GORA NADU கோரநாடு – பகுதி 1 & 2
BLITZKRIEGKK
எழாலேறு:
வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய்
ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும்
கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற
வான்புக ழோர்கோர நாடு.
கடல்நீர் உறிஞ்சிக் கருநிறம் கொண்ட கவின்மழை மேகங்கள் வானத்தை சற்றே கைநீட்டித் தொட்டுவிட எத்தனிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகட்டுடன் இதழோடு இதழ் சேர்த்துக்கொண்டிருக்கும் இனிய வேளையில், அந்த மேகங்களின் மேலே இரு புறமும் விரிந்தும் குறுகியும் நீண்ட சிறகுகளால் மேகக் குதிரைகளைக் கட்டி இழுத்துப் பறந்தவாறே வட்டமடித்துக்கொண்டு, பரவி விரிந்திருக்கும் காட்டுப்பகுதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அத்தனை மரங்களையும் ஊடுருவித் தனக்கேற்ற இனியதோர் இரையாக நின்றுகொண்டிருக்கும் ஒரு காட்டுமுயலைக் கடைக்கண்களால் குறிபார்த்தபடி, காற்றைக்கிழித்து, மின்னலைப் போலே சட்டெனக் கீழிறங்கி, நீண்ட நெடுந்தூரம் ஒற்றைப் பாய்ச்சலில் ஓங்கி இரு கால்நகங்களால் அம்முயலைக் கழுத்து நரம்புகள் உடையுமளவு இறுக்கக் கவ்விப் பிடித்து, அதே வேகத்துடன் மேல்நோக்கிப் பறந்து மலைமுகட்டின் உச்சிக்கு சென்று அமர்ந்த எழால் என்று அழைக்கப்படக்கூடிய பறவைகளின் அரசனாகவும் பாரிலே வலிமை கொண்ட பறவைகளில் முதன்மை பெற்றும் விளங்கும் ஒரு கழுகு தான் நினைத்த செயலைத் திறம்பட முடித்த பெருமிதத்தில் நிதானமாகத் தான் பிடித்து வந்த முயலை ஏறிட்டுப்பார்க்கையில், கிட்டத்தட்டக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் அந்தக் காட்டுமுயலின் நிலைக்கும் அந்த நாட்டின் நிலைக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாதது வெள்ளிடைமலையென விளங்கிற்று அக்கழுகுக்கு. காலகாலமாகவே அப்பகுதியில் வாழ்ந்துவரும் காலப்பறவையாதலால் மெல்ல அந்நாட்டின் நிலப்பரப்பும் நிமிர்ந்தெழுந்து பின் நிலைகுலைந்த ஓர் அரசின் வரலாறும் காட்சிகளாக விரிந்தன அக்கழுகின் கண்களில்.
இயற்கை அன்னையின் இளைய மகளாக விரிந்திருக்கும் மலைச்சரிவுகளின் நடுவே, பலதரப்பட்ட மக்கள் கூடுகிற நாளங்காடி அல்லங்காடி சந்தைகளைப்போல உயரமான, குள்ளமான, பருமனான எனப் பலவகையான மரங்களும் தாவரங்களும் உயர்ந்து வளர்வதால் பச்சைப்பட்டாடை அணிந்தது போலக் காட்சியளிக்கும் காடுகள் நிறைந்தும், கோட்டைகளோ பாதுகாப்போ தேவைப்படாதபடிக்கு மலைகளே மாபெரும் அரணாகவும் காடுகளே காவலாகவும் விளங்கிப் புகழ் சேர்க்கவும், அள்ளக் அள்ளக் குறையாத அருந்தமிழின் இனிமை போல ஒருபோதும் வற்றி உடலொடுங்கிப் போகாத அமராநதியே கோட்டைக்கான அகழியாகவும் மாறிப் பொறுப்புடன் பயணிக்கும் அழகு நிறைந்ததாகவும், விண்ணிலிருந்து நேரடியாகத் தரைக்கு இறங்கி நின்றிருக்கும் கோட்டையையும் தன்னகத்தே கொண்டு இயற்கை அன்னையின் செல்ல மகளாய் எப்புறமும் அழகொன்றே வீற்றிருக்கும் அமைப்புடனும் மலைகள் சுற்றிலும் மாலையாகக் கோர்க்கப்பட்டது போன்று விளங்குவதால் கோரகம் கோர்நாடு கோரநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்நாடு இன்று தான் கொண்ட நற்பொருள் மாறிக் கண்ணுறவொண்ணாக் கோர நிகழ்ச்சிகள் நடக்கும் கோரமான நாடாகவே மாறிவிட்டது.
கடைச்சங்க காலத்திற்குப் பிறகான களப்பிரர்கள் காலம் முற்றிலுமாக முடிந்து, கங்கர்களும் ஓர் ஓரமாக ஓய்ந்தபின் வடக்கே சாளுக்கியர்களும், கிழக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் தலையெடுத்துத் தத்தமது பேரரசுகளை மிக வலுவாகவே அமைத்துத் தங்கள் நிர்வாகத் திறனை உலகிற்குப் பறைசாற்றிக்கொண்டிருந்த காலம் அது. இயல்பாகவே பிற நாடுகளுக்கும் இந்நாட்டிற்கும் இடையிலே அமையப்பெற்றிருந்த இயற்கை அரண்களின் காரணமாக எந்தப் பேரரசின் ஆட்சிமாற்றங்களும் பெரிதாகப் பாதிக்காததால் தனிச்சிறப்பு கொண்ட பகுதியாகவே விளங்கிவந்தது. மேலும் இந்தப்பகுதி மக்களின் கைவினைப்பொருள்களும் மிளகு, ஏலக்காய், தேன், மலைவாழைப்பழம் முதலிய விளைபொருட்களும் தமிழகம் தாண்டிக் கடல் கடந்து கடாரம், சீனம் மற்றும் யவனம் வரையிலும் கோரநாட்டிற்கெனத் தனிப்பெயரைப் பெற்றுத் தந்திருந்தன.
அடிக்கடி மலையேற வேண்டி இருந்ததாலும், மற்போரில் நாட்டம் கொண்டதாலும் இயல்பாகவே உடல்நலத்தில் வலுப்பெற்று விளங்கினர் இந்நாட்டு இளைஞர்கள். குளிர் நிரம்பி வழிவதாலும், குறையென்ற சொல்லை அறிந்திடாது வாழ்வதாலும் வனப்பினில் வான்மகளிரென வளையவந்தனர் கோரநாட்டுக் குமரிகள். சொற்போரும் மற்போரும் தெருவெங்கும் நடந்து நாட்டு மக்களின் பல்துறை அறிவையும் வீரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. சிறுவர்கள் பதினாறு வயது வரை கட்டாயக்கல்வி பெற்று அறிவிலும் வீரத்திலும் உயர்ந்து விளங்கினர். மலைகள் சூழ்ந்திருந்த போதிலும் மலைகளின் நடுவே மிகப்பெரிய சமவெளிப்பகுதியும் கொண்டு அமராநதியின் கைவண்ணத்தால் கண்ணைக்கவரும் கழனிகளும், வறுமை தீர்க்கும் வயல்வெளிகளும் நிறைந்திருந்தன.
மேலும் பாதி மலையிலிருந்து நீண்டு அமராநதி ஆறு வரை சுற்றிலும் மதிய உணவை உண்டுவிட்டு நகர முடியாமல் மதப்பில் படுத்து நெளிந்து கொண்டிருக்கும் மலைப்பாம்பைப் போல நாற் புறமும் அரணாகப் பெரும் கருங்கற்களும், மலைமரங்களும் சுண்ணாம்புக் கலவையும் கொண்டு பதினைந்து கைமுழங்களுக்கு மேல் அகலமாகவும், மேலேறி அம்புகளை எறிவதற்கான விற்பொறிகளும் ஈட்டிகளையும் இன்ன பிற ஆயுதங்களையும் வீசி எறிந்து எதிரிநாட்டுப் படைகளைச் சிதறடிப்பதற்கான எறிகூடங்களும், ஒரே நேரத்தில் பல வீரர்கள் இடித்துக் கொள்ளாமல் மேலேறிப் பதுங்கி நின்று தாக்கும் வண்ணம் அகலமான மதிற்சுவரும் கொண்ட மாபெரும் எஃகுக் கோட்டையானது சுற்றிலும் காசை எதிர்பார்த்துக் கபளீகர வாய் திறக்கும் கருமியைப் போன்ற திருவாய் கொண்ட பெருவாய் முதலைகள் பெருவாரியாக நிறைந்த அகழியைக் கொண்டு பிறநாட்டுப் படைத்தலைவர்களுக்குப் பொறாமைக்கோர் ஊற்றுக்கண்ணாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்ததென்பதில் ஐயமேதுமில்லை.
எத்தனையோ முறை எண்ணற்ற ஒற்றர்கள் ஊடுருவ முயன்ற போதும் இந்தக் கோட்டையின் ரகசியத்தை மட்டும் அறியமுடியவில்லை. மேலும் இந்தக் கோட்டையில் ஒளிந்திருக்கும் மர்மம் அறிந்தவர்கள் இந்நாட்டு மன்னன் உட்பட வெகு சிலரே எனவும் நம்பப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட கோட்டையை வடிவமைத்தவனது திறமையை எண்ணி வியக்காதோர் எவருமில்லை அந்நாளில். போர்க்காலங்களிலும் பல நாட்கள் கோட்டைக்குள்ளேயே எந்த வெளிப் போக்குவரத்துமின்றி எந்தச் சிரமமுமில்லாமல் மக்களால் வாழ முடியும் என்ற சிறப்பும் இருந்ததால் இந்நாட்டின் மீது பிற நாடுகளுக்கு ஒருவித மறைமுக வெறுப்பு நிலவிவந்தது.
அத்தகைய வளமிக்க நாடாக விளங்கி வந்த வேளையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கத் தேவையான நாட்டில் மாறாக சமீப காலமாக மக்கள் முகத்தில் பெரும் இறுக்கமும் மனதில் கேள்விக்குறிகளும் நாடு முழுவதும் குழப்ப மேகங்களுமே சூழ்ந்திருந்தன. அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த ஒரு பெரும் மறைவு. பல வருடங்களாக நாட்டைப் பாதுகாத்துத் தற்போது சந்தேகத்திற்கு உரியவகையில் மரணமடைந்த மாமன்னர் வெற்றித்திருமாறனின் மறைவு.
