தியாவைப் பாட ஆரம்பித்தனர். உலக அரசியல்வாதிகள் பெரும் திட்டங்கள் தீட்டத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் துரத்தி வந்து உலகம் வேட்டையாடியது, ஆக்கிரமித்தது, ஒருகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வீழ்த்தவும் செய்தது.
🌷இந்தியாவை எழுத ஆரம்பித்தவர்கள், அறிந்தும் அறியாமலும் இந்தியாவின் தலைவிதியையும் சேர்த்தே எழுத ஆரம்பித்தனர்.
* * *
🌷இந்தியாவுக்கு வந்த அயல்தேசத்தவர் தங்கள் கண்களையும் காதுகளையும் முழுமையாகத் திறந்து வைத்திருந்தனர். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் மரணம், நம் வேலை, நம் சாதி, நம் வழிபாடு, நம் பகை, நம் போர், நம் காதல், நம் கனவு என்று அனைத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ள முயன்றனர்.
🌷நம் தோலின் நிறம் என்ன... நம் தலை எவ்வாறு அமைந்திருக்கிறது... நம் மூக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறது... தலைமுடியைச் சடையாக வளர்க்கிறோமா, கத்தரிக்கிறோமோ, வழித்து மழிக்கிறோமா... இங்குள்ள அனைவரும் சாமியார்களா அல்லது ஒரு சிலர் மட்டும்தானா... நம் கடவுளர்கள் ஏன் விசித்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்... முதலில் ஏன் இவ்வளவு கடவுள்கள்... நாம் எப்படி உரையாடுகிறோம்... எப்படிக் கல்வி கற்கிறோம்... எப்படிப் பயிரிடுகிறோம்... எப்படி ஆடையணிகிறோம்... எப்படித் தரையில் அமர்கிறோம்... எப்படிக் கைகளால் அள்ளி உண்கிறோம்... எவையெல்லாம் நம் உணவு... யாரைக் காதலிக்கிறோம்... எப்படித் திருமணம் செய்துகொள்கிறோம்... எப்படிக் கனவு காண்கிறோம்? யாரோடு போரிடுகிறோம்... யாரோடு உறவு பேணுகிறோம்... எப்படி இறக்கிறோம்... இறந்த பின் நம் உடல் என்னவாகிறது... ஏதோ மறுபிறப்பு, ஆன்மா என்றெல்லாம் சொல்கிறார்களே அவை என்ன?
🌷எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தது. ஆர்வத்தைத் தேடலாக நீட்டித்துக்கொள்ளவும் தெரிந்திருந்தது. நடை, நடை என்று நடந்து, அலை அலை என்று அலைந்து, கண்ணில் அகப்பட்டதையெல்லாம், காதில் விழுந்ததையெல்லாம் திரட்டிச் சேகரித்திருக்கிறார்கள். அனுபவமிக்க தேர்ந்த இதழாளர்போல் பொதுமக்களைச் சந்தித்து, ‘இது என்ன, அது என்ன... இதை ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அதை ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று தோண்டித் துருவியிருக்கிறார்கள்.
🌷இந்தியா என்பது என்ன... இந்தியர்கள் என்பவர்கள் யார்... அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இன்றுவரையில் நம்மால் திட்டவட்டமாக விடையளிக்க முடியாத இந்த ஆதாரக் கேள்விகளை அவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். எழுப்புவதோடு நில்லாமல், தங்களால் இயன்ற விடைகளையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
🌷`இந்தியாவை எழுதியவர்கள்’ என்று நம் வசதிக்காக இங்கே அழைத்துக்கொள்கிறோமே தவிர அவர்களை ஒற்றைக்குடையின் கீழும் அடக்கிவிட முடியாது. காரணம் அவர்களுடைய பின்னணி, வாழ்க்கை முறை, சிந்தனை முறை என்று அனைத்தும் மாறுபட்டவை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்தியாவை அணுகியிருக்கிறார்கள், ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
🌷இவர்களில் சிலர் தூதுவர்கள். சிலர் வணிகர்கள். சிலர் அதிகாரிகள். சிலர் உளவாளிகள். சிலர் சாகசவாதிகள். சிலர் சுற்றுலாப்பயணிகள். சிலருக்குச் செல்வம் முக்கியம் என்றால், வேறு சிலருக்குத் தத்துவம். இந்து மதத்திடம் சிலர் தஞ்சம் புகுந்தனர் என்றால், சிலர் புத்தரிடம் சரணடைந்தனர். நதிகளால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் சிலர் என்றால், மொழிகளால் கவரப்பட்டவர்கள் வேறு சிலர். இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வந்தவர்கள் ஒரு பக்கம் என்றால், இந்தியாவைச் சுரண்டும் நோக்கத்தோடு புகுந்தவர்கள் மற்றொரு பக்கம். மற்றபடி அனைவருக்கும் இந்தியா குறித்து ஒரு பெருங்கனவு இருந்திருக்கிறது. அந்தப் புள்ளியில்தான் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
🌷இவர்களுடைய பல பதிவுகளை இப்போது எடுத்து வாசிக்கும்போது வியப்பில் ஆழ்ந்துவிடுகிறோம். எங்கோ தொலை தேசங்களில் பிறந்த இவர்களால் எப்படி நம் நாட்டின் சாரத்தை முதல் பார்வையிலேயே இத்தனை துல்லியமாக உணர முடிந்தது... பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர்கள் வந்தடைந்திருக்கும் முடிவுகளும், தொகுத்து அளித்திருக்கும் மதிப்பீடுகளும் இன்றும் பொருந்தும் அதிசயம் எப்படி நிகழ்கிறது?
