Friday, 1 December 2017

KALPANA ,LEGEND ACTRESS OF KANNADA ,COMMITTED SUICIDE ON 1979 MAY 12



KALPANA ,LEGEND ACTRESS OF KANNADA ,COMMITTED SUICIDE ON 1979 MAY 12





கேரளம் இன்று தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வருவதுபோன்று அன்று கர்நாடகம் கருணை காட்டியது. கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்களும் பாசத்தைக் கொட்டினார்கள். சரோஜா தேவியைப் போல இவரும் இங்கேயே தங்கிவிட மாட்டாரா எனத் தமிழ் ரசிகர்கள் ஏங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால் தன் தாய்மொழித் திரைக்குத் தன்னைப்போல் ஒரு தனிப்பெரும் நாயகி தேவை என்று கன்னடம் திரும்பினார். இந்தியத் திரையில் யாருமே நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

20 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயதில் தற்கொலை செய்து கொண்டது வரை 16 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே அரிதாரம் பூசியிருக்கிறார். கருப்பு வெள்ளையில் பயணத்தைத் தொடங்கி வண்ணப்படங்களில் வண்ணக் கோலங்கள் வரைந்து மறைந்த அந்தக் கன்னடத்துக் கண்ணீர்க் கவிதை வேறு யாருமல்ல.. ‘மினுகு தாரா’(மின்னும் தாரகை) என்று கர்நாடக மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட கல்பனாதான்.


திரையிலும் கதாநாயகிக் கனவு

பீம்சிங் தயாரிப்பில் இரட்டை இயக்குநர்கள் திருமலை மகாலிங்கம் எழுதி இயக்கிய தமிழின் முதல் ரோடு மூவியான ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’(1966) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் கல்பனா. சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் வீட்டை விட்டு ஓடிவரும் ஓர் இளம்பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்று நடித்தார்.

ஆனால் அதற்கு முன்பே 1963-ல் பி.ஆர். பந்துலு கன்னடத்தில் இயக்கிய ‘சாகு மகளு’(Saaku Magalu) படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மூன்றே ஆண்டுகளில் கன்னட சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரியைத் தொடர்ந்து ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் கன்னடப் படவுலகம் தனது தவப் புதல்வியாகக் கல்பனாவைத் தத்தெடுத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக அமைந்தது புட்டண்ணா கனகல் கல்பனா கூட்டணி.

மின்னிய கூட்டணி

கன்னட சினிமாவை வெகுஜன சினிமாத் தளத்தில் மட்டுமல்ல, இந்திய அரங்கிலும், உலக ஆரங்கிலும் கம்பீரமாக இடம்பெறச் செய்த படைப்பாளிகளில் முக்கியமானவர் புட்டண்ணா கனகல். அவரது இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியானது ‘பெல்லி மூடா’ (Belli Moda வெள்ளி மேகம்) என்ற திரைப்படம். கல்யாண்குமார் நாயகனாக நடித்திருந்தாலும் கல்பனா ஏற்று நடித்திருந்த ‘சந்திரா’ கதாபாத்திரமே கதையின் மையம்.

எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய இந்தப் படத்தில்தான் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் முதன்முதலாகக் கல்பனா நடித்தார். இந்தப் படம் புட்டண்ணா கனகலுக்கு முதல் வெற்றியையும் கல்பனாவுக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான முதல் விருதையும் கொண்டு சேர்த்தது.

இந்தப் படத்தின் டைட்டில் பாடலில் இடம்பெற்ற வார்த்தைகளைக் கொண்டே பின்னர் ‘மின்னும் தாரகை’யாக இவர் ரசிகர்களால் கிரீடம் சூட்டப்பட்டார். புகழின் உச்சியில் பெங்களூருவில் கட்டிய தனது வீட்டுக்கும் இந்தப் படத்தின் பெயரையே வைத்தார் கல்பனா.


இதன் பிறகு பெண் கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்த புட்டண்ணா கனகலின் உயர்தரமான படங்களின் ஆஸ்தான நாயகியானர் கல்பனா. ‘ஜெஜ்ஜி பூஜே’ (Gejje Pooje சலங்கை பூஜை) படத்தில் தேவதாசிக் குடும்பத்திலிருந்து மீண்டெழுந்து படித்துப் பட்டம் பெற்று முறையான திருமண வாழ்வு வாழ நினைக்கும் பெண்ணாக நடித்தார்.