இவ்வாறு ஒருமுறை நிமிர்ந்து தான் அமர்ந்திருந்த மலையிலிருந்து தொடங்கி நீளும் நாட்டின் தன்மையை உணர்ந்தவாறே எத்தகைய நிகழ்வையும் எளிதில் மறந்திடாத நினைவுத்திறன் கொண்ட கழுகின் கண்களில் தோன்றி மறைந்தது வெற்றித்திருமாறனுக்கு முந்தைய மற்றுமோர் மாமன்னனின் வரலாறு…
நீர்ச்சிலை:
பொன்னிழைகள் மின்னுகிற வஞ்சியவள் இன்னுருவில்
மின்னலொளி வீசுகிற முத்தென- பின்னலொடு
பொன்னுடை தன்னிலே வெண்சுட ராய்விளங்கும்
கன்னியவள் மேக முகம்..
தனித்திருக்கும் மலர்கள் தங்கள் துணையுடன் பேசிக்கொள்ளத் தேர்ந்தெடுப்பது வண்டுகளின் ரீங்காரத்தையே ஆகும். அப்படி மலர் சூழ் வனந்தனில் தனித்தும் இணைந்தும் தக்க துணையுடன் கொஞ்சியும் குலாவியும் பிணைந்துகொள்ள உதவுவதுமாக எப்புறமும் கேள்விகளும் பதில்களுமாக அவ்வனத்தினை நிரப்பிக்கொண்டிருந்த பலவகை வண்டினங்களின் இசைக்கச்சேரிகளுக்கு நடுவிலும், பற்பல நாடுகளில் சுற்றித்திரிவதால் நாடெங்கும் நிகழும் நல்லன தீயனவற்றைப் பலவாறு பேசி மகிழும் பறவைகளின் கீச்சுப் பட்டிமன்றங்களுக்கு இடையிலும் தன்னைச் சுற்றி நிகழ்வன எதுவும் தன்னைச் சிறிதும் கவனம் கலைக்காதவாறு அமர்ந்த இடத்திலிருந்தே ஆதிபகவனை நோக்கிய ஒருமுக சிந்தனையில் மோனத் தவத்தில் மூழ்கிக்கொண்டிருந்த மோகனச்சிலைக்கு வயது இருபது அகவைக்கு மேலிருக்க நியாயமில்லை. இருப்பினும் இளமை பெருக்கெடுக்கும் இந்தச் சிறு வயதிலும் இறையை எண்ணித் தவம் புரிவதற்கு காரணங்களும் இல்லாமலில்லை.
சிறு வயதில் தந்தையையும் தாயையும் இழந்து தாதிகளாலும் சிற்றன்னையாலும் வளர்க்கப்பட்டதாலும், இளவரசியாகவே இருந்தாலும் தனக்குரிய வட்டத்துக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக் கொண்டதாலும் மேலும் தானுண்டு தவமுண்டு தன் தங்கை மதுரமதியுண்டு என்று துறவிகளுக்கே உரிய காவி உடையணிந்து தூய ஒளித் தேவதையாகத் தானே ஏற்றுக்கொண்ட தவ வாழ்வுதனைச் சிறிதும் பிழையின்றி வாழ்ந்து வரும் கோரநாட்டின் இளவரசியான கார்மேகக்குழலிக்கு அழகும் அதை மிஞ்சிய அறிவும் அதனினும் மிஞ்சிய பொறுமையும் நிறைந்திருந்தன.
அதிகாலையில் எழுந்து அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த தாமரைத் தடாகத்தில் தன்னுடல் நனைத்துப்பின் தவத்திலமர்ந்திருக்கும் தங்கத்தாரகையின் தலைக்கு மேல் உதித்துத் தடாகத்தில் பட்டுத் தெறித்து பலவண்ணக் கதிர்களாக உடலழகை முழுவதுமாக உலகிற்குப் பறைசாற்றிடும் விதமாக ஈர ஆடையின் மேல் பட்டு எதிரொளித்துக் கொண்டிருந்த ஆதவனின் அழகிய கதிர்க்கீற்றுகள் அவளது தவநிலையையும் மீறி ஒரு தனி அழகைத் தந்துகொண்டிருந்தன. களிமண்ணின் மேலே தேர்ந்த சிற்பியின் தெளிந்த கைகள் பட்டதும் சிலையாக உருமாறுவதைப்போலவே கதிரவனின் கரங்கள் பட்டதும் கார்மேகக்குழலியின் மென்மேனியும் மின்னத் தொடங்கியது.
நீரில் நனைந்ததால் இறுக்கமாகச் சுற்றியிருந்த ஆடை அவளுக்குத் துறவுத்தன்மையை அளிப்பதற்கு மாறாக அழகினையே அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது. வான்மழை பொழியும் கருமேகம் போல நீண்டு அடர்ந்த குழலும், நீறிட்ட நெற்றியும், நெடுங்கதவம்போல மூடியிருந்த விழிகளும், நேரான நாசியும், நிறை சிவந்த இதழ்களும், வானவில் வளைவு போல ஏறி இறங்கும் மார்புகளும், மதுநிறை மாதுளை முத்துக்கள் போன்ற அவற்றின் நுனிகளும், ஒட்டிய இடையும் ஒளிவிடும் உடலுமாய் அந்த இடமே தவச் சாலை போன்றில்லாமல் அழகின் தனிச் சோலையாகவே விலங்கியது.
சுற்றுப்புற நிகழ்வுகள் எதிலும் மனங்கொடாமல் இமைமூடிய விழிகளுடனும் இளகிய மனநிலையை வெளிக்காட்டும் முகத்துடனும் கருணை வழிந்தோடும் நீர்ச்சிலையெனக் காட்சியளிக்கும் அவளது நிலையைக் கண்டு அங்கு சுற்றித் திரிந்த மானினங்களும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தன.
அத்தகைய ரம்மியமான சூழ்நிலையை அடியோடு மாற்றியமைக்கக் கூடிய நிகழ்வுகள் அடுத்த அரை நாழிகைக்குள் நிறைவேறும் என எவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மாமன்னர் வரகுண திருமாறன்:
கோரநாட் டிற்கோர் குணமிகு கோவென
ஈரநெஞ் சங்கொள் இறையென- வீரமுடன்
போரது தான்வரின் பொங்கிடும் வில்லவன்
தீரன் வரகுணமா றன்.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோரநாடு பாண்டியநாட்டிற்குத் தலைவணங்கிய ஒரு மலைப்புற சிற்றரசாக மட்டுமே இருந்துவந்தது. அந்த நிலையை மாற்றி மலைக்குக் கீழே இருந்த சமவெளிப்பகுதி முழுவதையும் தொடர்ச்சியான போர்களால் வெற்றிகொண்டு இத்தகைய பேரரசாக நிறுவி, மேலும் அப்பகுதியில் மலையையும் ஒரு புறம் சேர்த்துப் பிறநாட்டினர் அவ்வளவு எளிதில் உட்புகாதவாறு சிறந்த கோட்டையையும் உருவாக்கி அகழிகள் விற்பொறிகள் எனப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, பாண்டிய நாட்டுடன் திருமண உறவையும் ஏற்படுத்திக்கொண்டு அந்நாட்டின் சிற்றரசு என்ற அவப்பெயரையும் நீக்கி நெடுநாள் ஆட்சிபுரிந்தவர் மாமன்னர் வரகுண திருமாறன்.
இதற்கு முன் இருந்த அனைத்து அரசர்களையும் வரிசையில் நிற்கவைத்துப் பார்த்தால் இவரது ஆட்சி நான்கைந்து படிகள் மேலே இருப்பது இவரது தனிச்சிறப்பு. இக்காலத்தில் உழவும், அதனை ஒட்டிய பதினெண் தொழில்களும் பெருமளவில் வளர்ச்சியுற்று அதனால் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்வதற்காக அமராநதியில் மனிதர்கள் கடந்து செல்லும் மரப்பாலங்களும், யானைகள் செல்லக்கூடிய கற்பாலங்களும் அமைக்கப்பட்டன.
கோவில்கள் அதிக அளவில் கட்டப்படவில்லையென்றாலும் மத உணர்வு மக்களிடம் வேகமாகப் பரவியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த பல சமயத் துறவிகள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சைவ வைணவ சமண பவுத்த சமயங்களைச் சார்ந்தோர் தங்களுக்குள்ளாக விவாதம் நடத்திக்கொள்ள நாடெங்கும் பல சொற்போர் மையங்கள் நிறுவப்பட்டு மழைக்காலத் தவளைகள் போல மாறி மாறிக் குறைகூறி மற்றவர்களின் தவறுகளையும் தத்துவக் குறைகளையும் சுட்டிக்காட்டி வந்த போதிலும் மகுடிக்கு மயங்காத மலைப் பாம்புகளைப் போல மக்கள் ஒற்றுமையுடனும், உணர்வுடனும், மன்னனுக்கும் அவன் சொல்லுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்துவந்தனர். இருப்பினும் மன்னனுக்கு வேறு வகையிலான சிக்கல்கள் தன் குடும்பத்தினர் மூலமாகவே வர ஆரம்பித்தன.
வரகுண திருமாறன் அந்நாளைய பாண்டிய மன்னனின் தங்கை மகளான வல்லவள் மாதேவியை மணமுடித்த நாள் முதல் பாண்டிய சிற்றரசு என்ற நிலை நீங்கி தனியரசாகவே விளங்கத் தொடங்கியது கோரநாடு. மேலும் பாண்டியர்களின் தமிழவைப் பேராயத்தில் கோரநாட்டிற்கென நிரந்தர இடமும் வழங்கப்பட்டது. கோரநாட்டுப் புலவர்கள் பாண்டிய நாட்டிற்கும், பாண்டிய நாட்டுக் கலைஞர்கள் கோரநாட்டிற்கும் வந்தும் மேலும் இரு நாடுகளுக்கிடையேயான தொழிற் பரிமாற்றங்களும் சிறந்த முறையில் நிகழ்ந்துவந்தன.
மன்னன் வரகுண திருமாறனுக்குப் புகழ் திருமாறன் என்ற மகனும் செல்வத்திருமகள் மற்றும் ராணிசந்திரிகா என்ற இரு மகள்களும் பிறந்தனர். இவர்களில் புகழ் திருமாறன் இளவரசனாக முடிசூட்டப்பட்டு பாண்டியகுலத்தில் பிறந்த யாழிசைவல்லியை மணமுடித்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தான். ஆகவே பாண்டியநாட்டிற்கும் கோரநாட்டிற்கும் இடையே இருந்து வந்த மன உறவுகளும், மண உறவுகளும் மாநிலமெங்கும் பெரிய அதிர்வலைகளை வீசிவந்ததை மறுக்க இயலாது. மேலும் புகழ் திருமாறன் பாண்டிய இளவரசன் அரிகேசரி மாறவர்மனின் நெருங்கிய நண்பனாகவும் இருந்து வந்தான். கோரமலைக்காடுகளில் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி வேட்டையாடி வரும் அளவுக்கு இரு இளவரசர்களும் சொல்லும் பொருளுமாகப் பிரியாதிருந்து வந்தனர்.
