Saturday, 12 March 2022

M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN 1923 MARCH 2 - 2006 MARCH 12

 

M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN 

1923 MARCH 2 - 2006 MARCH 12



தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது. ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார். அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் நடிகர் வி.வி.சடகோபன் முதல் மு.க.முத்து வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியல் பின் வருமாறு:-

  1. தான சூர கர்ணா
  2. சூரியபுத்திரி
  3. மதன காமராஜன்
  4. பக்த நாரதர் 1942
  5. நந்தனார் 1942
  6. தாஸி அபரஞ்சி 1944
  7. கண்ணம்மா என் காதலி (கதாநாயகியாக)
  8. மிஸ் மாலினி 1944
  9. சந்திரலேகா 1944
  10. சம்சாரம்
  11. ஔவையார்
  12. வள்ளியின் செல்வன் (கதாநாயகியாக)
  13. மூன்று பிள்ளைகள்
  14. மஞ்சள் மகிமை
  15. நான் கண்ட சொர்க்கம்
  16. தெய்வமே துணை
  17. நான் வளர்த்த தங்கை
  18. கொடுத்து வைத்தவள்
  19. கணவன்
  20. என் அண்ணன்
  21. ஆண்டவன் கட்டளை
  22. எல்லாம் உனக்காக
  23. புனர் ஜென்மம்
  24. பாலும் பழமும்
  25. அன்னை இல்லம்
  26. ஊட்டி வரை உறவு
  27. செல்வம்
  28. பேசும் தெய்வம்
  29. தேனும் பாலும்
  30. தெய்வப்பிறவி
  31. என் தம்பி
  32. கலாட்டா கல்யாணம்
  33. தங்கைக்காக
  34. திருடன்
  35. வஞ்சிக்கோட்டை வாலிபன்
  36. பனித்திரை
  37. சின்னஞ்சிறு உலகம்
  38. சித்தி
  39. பணமா பாசமா
  40. தபால்காரன் தங்கை
  41. நான் அவனில்லை
  42. மனிதன் மாறவில்லை
  43. வாழ்க்கை வாழ்வதற்கே
  44. குழந்தை உள்ளம்
  45. சில நேரங்களில் சில மனிதர்கள்
  46. பொன்னான வாழ்வு
  47. வீட்டுக்கு ஒரு பிள்ளை
  48. ஜீவனாம்சம்
  49. அன்பு வழி
  50. ராணி யார் குழந்தை
  51. பெண்ணை வாழவிடுங்கள்
  52. காதல் பறவை
  53. குமுதம்
  54. பூமாலை
  55. தேடி வந்த திருமகள்
  56. அனுபவம் புதுமை
  57. இருளும் ஒளியும்
  58. சுபதினம்
  59. நம்ம வீட்டு தெய்வம்
  60. ஏன்?
  61. எங்களுக்கும் காலம் வரும்
  62. உத்தரவின்றி உள்ளே வா
  63. நூறாண்டு காலம் வாழ்க
  64. தங்கதுரை
  65. மணிப்பயல்
  66. பிள்ளையோ பிள்ளை
  67. பாதை தெரியுது பார்
  68. குழந்தை உள்ளம்
  69. தாய் பிறந்தாள்
  70. தேனும் பாலும்

போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கையில் நிறைவாக வாழ்ந்தவர். பொறுப்புக்களைச் சுமந்தவர்.நல்ல இல்லத்தரசி, வெள்ளை மனம் கொண்டவர்.கபடு சூதற்ற குணம், யாவரையும் ஈர்க்கும் பேச்சு இவற்றுக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.சுந்தரிபாய். இவரது மகள் சுந்தரிபாய் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.