காதலனால் கைவிடப்பட்டு மீண்டும் தேவதாசி வாழ்வில் தள்ளப்படும் இந்தக் கதாபாத்திரம், வைர மோதிரத்தை விழுங்கித் தற்கொலை செய்துகொள்வதுபோலப் படத்தை முடித்திருந்தார் புட்டண்ணா கனகல். கல்பனாவின் நிஜவாழ்வும் மணவாழ்வில் ஏற்பட்ட விரிசலால் தற்கொலையில் முடிந்துபோனது பெரும் சோகம்.

உறவும் பிரிவும்

புட்டண்ணா கனகலின் தலைசிறந்த படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக வாழ்ந்து புகழை அள்ளிய கல்பனா, அவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தனது கதாநாயகியைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் கனகலுக்கு ஏற்பட்டது. அவரது படங்களில் கல்பனாவின் இடத்தை பாரதி, ஆர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்டாலும் கல்பனாவே கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் தொடர்ந்தார்.

துயரம் கவ்விய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருந்தாலும் அழகும், இளமையும், காதலும் மிளிர்ந்த கதாபாத்திரங்களிலும் வசீகரிக்கத் தவறவில்லை. கன்னடச் சினிமாவில் 60களில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை இவர் இணைந்து நடிக்காத நடிகர்களோ, இயக்குநர்களோ இல்லை என்ற நிலை உருவானது.



திரைப்படங்களில் நவீன டிசைன்களில் இவர் அணிந்த ஷிபான் புடவைகள், பெரிய கை மற்றும் சிறு கைகளில் விதவிதமான ப்ரில்கள் வைத்த ரவிக்கைகள், பெரிய காது வளையங்கள் போன்றவை தென்னிந்திய சினிமா முழுவதும் ஃபேஷனாகப் பரவி நின்றன.

திரை நடிப்பில் முத்திரை பதித்த அதேநேரம் ஆரம்பம் முதலே நாடகங்களிலும் நடிக்கத் தவறவில்லை கல்பனா. வட கர்நாடகத்தின் மாபெரும் நாடக மேதையாகக் கொண்டாடப்படும் குடுசேரி பசவராஜ் (Gudugeri Basavaraj) நாடகக் குழுவில் முக்கிய நடிகையாகப் பிரகாசித்து வந்த கல்பனா, அவரை மணந்துகொண்டு குடும்ப வாழ்வில் கனவுகளுடன் காலடி வைத்தார். ஆனால் எந்தப் புள்ளியில் அந்த வாழ்க்கை கசந்ததோ தெரியவில்லை! தனது 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

அசலும் நிழலும்

நடிகைகளின் வாழ்க்கைக் கதைகளை படமாக்குவதில் அவ்வப்போது ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் கல்பனாவின் வாழ்க்கையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இம்முறை மற்றொரு முன்னணி நடிகையே கல்பனாவின் கதாபாத்திரத்தை ஏற்று அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அவர் பூஜா காந்தி. பிரபுசாலமன் இயக்கிய ’கொக்கி’ படத்தின் மூலம் கவர்ந்தாரே அவரேதான்.

அந்த பூஜாவா இவர் என்று எண்ண வைத்தார் அவரது அடுத்த படத்தில். கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த ‘ தண்டுபாளையாம்’ கொலை, கொள்ளை கும்பலின் நிஜக்கதை படமானபோது அதில் சுருட்டுக் குடித்தபடி, பன்றியின் கால்களைக் கட்டி தோளில் போட்டுத் தூக்கிச் செல்லும் கிரிமினல் பெண் கதாபாத்திரத்தில் அதிர வைத்தார். தமிழிலும் வெளியான அந்தப் படத்தின் அதிரடி அழகியான பூஜா காந்திதான் கல்பனா கதாபாத்திரத்திலும் நடித்து கர்நாடகத்தை மாநிலத்தைத் தற்போது கலங்கடித்திருக்கிறார்.

‘அபிநேத்ரி’ (Abhinetri The Tragedy of a Legend) என்ற தலைப்புடன் கடந்த 2013 ஜூலையில் பூஜா படத்தைத் தொடங்கியபோதே வரிசையாய் படத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. புட்டண்ணா கனகல், கல்பனா ஆகிய இருதரப்பு உறவுகளும் வழக்குகளைத் தொடுக்க எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வந்துவிட்டது அபிநேத்ரி.

கல்பனா கதாபாத்திரத்துக்கு பூஜா காந்தியின் குரல் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும், கணிசமான வெற்றியை அள்ளிவிட்டது. மினுகு தாராவின் நினைவுகளைக் கன்னட ரசிகர்களின் இதயத்தில் மீட்டிச் சென்றுவிட்டது அபிநேத்ரி 2015.

படங்கள் உதவி: ஞானம்


No comments:

Post a Comment