அதே நேரத்தில் மூத்த மகளான செல்வத்திருமகள் சேரநாட்டைச் சேர்ந்த வணிகனான மேகவர்மன் என்பவரை மணமுடிக்க விரும்பினாள். இதையறிந்த மன்னர் செல்வத்திருமகளுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த மணமகனைத் தேட ஆரம்பித்தார். இந்தச் செய்தி புகழ் திருமாறனுக்குத் தெரிந்தவுடன் தன் நண்பன் அரிகேசரி மாறவர்மன் துணையோடு தன் தங்கை விரும்பிய மேகவர்மனையே மணமுடித்து வைத்தார். இந்நிகழ்ச்சி அரசரைப் பெரிதும் கவலையும் கோபமும் அடையச்செய்தது. நடந்து முடிந்த திருமணத்தைப் பெரும் அவமானமாகக் கருதியதால் பாண்டிய நாட்டுடன் சிறிது வெறுப்பும் கொண்டார். இருப்பினும் இரு நாட்டு இளவரசர்களிடையே எந்த வெறுப்பும் நிலவவில்லை. மாறாக இன்னும் நெருக்கம் கூடியது. செல்வத்திருமகளுக்கும் மேகவர்மனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைக் கண்ட வரகுண திருமாறன் சற்றே மனம் நெகிழ்ந்து மேகங்கள் கூடிப் பொழிந்த பெருமழைநாளில் பிறந்த குழந்தை என்பதால் கார்மேகக்குழலி எனப்பெயரிட்டு வளர்த்துவந்தார்.
நிலைமை இவ்வாறிருக்க இளையமகளான ராணி சந்திரிகா ஆய கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுப் பாரோர் போற்றும் புகழ் மிக்க இளவரசியாகப் பரிணமித்து வந்தாள். ஒருமுறை வாதாபிக் கோட்டைத்திறப்பு விழா கலைநிகழ்ச்சிகளைக் காண சாளுக்கிய நாட்டிலிருந்து அழைப்பு வந்தபோது கோரநாட்டின் சார்பாக சாளுக்கிய நாட்டிற்குச் சென்றவள் அங்கே நாடகக் கலையில் சிறந்து விளங்கிய விஜயேந்திரனின் மேல் மையல் கொண்டாள்.
உரத்த குரலும், தடித்த புருவமும், உணர்ச்சிகளைக் குவித்து வெளிப்படுத்தும் கண்களும், நெடிய உருவமும், நெற்றி வகிடும், நேர்கொண்ட பார்வையும் கொண்டு கோபியர் கொஞ்சும் கோமகனாக சந்திரிகாவை சகல விதங்களிலும் மயக்கிவிட்டான் விஜயேந்திரன். அங்கிருந்த மூன்று நாட்களும் ஒவ்வொரு நாடகங்களிலும் வந்த நாயகன் நாயகியாகத் தங்களிருவரையும் வரித்து மனமகிழுமளவு இருவருக்கிடையில் மலரிடை மணம்போல மகளிர் குணம் போலக் காதல் வேகமாக வளர்ந்து வந்தது. பல கலைகளிலும் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் சந்திரிகாவை ஈர்த்தது பெரும் வியப்பிற்குரியதேயாகும். ஏனெனில் அவள் தன் மனதில் இதுநாள் வரையில் எந்த ஓர் ஆடவனையும் இருத்திடத் தலைப்பட்டதில்லை. புதுமலர் பூத்த சோலையாக மாறிய அவள் மனம் கலைந்த கோலத்தால் ஒவ்வொரு நாளும் தன் ஒவ்வொரு அணிகலன்களால் பரிசென்ற பெயரில் பாச மழைக்குள் அவனை முழுவதும் நனைத்தாள். நேரடியாக ஒரு சொல்லும் கூறாத போதும் நெஞ்சில் அவனை நிறுத்திக் காதல்மொழிகள் பேசி வந்தாள். யாரொடுமேனென்ற காரணங்களேதுமின்றி முளைவிடு வேரே காதலன்றோ?
அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுற்று சாளுக்கிய நாட்டிலிருந்து தன்நாடு திரும்பும் நேரத்தில் விஜயேந்திரனிடம் பார்வையிலேயே பிரியாவிடை பெற்றுப் பிரிய மனமின்றி ராணி சந்திரிகா தன் பட்டாளங்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தாள். மெல்லிருட்டு சூழ்ந்திருந்ததால் வண்டினங்களின் ஒலி இரைச்சலாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் அவளது மனமோ அதைவிடப் பெரும் பேரிரைச்சலுக்கு உள்ளாகி இருந்தது.
“கவனித்தாயா சந்திரிகா? அப்பப்பா. என்னை எப்படியெல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர். கண்களா அவை? குத்திக்கிழிக்கும் கூரம்புகள். பார்வையிலேயே என்னைப் பனித்துளியாக உருகவைக்கும் கதிரவன் கணைகள். இல்லை இல்லை காமன் கணைகள்.
அடிப் பைத்தியக்காரி. நாடகக் கலைஞர்கள் அனைவரும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பது போலத்தானே நடிப்பார்கள். உன்னை மட்டும் தான் பார்த்தார் என எப்படித்தெரியும்?
அப்படியென்றால் நான் ஒவ்வொரு முறை என் அணிகலன்களை அவரிடம் அளித்த போதும் என்னையே தாரை வார்த்துக் கொடுப்பதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டது போலக் கண்களால் காதல் புரிந்தாரே அது பொய்யா? இல்லை இறுதி நாளன்று நான் புறப்படுகிறேன் எனத் தெரிந்ததும் கண்களில் சோக முத்திரை திகழ சோர்வடைந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாரே அது பொய்யா?
ஆனால் ஆசை இருந்திருந்தால் இப்படி அரையிருட்டில் அவரது நினைவுகளைச் சுமந்து கொண்டு நீ தனியே இந்தப் படைவீரர்களுடன் பல்லக்கில் செல்ல விட்டிருப்பாரா? ஆண்களெல்லோரும் ஆசைத் தீயை மட்டும் அணையாமல் ஏற்றிவிட்டு அதன்பிறகு ஏதும் பேசாமல் பேதை மனதை அலைக்கழிக்கும் கோழைகள் தானே. இவர்மட்டும் என்ன விதிவிலக்கா?”
என்றெல்லாம் மாறி மாறி மனங்குழம்பித் தனக்குத்தானே வருத்தமுற்றுக் கூடவே ஆறுதலும் கூறியவாறு வந்துகொண்டிருந்தாள்.
பல்லக்கில் அவளை வீரர்கள் சுமந்துகொண்டிருக்க அவளது மனமோ விஜயேந்திரனைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு வந்தபோது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த காட்டுவாசிக்கூட்டம் காட்டுமரங்களினூடே மறைந்திருந்து தாக்கத் தொடங்கினர். அத்தாக்குதலில் தங்களது போர்க்கருவிகள் பலனளிக்காது போகவே அவர்களின் விஷ அம்புகளில் சிக்கி எந்த எதிர்ப்புமின்றி உயிர் துறந்தனர் உடனிருந்த வீரர்கள். வேறு வழியின்றிப் பல்லக்கிலிருந்து வாள் கொண்ட கையுடன் ராணிசந்திரிகா வெளிவரும் வேளையில் அவளது இடையைக் கீறிச் சென்ற அம்பு உடையைக் கிழித்ததால் பளீரென்ற நிலவொளியை எதிரொளித்துக் கொண்டிருந்தது அவளது பொன்னிற இடை.
காட்டு மரங்களைப் பிளந்து கொண்டுவந்த இடிமுழக்கத்தைப் போன்ற பெரும் சிரிப்பொலியுடன் மரங்களின் மறைவிலிருந்து வெளிப்படத் தொடங்கினார்கள் சாளுக்கியக் காட்டுவாசிகள். யாரிவர்கள் ஏன் இங்கு வரவேண்டும் என்று சிந்திக்கக்கூடிய நிலையிலும் இளவரசி இல்லை.
கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் சுற்றி வளைத்துக்கொண்டிருந்த நிலையிலும் சற்றே ஓர் இகழ்ச்சிப் புன்னகை வீசிக்கொண்டிருந்த அவள் பூநிலவு முகத்தைப் பார்த்ததும் அந்தக் கொடுங்கூட்டத்தின் தலைவனுக்குத் தன்னையறியாமல் கோபம் தலைக்கேறியது.
தன் கையிலிருந்த ஈட்டியை நீட்டி, கிழிந்த அவளது மேலாடையை மேலும் மேலே உயர்த்த எத்தனித்த போது மின்னலெனச் சுழன்ற அவளது வாள் அந்தக் கயவனது ஈட்டியைக் காட்டுக்குள் வீசியெறிந்தது. உடனே நாகமெனச் சீறிய பத்து வாட்கள் அவளது ஒற்றை வாளைச் சிதறடித்தன. கையிலே எந்த ஆயுதமும் இல்லாத போதிலும் கண்களாலேயே எத்தனை பேரையும் எரித்துக் கொல்லும் துணிவு தெறித்துக் கொண்டிருந்தது அவள் முகத்தில். இருப்பினும் அவளைச் சூழ்ந்து நின்றவர்களில் ஒருவன் அவளது மேலாடையின் மேல் கைவைக்க நீட்டியபோது பாய்ந்து வந்த ஒரு வளையெறி அந்தக் கையை முறித்துப்போட்டு விட்டு வீசியவனிடமே திரும்பிச் சென்றுவிட்டது.
வளையெறி வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் எதிர்த்திசையிலிருந்து மெல்ல நிதானமாக நடந்து வந்தான் விஜயேந்திரன். அந்த இருளிலும் சூரியன் எழுந்து வருவதைப் போல ஒளிவீசும் கண்களுடனும் வலிமிகுந்த தோள்களுடனும் மந்தகாசப்புன்னகையுடன் இரு கைகளிலும் வாளுடன் வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் வழிவிட்டு நிற்பது போல் பிரிந்து நின்ற காட்டுவாசிக்கூட்டத்தினர் கையில் வாட்களுடன் அவனைச் சூழ்ந்துகொண்டனர் இப்போது.
நின்ற இடத்திருந்தே ஒவ்வொரு வாளாகப் பறக்கவிட்ட விஜயேந்திரனோடு ஈட்டியொன்றை ஏந்திக்கொண்டு அவனது நண்பன் சகாதேவனும் இணைந்துகொண்டான். அத்தனை பேரையும் புரட்டி எடுத்துக் காயங்களுடன் விரட்டிவிட அதிக நேரம் பிடிக்கவில்லை அவர்களுக்கு.