வெடுக்குப் பேச்சால் வியக்க வைத்த எம்.எஸ்.சுந்தரி பாய்


பா.ஜீவசுந்தரி - 36


‘நீ மட்டும் ஒழுங்கோ, அப்பா செத்த பிறகும் தலைமுடியை மழிச்சுக்காம இருக்கியே’ என்று மகள் கங்கா கோபத்தின்  உச்சியில் சொன்ன சுடு சொல்லுக்காக அதிகாலையில் எழுந்து நாவிதரைத் தேடிப்போய்க் கூந்தலை மழித்துக்கொண்டு  வருவதுடன், அதற்காக மகள் மீது எந்தக் கோபத்தையும் வெளிக்காட்டாமல், ‘சித்த இருடீ குழந்தே, ஸ்நானம்  பண்ணிட்டு வந்து காப்பி கலந்து தரேன்’ என்று பாத்ரூமை நோக்கி ஓடும் அந்த அம்மா, ‘மகள் சொல்வதும்  நியாயம்தானே’ என்ற அவளது புரிதலுடன் நடந்து கொள்ளும் தாய், தான் பெற்ற மகளை மட்டும் கலங்க  வைக்கவில்லை. நம்மையும் சேர்த்துதான் கலங்க வைத்தார். தன் செயல் மூலம் மகளுக்குள் ஒரு குற்ற உணர்வையும்  ஏற்படுத்தியவள் அந்த அம்மா. ஜெயகாந்தனின் கற்பனையில் வார்க்கப்பட்ட ‘அக்னிப்பிரவேசம்’ அம்மாவை  உயிர்த்துடிப்பு மிக்கவளாக உலவ விட்டதில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் கதாநாயகியான லட்சுமிக்கு  அம்மாவாக, மறக்க முடியாத நடிப்பை வாரி வழங்கி, நெகிழ வைத்தவர் சுந்தரிபாய்.  


1923 ல் மதுரையில் பிறந்த சுந்தரிபாய் மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தகப்பனார் ராமாராவ்  ரயில்வே துறை ஊழியர். அவருடைய மனைவி நாகமணிபாய், இந்தத் தம்பதியருக்கு சுந்தரிபாய் உட்பட ஐந்து பெண்  குழந்தைகள். ஏழு பேரைக் கொண்ட பெரிய குடும்பம். அச்சாணியாக இருந்து குடும்பத்தைக் காத்த தந்தை ராமாராவ்  உடல்நலக் கோளாறு காரணமாக திடீர் மரணமடையவே ஆறு பெண்களை உள்ளடக்கிய குடும்பம் செய்வதறியாது  தவித்துப் போய் நின்றது. மகள்களைக் காப்பாற்றுவதற்காக செவிலியர் பயிற்சி பெற்று மதுரை மருத்துவமனையில்  பணியாற்ற முன்வந்தார் தாயார் நாகமணிபாய்.



விளம்பரப்படம் பெற்றுத் தந்த திரை வாய்ப்பு


கலை மீது நாட்டம் மூத்த மகளான சுந்தரிபாய்க்கு பித்தாய்ப் பிடித்திருந்தது. நன்றாகப் பாடவும் ஆடவும் செய்தார்.  சிறுமியாக இருந்தபோதே, எம்.கே.தியாகராஜ பாகவதர் - அஸ்வத்தம்மா இணைந்து நடித்த ‘சிந்தாமணி’ படத்தின்  பாடல்களை அடி பிசகாமல் பாடிக் காட்டுவாராம். அதைப் பார்த்து ரசித்த, தாயும் தந்தையும் மகளுக்கு சங்கீதப்  பயிற்சியளிக்க  ஏற்பாடு செய்தார்கள். சுண்டி இழுக்கும் அழகும் துறுதுறுவென அலைபாயும் கண்களும்,  வாயாடித்தனமான வெடுக்குப்பேச்சு அனைத்தையும் கொண்ட சுந்தரிபாய் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட நாடகங்களில்  பங்கேற்று, ஆடிப் பாடி நடித்து வந்தார். இதைப் பார்த்த அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர், இந்தச் சிறுமி விளம்பரப்  படங்களில் நடிக்கலாமே என்று ஆலோசனை கூறவே, அவரையே துணைக்கு அழைத்துக் கொண்டு வாய்ப்பைத் தேடி  பம்பாய்க்கு ரயிலேறினார்கள் தாயும் மகளும். அந்தப் பயணம் 15 வயது சுந்தரிபாய்க்கு வெற்றிகரமான திரை  வாழ்க்கையையும், பிரகாசமான எதிர்காலத்தையும் துவக்கி வைத்தது.


