Thursday, 29 July 2021

GROCERY SHOP IN ARIYALUR - TURNOVER 100 CRORES

 



GROCERY SHOP IN ARIYALUR -

 TURNOVER 100 CRORES

ரூ.500 டு ரூ.100 கோடி... மளிகை வியாபாரத்தில் கலக்கும் கந்தசாமி! - இது அரியலூர் அதிசயம்!



பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித்தர நூறு பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்...


பிரீமியம் ஸ்டோரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு என்ற மேலணிக்குழி கிராமத்துக்குப் போனால், ஒரு மளிகைக் கடையில் மட்டும் மாபெரும் கூட்டம். கடையின் முன் நிறைய வாகனங்கள். இது என்ன விநோதம் என்று நினைத்து உள்ளே போனோம். அங்கே நாம் பார்த்த காட்சி இன்னும் விநோதம். பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித்தர 100 பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்.

நம்மூரில்தான் இப்படியொரு மெகா மளிகைக் கடையா என்று நினைத்து, அங்கிருந்த ஊழியர்களை நாம் அணுக, அந்த மளிகைக் கடையின் சொந்தக்காரர் கந்தசாமியின் முன்பு நம்மைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் வெறும் 500 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட பெட்டிக்கடை, இன்று ‘சண்முக விலாஸ் குடிகாடு மளிகைக் கடை’யாக சுமார் ரூ.100 கோடி டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்குச் செழித்து வளர்ந்த வரலாற்றை கந்தசாமி நமக்கு எடுத்துச் சொன்னார். 

டீக்கடையில் தொடங்கினேன்..!



‘‘என் அப்பா டீக்கடை ஒன்றை நடத்திவந்தார். நான் சிறுவயதில் அந்த டீக்கடையில் மாவு அரைப்பது முதல் எல்லா வேலைகளையும் செய்வேன். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க முடியவில்லை. கடுமையான உழைப்பு மட்டுமே என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்கும் என்பதை சிறு வயது முதலே நன்கு தெரிந்து வைத்திருந்தேன். தவிர, ஒரு தொழிலை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் செய்து, அந்தத் தொழிலை வணங்கினால் அந்தத் தொழில் நம்மை வாழவைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.


சில்லறை டு மொத்த வியாபாரம்..!


நானும் என் சகோதரர் சண்முகமும் இணைந்து 1979-ல் மேலணிக்குழியில் பெட்டிக் கடை ஒன்றை ஆரம்பித்தோம். 1987-ல் இந்தக் கடையை முழுவதுமாகப் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தேன். உணவு என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒன்று. மளிகைப் பொருள்களைத் தரமாகவும், விலைக் குறைவாகவும் தர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுவரை நான் மொத்த விலைக் கடைகளிலிருந்து பொருள்களை வாங்கிவந்து விற்றேன். இதனால் எனக்கு சொற்ப லாபமே கிடைத்தது. அப்போதுதான் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். மொத்தமாகப் பொருள்களை வாங்குபவர்கள் அந்தப் பொருள்கள் எங்கே கிடைக்கிறதோ, அங்கேயே சென்று வாங்குகிறார்கள். நாமும் அப்படிச் செய்தால் என்ன என்ற கேள்வி எனக்குள் பிறந்தது. இப்படிச் செய்வதில் இரண்டு நன்மைகள் எனக்குக் கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். ஒன்று, குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும்; இரண்டாவது, தரமான பொருள்கள் கிடைக்கும். இதைப் புரிந்துகொண்டபின் என் மளிகைக்கடை செயல்படும் விதம் அடியோடு மாறியது.


கணேஷ், கந்தசாமி, ரமேஷ்ராஜா


இதன்பிறகு, இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்தப் பொருள் விளைகிறதோ, அங்கிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யத் தொடங்கினேன். குஜராத்திலிருந்து கடுகு, சீரகம் உள்ளிட்ட பொருள்களை வாங்குகிறேன். மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, ஆந்திரா குண்டூரிலிருந்து மிளகாய் வாங்குகிறேன். இப்படி வாங்கும்போது ‘ஃபைன் குவாலிட்டி’ என்று சொல்லப்படும் முதல்தரமான பொருள்களே எனக்குக் கிடைக்கின்றன.


கறார் கணக்கு வழக்குகள்..!


பொருள்களை மொத்தமாக வாங்கும்போது சில விஷயங்களில் நான் கறாராக இருப்பேன். இடைத்தரகர் மூலம் எந்தப் பொருள்களையும் வாங்க மாட்டேன். நேரடி வியாபாரம் மட்டுமே செய்வேன். தவிர, பொருள்களை வாங்கும்போது உடனடியாகப் பணம் தந்துவிடுவேன். கடன் என்ற பேச்சுக்கே இடம் தரமாட்டேன். கடன் என்று வரும்போது அதற்கான வட்டி என்று சொல்லாமல், பொருள்களின் விலையை உயர்த்திவிடுவார்கள். அதிக விலை தந்து, பொருள்களை வாங்கினால், நானும் அதிக விலை வைத்துதான் விற்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்திருந்தால், என்னால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது.