இப்படியொரு சூழ்நிலையில் எதிர்பாராது வந்த அவனது முகத்தைக் கண்ட மகிழ்ச்சியில் பேசவொரு சொல்லுமின்றி நன்றியுடன் அவனை எதிர்நோக்கினாள் இளவரசி. அதனைச் சிறு புன்முறுவலுடன் கடந்துவிட்டு அவளுக்கொரு மேலாடையை தந்து விட்டு வேறேதும் பேசாமல் குதிரையைப் பயணத்திற்குக் கிளப்பினான் விஜயேந்திரன்.
ஆளுக்கொரு குதிரையில் வந்திருந்த அவர்களிருவரும் தாமதிக்காமல் அந்த இடத்தைவிட்டு நீங்கி வேகமாகப் பயணம் செய்யத் தொடங்கினர். தனிக்குதிரையில் ஏறாது விஜயேந்திரனின் குதிரையிலேயே இளவரசியும் அமர்ந்துகொள்ள காடு மலைகள் என மேலும் ஐந்து முழு நாட்களை எடுத்தது அப்பயணம். ஆனால் அவனது அருகில் அமர்ந்து வந்த அவளுக்கு அரை நாழிகை நேரம் போல அவ்வளவு வேகமாகக் கழிந்தது. இடையிடையே ஓய்வெடுத்த இடங்களில் நடந்த ஒவ்வொரு இன்பநிகழ்வுகளும் சந்திரிகாவின் மனதை அசைபோடத் தூண்டின. அதன் விளைவாகப் பயணக்களைப்பு எதுவும் நிகழாத பனிமலராய் வந்து சேர்ந்தாள் இளவரசி.
நாடு வந்தடைந்ததும் நேரே மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறியபின் வரகுண திருமாறன் மனமகிழ்ந்து அவ்விருவரையும் தங்களது விருந்தினர் மாளிகையிலேயே தங்கவைக்க ஏற்பாடு செய்தான். இருப்பினும் அவ்விருவர் மீதும் ஒரு கண் வைக்கவும் தவறவில்லை அவன்.
அதே நேரம் ஏதோ ஒரு இளவரசன் காட்டுவாசிகளிடம் போர்புரிந்து இளவரசியைக் காப்பாற்றியதாகவும் அவனையே மன்னர் தன் மகளுக்கு மணமுடித்து வைக்க இருப்பதாகவும் வதந்திகள் நாடெங்கும் பரவின.
தன் முதல் மகள் வணிகனுக்கு மனைவியானதால் மனம்வெதும்பிப் பின் குழந்தை பிறந்ததும் தன் மனதை ஆசுவாசப்படுத்திட்டுக் கொண்ட மன்னன் இப்போது இரண்டாவது மகளும் ஒரு கூத்துக் கலைஞனை விரும்பியது கண்டு மனம் நொந்து மகள் மேலிருந்த பாசத்தின் காரணமாக அதனை வெளிக்காட்டிக்கொள்ள இயலாமல் அதனாலேயே நோய்வாய்ப்பட்டார்.
அதனால் ஆட்சிப் பொறுப்பை இளவரசர் புகழ் திருமாறனிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுப் பதவியேற்பும் நடந்தேறியது. இந்த நிலையில் எளிமையான முறையில் இளவரசி ராணிசந்திரிகாவுக்கும் விஜயேந்திரனுக்கும் திருமணமும் ஒருபுறம் இனிதே நிறைவேறியது.
நோய் முற்றிய நிலையில் மன்னர் வரகுண திருமாறன் சில மாதங்களில் மரணமடைய ஆட்சிப் பொறுப்பு முழுமையும் புகழ் திருமாறனிடமும் அவனது அரசவையிடமும் வந்தது. மைத்துனனே மன்னன் என்பதால் விஜயேந்திரனும் அவனது நண்பன் சகாதேவனும் அரசு நிர்வாகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட ஆரம்பித்தனர். இவையனைத்தும் மன்னனுக்குத் தெரியுமென்றாலும் பேரரசின் மருமகன் என்பதால் கண்டும் காணாதது போலவும் அதே நேரத்தில் குடிமக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தி வந்தான்.
இதே நேரத்தில் விஜயேந்திரனுக்கும் சந்திரிகாவுக்கும் ஒரு அழகிய ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தன. முறையே கரம்பத் திருமாறன் மற்றும் மதுரமதி எனவும் பெயரிடப்பட்ட அவ்விரு குழந்தைகளும் கோரநாட்டு அரச குடும்பத்தின் புதுவரவுகளாக வளர்க்கப்பட்டனர்.
இவ்வாறாக மூன்று தம்பதிகளும் இன்பமும் இனிமையுமாக வாழ்ந்து வந்த வேளையில் வடநாட்டிலிருந்து வந்து சேர்ந்தார் வடமலை அல்லிமுனி என்றழைக்கப்பட்ட துறவி. வடநாடுகள் பலவற்றிலும் அவர் சுற்றித் திரிந்திருந்தாரேயாயினும் கடந்த சில வருடங்களாகவே சாளுக்கிய நாட்டில் அவர் தங்கியிருந்து சமண மதத்தைப் பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அந்நாட்டு மன்னனையே சமண மதத்திற்கு மாற்றி விட்டதால் பிறகு மக்களை மதம் மாற்றுவதில் யாதொரு குழப்பமும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அவர் சாளுக்கிய நாட்டிலிருந்த நேரத்தில் சகாதேவனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.
அல்லிமுனி கோரநாட்டிற்கு வந்த மறுநாளே மன்னனை சந்தித்து நாட்டில் துஷ்டசக்திகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் கோரவனத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புகழ் திருமாறனும் வரகுணன் மறைந்து மூன்று மாதங்களானதால் அரசகுடும்பத்தினர் அனைவரும் கோரவனத்தில் உள்ள அரசர் குலம் மட்டும் தலைமுறை தலைமுறையாக வழிபடுகின்ற பகவதியம்மனை வணங்கிட முடிவு செய்தார்.
இவ்வாறாக நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்த கழுகானது அம்முயலைக் கவ்விக்கொண்டு மலையுச்சியிலிருந்த தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. கொழுத்த இரையுடன் பறந்து வந்த கழுகைக் கண்ட கழுகுக் குழந்தைகள் மகிழ்ச்சியில் உரத்த குரலுடன் வரவேற்றன. அனைத்துக் குஞ்சுகளும் தங்களுக்குள்ளாகப் பெருங்கழுகு கொண்டுவந்த இரையைப் பகிர்ந்து உண்டு முடிக்கையில்தான் அக்கழுகு கவனித்தது தன் குஞ்சுகளின் எண்ணிக்கையில் குறைவு வந்ததை.
பொதுவாகக் கழுகு இனங்களில் பெரிய குஞ்சுகள் பிற குஞ்சுகளைப் பசி நேருகையில் கொன்றுண்ணும் வழக்கமான நிகழ்வுதான் இது என்ற போதிலும் தான் வாழவேண்டும் என்பதற்காகத் தன்னைச் சார்ந்தவர்களையே கொன்று வீழ்த்தும் மனிதர்களின் துரோக மனங்களின் கொடூர குணம் கண்முன் வந்துபோகவே அந்த ஆடி அமாவாசை நாளை எண்ணிப்பார்க்கத் தொடங்கியது.
சதியரங்கம்:
முற்றிலும் மரத்தால் அமைக்கப்பட்டு சுற்றிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டு எந்தவித ஒலியும் வெளியேறாதவாறு குறுகிய ஒற்றை வாயிலுடன் கட்டப்பட்டிருந்த அறை அது. அந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆனால் அன்றைய சூழலில் அந்த ஆறு பேரே ஒட்டுமொத்த நாடும் என்று சொல்வதில் தவறில்லை.
அனைவரும் வந்தமர்ந்த பிறகு “மன்னரின் மறைவு இயற்கையானதல்ல என்று நாட்டில் அனைவரும் நம்புகிறார்கள். அதனால் பெரும் புரட்சி நடைபெற வாய்ப்புள்ளது இளவரசே!”
என்று தொடங்கினார் துறவியின் உடையும் துறவறத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பெரிய வயிறும் பத்து விரல்களிலும் பவழ மோதிரம் அணிந்திருந்ததால் சிவந்த கதிர்க் கரங்களும் கொண்டு அதை விட சிவந்த விழிகளுடன் அமர்ந்திருந்த வடமலை அல்லிமுனி. சமண மதத்தைப் பரப்ப வந்து இந்நாட்டின் சட்டங்கள் இயற்றுமளவு முக்கியத்துவம் பெற்ற ராஜ தந்திரி.
“இருப்பினும் மன்னர் சிறியதொரு நாகத்தினால் தானே கொல்லப்பட்டிருக்கிறார். இது விபத்து தானென்று குழந்தைக்குக் கூடத் தெரியுமே. இந்த மக்கள் ஏன் இத்தனை முட்டாளாக இருக்கிறார்கள்?” என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்தார் தலைமைத் தளபதி கமலக் கணக்காயன். மறைந்த மன்னருக்காகப் பல போர்களில் வெற்றி பெற்றுத் தந்தவர். தமிழகத்தில் அந்நாளைய தலைசிறந்த வாள் வீச்சு நிபுணர். அரியணை மேலும் குறிப்பாக அந்தப்புரத்தின் மேலும் இரு கண்களையும் எப்போதும் வைத்திருப்பவர்.
“மக்களை முட்டாள் என்கிறீரா தளபதி? அதுவும் என் முன்னால்” என்ற குரல் அந்த அறையை நிரப்பியது. சில நொடிகள் அனைவரும் பேச்சடைத்துப் போய்விட்டனர்.
உறுதியான கால்கள் தரையில் அழுத்தமாகப் பதிய, கடுங்கோபத்தினால் கண்களில் அதிக ரத்தம் பாய்ந்ததால் சிவக்க, பேரிரைச்சலுடன் மூச்சு வெளியே வர, குண்டலமணிந்த காது மடல் விடைக்க, பழுப்பேறிய உதடுகள் துடிக்கக் கொந்தளிக்கும் முகத்துடன் கொதிக்கும் எரிமலைக் குழம்பு போன்ற பார்வையுடன் அவ்வறையின் நடுநாயகமாக எழுந்து நிற்பவனும் மன்னர் வெற்றித் திருமாறனின் மூத்த புதல்வனும் தற்போதைய கோரநாட்டின் ஒரே இளவரசனுமாகிய கரம்பத் திருமாறனை எதிர்நோக்கும் தைரியம் எவர்க்கும் இருந்திட வழியில்லை.
சில நேர அமைதியை அல்லிமுனி கலைக்கலானார். “இளவரசே! தாங்கள் கோபப்படுவது நியாயம்தான் என்றாலும் தளபதி கூறுவதிலும் பொருள் உள்ளது என்பதைத் தாங்கள் மனதில் இருத்த வேண்டும். முட்டாள் தனம் நிறைந்த இடங்களில் கலவரமும் போராட்டங்களும் நிகழும். அதேபோன்ற மனநிலையில் தான் மக்களும் உள்ளனர். நம் ஒற்றர்கள் தெரிவித்திருப்பதும் அதுவே. ஆகவே இந்த நிலையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளோம்.”