‘காபி ஆஸ்பிரின்’ என்ற விளம்பரப் படத்தில் நடித்ததைப் பார்த்த சில திரைப்படத் தயாரிப்பாளர்கள், தங்கள்  படங்களில் சிறு சிறு படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்கள். அப்படித்தான் 1937ல் ‘சுகுண சரஸா’, ‘தான சூர  கர்ணா’  போன்ற படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து, சிறிய வேடம் என்றாலும் ‘சூர்ய புத்திரி’ படத்திலும்  நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆரம்பப் படமான ‘சுகுண சரஸா’வில் நடித்ததற்கான ஊதியம் எவ்வளவு தெரியுமா?  எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரமாக  வெறும் 20 ரூபாய்கள் மட்டுமே அளிக்கப்பட்டது. அப்படத்துக்காக மூன்று  நாட்கள் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்திருக்கிறார்.


ஜெமினியின் ஊழியராகத் தொடர்ந்த சினிமா பந்தம்


அதே ஆண்டில் எஸ்.எஸ்.வாசன், தேனாம்பேட்டையில் உள்ள கே.சுப்பிரமணியத்தின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்  ஸ்டுடியோவை விலைக்கு வாங்கியதுடன் ‘ஜெமினி பிக்சர்ஸ்’ என்ற தன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும்  அங்கு துவங்கியிருந்தார். கொத்தமங்கலம் சுப்பு கதைப் பிரிவிலும் சுந்தரிபாய் நடிப்பதற்காகவும் ஒப்பந்தக்  கலைஞர்களாக, ஜெமினி ஸ்டுடியோ ஊழியர்களாக இணைந்தார்கள்.


தந்தை மகளாய் தொடங்கிய நடிப்பு கணவன்- மனைவி உறவானது. ஜெமினியின் முதல் தயாரிப்பு ‘மதன  காமராஜன்’. மந்திர தந்திரங்கள் நிறைந்த ராஜா ராணிக்கதையில், ராஜகுருவாக கொத்தமங்கலம் சுப்புவும் அவர்  மகளாக சுந்தரிபாயும் நடித்தனர். படத்தின் ஆரம்பமே சுந்தரிபாய் இடுப்பில் குடத்துடன் ஆற்றங்கரைக்குத் தண்ணீர்  எடுத்து வரச் செல்வதில் ஆரம்பிக்கும். ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் தண்ணீர் எடுக்க வரும் பெண்களின் குடங்களை  ஒருவர் அம்பால் துளையிடுவதும் மற்றவர் அதை அடைப்பதுமான வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவதை  வழக்கமாக வைத்திருப்பவர்கள். இந்த விளையாட்டு சுந்தரிபாயின் மனதுக்குள் வன்மமாகப் படிந்துபோய், பழி  வாங்கல்களில் தொடர்ந்து, படம் நெடுக அது தொடர்வதே கதை. ஏறக்குறைய வில்லி வேடம்தான். அதன் பின்னர் அவர்  நகைச்சுவை நடிகையாக, குணச்சித்திர நடிகையாகவும் பரிமளித்தார். அவரது வெடுக் வெடுக்கென்று பேசும் தன்மை  வில்லி வேடங்களுக்கு இறுதி வரை துணை நின்றது.


தாய்மொழி மராத்தி என்பதே தெரியாத வகையில் அட்சர சுத்தமான தமிழ் உச்சரிப்பு அவர் நாவில் விளையாடியது.  இப்படத்தின் வாயிலாக கொத்தமங்கலம் சுப்புவின் அறிமுகம் கிடைத்தது. அது நட்பாகி, காதலாகக் கனிந்து 1939ல்  இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். “இதுதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முதல் கௌரவமான வேடம். அதுவரை சின்னச் சின்னக்  கதாபாத்திரங்கள்தான் கிடைத்தது” என்று இந்தப் படம் பற்றி சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.