அடுத்த முக்கியமான விஷயம், மொத்தமாகக் குறைந்த விலையில் பொருள்களை வாங்கிய பின், அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல், சில சதவிகிதங்களில் லாபம் வைத்து விற்பேன். இதனால் மற்ற கடைகளைவிட நம்மால் குறைந்த விலைக்குப் பொருள்களைத் தர முடியும். இப்படி வால்யூமில் பிசினஸ் செய்யும்போது, நாம் வாங்கிய பொருள்களும் சீக்கிரம் விற்றுப்போகும். நம்மிடம் எப்போதும் காசு புழங்கிக்கொண்டே இருக்கும். ஆனால், சில்லறையாகச் சிலபல பொருள்களை வேண்டும் என்று கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்று சொல்வதில்லை. அவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாக விலை வைத்து விற்கிறேன்’’ என வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்த பிசினஸ்மேன் போல, மளிகைக்கடையில் பின்பற்றும் டெக்னிக்குகள் பற்றி விளக்கினார் கந்தசாமி.


தினமும் இரண்டு ஷிஃப்ட்..!


மளிகைக்கடை வியாபாரம் வளர வளர அந்தக் கடைக்குத் தேவையான வசதிகளையும் அதிகரித்திருக்கிறார் கந்தசாமி. இந்தக் கடையில் மளிகை பில் போடுவதற்கு 20 பேர், பணம் பெறுவதற்கு 10 பேர், பொருள்கள் எடுத்துத் தருவதற்கு 270 பேர் என மொத்தம் சுமார் 300 பேர் பகுதி நேரப் பணியாளர்களாக வேலை பார்க்கிறார்கள். காலை 7 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை ஒரு ஷிஃப்ட், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றொரு ஷிஃப்ட் என இந்தக் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய உணவை அங்கேயே தந்துவிடுவதால், உணவு நேரம் கணிசமாக மிச்சமாகிறது.


பத்து மாவட்டங்களிலிருந்து..!


அரியலூர், கடலூர், சிதம்பரம் எனப் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து இந்த மளிகைக் கடைக்கு வந்து மொத்தமாகப் பொருள்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடும்பத்தில் கல்யாணம் அல்லது பண்டிகை என்று வரும்போது, வாங்க வேண்டிய பொருள்களைப் பட்டியல் போட்டு வேனிலோ, ஷேர் ஆட்டோவிலோ வந்து பொருள்களை வாங்கிக்கொண்டுச் செல்கிறார் கள். இப்படி வருகிறவர்கள் பொருள்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கத் தனி இடம், அவர்களது இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தத் தனி இடம், கழிப்பிட வசதிகள் என இந்தக் கடையில் இருக்கும் வசதிகளைப்போல தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்கிற அளவுக்கு உருவாக்கி வைத்திருக்கிறார் கந்தசாமி.


கந்தசாமியின் மூத்த மகன் ரமேஷ் ராஜா லண்டனில் எம்.எஸ் படித்து முடித்திருக்கிறார். இளைய மகன் கணேஷ் பி.இ படித்திருக்கிறார். இவ்வளவு படித்துவிட்டு, வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்காமல், அப்பாவுடன் சேர்ந்து இந்த மளிகைக் கடையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஒரு நிமிடத்துக்கு இரண்டு பில்..!


“தற்போது ஒரு நிமிடத்துக்கு ஒரு பில் வீதம் பொருள்களை விற்பனை செய்கிறேன். இதை ஒரு நிமிடத்துக்கு இரண்டாக மாற்றுவது எப்படி என்று திட்டமிட்டு வருகிறேன். இந்த ஆண்டு 80 கோடி ரூபாய் வியாபாரம் என்பதை மாற்றி, 160 கோடி ரூபாய் விற்பனையாக மாற்றுவது என்று முடிவு செய்திருக்கிறேன். அரசு வரிகளை முறையாகச் செலுத்துகிறேன். வெறும் கைகளால் பில் போட்ட நிலையை இன்று என் இரண்டு மகன்களும் வந்த பிறகு, கம்ப்யூட்டருக்கு மாறியிருக்கிறோம். விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறோம். ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்ட மக்களுக்கும் இந்த மளிகைப் பொருள்கள் கிடைக்கிற வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்று நமக்கு விடை கொடுத்தார் கந்தசாமி.


அலிபாபாவின் ஜாக் மா போல வருவார் இந்த அரியலூர் மேலணிக்குழி கந்தசாமி!


மளிகைக் கடை நடத்த பயிற்சி..!


மளிகைக்கடை நடத்துவது எப்படி என்பதைச் சொல்லித் தர தனியாக எந்தப் பயிற்சி மையமும் இல்லை என்பதால், இதற்கென ஒரு பயிற்சி நிறுவனம் உருவாக்கி சுமார் ஒரு மாத காலத்துக்குப் பயிற்சி தருகிறார் கந்தசாமி. மளிகைப் பொருள்களை வாங்குவது, பேக்கிங் செய்வது, விற்பனை செய்வது போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் தருகிறார். இந்தப் பயிற்சியைப் பெற்றபின் யார் வேண்டுமானாலும் மளிகைக்கடையை வெற்றிகரமாக நடத்தலாம்.

No comments:

Post a Comment