“அப்படியென்றால் முன்பே தாங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டீர்?” என வினவினான் கரம்பன் மெல்லிய நகைப்புடன்.
“நான் மட்டுமல்ல. நாங்கள் எல்லோரும்.”
“எல்லோருமா? என்ன முடிவு?”
“இளவரசே! தாங்கள் அறியாததல்ல. இந்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன் மறைந்ததும் அவரது வழித்தோன்றல் அரியாசனம் ஏறுதல் வழக்கம். ஆயினும் கோரநாட்டைச் சார்ந்த ஐந்து சிற்றரசுகளின் அரசர்களில் நால்வர் தங்கள் பதக்கங்களைச் சேர்த்து அதை ஆரமாக்கி ஐந்தாவது அரசரது பதக்கத்தை நடுவிலிட்டு அதை புதிய மன்னனின் கழுத்தில் அணிவிக்கவேண்டும். இதுவே ஐம்பேராயம் அணிவிக்கும் வழக்கமாகும். ஆக நமது சிற்றரசர்களான கொடுங்கண்ணான், கோட்பறையான், அமுதமறவன் மற்றும் தனிக்கோவேள் ஆகிய நால்வரும் மறைந்த நம் மன்னரது வாரிசு அதாவது தங்களைத் தம் மன்னராக ஏற்று இவ்வைம்பேராய வழக்கத்தை நிறைவேற்றுதல் அவசியமாகும். ஆனால் மன்னரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆகவே மக்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட ஐயத்தை நிவர்த்தி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டியது தங்கள் கடமை. ஏனெனில் நம் நாட்டின் அரசன் யாராக இருப்பினும் மக்கள் துணை மிகுந்த அவசியம்.” என்று முடித்தார் அல்லிமுனி.
“சந்தேகங்கள் எப்படிக் கிளம்புகின்றன என்றறிவீரா மகாமந்திரியாரே?” என்று ராஜகீர்த்தி ஆச்சாரியாரை வினவினான் கரம்பன் கழுத்தை அவர்புறம் திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி.
“இல்லை இளவலே, இதற்கு முன் பேரரசர் வரகுணர் இறந்தது இயற்கை முறையில். ஆகவே அப்போது மக்கள் அவரது புதல்வர் புகழ் திருமாறனுக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் புகழ் திருமாறன் மறைவு அப்படி நிகழவில்லை. அதன்பிறகு எண்ணற்ற குழப்பங்கள் வந்தன. உங்கள் தந்தை இதோ இங்கே அமர்ந்திருக்கும் சகாதேவரது துணைகொண்டு அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அது போலொரு நிலை தான் தற்போதும்” என்று அருகிலிருந்த சகாதேவனைக் காட்டிக் கூறினார் ராஜகீர்த்தி.
“இவையெல்லாம் ஏற்கனவே இளவரசர் அறிந்தது தானே. புதிதாக நிகழ்வன வேறு” என்று சட்டென பேச்சை மாற்றினார் சகாதேவன். வெற்றித் திருமாறனின் நண்பர் தானென்றாலும் பார்க்க முப்பது வயதுக்கு மேல் மதிக்கமுடியாது. இன்னும் உறுதியான உடற்கட்டும் அதைவிட அதிகமான மன உறுதியும் கொண்டவர். இன்றைய நாளில் அரண்மனையின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர். போர்களில் ஆர்வமுடன் பங்கேற்பதால் நிறைய தழும்புகளை உடலெங்கும் தாங்கியவர்.
“அப்படி என்ன புதிதாக நிகழ்கிறது?” என்றான் கரம்பன்.
“நான்கு சிற்றரசர்களும் அவர்களது பகுதிக்குட்பட்ட மக்களிடம் மன்னரது மரணத்தைப் பற்றிய ஐயங்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். கடந்த சித்ரா பௌர்ணமியன்று கூட மக்களை நல்ல உடல்நிலையில் சந்தித்த மன்னர் திடீரென பாம்பு கடித்து மரணமுற்றதை யாராலும் நம்பமுடியவில்லை” என்றார் சகாதேவன்.
“ஏன் என்னால் மட்டும் நம்பமுடிகிறதா? இரவுணவை என்னுடன் அருந்திய மன்னர் காலையில் மரித்ததை நம்பமுடியாமல் நடைபிணமாகத் தானே இருக்கிறேன்.” என்று கூறும்போதே நா தழுதழுத்தது கரம்பனுக்கு.
“உண்மை தான் இளவரசே. ஆனால் தாங்களும் இப்படி வருந்தித் துயருற்றால் மக்களுக்கு யார் இருக்கிறார்? பழைய முறையோ புதிய முறையோ அனைத்தையும் சரிக்கட்டித் தங்களை ஆட்சியில் அமரவைக்க நாங்கள் இருக்கிறோம். சரிதானா சகாதேவரே?” என்று வினவி எழுந்துநின்றார் அல்லிமுனி.
“தங்கள் உத்தரவுக்கு நான் என்றும் அடிமைதானே முனிவரே” என்று சிறு புன்னகையுடன் அவர் கைமேல் கைவைத்து சூளுரைத்தார் சகாதேவன்.
“மிக்க மகிழ்ச்சி. ஆனால் நாட்டிற்குள் புதியதாகக் கொள்ளையர்கள் ஊடுருவுவதாகக் கேள்விப்பட்டேனே” என்று தன் ஐயத்தை எடுத்துவைத்தான் மன்னனாகப் போகும் கரம்பத் திருமாறன்.
“ஆம் மன்னரே. உண்மைதான். ஆனால் அதுவும் நம் நன்மைக்கே. முதலில் அவர்களை விரட்டி மக்களுக்குத் தங்கள் மேல் நம்பிக்கையை உண்டாக்குவோம். எதிரிகள் இருந்தால்தானே ஒற்றுமை நீடிக்கும்.” என்று நகைத்தார் ராஜதந்திரி சகாதேவன்.
”அதுவும் நியாயம் தான். கொள்ளையர்களிடமிருந்து துவக்குவோம்” என்று புன்முறுவலுடன் கூறிக் கூட்டத்தைக் கலைத்தான் கரம்பன்.
அனைவரும் கிளம்பிய பின் சகாதேவனுக்கு மட்டும் புரியும்படியாக ஒரு சைகையைக் காட்டிவிட்டு கரம்பனுடன் நடந்தார் அல்லிமுனி.
அதனை மற்றுமிரு கண்களும் கவனித்தன…
அரசியல் நரபலி:
பூஜைக்கு மலராகச் செல்வோமா பிணத்துக்கு மாலையாகச் செல்வோமா என்றெல்லாம் தெரியாமல் இயல்பாக எல்லோருக்கும் சேர்த்தே மணம் வீசி மலரும் பூக்களைப் போல வெகு இயல்பாக விடிந்திருந்தது அந்த ஆடி அமாவாசை தினம். காட்டின் நடுவே பகவதி கோவிலில் அல்லி முனியின் தலைமையில் மங்களகரமாகத் தொடங்கிய அந்த பூஜையில் மன்னன் புகழ் திருமாறன் தம்பதி சமேதராகக் கலந்துகொண்டு நாட்டுமக்கள் நலனையும் குடும்பத்தோர் குடிமக்கள் நலனையும் தன் குல மூத்தோரிடம் வேண்டிக்கொண்டு அல்லிமுனி நடத்திய அத்தனை சடங்குகளையும் பிழையின்றி நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.
சமண முனிவராக இருந்த போதிலும் அனைத்து வைதீக பூஜைகளும் அல்லிமுனிக்குப் பழக்கமாகும். சாளுக்கிய நாட்டுக்கு அவசர வேலையாகச் சென்றிருந்ததால் விஜயேந்திரனும் அவன் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவில்லை. செல்வத்திருமகளும் மேகவர்மனும் தமது அருமை மகளுடன் அதில் கலந்துகொண்டனர். அந்த நேரத்தில் அந்தக் குகைக்கோவிலின் வாயில் அடைக்கப்படும் ஓசை கேட்டதும் அத்தனை கண்களும் வாயிலை நோக்கித் திரும்பின. மெல்லப் பரவிய எண்ணெய் வாசமும் நெருப்பின் புகைமணமும் நிலைமையைப் புரியவைத்தது புகழ் திருமாறனுக்கு.
வெளியே தபதபவென்று காபாலிகர்கள் ஓடிவரும் சத்தமும் தெளிவாகக் கேட்கத் தொடங்கியிருந்தது உள்ளிருந்தவர்களுக்கு. பூஜை முடியும் வரை குல வழக்கப்படி தம்பதியர் இருவரும் தங்களது பீடத்தை விட்டு வெளியே வருவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று முன்பே எச்சரித்திருந்ததால் முக்கால் நாழிகை முடியும் வரை கடவுளை வேண்டியபடி காத்திருக்கத் தொடங்கினர் அரசனும் அரசியும். குகைக் கோவிலுக்குப் பின்புறம் வழி இருப்பதை நினைவுகூர்ந்த செல்வத் திருமகள் உடனடியாக இளவரசனைத் தன் கணவன் மேகவர்மனிடம் கொடுத்துவிட்டுத் தன் மகள் கார்மேகக்குழலியைக் கைகளில் ஏந்திக் கொண்டு முக்கால் நாழிகை முடிவிற்குக் காத்திருக்கலானாள்.
அதற்குள்ளாகப் பின்புறமுள்ள வழியின் வழியாகவும் காபாலிகர்கள் உட்புகத்தொடங்கியதும் மேகவர்மன் உடைவாளை உருவிக்கொண்டு அவர்களை நோக்கிப் பாய்ந்தான். வணிகத் தொழில் புரிந்துவந்தவன் என்றபோதிலும் வேணாட்டுப் படைத்தளபதிகளில் ஒருவராக வழிவழியாக வந்த தலைமுறை என்பதாலும் அனைத்துப் போர்முறைகளையும் சிறு வயதிலேயே கற்றவன் என்பதாலும் எதிர்ப்பட்டவர்களை ஒவ்வொருவராகத் தன் வாளுக்கு இரையாக்கிக் கொண்டே முன்னேறிச் சென்றான். சிறிது நேரத்தில் போரிட்டுக் கொண்டே குகையை விட்டு முற்றிலும் வெளியே வந்ததும் குகைக்கு வெளியே வைக்கப்பட்ட தீ மெல்ல மெல்ல உள்ளேயும் எரியத் தொடங்கியதைக் கண்டபிறகுதான் அவர்களை விட்டுவிட்டு வெளியே வந்தது எத்தகைய பெருந்தவறு என உணர ஆரம்பித்தான்.