ஜெமினி நிறுவனத்தில் வேடம் மட்டுமல்ல,

பாடும் வாய்ப்பும் உண்டு


ஜெமினியின் ஒப்பந்த நடிகை என்பதால் ‘மதன காமராஜன்’ படத்துக்குப் பின் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்கள்  அனைத்திலும் கண்டிப்பாக அவருக்கு ஒரு வேடம் தரப்பட்டது. அப்போதைய படங்களில் வேடம் மட்டுமல்லாமல் ஒரு  பாடல் பாடும் வாய்ப்பும் உண்டு. தண்டபாணி தேசிகர் நந்தனாக நடித்த ‘நந்தனார்’ படத்தில் கரும்பி என்ற  பாத்திரத்தில் வேலாயுதம் என்ற நடிகருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வதற்காக  வாசன் வழக்கம்போல், ‘நந்தனார் படத்தின் சிறந்த பாடல் எது?’ என்று குறிப்பிட்டு விமர்சனம் எழுதுபவர்களைத்  தேர்வு செய்து, 10,000 ரூபாய் பரிசளிப்பதாக ஒரு போட்டியையும் அறிவித்தாராம். இன்றளவும் தேசிகர் பாடும்  ‘என்னப்பன் அல்லவா, என்றாலும் அல்லவா… பொன்னப்பன் அல்லவா… பொன்னம்பலத்தவா..’ என்ற பாடல் கேட்டு  ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அப்போதைய போட்டியில் வெற்றி பெற்றவர் குறிப்பிட்ட பாடல் எதுவென்றுதான்  தெரியவில்லை.


ஜெமினியின் அப்போதைய ஆஸ்தான நாயகி புஷ்பவல்லியை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தாசி அபரஞ்சி’  படத்தில், தாசி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக நடித்தார் சுந்தரிபாய். கோயில் குருக்கள் (கொத்தமங்கலம் சுப்பு)  தாசியின் மீது ஆசை கொண்டு அவளுக்குக் கோயில் பிரசாதத்தில் வசிய மருந்தை வைத்துக் கொடுக்க, அபரஞ்சியோ  அதை வேலைக்காரிக்குக் கொடுக்க, வேலைக்காரி அதை ஆட்டுக்குட்டிக்குத் தின்னக் கொடுத்து விடுகிறாள்.  ஆட்டுக்குட்டி காதல் போதை தலைக்கேறி, கோயில் குருக்களைத் தேடி வருவதாக அமைக்கப்பட்ட நகைச்சுவைக்காட்சி  அப்போது ரசிகர்களை வயிறு நோகச் சிரிக்க வைத்ததாம்.


போர்ச்சூழலிலும் தடை படாத ஜெமினியின் படங்கள்


மூன்று மணி நேரங்கள் ஓடக்கூடிய திரைப்படங்களைத் தயாரித்து வந்த திரையுலகம், 1942, 43 ஆம் ஆண்டுகளில்  பெரும் தேக்க நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆம்…. இரண்டாவது உலகப்போர் வடிவில்  தடையாக அது வந்து நின்றதால், சென்னையில் திரைப்படத் தொழில் சுணக்கம் கண்டது. சென்னையிலுள்ளவர்கள்  பாதுகாப்புக் காரணங்களுக்காகச் செங்கல்பட்டு நகரை நோக்கி நகர்ந்து சென்றதால், ஏறக்குறைய சென்னை நகரமே  காலியாகும் சூழல். 1945ல் போர் முடியும் வரை இந்நிலை நீடித்தது. ஆனால், எஸ்.எஸ்.வாசன் அது பற்றியெல்லாம்  கவலை கொள்ளாமல், தன் நிறுவன ஊழியர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைத்துக் கொண்டு படங்களைத் தயாரித்து  வந்தார். கச்சா ஃபிலிம் தட்டுப்பாடு இருந்ததால், நீளம் குறைந்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன.  திரைப்படத் தணிக்கையிலும் கூட ஏகப்பட்ட கெடுபிடிகள்.