🌷சில பதிவுகள் நம்மை ஏங்கச் செய்கின்றன. இவர் ஏன் இவ்வளவு குறைவாக எழுதியிருக்கிறார்... அங்கெல்லாம் சென்றதோடு நில்லாமல் இங்கும் சென்றிருந்தால் அதைப் பற்றியும் இன்று நமக்குச் சில தரவுகள் கிடைத்திருக்கும் அல்லவா... இவர் ஏன் இன்னமும் தன் படைப்பை விரிவாக்கியிருக்கக் கூடாது... பல முக்கியமான இடங்களை இவர் ஏன் காணாமல் தவிர்த்துவிட்டார்... நாம் வியக்கும் பலரை இவர் சந்திக்கவே இல்லையா அல்லது சந்தித்தது குறித்து எதுவும் எழுதவில்லையா?
🌷இன்னும் எவ்வளவோ உணர்ச்சிகள் தோன்றக்கூடும். எவ்வளவோ வருத்தங்களும் ஏற்படக்கூடும். வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களும் மிக அதிகமே. ஆனால், இந்தப் பதிவுகளையெல்லாம் நெருக்கமாக ஆராய்ந்திருக்கும் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஓர் அடிப்படை உண்மை இதுதான். அவர்கள் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால், தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யாமல் போயிருந்தால் இந்திய வரலாற்றில் பல பக்கங்கள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். எனவே, இந்தியாவை எழுதியவர்களுக்கு இருகரம் கூப்பி, முதுகு வளைத்து, ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின்றி இந்தியா இல்லை.
🌷இனி நம்முடைய முறை. இந்தியாவைத் தேடியவர்களை நாம் தேட ஆரம்பிப்போம். தங்களுடைய நுண்ணோக்கியின்கீழ் இந்தியாவைக் கொண்டுவந்து ஆராய்ந்தவர்களை நாம் புதிய நுண்ணோக்கியின்கீழ் கொண்டுவந்து நிதானமாக ஆராய்வோம். இந்தியாவிடமிருந்து இவர்கள் திரட்டிக்கொண்டதுபோல் நாமும் இவர்களிடமிருந்து நமக்கான தரவுகளைத் தேடித் திரட்டிக்கொள்வோம். யார் இவர்கள், இவர்கள் பின்னணி என்ன, உலகில் எவ்வளவோ இடங்கள் இருக்க இந்தியாவை இவர்கள் தேர்ந்தெடுத்தது ஏன், எத்தகைய எதிர்பார்ப்புகளோடு இவர்கள் இந்தியாவைக் காண வந்தார்கள், அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறினவா, எத்தகைய இந்தியாவை இவர்கள் கண்டனர், அவர்கள் கண்ட இந்தியா ஏன் அவர்களுக்குப் பிடித்திருந்தது, ஏன் பிடிக்கவில்லை, ஏன் அவர்களைப் பரவசப்படுத்தியது, ஏன் அச்சுறுத்தியது, ஏன் குழப்பியது, ஏன் மயக்கியது?
🌷இந்தியாவை எழுதிய கிரேக்கர்களையும், ரோமானியர்களையும், சீனர்களையும், அராபியர் களையும், ஆப்பிரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் நாம் எழுதத் தொடங்குவோம்.
(விரியும்)🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜

No comments:

Post a Comment