அரசனையும் அரசியையும் பாதுகாப்பதற்காகத் தன் கையிலிருந்த குழந்தையை அல்லிமுனியிடம் கொடுத்து அவரைத் தப்பிச் செல்லவிட்டு உள்ளே நுழைந்த காபாலிகர்களைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடத் துவங்கினாள் செல்வத்திருமகள். இந்த ஆசுவாசத்தைப் பயன்படுத்தி அல்லிமுனி கையில் குழந்தையுடன் வெளியே தப்பித்து ஓடிவந்தார். குகைக்கு வெளியே நின்றிருந்த பாதுகாவலர்கள் அனைவரும் எதிரிகளால் முற்றிலுமாகக் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு முன்பே இளவரசனைத் தூக்கிக் கொண்டு போன மேகவர்மனும் காபாலிகர்களால் கொல்லப்பட்டிருப்பார் என உணர்ந்து கொண்டதால் தன் உயிரைத் தற்காத்துக் கொள்ள வனத்திற் புகுந்து மறைந்தார்.
அவரைத் துரத்திப் பிடித்துவர ஒரு நான்கு பேரை மட்டும் அனுப்பிவிட்டு கோவிலுக்கு முற்றிலுமாகத் தீ வைத்துவிட்டுப் பின்புறக் கதவையும் அடைத்துவிட்டு வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் பெரிதாய் இடி இடியெனச் சிரிக்கத் தொடங்கினான் அந்தச் சதிகாரக் குழுவின் தலைவன். வழக்கமாக நரபலி கொடுப்பதில் பெரு விருப்பம் கொண்ட காபாலிகர்கள் இந்த முறை அரசபலியே கொடுத்ததால் கொக்கரிக்கத் துவங்கினர். இதற்குள் முக்கால் நாழிகை முடிந்தபோதும் வெளிவர வழியின்றி இருபுறமும் அடைக்கப்பட்ட கோவிலுக்குள் நெருப்பின் கனலிலும் புகையிலும் சிக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் துறந்தனர் புகழ் திருமாறனும் அவன் மனைவி யாழிசைவல்லியும்.
குகைக்கு வெளியே நடந்த நிகழ்வுகளை அறியாமல் தன் மகளையும் கணவனையும் அவர்களுக்கெல்லாம் மேலாக இந்த நாட்டின் இளவரசனையும் காப்பாற்றிய பெருமிதத்தில் வீரமரணமடைந்தாள் செல்வத்திருமகள்.
ஒருவழியாக சதிகளால் பின்னப்பட்ட சிலந்திவலைக்குள் சிக்கிய சிறு பூச்சிகளின் அகால மரணத்தைப் போல பூஜை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் அரசியல் நரபலியை எண்ணிப் பெருமூச்சுவிட்டவாறே அந்த மலைப்பகுதியின் ஒரு பகுதியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது அக்கழுகு…
மேகமிடை மின்னல்:
அன்று பிறந்த பூனைக்குட்டியின் மென்மையான முதுகைப் போல படர்ந்து விரிந்த பச்சை வண்ணப் பட்டுத் துணி போலவும் அடர்ந்த கிளைகளால் ஒன்றை ஒன்று தழுவி இரவும் பகலும் இன்பம் துய்த்துக் கொண்டும், தேவைப்படும் போதெல்லாம் நீரள்ளிக் குடிப்பது போல காற்றெனும் கணையை வீசி மேகங்களை அள்ளி இழுத்து மழை பெய்யச் செய்து தாகம் தீர்த்து உடல் நனைத்துப் பார்ப்பவர் உள்ளத்தையும் ஒருங்கே நனைத்தும் அடர்ந்து வளர்ந்த மரங்கள் நிறைந்த கோரவனத்தினூடாக அமையப்பெற்ற ஒற்றையடிப் பாதையானது குதிரைகளின் காலடித் தடத்தால் அதிர்வுற்றுத் தொடர்ந்தது.
எட்டு வீரர்கள் தத்தமது குதிரைகளுடன் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.
இருட்டுக்குள் தலைநகரை அடையவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களில் முதல் இருவரும் பின்னிருவரும் குதிரையில் அமர்ந்து வர நடுவில் இருந்தவர்கள் குதிரையுடன் கூடவே நடந்து வந்துகொண்டிருந்தனர். நான்காவதாக இருந்த குதிரையில் ஒருவன் குற்றுயிரும் குலையுயிருமாக குதிரையின் முதுகோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருந்தான். அவனது கைகளில் விலங்கொன்று பொருத்தப்பட்டு அதன் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஆஜானுபாகுவான உயரத்தில் ஒருவன் நடந்துவந்துகொண்டிருந்தான்.
இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி விரைவாகவும் அதே நேரம் பதட்டமேதுமின்றியும் குதிரை மீது பேரரசனைப் போல சென்றுகொண்டிருந்தான் அருமைநாயகன். அவன் கண்களில் தெரிந்த ஒளி அவன் ஒன்றும் சாதாரண வீரன் அல்ல என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. ஆறடிக்கு மேல் உயரமும் அடங்காத் தோள்களும் முறுக்கேறிய கால்களும் நன்கு நீண்டிருந்த விரல்களும் அவன் இடையில் தொங்கிக்கொண்டிருந்த வாளும் அவன் நிறைய போர்களில் பங்கேற்றிருப்பான் என உணர்த்தியது. திருநீறணிந்து அகண்ட நெற்றியும் நேரான கூரான நாசியும் அவனது அறிவுப் புலமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஒரு கையில் நீண்ட எஃகாலான ஈட்டியை லாவகமாகக் கையில் பிடித்திருந்த விதம் அவனை அந்தக் காட்டுக்கே அரசன் போலக் காட்டிக் கொண்டிருந்தது.
காட்டு விலங்குகள் அடிக்கடி உலவும் வழி என்பதால் மிகுந்த கவனமாகவே சென்று கொண்டிருந்தனர். சுற்றிலும் வண்டுகளின் ரீங்காரமும் சிறு பூச்சிகளின் ஓசையும், மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருக்கும் குரங்குகளின் கிறீச் கிறீச் என்ற பேச்சொலியும், பலவகையான பறவைகளின் ஒலியும் கலந்து ஒரு மாபெரும் கலப்பிசையாக மாறி ஒத்ததிர்வு ஏற்பட்டு உச்சத்திற்கு சென்று ஒரே ஒலியாகப் பின்னிப் பிணைந்து வனமகளின் தனிக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஏழு சுரங்களில் பிறக்கும் எண்ணற்ற ராகங்களுக்கும் மூலமாக அவற்றுக்கெல்லாம் எட்டாத சுரத்தில் புதுவகை ராகமாக செவிக்கும் மனதிற்கும் இனிய அனுபவத்தைத் தந்துகொண்டிருந்தது.
இப்படியான ஒரு சூழலில் அவர்கள் அனைவரும் நடந்துக்கொண்டிருந்ததை சற்று தொலைவிலிருந்த ஒரு மரத்தின் பின்புறமிருந்து குருதிவெறி கொண்ட இரு விழிகள் கவனித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை. அந்தக் கொலைகார விழிகள் ஒரு வரிப்புலிக்கு சொந்தமானவை. தனக்கு வாகான தூரம் வரும் வரை காத்திருந்த வரிப்புலி யாரும் எதிர்பாராத விதமாகப் பக்கவாட்டிலிருந்து பாய்ந்து முன்னே வந்த வீரனது கழுத்தை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த நொடி மின்னல் போலப் பாய்ந்த ஈட்டியொன்று அப்புலியின் விலா எலும்புகளோடு உறவாடித் தனியே அப்புலியை அவ்வீரனிடமிருந்து பிரித்துத் துண்டாகத் தூரத்தில் வீழ்த்தியது.
கோரநாட்டில் இவ்வளவு திறமையாக ஈட்டியை பயன்படுத்தக் கூடியவன் யாருமில்லை என்பதை அறிந்திருந்த வீரர்கள் உடனேயே வியப்பில் விக்கித்து நின்றனர். அத்தனை விழிகளும் அருமைநாயகனின் கைகளை நோக்கின. ஆனால் அவனது வேல் அவனது கைகளில் அப்படியே இருந்தது. அப்படியானால் புயல் வேகத்தில் வந்த புலியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒற்றை வேல் வீச்சால் ஓரத்தில் எறிந்தது யார் என்று தங்களுக்குள்ளாகவே குழம்பி சுதாரித்துத் திரும்பிப் பார்த்தனர் அருமைநாயகனும் (இனி இவருக்கு இங்கு வேலையில்லை) அவனது வீரர்களும். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.
கொள்ளையனான தன்னை சிறைப்பிடித்து அழைத்து வந்துகொண்டிருந்தவர்களை ஏமாற்றி எப்போதோ தன் விலங்கை விடுதலை செய்துவிட்டுத் தப்பிக்கத் தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்து, தூரத்திலேயே அப்புலியை இனங்கண்டுகொண்டதால் அது தாவும் நேரத்தினைக் கணக்கிட்டுத் தன்னை விலங்குடன் பிணைத்துப் பிடித்து வந்துகொண்டிருந்த மாமிச மலை போலிருந்த வீரனைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கை முட்டியைத் தட்டி நொறுக்கிக் கழுத்தில் ஒரு குத்துவிட்டு சிறு கல் போல கீழே உருட்டி, அவன் விழுவதற்கு முன்பாகவே அவனது வேலைப் பறித்து புலியின் விலா எலும்பை நோக்கிக் குறிபார்த்து எறிந்துவிட்டு, கீழே விழுந்த அவ்வீரனது மார்பு மீது ஒரு காலை வைத்து, தற்போது இவ்விடத்தில் எதுவுமே நிகழாதது போல் மிகவும் அனாயசமாக இடுப்பில் ஒரு கையை வைத்து, சற்று முன் புலியைக் குறிபார்த்ததால் ஒரு புறமாய் சாய்த்த தலையை மெல்லத் திருப்பியபடி அடுத்து என்ன நிகழும் என யூகித்து அதற்கேற்ப தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த குறுவாளைப் பற்றிக் கொண்டு மிக இயல்பான ஒரு புன்முறுவலை முகத்தில் தவழவிட்டு மேகமிடை மின்னல் போல ஒளி வீசும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தான் இக்கோரநாட்டின் நாயகனான இளங்குமரன்….
தொடரும்…
அனைத்து ஐயங்களும் அற்றுப் போனதால் முழுமதியாய் மாறி ஒளிர்ந்தது.