அரசுக்கு ஆதரவாய் போர்ப் பிரச்சாரப் படங்கள்


பிரிட்டிஷ் அரசு போரில் பங்கு பெற்றிருப்பதை ஆதரித்து, போர்ப் பிரச்சாரப் படங்கள் தயாரிக்க வேண்டுமென்று படத்  தயாரிப்பாளர்களுக்கு பிரிட்டிஷ் அரசு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று போரை மையப்படுத்தி சம காலத்தில்  நிகழ்வதான கதைகள் அமைக்கப்பட்டு, மூன்று பெரிய நிறுவனங்களால் நான்கு படங்கள் எடுக்கப்பட்டன. முன்னோடி  இயக்குநர் கே.சுப்பிரமணியம் ‘மான சம்ரட்சணம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். மாடர்ன் தியேட்டர்ஸ்  சுந்தரம் ‘பர்மா ராணி’ யைத் தயாரித்து வெளியிட்டார். இந்த வரிசையில் ஜெமினி நிறுவனமும் ஒரு படத்தைத்  தயாரித்தது. அந்தப் படம்தான் ‘கண்ணம்மா என் காதலி’. இந்த மூன்று படங்களும் 1945 ஆம் ஆண்டு வெளி வந்தன.  ஓராண்டு தள்ளி மாடர்ன் தியேட்டர்ஸ் 1946 ல் ‘சித்ரா’ என்று மற்றொரு படத்தையும் தயாரித்து வெளியிட்டது. இந்த  நான்கு யுத்தப் பிரச்சாரப் படங்களில் முன்னணியில் இருந்தது கே.சுப்பிரமணியத்தின் ‘மான சம்ரட்சணம்’ என்று  அப்போதைய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.  


கதாநாயகியாய் நடித்த ஒரே படம்


ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ கவித்துவமான காதலை வெளிப்படுத்தும் மகாகவியின் அற்புதமான வரிகளில்  அமைந்த தலைப்பு. ஆனால் படமோ போர்க்காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சு  நாடகாசிரியர் மோலியர் எழுதிய ‘School for Wives’  என்ற நாடகத்தின் கதையைத் தழுவி உருவாக்கி,  இயக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. ‘சினிமா மேதை’ என்று அறியப்பட்ட கே.ராம்நாத் இந்தக் கதையைப்  படமாக்கலாம் என்று ஆலோசனை கூறியதுடன் இயக்குநராகவும் மேற்பார்வை செய்துள்ளார். முதல் முறையாக இந்தப்  படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்குக் கிடைத்தது. கதாநாயகன் எம்.கே.ராதா. ஜெமினியின் பல  படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்த நாராயண ராவ் இப்படத்தில் முக்கிய  கதாபாத்திரம் ஏற்று நடித்தார். தன் திரையுலக வாழ்வில் 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சுந்தரிபாய்  கதாநாயகியாக நடித்தது இந்த ஒரு படத்தில் மட்டுமே.


150 ரூபாய் மாதச் சம்பளம் பெறுபவராக ஜெமினியில் இணைந்திருந்தாலும் தன் திறமையான நடிப்பாற்றலால் அதை  உயர்த்திக் கொண்டவர். ‘கண்ணம்மா என் காதலி’ படத்துக்காக அவர் பாடிய ‘முத்து வருவானென்று வெத்தலை  மடிச்சு வெச்சேன்…. முத்து வரக் காணேனே….. தங்கமே…. வெத்தலையும் வாடிப் போச்சே’  என்ற பாடலைக்  கேட்ட ஜெமினி அதிபர் வாசன், மனம் திறந்து பாராட்டுத் தெரிவித்ததுடன் அன்று மாலையே பல மடங்கு ஊதியத்தை  உயர்த்தியதாகவும் நன்றி உணர்வு மேலிட சுந்தரிபாய் குறிப்பிட்டிருக்கிறார்.


