முதுமை
பூரணியின் நினைவலைகள்…
Image
‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர் களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப்பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.
உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பது தான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.
வாய்விட்டுச் சொல்ல மனித நாகரிகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமான பின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்திருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்து வந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப்பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதி போல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்புகிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, ‘கிரைண்டர்’ போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்ல முடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய்விடுகிறது. ஆணும் பெண்ணும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத்திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது. இது போன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகிவருகிறது.
***
No comments:
Post a Comment