அதே நேரம் கீழ்ச்சிறையில் அடைபட்டிருந்த மகிழன் சிறையிலிருந்து தப்பித்து தன் நண்பன் இளங்குமரனைச் சந்தித்து வெண்முகில்வேள் அளித்திருந்த பட்டுத்துணியையும் முத்திரை மோதிரத்தையும் தந்துவிட்டு அரண்மனையிலிருந்து உடனடியாக வெளியேறினான். பட்டுத் துணியிலிருந்த செய்தியைக் கவனமாகப் படித்துத் தன் இடையில் செருகிக்கொண்ட இளங்குமரன் அங்கிருந்து நேரே கார்மேகக்குழலியின் அறைக்கு சென்றான். அதற்குள் பொழுதும் விடியத்தொடங்கியிருந்தது.
இதயமொழி- இனியமொழி
பாய்ந்தருகே நின்றவளைச் சேர்ந்திழுத்துச் செவ்விதழ்
மூய்ந்திரு கண்மலர்ந் தேகிடப்- போயோரம்
சாய்ந்தவளைத் தானணத்துக் கோர்த்திருகை கொண்டுகலை
ஆய்ந்தறிந் தானனைத்து மின்று.
உலகின் அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அதிகாலையிலேயே நடைபெறுகின்றன. துடைத்து எடுத்தாற்போல முந்தைய நாளின் அத்தனை துயரங்களும், பிணிகளும், அழுக்குகளும், குற்றங்களும் அதிகாலைச் சூரியனின் ஒளிமிகு கதிர்களால் ஒவ்வொன்றாகக் கழுவப்படுகின்றன. இருள் மண்டிக் கிடந்த மண்ணிலும் மனங்களிலும் ஒருசேர ஒளியைப் பாய்ச்சி உள்ளிருக்கும் தூய எண்ணங்களை ஒளிரச் செய்வதே காலைக்கதிரவனின் முதற்கடமை. அதிலும் கொட்டும் பெரும் மழையும் குளிர்விக்கும் தூறலும் இரவை நிரப்பிய பிறகு உதிக்கும் காலை உன்னதமானது.
வானின் வசந்தத்தைத் தங்களுக்குள் போட்டி போட்டிக்கொண்டு உலகிற்குப் பறையறைவிப்பவை பறவைகளே. மேற்கு நோக்கி மெல்லக் கிளம்பிய கதிரவனை முந்திக்கொண்டு முன்னேறிப் பறக்கும் பறவைகளும், முந்தைய இரவின் குளிரில் உடலை இறுக்கச் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த விலங்குகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு வந்துகொண்டிருந்தன.
ஒட்டுமொத்த இரவையும் தனக்குள் ஒளித்துவைத்துக் கொண்டது போல நின்றுகொண்டிருக்கும் யானைக்கூட்டங்களின் பிளிறல் அந்தக் கானகத்தையே தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. ஒற்றை ஒலியிலிருந்து கிளம்பி கற்றை கற்றையாய்ப் பின்னிப் பிணைந்து சங்கமித்து சங்கீதத்தை உருவாக்கும் இசைக்கலைஞர்களைப் போல, பலதரப்பட்ட பறவைகளின் ஒலியும் விலங்குகளின் குரல் விந்தைகளும், பூச்சியினங்களின் இடைவிடாத ரீங்காரமும் கலந்து ஒன்று சேர்த்து ஒற்றை ஒலியாய் மாற்றி உலகையே ஒரு கலாமன்றமாக மாற்றிக்கொண்டிருந்தாள் இயற்கையன்னை.
கொலையும் செய்யும் கொடிய விஷத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு வெளியே சாதுவாகத் திரியும் நாகங்களைப் போல, பல்வேறு குழப்பங்களையும் துரோகங்களையும், வலிகளையும் சதிகளையும் தன்னுள் பதுக்கிக்கொண்டு மௌனமாக விடிந்துகொண்டிருந்த அன்றைய தினத்தில் பலமுறை பழகியவனைப் போல மிகவும் இயல்பாக கார்மேகக் குழலியின் அறைக்குள் அடியெடுத்துவைத்தான் இளங்குமரன். அங்கே சாளரத்தின் வழியே மெல்ல சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகளைக் கையால் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் கார்மேகக்குழலி. கீழே விழுந்து சிதறும் ஒவ்வொரு துளியும் அவளுக்கு இளங்குமரனின் குருதியை நினைவு படுத்தி ஒரே நேரத்தில் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வழங்கிக் கொண்டிருந்தன.
அரவம் ஏதுமின்றி அவளருகில் சென்றவன் மொழியேதும் கூறாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதுவரை வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென நினைவு திரும்பியவள் போல் அவனை வரவேற்றாள்.
“வாருங்கள். வாருங்கள்”
“வரலாமே.”
“எப்போது வந்தீர்கள்? நான் கவனிக்கவில்லை”
“எப்போதும் இங்குதானிருக்கிறேன்.” என்றபடி புன்னகைத்தான்.
“ம்ம். இதிலொன்றும் குறைச்சலில்லை. நீங்கள் விரைவில் வருகிறேன் என்று கூறிச்சென்று இத்துடன் முப்பத்தாறு யுகங்களாகி விட்டன.”
“இல்லையே. முப்பத்தாறு நாழிகைகள் தானே”
“அது உங்களுக்கு”
“ஏன் உனது உலகம் சுழல்வதில்லையா?
“அதைத் தாங்கள்தான் கூறவேண்டும்”
“ஓ. அப்படியா? ஆனால் எனது உலகம் நீதான்”
“க்கும். பார்த்தேனே அதையும். அப்படியே விட்டுவிட்டுச் சென்றதை.”
“என்ன செய்வது மேகா? எனக்கு நீயும் முக்கியம் என் நண்பனும் முக்கியம்.”
“போய் உங்கள் நண்பனையே கட்டிக்கொள்வது தானே?”
“அதெப்படி முடியும்? எனக்கு இரு கண்களும் வேண்டும் பார்ப்பதற்கு. இரு செவிகளும் வேண்டும் கேட்பதற்கு. இரு கரங்களும் வேண்டும் செயல்புரிய. இரு மா…”
“போதும் போதும் நிறுத்துங்கள். இது மாத்திரம் அத்தனை ஆண்களும் பிசகின்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஹூம்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அட. எத்தனை ஆண்கள்?”
“நான் எண்ணவில்லை. எண்ணுவதெல்லாம் உங்களைப் பற்றியே என்பதால்” என்றபடி அவனருகில் வந்தாள்.
மெல்ல அவளது கரங்களைப் பற்றிகொண்டு “ அடடா. குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமே இந்த இன்பமொழியை” என்றான்.
“இன்ப மொழியல்ல. இதய மொழி.”
“ம்ம். இதழின் மொழி”
“இசை மொழி”
“இசைவு மொழி”
“இயற்கை மொழி”
“இணக்க மொழி”
“இலக்கிய மொழி”
“இளகிய மொழி”
“இளமை மொழி”
“இரவின் மொழி”
“இடை மொழி”
“இதழின் மொழி”
“இமைகளின் மொழி”
“இணை மொழி”
“இன்றைய மொழி”
“இனிவரும் மொழி”
“இறை மொழி”
“இறவா மொழி”
“இனிய மொழி”
“இனி அம்மொழி நம் இருவர் மொழி” என்றபடி அவளைச் சேர்த்திழுத்து இடையை வளைத்து இரு கரங்களாலும் அள்ளிக் கொண்டு இன்பத்தை எதிர்நோக்கியிருந்த இதழ்களை இதழுடன் சேர்த்து இச்சைக்குள் மூழ்கிக்கொண்டிருந்த வேளையில் கதவு பலமாகத் தட்டப் படும் ஓசை கேட்டது.
வெளியே வந்திருந்த பணிப்பெண் அத்தகவலைக் கூறினாள். அதைக் கேட்டதும் இடிவிழுந்தாற் போலானாள் கார்மேகக்குழலி. இதைத் தானும் எதிர்பார்த்திராத இளங்குமரன் சற்று நிதானித்து மதுரமதிக்குத் தெரியுமா என்று வினவினான்.
மதுரமதி அவர்களுக்கும் தெரியும். தனியே அழுதுகொண்டிருக்கிறார்கள். கூடவே யாரும் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள் என்றுரைத்தாள் அப்பணிப்பெண்.
இதைக் கேட்டதும் கார்குழலியை உடனடியாக மதுரமதிக்கு ஆறுதல் சொல்லக்கூறிவிட்டு, வழக்கத்திற்கு மாறான சீழ்க்கை ஒலியொன்றை எழுப்பினான். சில கணங்களில் தூதுக் கழுகு நவிலன் அவன் தோள்களில் வந்து அமர்ந்தது. உடனடியாக தன் கையிலிருந்த பட்டுத்துணியில் மகிழன் இறந்த தகவலை எழுதிவிட்டுத் தன் முத்திரையைப் பதித்து, கழுகின் கழுத்துப்பகுதியில் வைத்துக் கட்டிவிட்டு அதன் தலையில் மூன்று முறை தட்டிவிட்டு, சில சங்கேத வார்த்தைகளைக் கூறிப் பறக்கவிட்டான். சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்து அது பறக்கும் திசையை உறுதி செய்துவிட்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்பி மதிமாறனைத் தேடிச் சென்றான்.
காலநெருப்பு:
காடு விடுத்துக் கடைபுகுந்த கூட்டத்தி
னூடுபுகுந்து சிக்கினோர் மீட்கவும்- சீலங்கெட்
டோலமிட் எல்லாமு மோடிட வும்பரவும்
காலமெனுங் கோர நெருப்பு.
மெல்ல மெல்ல எழத் தொடங்கிய கதிரவன் நேரமாக ஆகத் தன் சுட்டெரிக்கும் கதிர்களால் மண்ணைக் கொதிக்கச் செய்து விண்ணைப் பிளந்து கொண்டு நடந்தான். நீலநாட்டின் இளவரசனும், கோரநாட்டு இளவரசி மதுரமதியை மணக்க இருந்தவனுமாகிய மகிழனின் மரணச் செய்தி நாடெங்கும் பரவவே, புழுங்கிகிடந்த மக்கள் மனங்களும் கொதிக்கத் தொடங்கின. ஏற்கனவே மன்னரை இழந்து வாடும் நேரத்தில் நாட்டின் மருமகனாக வரப் போகிறவனும் முல்லையாற்றின் ஓரம் சடலமாய்க் கிடந்தது நாட்டு மக்களிடையே மாபெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உண்டாக்கியது.
குழப்பம் பரவியதால் கடைத்தெருக்களிலும் அரண்மனையை ஒட்டிய பெரிய வீதிகளிலும் கூச்சலும் சலசலப்பும் நிறைந்திருந்தன. இவர்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து ஒற்றுமையை உண்டாக்க கரம்பத் திருமாறனின் படைவீரர்கள் சாரிசாரியாக வந்து குவிய ஆரம்பித்திருந்தனர். அரண்மனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வந்த இளங்குமரன் நகரின் மையத்திலிருந்த அங்காடித் தெருவில் பெருவணிகன் மாயவர்மனது வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்த மதிமாறனைச் சந்தித்து நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்தான்.