அதன் பின் பல படங்களில் வில்லி வேடம்தான். வீடுகளுக்குள் குள்ளநரித்தனம் மிக்க குணத்துடன் நடமாடி குடும்ப  உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தி பிரிவினையால் குடும்பத்தைப் பிரித்து அதில் சுகம் காணும் பல பெண்  கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். சுந்தரிபாய் வில்லி வேடம் ஏற்ற பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.  அப்போது இம்மாதிரி வேடங்களை பி.எஸ்.ஞானம், சி.டி.ராஜகாந்தம், சி.கே.சரஸ்வதி இவர்களுடன் மேலும் பல  நடிகைகளும் ஏற்று நடித்திருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே இன்றைய தொலைக்காட்சித் தொடர் வில்லிகளையும் நாம்  பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அன்றைய வில்லிகளிடம் கருணையும் ஈரமும் கொஞ்சம் மிச்சமிருந்தது.


இச்சையை தீர்க்கும் பச்சை மரப்பாவை


‘சந்திரலேகா’வில் சுந்தரிபாய் ஏற்ற வேடம் மற்ற படங்களிலிருந்து வித்தியாசமானது. சர்க்கஸ் குழுப் பெண்களில்  ஒருவராக சுந்தரிபாயும் ‘பொட்டை’ கிருஷ்ணமூர்த்தி என்ற உயரம் குறைந்த நடிகரும் இணைந்து நடிக்கும் ‘நாட்டியக்  குதிர நாட்டியக்குதிர நாலாயிரம் பொன் வாங்கலையோ நாலாயிரம் பொன் வாங்கலையோ’ என்ற பாடல் காட்சி  இப்போது வரை பிரபலமானது. இரு மனிதர்கள் இணைந்து குதிரை வேடமிட்டு ஆடும் ஆட்டமும், சுந்தரிபாயின்  ஆட்டமும் பாட்டமும் அற்புதம். குதிரையை விற்றுப் பணத்தையும் கையில் பெற்றுக் கொண்ட பின், குதிரை என்ன  தின்னும் என்பதை அவர் சொல்லும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பையும், குதிரை வாங்கியவருக்கு  அதிர்ச்சியையும் ஒருசேர அளிக்கும் அந்தப் பாடல் என்றைக்கும் சாகாவரம் பெற்றது. கொள்ளும் புல்லும் தின்னாத  குதிரை கோதுமை அல்வாவையும் பாதாம் கீரையும் கொண்டு வரச் சொன்னால் சிரிக்காமல் இருக்க முடியுமா? செய்பவர்களாக டி.ஏ.மதுரம், வி.என்.ஜானகி என பல பெண்கள் உதவி செய்வதாக காட்சிகள் உண்டு. அதில் சுந்தரிபாய்  ‘இச்சையைத் தீர்க்கும் பச்சை மரப்பாவை’ யாக குறிகாரி வேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்து வில்லன் ரஞ்சனை  ஏமாற்றும் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. இடுப்பில் ஒரு சிறு பெட்டியை வைத்துக் கொண்டு, அரண்மனைக்குள் அவர்  அசைந்தாடிச் செல்லும் நடை அசத்தல் ரகம்.


‘ஔவையார்’ படத்தின் அடங்காப்பிடாரி மனைவியை மறந்து விட முடியுமா? வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு முகம்  கொடுக்க விரும்பாமல், அவரை வரவேற்கவும் மனமில்லாமல் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, தலையில் ஈறு,  பேன் எடுத்துக்கொண்டு சுவாதீனமாக ஔவையை அலட்சியம் செய்யும் காட்சியில் அசலான சில பெண்களைக் கண்  முன் நிறுத்தியிருப்பார். ‘சற்றே ஏறுக்கு மாறாய் இருப்பாளாயின் கூறாமல் சந்நியாசம் கொள்’ என்று  குடும்பத்தலைவருக்கு ஔவை ஆலோசனை அளிக்க வைக்கும் அளவுக்கு சுந்தரிபாய் அந்தப் பாத்திரத்துடன் பொருந்திப்  போயிருந்தார்.

 

முதன்முறையாக ஜெமினி நிறுவனத்துக்கு வெளியே….