இந்நிலையில் கரம்பத்திருமாறன் மந்திரிகளையும் தன் அரசவைப் பிரதிநிதிகளையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தி நிலையைக் கட்டுக்குள் வைக்க ஒரு வழியை உடனடியாக நிறைவேற்றுமாறு பணித்தான். அதன்படி ஒரு சிறுபடை காட்டுக்குள் சென்றது. சகாதேவனை அழைத்து மாலைக்குள் இவையெல்லாம் தனிக்கோவேளின் சதியே எனவும், மக்களுடைய ஆதரவும் அனுதாபமும் தன் பக்கம் திரும்ப வேண்டுமென்றும் அதற்குரிய வழிகளைப் பார்க்குமாறும் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
கதிரவனும் மேற்கில் தலைசாய விரையவே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்களின் கோபம் முற்றிலும் முல்லைநாட்டரசன் தனிக்கோவேளின் மீதே திரும்பியது. இந்த நிலையில் யாரும் எதிரபாராத விதமாகக் காட்டெருமைகள் கூட்டம் நகருக்குள் புகுந்தது. வழக்கமாக கோட்டைக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாலை நேரம் காட்டெருமைகள் கூட்டம் இறங்கியோடுவதும் பிற விலங்குகள் ஊர் புகுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானென்றாலும் கோட்டைக்குள் அப்படி நடந்ததில்லை.
மூன்று முதன்மை வாயில்கள் மூன்று உப வாயில்கள் என ஆறு வழிகளைத் தவிர வேறு வழிகளே கிடையாது. அதிலும் கோட்டையின் ஒருபுறம் முற்றிலும் மலையால் சூழப்பட்டிருப்பதாலும் மற்ற பகுதிகள் சமவெளிப்பகுதி என்பதாலும் வடக்குப்பகுதியில் மட்டுமே இத்தகைய வனவிலங்குகளின் ஊர்வலம், காட்டுயானைகள் வலசைபோதல் ஆகியன நிகழும். அப்படியாயினும் கோட்டைக்குள் இதுகாறும் இப்படி நிகழ்ந்ததில்லை.
கணக்கிலடங்காக் காட்டெருமைகளின் கூட்டம் தெருவெங்கும் திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியதும் மக்கள் குழப்பத்தில் கூச்சலிட்டுக் கொண்டு அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட ஆரம்பித்தனர். இவ்வலறலைக் கேட்டு வெளியே வந்த இளங்குமரனும் மதிமாறனும் உடனடியாக அருகிலிருந்த கட்டடத்தின் கூரை மீது ஏறி நின்று கீழே நிகழ்வனவற்றையும் காட்டெருமைகள் வரும் திசையையும் பார்த்தனர்.
ஒரு கணப்பொழுதும் தாமதிக்காது தன் குறுவாளைத் தலைகீழாகத் திருப்பி அதன் கைப்பிடிப் பகுதியிலிருந்து ஒரு வித வினோதமான உரத்த ஒலியை உண்டாக்கினான். உடனே பல்வேறு பகுதியில் வேறு வேறு வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒரு சிலர் அந்தத்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டு நகரின் மையப்பகுதியை வந்தடைந்தனர். கொல்லர், குயவர், பெருவணிகர், சிறுவணிகர், கணக்கர் ஏன் அந்தப் புறமிருந்த படைவீரர்கள் சிலர் முதற்கொண்டு அனைவரும் அந்த ஒலி வந்த திசை நோக்கிக் கூடினர். யாரோ ஒருவன் உயரமான இடத்தில் நின்று விசித்திரமான ஒலியொன்றை எழுப்புவதையும் அதைக் கேட்டுவிட்டு ஆங்காங்கே அவரவர் தொழிலைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனை நோக்கி மந்திரம் போட்டவர்கள் போல் செல்வதையும் பார்த்து ஆச்சர்யத்தில் அமிழ்ந்து போனார்கள்.
அனைவரும் வந்ததும் இளங்குமரன் அவர்களை நோக்கி எந்த வார்த்தையும் கூறாது, ஒரு சில செய்கைகளை மட்டும் செய்தான். அதைக் கண்டதும் அத்தனை பேரும் அங்கிருந்த திரைச்சீலைகள், கூடாரங்கள் என கண்ணில் கண்ட துணிவகைகள் அனைத்தையும் இணைத்து வளையங்களால் பிணைத்து ஒரு மாபெரும் துணிச்சங்கிலியை உருவாக்கினர். அதன்பிறகு அத்தனை பெரிய துணிப்பந்தத்தையும் எண்ணெயில் நனைத்தனர். அதன் ஒரு நுனியை எடுத்துக்கொண்டு காட்டெருமைகள் வந்து சென்ற எல்லை வரை இழுத்துச் சென்ற குமரன் அவற்றின் பின் சென்றதும் அதன் மறுமுனையை இழுத்துக் கொண்டு காட்டெருமைக்கூட்டத்தின் முன்பாக எடுத்துச்சென்று ஒரு நீண்ட துணிவேலி போன்று அமைத்தான் மதிமாறன். பின் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த கோவில் கோபுரத்தின் மேல் ஏறியவன் அந்தத் துணிவேலியைக் கொளுத்திவிட்டு எல்லோரையும் அவ்விடத்தை விட்டு நகருமாறு பணித்தான்.
திடீரெனப் பரவிய பெருநெருப்பைக் கண்டு எருமைகள் நாலாபுறமும் சிதறியோடத் தொடங்கியதும் கோபுரத்தின் மீது நின்றவாறே எரியம்புகளைப் பயன்படுத்தி ஆங்காங்கே நெருப்பைப் பரவச் செய்து அவற்றை ஒருமுகமாக ஒழுங்குபடுத்தி வந்த வழியே திரும்பியோடச் செய்தான் மதிமாறன். அதே நேரம் கோட்டையிலுள்ள ஆறு வாயில்களைத் தவிர வேறு வழியாக வர வாய்ப்பே இல்லை என்பதாலும், மேலும் இத்தகைய விலங்குக்கூட்டம் உறுதியாக மூன்று பெரிய வாயில்கள் வழியாக மட்டுமே உட்புக முடியும் என்பதாலும், இது இயற்கையை மீறிய அரசியல் சதி என்பதையுணர்ந்து எந்த வாசல் வழி யாருடைய ஒத்துழைப்பின் பேரில் இது நடக்கிறது என்றறிய மின்னல் வேகத்தில் அருகிலிருந்த ஒரு குதிரையில் ஏறிப்பாய்ந்து இளங்குமரன் சென்றுவிட்டதால் ஒற்றை ஆளாய் இத்தகைய அசம்பாவிதத்தை அனாயசமாகத் தடுத்து இயல்பு நிலைக்குத் திருப்பிய மதிமாறனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் அவ்விடத்து மக்கள்.
புயல்வீசிச் சென்ற பூந்தோட்டம் போலத் தாறுமாறாக மாறியிருந்தது அங்காடி வீதி. எரிந்து கொண்டிருந்த மீதத் துணிகளின் வாசமும், தீயில் வெந்து போன ஒரு சில எருமைகளின் வாசமும், சிதறிக் கிடந்த விற்பனைப்பொருட்களும், இவற்றை எல்லாம் இட்டு நிரப்பிடும் மண் புழுதியும் ஒன்று சேர்ந்து அவ்விடத்தை போர்க்களம் போல் மாற்றிவிட்டிருந்தன. எங்கிருந்தோ வந்து தங்கள் தலைவனின் ஆணைப்படி பெருநெருப்பூட்டி அலைகடலெனத் திரண்டு வந்த காட்டெருமைக்கூட்டத்தினை வந்தவழியே திரும்பச் செய்த வீரர்கள் பலரும் தங்கள் வேலை முடிந்ததும் எத்தகைய உணர்ச்சிகளையும் காட்டாது எந்த ஒரு பரபரப்பும் நிகழாதது போல இயல்பாகத் தங்களது வேலைகளுக்குத் திரும்பிவிட்டிருந்தனர். மக்களோடு மக்களாக, மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த மதிமாறன் ஒரு நாழிகைக்குள்ளாக மக்களுக்குத் தலைவன் போல் உயர்ந்துவிட்டதைத் தன் மாளிகையிலிருந்து கண்ணீர் அற்றுப்போன விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரமதி. அவளை மடியிலிருத்திக்கொண்டு ஆறுதல் கூறியபடியே வடக்கு நோக்கிக் குதிரையில் இளங்குமரன் சென்ற வழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் கார்மேகக்குழலி.
இவர்களுக்கெல்லாம் மேலாக, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியே கூறுபோட்டு நாட்டைப் பிடிக்கும் கூட்டம் அதற்கெல்லாம் சிறிதும் வாய்ப்பளிக்காது அதிவிரைவாக செயல்பட்டு குழப்பங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடல்லாமல், இவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் அடுத்த வேலைகளுக்கு ஆயத்தமாகும் இத்தகைய மதிமாறன் போன்றோரை வளர விடுவது தங்களுக்கு எந்த வகையிலும் ஆபத்து என்பதை உணர்ந்ததால், இதனை உடனடியாக முளையிலேயே கிள்ளிவிட முடிவெடுத்து அந்த இடத்திலேயே கூட்ட நெரிசலில் அவனைக் கொல்லத் திட்டமிட்டு ஆட்களை அனுப்பியது.
யாரும் எதிர்பாராவிதமாக மக்கள் கூட்டத்தின் நடுவிலேயே மதிமாறனைக் கொல்ல முயன்றது எத்தகைய தவறு என்பதை அடுத்த அரை நாழிகைக்குள் உணர்ந்தனர் சகாதேவனின் ஆட்கள். சற்று நேரத்தில் அவ்விடம் ஒரு சிறிய சண்டைக்கூடம் போலாகிவிட, எட்டு வீரர்கள் சுற்றி நிற்க நிராயுதபாணியாய் நின்றிருந்த போதிலும் முகத்தில் ஒரு அலட்சியப் புன்னகையைத் தவழவிட்டிருந்த மதிமாறனைக் கண்டதும் சுற்றி நின்ற மக்கள் குழாம் ஆர்ப்பரிக்கத் தொடங்கிய நேரத்தில் மதிமாறனது முதுகைக் குறிவைத்துக் காற்றைக் கிழித்தபடி பாய்ந்து வந்தது நஞ்சு தோய்க்கப்பட்ட ஒரு வேல்…
தொடரும்…
No comments:
Post a Comment