ஜெமினியில் ஒப்பந்த நடிகையாக இருந்தவர் முதல் முறையாக வாசனிடம் அனுமதி பெற்று ‘எங்க வீட்டு மகாலட்சுமி’  படத்தில் நடித்தார். தெலுங்கின் முதன்மைக் கதாநாயகன் நாகேஸ்வர ராவ் தயாரித்து நடித்த இரு மொழிப்படம் இது.  வழக்கமாக வீட்டுக்குள் குழப்பம் செய்யும் பாத்திரம்தான். ‘ஒண்ட வந்த பிடாரி’ பழமொழிக்கு ஏற்ப, வீட்டு  ’மகாலட்சுமி’ யான சாவித்திரியை வீட்டை விட்டுத் துரத்தும் சூழ்ச்சிக்கார வேடம். இந்தப் படம் கூட்டுப் பண்ணை  விவசாயத்தின் அவசியம், கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமை, என்னதான் படித்து பட்டம் பெற்று வேலை செய்து  சம்பாதித்தாலும் சோறு போடும் விவசாயத்தை ஒதுக்கி விடவோ, அலட்சியப்படுத்தவோ கூடாது என்பதையும்  ஆணித்தரமாக வலியுறுத்திய படம்.


’நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்’ மற்றும்  ‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு தேடலாமடி’ என்ற இப்படத்தின் இரு பாடல்கள் இன்றைக்கும்  கவனத்தை ஈர்ப்பவை.17 ஆண்டு காலம் ஜெமினி நிறுவனத்தின் ஒப்பந்த நடிகையாக நடித்தவர், அங்கிருந்து வெளியேறி பிற படங்களிலும்  நடிக்கத் துவங்கினார். எத்தனை படங்களில் அம்மா, மாமியார், அக்கா, நாத்தனார் என்று நடித்திருந்தாலும்  ‘ஒரு  நடிகருக்கு எந்தப் பாத்திரங்களையும் ஏற்று நடிப்பதுதான் அவரது திறமையை வெளிப்படுத்தும் என்பதற்கு சுந்தரிபாய்  ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவரது வசன உச்சரிப்பு சிறப்பானது. கொத்தமங்கலம் சுப்புவுக்கு அலமேலு, மீனாட்சி இவர்களுடன் முன்னரே இருமுறை திருமணமாகி இருந்தபோதும்,  திரைத்துறைக்கே உரிய சாபக்கேடாக மூன்றாவது மனைவியானார் சுந்தரிபாய். இந்த பந்தம் இறுதிக்காலம் வரை  தொடர்ந்தது. சுப்பு 1974ல் மறைந்த பிறகும், அவருடைய மூத்த தாரத்து மகள்கள், மகன்களுடன் தன்னைப் பிணைத்துக்  கொண்டார். 83 ஆம் வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.


(ரசிப்போம்!)

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்



300 படங்களுக்கு மேல் நடித்த நடிகை சுந்தரிபாய்

நாளொன்றுக்கு, ரூ. 20 சம்பளத்தில் நடித்தவர் அரங்கேற்றத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர் சுந்தரிபாய்.

சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927 இல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது எம். கே. தியாகராஜபாகவதர், நடித்த சிந்தாமணி படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம்பெற்ற பாடல்களைப் பாடிக்கொண்டிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.

இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.

உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக , 1937 இல் ‘சுகுணசரசா’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில் மூன்று நாட்கள் நடித்தார்.

அதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.

ஜெமினியின் முதல் படமான ‘மன்மதமகாராஜன்’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத் தொடர்ந்து காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.

இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

‘இது காதல் திருமணம் மட்டுமல்ல கலப்புத் திருமணமும் கூட. என் தாய் மொழி மராத்தி அவர் தமிழர்

அதன்பின் ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.

1945ல் ஜெமினி தயாரித்த ‘கண்ணம்மா என் காதிலி’ என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன் வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.

இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

1948இல் ஜெமினியின் பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

கதாநாயகி டி. ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, இச்சைக்களைத் தீர்க்கும் பச்சை மரப்பாவையாக மாறுவேடத்தில் சென்று ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.

சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பவளம் 150 ரூபாய் சந்திரலேகாவில் நடித்த போது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.

ஜெமினியின் வெற்றிப்படமான ‘சம்சாரத்தில் வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

வள்ளியின் செல்வன் படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.

சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300 சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.



ஞானம்

No comments:

Post a Comment